சனி, 18 மார்ச், 2023

அறிவு விளங்கியவர்! அறிவு விளங்காதவர்!

 *அறிவு விளங்கிவர் ! அறிவு விளங்காதவர்!*


*வள்ளலார் சொல்லுவதை ஊன்றி கவனிக்க வேண்டும்* 


*உயர்ந்த அறிவு பெற்ற மனித ஜீவர்கள் ஜீவகாருண்யத்தை கடைபிடிக்கவில்லை என்றால் தாழ்ந்த அறிவுள்ளவர்களாக மாற்றப்படுவான்!*


*அறிவு விளங்கிய சீவர்களுக்கு எல்லாம் சீவகாருணியமே கடவுள் வழிபாடு என்றும் அறியப்பட வேண்டும்.*


*அறிவு விளங்கினால்தான் இயற்கை உண்மைக் கடவளான எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளவே முடியும்*


*அன்றியும், இந்திரியம்,கரணம்,ஜீவன்,ஆன்மா ஆகிய நான்கு வகையான  சீவகாருணிய ஒழுக்கத்தை உடையவர்களாகி அருந்தல் பொருந்தல் முதலிய பிரபஞ்ச போகங்களை அனுபவிக்கின்ற சமுசாரிகள் எல்லாம் சர்வசக்தியுடைய கடவுளருளுக்கு முழுதும் பாத்திரமாவார்கள்.*


*மேலும் சீவகாருணிய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவைகளைச் செய்கின்றவர்கள் கடவுளருளுக்குச் சிறிதும் பாத்திரமாகார்கள்.* 


*அவர்களை ஆன்மவிளக்கமுள்ளவர்களாகவும் நினைக்கப்படாது. சீவகாருணிய மில்லாது செய்யப்படுகிற செய்கைக ளெல்லாம் பிரயோஜன மில்லாத மாயாசாலச் செய்கைகளே யாகுமென்று அறியவேண்டும்.*


*அறிவில்லாதவர்கள் யார்? என்பதை வள்ளலாரே தெரிவிக்கின்றார்*


*புண்ணிய பூமிகளை வலஞ்செய்தல், புண்ணியதீர்த்தங்களில் ஆடல், புண்ணிய தலங்களில் வசித்தல், புண்ணிய மூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரம் செய்தல், ஜெபம் தவம் செய்தல், விரதம் செய்தல், யாகம் செய்தல், பூசை செய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும் பத்தர்களும் இருடிகளும்,*


*மேலும் உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயச் சார்புகளைத் துறந்து இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து யோகத்தில் இருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும், நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுக்களையும் துறந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், சீவகாருணியம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால், மோட்ச மென்கிற மேல்வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து (ஆன்ம இன்ப லாபத்தை) இன்பத்தை அடைந்து வாழமாட்டார்க ளென்று உண்மையாக அறியவேண்டும்*


*மேலும் அறிவுள்ளவர்கள் யார் ? என்பதை வள்ளலார் விளக்குகின்றார்*


*பசியை நிவர்த்தி செய்துகொள்ளத் தக்க புவனபோக சுதந்தரங்களைப் பெறுதற்குரிய அறிவிருந்தும் பூர்வ கர்மத்தாலும், அஜாக்கிரதையாலும் அச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளாமல் பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து அந்த பசி வருத்தத்தை நீக்கித் திருப்தியின்பத்தை உண்டு பண்ணுவதற்குக் காரணமாகிய சீவகாருணியம் என்கின்ற திறவுகோலைக் கொண்டுதான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து எக்காலத்தும் அழியாத இன்பத்தை அனுபவித்து வாழவேண்டும்,என்பதை அறிந்து கொண்டவர்களே அறிவுள்ள ஜீவர்களாவார்கள்*  


*ஆகலில், சீவகாருணிய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக்கொண்ட சமுசாரிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதன சகாயங்களை வேண்டாமல், எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்.*


*மேலே கண்ட கருத்துப்படி ஜீவகாருண்யத்தைக் கடைபிடித்து  வாழ்பவர்களே அறிவு விளங்கிய ஜீவர்களாவார்கள்* 


*மேலும் ஓர் உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் !*


*வள்ளலார் சொல்லிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கைகளில் முக்கியமானது,*

*ஞானசரியை*ஞானகிரியை*ஞானயோகம்*ஞானத்தில் ஞானம் என்னும்   நான்கு படிகளாகும்,*


*ஞானசரியை என்பது இந்திரிய ஒழுக்கமான ஜீவகாருண்யம் என்பதாகும்,*


*ஞானகிரியை என்பது இடைவிடாது இறைவனைத் தொடர்பு கொள்ளும் கரண ஒழுக்கமான சத்விசாரம் என்பதாகும்*


*ஞானயோகம் என்பது ஜீவ ஒழுக்கம்,அதாவது எல்லா மனிதர்களிடத்தும் சாதி,சமயம்,மதம்,ஆசிரமம்,கோத்திரம்,சூத்திரம்,சாத்திரம்,குலம்,தேசமார்க்கம்,உயர்வு,தாழ்வு முதலியவைகளாகிய பேதம் அற்றுத் தானாக நிற்றல் ஜீவ ஒழுக்கமாகும்*


*ஞானத்தில் ஞானம் என்பது* *ஆன்ம ஒழுக்கம் என்பதாகும்,*

*84 எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதமுள்ள ஜீவர்களிடத்தும்,இரக்கம் வைத்து,ஆன்மாவே சபையாகவும் அதன் உள்ஒளியே பதியாகவும் கண்டு பூரணமாக நிற்றலே ஆன்ம ஒழுக்கம் என்னும் ஞானத்தில் ஞானம் என்பதாகும்*


*இந்த நான்கு ஒழுக்கங்களை முழுமையாக கடைபிடிப்பவர் எவரோ? அவரே கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் தகுதி உடையவர்கள்.அவர்களே அறிவில் சிறந்தவர் என்று  எல்லோராலும் போற்றப்படுவார்கள்*


*ஜீவகாருண்யம் விளங்கும் போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும், அதனால் உபகாரசக்தி விளங்கும், அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும் என்பதை மனித தேகம் எடுத்தவர்கள் ஒவ்வொருவரும் அறிந்து,புரிந்து,தெரிந்து கொள்ள வேண்டும்*


*மேலும் ஜீவ காருண்யம் மறையும் போது அன்பும் அறிவும் உடனாக மறையும்,அதனால் உபகார சக்தி மறையும்,உபகார சக்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்*


*ஆதலால் அறிவு விளங்கிய ஜீவர்கள் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடாக கடைபிடிக்க வேண்டும்*


*அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்* *ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்,*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு