குடும்ப கோரம் !
வள்ளலார் சொன்ன ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய
மூன்று மனைவிகள் கதை
திருவருட்பிரகாச வள்ளலார் இயற்றிய குடும்பக் கோரம் என்னும் பாடல் இந்தக் கதையை நமக்கு உணர்த்துகிறது.
குடும்பக் கோரம் யாருக்காக எழுதப்பட்டது என்றால் முத்துசாமி என்பவர் தன் திருணமத்திற்கு திருவருட்பிரகாச வள்ளலாரை அழைத்திருந்தார்.
வள்ளற்பெருமான் திருமணத்திற்கு செல்லவில்லை.
வள்ளற்பெருமான் வராததை எண்ணி வருத்தம் கொண்டார் முத்துசாமி அவர்கள்.
அவர் வருந்துவதை உணர்ந்த வள்ளற்பெருமான் தன்னுடைய மூன்று மனைவிகள்
8 பிள்ளைகள் படுத்தும் பாட்டால் திருமணத்திற்கு வரஇயலவில்லை என்று குறிப்பிட்டு பாடல் வடிவில்
ஒரு கடிதம் எழுதுகிறார்.
அந்தப் பாடல்களே குடும்பக்கோரம்.
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட மிக உயர்ந்த உபதேசம் இது.
தத்துவக் குடும்பத்தில் அகப்பட்டுத் தடுமாறும் கோர நிலையைக் கூறுவதாதலின் இது குடும்பகோரம் எனப்பெயர் பெற்றது.
வள்ளலார் சொன்ன இந்தக் கதையை உங்களால் உணர்ந்துகொள்ள முடிந்தால் நீங்களே ஞானதேகம் பெற தகுதியுடையவர்கள்.
நூலின் அமைப்பு:
நானூற்று பன்னிரெண்டு(412)
அடிகளையுடைய நிலைமண்டில ஆசிரியப்பாவால் செய்யப்பெற்ற
அத்திருமுகச் செய்யுள்
*குடும்ப கோரம்*என்று
பெயர் பெற்றது.
(வள்ளற்பெருமானார் இளமையில் சென்னையிலிருந்த காலத்தில் இயற்றியது குடும்பகோஷம்).
நூலின் உட்கருத்து:
குடும்பகோரத்தில் பெருமான் தமது தத்துவக் குடும்பத்தின் சேட்டைகளை அழகாக விரித்துரைக்கின்றார்.
குடும்பத் தலைவன் பெயர் - ஏழை
அவனுக்கு மூன்று மனைவிகள்:
முதல் மனைவி - ஆணவம்
இரண்டாம் மனைவி - மாயை
மூன்றாம் மனைவி - கன்மம்.
முதல் மனைவியாகிய ஆணவத்திற்கு ஒரே மகன் - அவன் பெயர் அஞ்ஞானம்.
இரண்டாம் மனைவியாகிய மாயைக்கு நான்கு பிள்ளைகள் - 1. மனம், 2. புத்தி, 3.சித்தம், 4.அகங்காரம்.
மூன்றாம் மனைவியாகிய கன்மத்திற்கு மூன்று பிள்ளைகள் - 1.சத்துவம், 2.இராசசம், 3.தாமசம்
மூன்று மனைவியரோடும், எட்டுப்பிள்ளைகளோடும் ஏழைத்தலைவன் வாழ்வதோ வாடகை வீட்டில்.
வாடகை வீடோ ஒருவர்க்குச் சொந்தமானதன்று.
மூவர்க்குச் சொந்தமானது. அம்மூவர் 1. வாதம், 2.பித்தம்,
3. சிலேத்துமம் என்போர்.
வீட்டு வாடகையும் மாதவாடகையன்று, நாள் வாடகை. வீட்டுக்காரர்கள் மூவரும் அன்றைக்கன்றே வாடகையை வசூலிக்கின்றனர். (வீடு - உடம்பு, வாடகை - உணவு).
இவ்வாறு துன்புறும் குடும்பத்தலைவனுக்கு எத்தனையோ வெளி விவகாரம்; உள்விவகாரம்.
வேதாந்தம் பேச வருவோர்,சித்தாந்தம் பேச வருவோர், இதிகாசம் கூற வருவோர், இலக்கணம் இயம்ப வருவோர், மத தூஷணம் செய்ய வருவோர், விவகாரம் பேச வருவோர், வீண் கதை
பேச வருவோர், இப்படி எத்தனையோ வெளிவிவகாரங்கள்.
மலங்கழித்தல், பல்துலக்குதல், ஆடை துவைத்தல், நீராடல், சிவசின்னமணிதல், பூசனை, யோகம் என எத்தனையோ உள்விவகாரங்கள்.
இத்தனை விவகாரங்களுக்கும் பகற் பொழுது சரியாய்ப் போகிறது.
இரவு வந்தது,
இனிப் பரத்தை வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
பரத்தை யார்? நித்திரை.
"நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும் பொழுதுஞ் சரியாய்ப் போகின்றதுவே" என்று வள்ளலாரின் குடும்ப கோரம் நிறைவு பெருகின்றது:
நூற்பெயர் காரணம்:
தத்துவக் குடும்பத்தில் அகப்பட்டுத் தடுமாறும் கோர நிலையைக் கூறுவதாதலின் இது குடும்ப கோரம்
எனப்பெயர் பெற்றது.
வள்ளல் பெருமானுக்கு குடும்ப கோரமா?:
உண்மையில் வள்ளற் பெருமானின் குடும்பம் இதன்று.்"இது நம் குடும்பமாகும்".
பெருமானின் குடும்பத்திலோ:
மனைவி - நிராசை.
புதல்வன் - சாந்தம்.
பொருள் - உதாரகுணம்.
நண்பர்கள் - அறிவு, நிராங்காரம்.
ஏவல் - சுத்தமனம்,
இருப்பிடம்(வீடு) - சகலகேவலமற்ற இடம்
நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
நிகழ்சாந்த மாம்புதல்வனும்
நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
நீக்கும்அறி வாம்துணைவனும்
மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
மனம்என்னும் நல்ஏவலும்
வருசகல கேவலம் இலாத
இடமும்பெற்று வாழ்கின்ற வாழ்வருளுவாய்
அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
அமுதமே குமுதமலர்வாய்
அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
தழகுபெற வருபொன்மலையே
தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
இவ்வாறு அருளியற் குடும்ப மியற்றும் வள்ளற் பெருமான் நம் போன்றோர் செய்யும் உலகியற் குடும்பத்தின் கோரங்களைத் தம்மீதேற்றிக் கூறி இத்தடைகளால் திருமணத்திற்கு வரவில்லை என முத்துசாமி அவர்களுக்குஇக்குடும்ப கோரத்தை வரைத்து விடுத்தனர்.
குடும்ப கோரம் பதிப்பிக்கபட்ட பின்னனி:
பெருமானிடமிருந்து குடும்பகோரக் கடிதத்தை முத்துசாமியிடம் கொண்டு சென்றவர் கொந்தமூர் வரதாசாரியார்.
முத்துசாமி இவ்வகவலை மனப்பாடஞ் செய்து வைத்திருந்தார்.
மனப்பாடமாக அவர் சொல்லக் கேட்டதனை மோசூர் கந்தசாமி அவர்கள் எழுதி வைத்தார்,
அது சித்தந்த சரபம் கலியாண சுந்தரனார்(அட்டாவதானம் பூவை கலியான சுந்தரனார்)
பார்வையிடப் பெற்று, காஞ்சி நாகலிங்கனார் நடத்தி வந்த தொழிற்கல்வி இதழில் 1914 ஜூலை(ஆனந்த, ஆடி தொகுதி 1, பகுதி 4)ஒரு பாதியும். ஆகஸ்டு (ஆவணி, தொகுதி 1, பகுதி 5)இதழில் மறுபாதியுமாக வெளிவந்தது.
நூல் சிறப்பு:
இன்று அனைத்து திருஅருட்பா பதிப்புகளிலும் குடும்ப கோரம் பிற்சேர்க்கை பகுதியில் உள்ளது,
தமிழ் இலக்கியத்தில் இதுவே மிக நீண்ட செய்யுள் கடிதம் ஆகும்.
இதை ஒருமுறை படித்தால் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் சிறப்பினை உடையது,
பெருமானாரின் கவி நயத்திற்கு இது ஒரு உதாரணம். தத்துவ குடும்ப கோரத்தை பெருமான் மிகவும் நகைச்சுவையாகவும், எளிமையாகவும் விளக்கி உள்ளார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு