கடவுள் உண்மை !
*கடவுள் உண்மை !*
*உயர்ந்த அறிவு பெற்ற மனிதன் இயற்கை உண்மையை அறிய வேண்டும்.இல்லை எனில் அவன் மனித தேகம் எடுத்து எந்தவித பயனும் இல்லை.*
*கடவுள் சத்து நிலையாகவும்.சித்து நிலையாகவும்.ஆனந்த நிலையாகவும் மூன்று விதமாகவும் செயல்பட்டுக்கொண்டு உள்ளார்.*
*இதைத்தான் வள்ளலார் இயற்கை உண்மை என்றும்.இயற்கை விளக்கம் என்றும்.இயற்கை இன்பம் என்றும் கடவுளின் உண்மையைத் தெளிவு படுத்தி புரிய வைக்கின்றார்.*
*தன்னை வெளிக் காட்டாமல் அகத்தில் நின்று ( ஆன்மா) நிலைத்து ஒளிர்கின்ற நிலை ஒன்று. இதற்கு இயற்கை உண்மை என்று பெயர்.*
*புறத்தில் பலவாய் தோன்றி மறைந்து கொண்டுள்ள சித்து நிலை ஒன்று உள்ளது இதற்கு இயற்கை விளக்கம் என்று பெயர்*
*மேலே கண்ட இரு நிலைகளுக்கும் இடையில் உள் உணர்வாய் இருந்து அறிவாய் விளங்கி இன்பமாய் அனகமாய் விரிந்து நிலவும் அனுபவ நிலைக்கே இயற்கை இன்பம் என்று பெயர்*
*இவை மூன்றுமே அருவாய் உருவாய் அருவுருவாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் முழுமைத் தோற்றமாகும்.*
சத்தி சித்தி(சித்து) வகைகள் !
*கருமசித்தி.யோகசித்தி.ஞானசித்தி என மூன்று வகையான சத்து சித்து நிலைக்கும் மூன்று விதமான தேகமாற்றம் உண்டாகும்.அதாவது சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் போன்ற மாற்றம் அதாவது முத்தேக சித்தி பெற்ற ஆன்மாக்கள் (மனித தேக ஆன்மாக்கள்) பூரண அருள் உருவாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காணமுடியும்.*
( அருள் சித்தை எக்காரணம் கொண்டும் எக்காலத்திலும் விரையம் செய்யாமல் இருக்க வேண்டும்)
*வள்ளலார் அகவல்!*
மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி!
மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்களில்
ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி!
மூவிட மும்மையின் முன்னிய தொழிற்களில்
ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி!
மூவிரு நிலையின் முடி நடு முடிமேல்
ஓவற விளங்கு மொருமை மெய்ப் பொருளே!
*ஆன்மாவின் பக்திநிலை முக்திநிலை என்பது சரியை கிரியைச் சார்ந்த கீழ்நிலையாகும். முக்தி என்பது முன்னுறு சாதனம். சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் என்பார் வள்ளலார்.*
*கர்மசித்தி.யோகசித்தி.ஞானசித்தி எனும் மூவகை சித்தி நிலைக்கும் தாழ்ந்த தரத்தில் உள்ளது பக்தி முக்தி நிலையாகும்* *நாம் அடைய வேண்டியது பூரண அறிவு அருள் சார்ந்த ஞானசித்தி பெரும்போக நாட்டரசு இயற்கை இன்பமாகும்*
*!ஆன்மா உண்மை அறிய வேண்டும்*
*உயர்ந்த அறிவு பெற்ற மனித தேகத்தில் உள்ள ஆன்மாக்கள். மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள சாதி சமயம் மதம் சார்ந்த புறபக்தி புறமுக்தி கொள்கையில் சிக்கி சிலைவடிவமான தத்துவ உருவக் கடவுள்களை உண்மை என நம்பி. இயற்கை உண்மை மெய்ப்பொருளைஅறிய அடைய முடியாமல். அறிவை இழந்து உண்மை உணர்வை இழந்து. மனம் போன போக்கில் உழன்று உழன்று.சுழன்று சுழன்று அழிந்து கொண்டே உள்ளார்கள்.*
*வள்ளலார் பாடல்!*
பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர்
*பவநெறி* இதுவரை பரவிய திதனால்
*செந்நெறி அறிந்திலர்* *இறந்திறந் துலகோர்*
*செறிஇருள் அடைந்தனர்* ஆதலின் இனி நீ
புன்னெறி தவிர்த்தொரு *பொதுநெறி* எனும்வான்
புத்தமு தருள்கின்ற *சுத்தசன் மார்க்கத்*
தன்னெறி செலுத்துக என்ற என்அரசே
தனிநடராஜ என் சற்குரு மணியே.!
*உலகின் பொது நெறியான சுத்த சன்மார்க்க நெறி ஒன்றே கடவுள் உண்மையை அறியும் அருள் நெறியாகும்* *இதுவே வள்ளலார் தோற்றுவித்த "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க" நித்திய பொது தனி நெறியாகும்*
*கடவுளின் உண்மை அறிந்தால் மட்டுமே மனிதன் பூரண அருள் பெற்று ஆன்ம இன்ப லாபமான இம்மை இன்பலாபம்.மறுமை இன்பலாபம்.பேரின்பலாபம் எனும் மூன்று வகையான இன்ப லாபத்தை அனுபவிக்க முடியும்*
*எனவே உண்மை ஒழுக்கத்தோடு அகத்தில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும்போது கடவுளின் சத்துப் பொருளான அருள் வெளிப்பட்டு.இயற்கை உண்மையான சத்து உண்மையும்.இயற்கை விளக்கமான சித்து விளக்கமும் .இயற்கை இன்பமான ஆனந்த அனுபவமும் பெற்று மரணத்தை வென்று கடவுளநிலை அறிந்து அம்மயமாகி வாழ்வாங்கு வாழலாம்*
*மனிதன் முதலில் அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் பெறவேண்டும். அதற்கு தடையாய் இருப்பது சாதி சமயம் மதம் சார்ந்த கொள்கைகளாகும்* *அவற்றை விட்டு வெளியே வந்தவர் எவரோ அவரே சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்கும் தகுதி பெற்றவராகும்*
*சாதி சமய சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் என்கிறார் வள்ளலார்*
*சாதி சமயச் சழக்கெலாம் அற்றது*
*சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது*
*மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது*
*மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது!*
*வடலூர் சத்திய ஞானசபை சாதி சமயம் மதம் சாராத பொது வழிப்பாட்டு அமைப்பாகும்*
*சன்மார்க்கம் என்றாலே அருள் பெறும் இடமாகும். சாதி சமயம் மதங்களின் மேல் பற்று வைக்காமல் பற்றிய பற்று அனைத்தையும் பற்றுஅற விட்டு அருள் அம்பலப் பற்றை பற்றிக் கொள்ள வேண்டும்.பற்றுகளை அகற்றாதவரையில் அருள் கிட்டாது கடவுள் உண்மையை காண இயலாது*
*வள்ளலார் பாடல்!*
*உண்மையுரைக் கின்றேன்* இங் குவந்தடைமின் உலகீர்
உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
எண்மையினான் *எனநினையீர்* *எல்லாஞ்செய் வல்லான்*
*என்னுள்அமர்ந் திசைக்கின்றான்* *இதுகேண்மின் நீவிர்*
தண்மையொடு *சுத்தசிவ சன்மார்க்க நெறியில்*
*சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்*
கண்மைதரும் ஒருபெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.!
*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கண்டு களித்து அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு உள்ள வள்ளலார்.* *நீங்களும் என்போல்*
*சத்திய நித்திய வாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்* *வாருங்கள் என ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையோடு அழைக்கின்றார் வள்ளலார்*
வள்ளலார் பாடல்!
*இயற்கைஉண்மை வடிவினரே* அணையவா ரீர்
எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்
*இயற்கைவிளக் கத்தவரே* அணையவா ரீர்
எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்
*இயற்கைஇன்ப மானவரே* அணையவா ரீர்
இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்
*இயற்கைநிறை வானவரே* அணையவா ரீர்
*என்னுடைய நாயகரே* அணையவா ரீர். அணையவா ரீர்!
இயற்கை உண்மை நிலை அறிவோம் உண்மையுடன் வாழ்வோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு