சனி, 19 மார்ச், 2022

அருட்பெருஞ்ஜோதியும் வள்ளலாரும்!

 *அருட்பெருஞ்ஜோதியும் வள்ளலாரும்!*


நிதானமாக படிக்கவும்!


*இயற்கை உண்மையாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் படைக்கப்பட்ட இவ்வுலகத்தில் உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்தை எடுத்த ஆன்மாக்கள் அறியாமையாலும் அஞ்ஞானத்தாலும்  இந்த பஞ்சபூத மாயா உலகத்தில் சாதி சமயம் மதங்களில் நாட்டம் கொண்டு. ஆண்டவரிடம் தொடர்பு கொள்ளாமலும்.அருள் பெறும் வழிமுறைகள் தெரிந்து கொள்ளாமலும். தெரிய வேண்டியதை தெரிந்து கொள்ளாமலும். சாதி சமயம் மதமான பேய்பிடித்து  போரிட்டு( சண்டையிட்டு) உடலையும் (உடம்பு) உயிரையும் அழித்து கொண்டே உள்ளார்கள்* 


*வள்ளலார் பாடல்!*


பேருற்ற உலகிலுறு சமய மத நெறிஎலாம்

*பேய்ப் பிடிப்புற்ற* பிச்சுப்

பிள்ளை விளை யாட்டென உணர்ந்திடாது உயிர்கள் பல

பேதமுற்று அங்கும் இங்கும்


*போருற்று இறந்து வீண் போயினார்* இன்னும் வீண்

போகாத படிவிரைந்தே

*புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டி*  *மெய்ப்*

*பொருளினை* உணர்த்திஎல்லாம்


ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ

*என்பிள்ளை ஆதலாலே*

இவ்வேலை புரிக என்றிட்டனம் மனத்தில் வே

றெண்ணற்க என்றகுருவே


நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணானந்த பரநாதாந்த வரைஓங்கு

நீதி நட ராஜபதியே.!


என்னும் பாடலில் ஓர் உண்மையைத் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளிப்படுத்துகின்றார்.


*உலக மக்கள் அனைவரும் மெய்ப்பொருளை தெரிந்து கொண்டு. சுகநிலை அடைய வேண்டும் என்ற பெரும் நோக்கத்தோடும் பெருங் கருணையோடும்.*

*நீ என் பிள்ளை ஆதலாலே இவ்வேலையை செய்ய வேண்டும் என ஆணையிட்டு வள்ளல்பெருமான் அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.*


*கர்மசித்தர் யோகசித்தர் காலம் கலியுகம்.*  *கலியுகம் முடியும் தருவாயில் உலக உயிர்கள் அனைத்தும் அழிந்துவிடும் சூழல் உண்டாயிற்று. கலியுகம் முடிவதற்கு முன்பே சமரச சுத்த சன்மார்க்க சத்திய யுகத்தை தொடங்கி உயிர்களை காப்பாற்ற வந்தவர் வள்ளலார்* *அதாவது ஞானசித்தர் காலம் என்பதாகும்*


*வள்ளலார் பதிவு செய்துள்ளதை ஊன்றி படித்தால்தான் உண்மையை தெரிந்துகொள்ள முடியும்.!*


*சமரச சுத்த சன்மார்க்க*

*சத்திய ஞானாசாரம்* என்னும் தலைப்பில்  உண்மையை வெளிப்படுத்துகிறார்!


*இதுவரையில் கர்ம சித்தருடைய காலம் அதனால் சமயங்களும், மதங்களும் பரவி இருந்தன, இப்போது வரப்போகிறது ஞான சித்தருடைய காலம். இனி ஜாதி, சமய, மதம், முதலான ஆசாரங்கள் எல்லாம் போய் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரம் ஒன்றே  விளங்கும்.*


*சமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தர்கள், மூர்த்திகள், ஈஸ்வரன், பிரம்மன், சிவம், முதலிய தத்துவங்கள் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஒழிய அதற்க்கு மேல் இருக்காது.*


*சமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தர்களுடைய சித்திகள் சர்வ சித்திகளையுடைய கடவுளின் சித்தியின் லேசங்கள் அதாவது (சிறிய துகள்கள்). அந்த சர்வ சித்திகளுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள். கோடி கோடி பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கிறார்கள்.*


*இப்போது இருக்கும் வேதாகமங்கள் புராணங்களிலும் சமய மதங்களிலும் லட்சியம் வைக்காதீர்கள். வைத்தால் சமரச சுத்த சன்மார்கத்தில் உங்களுக்கு லட்சியம் வராது. வராவிட்டால் நீங்கள் அடையப்போகிறது ஒன்றும் இல்லை. ஆதலால், அவைகளையெல்லாம் பற்றற விட்டு சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் உண்டு என்றும் அவர் ஒருவரே அருட்பெரும் ஜோதியர் என்றும், அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்ய வேண்டும் என்று அழுத்தமாக சொல்லுகிறார்* 


**தன்னுள் இருந்து இயங்கும் இயக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியவாறு உண்மையை  வெளிப் படுத்தியவர் வள்ளலார்.*


*உலக உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புடன் வருவிக்க உற்ற ஒரே அருளாளர் வள்ளலார் ஒருவரே!* என்ற உண்மையை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரை என்பிள்ளை ஆதலாலே இவ்வேலை புரிய என்று இட்டனன் என்கிறார். அதன் உண்மை யாதெனில்?* 


*இதுவரையில் உலகில் தோன்றிய  ஞானிகள் எவரும் இதுவரையில்* *மக்களை நல்வழியில் கொண்டு செல்லவில்லை.*

*ஆதலால் பூரண அருள் பெற்ற* *பக்குமுள்ள ஆன்மாவை *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* *சம்பு பட்சம்*  *என்ற வகையில். வாக்கால் சொன்னவுடன்  சின்னம்மை வயிற்றில் கருவை உருவாக்கி  நேரிடையாக வருவிக்க உற்றவர் வள்ளல்பெருமான் ஆவார்கள்*


*கருவிலே கலந்தவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*


*வள்ளல்பெருமான் அவர்களுக்கு கருவிலே அருள் நிறைந்து கலந்து விட்டதால் உலக ரகசியங்கள் யாவும் பட்டநடுப் பகல் போல் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.*


*வள்ளலார் பாடல்!*


*கருவிற் கலந்த துணையே* என் கனிவில் கலந்த *அமுதே* என்

கண்ணிற் கலந்த ஒளியே என் கருத்திற் கலந்த களிப்பே என்


உருவிற் கலந்த அழகே ! என் உயிரிற் கலந்த உறவே! என்

உணர்விற் கலந்த சுகமே! என் னுடைய ஒருமைப் பெருமானே!


*தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே* *மெய்ஞ்ஞான*

*சித்தி அளித்த* *பெருங்கருணைத் தேவே*  உலகத் திரளெல்லாம்


மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே

வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் *கருணை* வலத்தாலே.! 

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அளித்த அருள் கொடையால். தனிப்பெருங் கருணையால் வருவிக்க உற்ற விளக்கத்தை  மேலே கண்ட பாடலில் வாயே பறையாய் அறைகின்றேன் என்று தெளிவாக பதிவு செய்கிறார்*


ஐந்து மாதக் குழந்தையாய் இருக்கும்போதே *சிதம்பரம்* தில்லையில் *சிதம்பர ரகசியமாய்* மறைத்து வைத்திருந்த உண்மையை திரையை விளக்கி காட்டியபோது *மெய்ப்பொருளை* வெளிப்படையாக கண்டவர் வள்ளலார்.


*ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது தான் கண்ட காட்சியை தன்னுடைய  47 ஆவது வயதில் ஆறாம் திருமுறையில் அருள்விளக்க மாலை பாடலில் பதிவு செய்கிறார்*


*வள்ளலார் பாடல்!*


தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் *தில்லைத்*

*தலத்திடையே* திரைதூக்கத் தரிசித்த போது


வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே *எல்லாம்*

*வெளியாகக்* காட்டியஎன் மெய்உறவாம் பொருளே


காய்வகை இல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே

கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே


தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்

சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.!


*வள்ளலார் வேறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வேறு அல்ல இருவரும் ஒருவரே* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளலார் உருவில் வந்து உண்மையை தெரிவிக்கிறார்.

எனவேதான் *நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் வார்த்தை என்கிறார்.*


*வள்ளலாருக்கும் மற்ற ஞானிகளுக்கும் எந்த தொடர்பு இல்லை* *வாழையடி வாழைஎன வந்த திருக்கூட்டத்தின் மறபில் வந்தவர் அல்ல.சிறு வயது முதலே அனைத்தும் திருவருளால் அறிந்தவர்* 


வள்ளலாரே சொல்லுகிறார்!


*அச்சிறு பருவத்திற்றானே ஜாதிஆசாரம். ஆசிரம்ஆசாரம் என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய்யென்றறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து அப்பருவம் ஏறுந்தோறும் எனது அறிவை விளக்கஞ் செய்து செய்து என்னை மேல்நிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்கவைத் தருளினீர்.*


*வாலிபப் பருவம் அடுக்குந் தருணத்திற்றானே அப்பருவத்திற்கு மிகவும் உரிய விடய இச்சைகளைச் சிறிதும் தலையெடுக்க வொட்டாது அடக்குவித்தருளினீர்.*


*அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர்.*


 *வாலிபப்பருவம் தோன்றிய போதே சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும், அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும், உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர்.*


*அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும் "சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து" அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்.*


*அங்ஙனம் செய்வித்ததுமன்றி, உலகியற்கண் பொன்விஷய இச்சை. பெண்விஷய இச்சை. மண்விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் என் அறிவை ஓரணுத்துணையும் பற்றுவிக்காமல் எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா "உயிர்களும் இன்பமடைதல்" வேண்டுமென்னும் கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச் சுத்த "சன்மார்க்கத் தனிநெறி ஒன்றையே" பற்றுவித்து எக்காலத்தும் நாசமடையாத சுத்ததேகம் பிரணவதேகம் ஞானதேகம் என்னும் சாகாக் கலானுப தேகங்களும்,*


*தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும் கடவுள் ஒருவரே என்றும் அறிகின்ற உண்மை ஞானமும்*


 *கருமசித்தி யோகசித்தி ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெருகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்குத் திருவுளங்கொண்டு அருட்பொருஞ்ஜோதியராகி நான் எவ்விதத்தும் அறிதற்கரிய "உண்மைப் பேரறிவை அறிவித்தும்," நான்  எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும், நான் எவ்விடத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவிப்பித்தும் எனது அகத்தினும் புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்திருந்து உயிரிற்கலந்து பெருந்தயவால் திருநடஞ்செய்தருளுகின்றீர்*.


*இங்ஙனஞ் செய்தருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!*


*என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மையும் தன்னை இவ்வுலகத்திற்கு அனுப்பிய விளக்கத்தையும் தெரியப்படுத்துகிறார்.*


தெரிந்து கொள்வோம் தெளிவடைவோம்


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு