செவ்வாய், 26 ஏப்ரல், 2022

தாவரங்களும் உயிர்கள் தான்!

 *தாவரங்களும் உயிர்கள் தான் !*


*ஓர்  ஜீவனைக் கொன்று (உயிர்களை) ஒரு ஜீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுவித்தல் ஜீவகாருண்ய ஒழுக்கமே அல்ல என்றும் கடவுள் சம்மதமும் அல்ல என்றும்.*


*இந்த பழக்கம் இயற்கைக்கு முழு விரோதம் என்றும் அறியவேண்டும்*


பொதுவான உணவு !


*உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் தாவர உணவே சிறந்த முக்கிய உணவாக இறைவன் படைத்துள்ளார்.*


  *மனிதர்களுக்கு ஊழ்நியதி ஆகாரத்தோடு ஆகாமிய முயற்சி ஆகாரம் அவசியம் தேடி உட்கொள்ள வேண்டும் என்பது இறைவன் விதித்த ஆணையாகும். இவற்றைப் பற்றிய உண்மையை நம் ஆன்மீகம் சார்ந்த முன்னோர்கள் எடுத்துச் சொல்ல தவறிவிட்டார்கள்.*

*தாவரங்களும் உயிர்கள்தான் அதனால் எந்த தாவரத்தையும் வேறோடு பிடுங்கி உணவாக உட்கொள்ளக் கூடாது.அப்படி உணவாகக் கொண்டால் அதுவும் கொலைக்கு சமம் என்கிறார் வள்ளலார்.* 


*தாவரங்களில் உள்ள இலை.பூ.காய்.கனிகள் இவற்றை பரித்து உண்பதால் அவைகள் மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டும் காய்த்துக் கொண்டும் இருக்கும் அதனால் அவற்றை உண்பதால் கொலை அல்ல என்பதை உயர்ந்த அறிவுள்ள மனிதன் அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்*


உதாரணம்!


*வித்து காய் கனி முதலியவற்றில் உயிர்க்கொலை இல்லாவிடினும் நகம் ரோமம் சுக்கிலம் முதலியவற்றிலிருக்கிற அசுத்தமாவதில்லையோ என்னில்:-* 


*தத்துவ விருத்தியும் தாது விருத்தியும் இல்லாதபடியால் அசுத்தமும் இல்லை. உயிர்க்கொலையும் அல்ல*


*ஆகலில் மரம் புல் நெல் முதலியவைகளின் வித்து காய் கனி தழை முதலியவற்றைப் புசிப்பது சீவகாருணிய விரோதமல்ல என்றறிய வேண்டும்*


*மேலும் வள்ளலார் சொல்லுகிறார்!*


*மரம்.புல்.நெல்.இலை.காய்.கனி முதலான தாவரங்களும் உயிர்கள்தான்.அவைகளை இம்சை. செய்து ஆகாரங் கொண்டால் அதுவும் ஏகதேச தாமச ஆகாரம்தான்.அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் அசுத்த கரண சந்தோஷம்தான் ஆனாலும்  அப்படியல்ல*


*மாமிசம் உண்ண வேண்டாம் என்பதற்கு வள்ளலார் சொல்லும் உதாரணம்!*


*எல்லாச் சீவர்களும் ( உயிர்கள்) இயற்கையுண்மை ஏகதேசங்களாகிக் கடவுள் இயற்கை விளக்கமாகிய அருளுக்கு இடமாக இருக்கின்றபடியாலும், கடவுள் இயற்கை விளக்கம் மாறுபடும் போது சீவத் தன்மை இல்லாதபடியாலும், கடவுள் இயற்கை விளக்கமும். ஜீவன் இயற்கை விளக்கமும் ஒன்றோடொன்று மாறுபாடு இல்லாத்தாலும். கடவுளியற்கை விளக்கமுஞ் சீவன் இயற்கைவிளக்கமும் அந்தந்தத் தேகங்களினும் விளங்குகின்ற படியாலும், ஒரு சீவனை வதைத்து (கொன்று) அதனால் மற்றொரு சீவனுக்குப் பசியாற்றுதல் சீவகாருணிய ஒழுக்கத்திற்கு முழு விரோதமென்றே அறியவேண்டும்* 


*வள்ளல்பெருமான் திருவள்ளுவர்  இருவரும் மட்டுமே உயிர்க்கொலை செய்வதையும் அதன் புலால் உண்பதையும் கடுமையாக சாடி உள்ளார்கள்.*


 *மற்ற ஞானிகள் மக்களைப் பற்றி கவலைப்படாமல்.பட்டும் படாமலும் ஏகதேசம் சொல்லி உள்ளார்களேத் தவிர அவற்றால் உண்டாகும் தீமைகளை தெளிவாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை.*


*உயிர்க்கொலை செய்வதும் அதன் புலால் உண்பதும் இயற்கைக்கு விரோதம் அல்ல என்றும்*  

*ஓர் உயிரைக்கொன்றுஓர்உயிர் உண்பதுதான்* 

*இயற்கை விதித்த விதி என்றும்* *அவற்றை உண்பது தவறுஅல்ல என்றும் தவறு செய்பவர்கள் அவர்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள்*


*இது எவ்வளவு பெரிய அறியாமை என்பதையும் முழுமையான அறிவு விளக்கம் இல்லை என்பதையும் நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.* 


*மாமிசம் உண்பவர்கள் எவ்வளவு பெரிய உயர்ந்த பதவியில் இருந்தாலும்.* *உயர்ந்த பொருப்பில் இருந்தாலும்* *உயர்ந்த விஞ்ஞான அறிவியல் சார்ந்த உலக அறிவாளிகளாக இருந்தாலும்.* 


*அருள் சார்ந்த  ஆன்மீக வாதிகளாக இருந்தாலும்.*

*சாதி சமயம் மதம் சார்ந்த தலைவர்களாக இருந்தாலும்.இறந்தவரை எழுப்புகின்ற சித்து விளையாட்டுத் தெரிந்தவர்களாக இருந்தாலும்.அவர்களை மனித வர்க்கத்தில் இருந்தும் மனித தரத்தில் இருந்தும் இறைவன் நீக்கிவிடுவார் என்கிறார் வள்ளலார்.*


 *அவர்களை உயர்ந்த மனிதர்களாக எண்ண வேண்டாம் என்கிறார்.*


வள்ளலார் பாடல்! 


மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்


உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவ னேனும்


கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்


குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே.!


*ஒரு பெண்ணை ஆணாக்கவும் ஆணை பெண்ணாக்கவும் அறிந்த ஞானியாக இருந்தாலும்.*


*இறந்தவரை எழுப்புகின்ற வல்லமை பெற்ற சித்தர்களாக இருந்தாலும்.*  *உயிர்மேல் இரக்கம் இல்லாமல்* 

 *ஓர்உயிரை அகற்றி* *அதன் மாமிசத்தை கடித்து உண்ணும் பழக்கம் உள்ளவராக இருந்தாலும்.*

*அப்படி உண்பவர்களுக்கு துணை போகிறவர்களாக இருந்தாலும்.*

*அவரை ஞானி எனக் கூறாதே என்று ஆண்டவர்மீது சத்தியம் வைத்து சொல்லுகின்றார்* 

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் படைக்கப்பட்ட உயிரையும் உடம்பையும் அழிப்பதற்கு இவ்வுலகில் எவருக்கும் உரிமை கிடையாது.என்பதை உயர்ந்த அறிவுள்ள ஒவ்வொரு மனிதர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்*


*தெய்வங்கள் பெயரால் உயிர்பலி*!


நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்


*பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்*


பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்


கலியுறு சிறிய தெய்வ வெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.! 


*ஒவ்வொரு ஊரிலும் குல தெய்வம் என்ற பெயர்களிலும் மற்றும் சிறு தெய்வங்கள் என்ற பெயர்களிலும் விகாரமான உருவங்களை  சிலைகளாக செய்து வைத்து* *அத் தெய்வங்கள் பெயரால் ஆடு. மாடு.கோழி.பன்றி போன்ற வாய்பேசாத அப்பாவி உயிர்களை பலி கொடுத்து அதன். புலாலை பங்கிட்டு  உண்பது எவ்வளவு பெரிய பயங்கரமான கொடூரமான கொலை குற்றம் என்கிறார்.*

*அதனால்தான் சிறுதெய்வ வழிபாடு செய்ய வேண்டாம் என்றும் அத் தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்ய வேண்டாம் என்றும் சாடுகின்றார்*


*அவ்வாறு செய்பவர்களையும்*  *அந்த சிறிய தெய்வங்களையும்*  *கண்ட காலத்தில் எல்லாம்* *பயந்து நடுங்கினேன்*

என்கின்றார்


ஏன் பயந்து நடுங்குறார் என்றால்? 


*மனிதனை மனிதன் கொலை செய்தால் உலகியல் சட்டத்தில் கொலைக்குத் தகுந்தாற்போல் ஆயுள் தண்டனையோ அல்லது தூக்கு தண்டனையோ வழங்கப்படுகிறது.* 


*வாய் பேசமுடியாத ஜீவன்களை நேருக்குநேர் கதற கதற. துடிக்க துடிக்க கூர்மையான ஆயுதங்களை கொண்டு கொலை செய்பவர்களுக்கு என்ன என்ன தண்டனை கிடைக்கப்போகிறதோ அதனால் அவர்கள் என்ன என்ன துன்பத்தை அடையப் போகிறார்களோ என நினைந்து ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் பயந்து நடுங்குகிறார் வள்ளலார்.*


*இவர்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்  செய்யும் கொலை குற்றங்களை இனிமேலாவது நன்கு உணர்ந்து கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும். ஜீவகாருண்யமே விரதமாக அனுசரிப்பார்களே யானால்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கொலை குற்றத்தில் இருந்து காப்பாற்றி நல்வழிக்காட்டி மேலேற்றுவார் இது சத்தியம்.* 


*உயிர்க் கொலையும் புலைப் புசிப்பும் உடையவர் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புற இனத்தார் என்கிறார்.* *அதற்கு அர்த்தம் உயிர்க்கொலை செய்பவரும் புலால் உண்பவரும் இறைவன் அருகில் செல்ல தகுதி அற்றவர்கள் என்கிறார்.*


*வடலூர் சத்திய ஞானசபையின் வெளியில் கொலை செய்பவரும் புலால் உண்பவரும் உள்ளே பிரவேசிக்க கூடாது என்று எழுதி வைத்துள்ளார்.*


வள்ளலார் பாடல்! 


உயிரெலாம் பொதுவில்  உளம்பட நோக்குக

செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே

(அகவல்)


உயிருள்யாம்  எம்முள் உயிர் இவை யுணர்ந்தே

உயிர்நலம் பரவுக என்று  உரைத்த மெய்ச் சிவமே! ( அகவல்) 


மேலும் சொல்லுகிறார்.


எத்துணையும் பேதமுறாது தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே


ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த


சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த


வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்

சிந்தைமிக விழைந்த தாலோ.!


*எல்லா உயிரையும் தம் உயிர்போல் பாவிக்கும் அறிவுள்ளவர் எவரோ அவரே உத்தமர் என்பவராகும். அந்த உண்மை தெரிந்தவர் எவரோ அவரே வித்தகர் என்பவராகும்.அந்த குணம். உள்ளவர் உள்ளத்தில் இடைவிடாது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நடம் புரிகின்றார் என்பதை நான் அறிந்து கொண்டேன்* 


*ஆதலால் அவரையே கடவுளாக எண்ணி வழிபடுவேன்.அவர் இட்ட கட்டளையை  சிரமேற் கொண்டு நிறைவேற்ற என் சிந்தை மிகவும் விரும்புகிறது என்கிறார்*


*எனவே உயர்ந்த அறிவுள்ள மனிதர்களாகிய நாம் உயிர் கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் தாவர உணவுகளையும் வேரோடு பிடுங்கி உண்ணாமல்.சுத்த பூதகாரிய உணவான இலை தழை.பூ.காய்.கனி.நெல்.அரிசி. கம்பு .கேழ்வரகு.சோளம்.கொள்ளு.துவரை.வரகு.சாமை. போன்ற தானியங்களை  உணவுகளாக உட்கொண்டு தேகங்களை வலிமை உள்ளதாக்கி நரை திரை பிணி மூப்பு பயம் இல்லாமல் ஆன்மநேய உறவோடு.ஆன்ம அறிவோடு வாழ்ந்து ஆண்டவர் அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் *ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு