சனி, 17 டிசம்பர், 2022

கண்டது எல்லாம் அநித்தியமே !

 *கண்டது எல்லாம் அநித்தியம்!* 


*உலக வாழ்க்கையில் உயர்ந்த பிறப்பு மனித பிறப்பாகும், உயர்ந்த அறிவு மனித குலத்திற்கு மட்டும் இறைவனால் வழங்கப்பட்டு உள்ளது*


*உண்மை அறியும் உயர்ந்த அறிவும் ஆன்மாவில் இருந்து வெளிப்பட வேண்டும், உண்மை அறிவான மெய் அறிவு வெளிப்படாமல் பொய் அறிவை பயன்படுத்தி மனிதகுலம் வாழ்ந்து அழிந்து கொண்டுள்ளது.* 


*பொய் அறிவு எவ்வாறு கடைபிடிக்க நேர்ந்தது என்றால்?*


*மனிதகுலத்திற்கு தேவையான  வாழ்க்கை முறையும், அறிவுரையும் ஒழுக்கமும் சொல்ல வந்த அருளாளர்கள் நேரிடையாக சொல்லிப் புரிய வைக்காமல்.அவரவர்களுக்குத் தோன்றிய பொய்யான  கற்பனைக் கதைகளைச் சொல்லி எழுத்து வடிவிலும் நூல் வடிவிலும் உருவ வடிவிலும் கற்பனைக் கலைகளைப் படைத்துள்ளார்கள்,அவைகள் யாவும் உண்மையாக இருப்பது போலவே அமைத்து மக்களை நம்ப வைத்து விட்டார்கள்*


*அவற்றிற்குப் பெயர்தான் வேதம், ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம் போன்ற கலைகளாகும்* *கற்பனைக் கதைகளையும் கதைகளில் உள்ள கதாப்பாத்திரங்களையும்,நிலையானது உண்மையானது என நினைந்து மக்கள்  பின்பற்றி வாழ்வதால் ஆன்மாவில் உள்ள அருள் அறிவும், உண்மை அறிவும் விளக்கம் இல்லாமல்,அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகளால்  மறைக்கப்பட்டுள்ளன.* 


*வள்ளலார் பாடல்!*


கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக


மலைவறு *சன் மார்க்கம் ஒன்றே* நிலைபெற மெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என்தனக்கே


உலைவறும் இப் பொழுதே நல் தருணம்என நீயே

உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே


சிலைநிகர் வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!  


*இயற்கை உண்மை,இயற்கை விளக்கம்,இயற்கை இன்பத்தை தெரிந்து அறிந்து புரிந்து மனிதகுலம் வாழ்வாங்கு வாழ்வதற்கு, உண்மைப் பொது நெறியாம் சமரச  சுத்த சத்திய சங்கத்தை தோற்றுவித்து உள்ளார் வள்ளலார்.* 


*பொய் நூல்களை படிக்க வேண்டாம்!*


*சுத்த சன்மார்க்கத்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால் உலகில் உள்ள பொய் நூல்கள் எதனையும் படிக்கவோ பின்பற்றவோ கூடாது என்கிறார் வள்ளலார்.* 


பின் என்ன செய்ய வேண்டும் ? 


*ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மாவில் உள்ள அறிவும் அன்பும் விளங்க வேண்டும், அறிவும் அன்பும் விளங்கினால் மட்டுமே,இயற்கை உண்மையான கடவுளையும்,இயற்கை விளக்கமான அருளையும், இயற்கை இன்பமான மரணம் இல்லாப் பெருவாழ்வும் வாழ்ந்து, இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று வாழமுடியும்* 


*வள்ளலார் பாடல்!* 


காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே

களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே


*மேலையிலே இம்மையிலே ஒருமையிலே* தவத்தால்

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் *தருமச் சாலையிலே* ஒருபகலில் தந்ததனிப் பதியே

*சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே*


மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்

மாநடத்தென் அரசேஎன் மாலையும் ஏற் றருளே.! 


*மேலே கண்ட பாடலிலே ஜீவகாருண்யத்தின் வல்லபத்தையும்,விளக்கத்தையும் தெளிவாக விளக்கி உள்ளார்* *எனவேதான் ஜீவகாருண்யம் விளங்கும் போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும்,அதனால் உபகார சக்தி விளங்கும் என்றும் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார்.*


*ஜீவகாருண்யத்தை கடைபிடிக்க வேண்டுவது எதற்காக என்றால்? ஆன்மாவின் உள்ளே மறைந்து கொண்டு இருக்கும் அன்பும் அறிவும் விளங்குவதற்காக என்பதை ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.*


*அன்பும் அறிவும் விளங்கினால்தான் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்ன என்பது விளங்கும்,

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் ஒத்து வாழ்பவர்களே அருளைப் பெறும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.*


*அறிவும் அன்பும் விளங்கியவர்கள்,உண்மைப் பொது நூலான திருஅருட்பாவை மட்டுமே படிப்பார்கள் அவற்றில் சொல்லியவாறு ஒழுக்க நெறிகளை வாழ்க்கையில் முழுமையாக  கடைபிடிப்பார்கள். மற்றைய உலகில் உள்ள பொய்நூல்கள் எதையும் படிக்க மாட்டார்கள்,பின்பற்ற மாட்டார்கள்*

*இந்த உண்மைத் தெரிந்தவர்களே சுத்த சன்மார்க்கி என்பவர்களாகும்.* 


*வள்ளலார் பாடல்!* 


மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்

வழக்கம் அது கண்டனம்நீ மணவாள ருடனே


காலையிலே கலப்பதற்கிங் கெனைப் புறம்போ என்றாய்

கண்டிலன் ஈ ததிசயம்என் றுரையேல் என் தோழி


*ஓலையிலே பொறித்ததைநீ* *உன்னுளத்தே கருதி*

*உழல்கின்றாய்* *ஆதலில்இவ் வுளவறியாய் *தருமச்*

*சாலையிலே* *சமரசசன் மார்க்கசங்கந் தனிலே*

சற்றிருந்தாய் எனில் இதனை உற்றுணர்வாய் காணே.!


*உலகில் உள்ள சாதி,சமயம் மதங்களின் பொய்யான தத்துவ  தெய்வங்கள்,மற்றும் பொய்யான கொள்கைகள் யாவையும் ஓலையிலே எழுதி வைத்துள்ளதை படித்து உளரிக்கொண்டு உள்ளீர்கள் நான் சொல்லும் உளவை அறிந்து தெரிந்துகொள்ள, தருமச்சாலை வழியாக வந்து, சுத்த சன்மார்க்கத்தை கடைப்பிடித்தீர்களானால் உண்மையான அறிவும் அன்பும் விளங்கி,இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் அவரால் கிடைக்கும் அருளையும்  பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகிடைக்கும்* 


*ஆதலால் சுத்த சன்மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள்,மெய் நூலான திருஅருட்பாவைத் தவிர, வேறு எந்த பொய் நூல்களையும் அவற்றின் கொள்கைகளையும் படிக்கவோ பின்பற்றவோ கூடாது என்கிறார் வள்ளலார்.*


*ஆன்மாவில் பதிவாகியுள்ள சாதி சமய மதம் போன்ற குப்பைகளை அகற்ற வேண்டும்,குப்பைகளை அகற்றாமல் ஆன்மா தூய்மை அடையாது,தூய்மை அடையாத ஆன்மாவில் அருள் பெறவே முடியாது.*


*வள்ளலார் பாடல்!*


சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

*சாத்திரக்குப் பைகள்எல்லாம்* பாத்திரம்அன் றெனவே


ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே

*அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்*


*ஓதிஉணர்ந் தோர்புகழும்* *சமரசசன் மார்க்கம்*

*உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்* *மெய்ப் பொருளாம்*


*சோதிநடத் தரசை* என்றன் உயிர்க்குயிராம் பதியைச்

சுத்தசிவ நிறைவை உள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.! 


மேலே கண்ட பாடலை உற்று நோக்க வேண்டும் வள்ளலார் அருளைப் பெற்றதற்குண்டான காரண காரியத்தை தெளிவாக விளக்கியுள்ளார்.


மேலும் சொல்லுகிறார்.


துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ

சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - 


என்மார்க்கம்

நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.! 


*உலகிலில் உள்ள சாதி சமயம் மதங்களால் தோற்றுவிக்கப்பட்ட துன்மார்க்கத்தை எல்லாம் தொலைத்து விட்டேன்,உண்மை பொது நெறியான சுத்த சன்மார்க்க மெய்நெறியை கடைபிடித்தேன் மெய்ப்பொருளை நன்கு உணர்ந்தேன் என்கின்றார்*


நாமும் வள்ளலாரைப் போல் சாதி சமய மதத்தை தவிர்த்து சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளைப் பின் பிற்றி வாழ்ந்தால் மட்டுமே அருளைப் பெற முடியும் மரணத்தை வெல்லமுடியும்.


மேலும் ஒரு பாடல்!


கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே


உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே


விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே


எண்டகுசிற் றம்பலத்தே *எந்தைஅருள்* *அடைமின்*

*இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!*


*இறவாமல் பிறவாமல் வாழ்வதற்கும்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருள் பெற்று பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதற்கும்  ஆசை உள்ளவர்களானால்  உலகில் உள்ள பொய் நூல்களை படிக்க வேண்டாம் அவற்றை பின்பற்ற வேண்டாம் என்கின்றார் வள்ளலார்* 


மேலும் வள்ளலார் பாடல்! 


ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்

அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்


ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்

எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்


தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்

திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே


மோசஉரை எனநினைத்து மயங்காதீர்  உலகீர்

முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.! 


*ஆசை உண்டேல் இங்கே வாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றார்.*


எனவே இதுவரை கண்டது கேட்டது கற்றது களித்தது உண்டது எல்லாம் அநித்தியமானது,நித்தியமானதை தொடர்பு கொண்டு வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு