ஞாயிறு, 6 மார்ச், 2022

பாவம் புண்ணியம்!

 **பாவம் புண்ணியம் !* 


*பாவம் புண்ணியம் என்பது நம் ஆன்மாவில் எவ்வாறு பதிவாகிறது என்பதை வள்ளலார் மிகவும் தெளிவாகச் சொல்லுகிறார்.*


*மனம். வாக்கு. காயம்(செயலால்) என்னும் மூன்றினாலும் பாவம் புண்ணியம் நம் ஆன்மாவில் பதிவாகின்றது*


*நாம் செய்யும் பாவம் அதிகமானால் துன்பம் வருகிறது.புண்ணியம் அதிகமானால் இன்பம் (மகிழ்ச்சி )வருகிறது.*


*மனிதன் அறிந்தோ  அறியாமலோ* தெரிந்தோ தெரியாமலோ 

*உயிர்களுக்கு  துன்பம்.துயரம்.அச்சம்.பயம்.பசி போன்ற துன்பங்களை உண்டாக்குவதால் எதிர்வினையாக திரும்பவும் தன் ஆன்மாவில்  எதிர் அலைகளாக வந்து பதிவாகிறது.அதுவே பாவம் என்பதாகும். அந்த பாவமே இறுதியில் நரை திரை பிணி மூப்பு பயம் துன்பம் மரணம் வந்து சேருகிறது.*.


*இதைத்தான் வள்ளலார் தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் என்கிறார்*


*உயிர்களின் துன்பத்தை அறிந்து.அத் துன்பத்தை போக்குவதற்கு செய்யும் தொடர்  ஜீவகாருண்ய  செயலால் ( உயிர் இரக்கத்தால் ).அறியாமல் செய்து சேர்த்து வைத்துள்ள பாவத்தை  (துன்பத்தை) நீக்கி புண்ணியத்தை சம்பாதித்து நரை திரை பிணி மூப்பு பயம் துன்பம்  மரணம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழலாம்* *இதுவே ஜீவகாருண்ய வல்லபம்.*


*மனிதன் உயிர்களுக்கு துன்பம் தருவதே பாவமாகவும் தீவினையாகவும் ஆன்மாவில் துன்ப அலைகளாக பதிவாகிறது. இறுதியில் அப்பதிவே  துன்பத்தை  உண்டாக்குகிறது*


*ஆன்மாவில் பதிவாகிய அத்துன்பத்தை போக்குவதற்கு அகற்றுவதற்கு. ஒரேவழி.*!

*பசி. பிணி. தாகம்.

இச்சை. எளிமை. பயம். கொலை போன்ற* *துன்பங்களால் வருந்துகின்ற ஜீவர்களுக்கு ( உயிர்களுக்கு) அத்துன்பத்தில் இருந்து விடுவிப்பதே ஜீவகாருண்யம். பாவத்தை நீக்கி புண்ணியத்தை சேர்க்கும் சிறந்த வழியே  ( தருமச்சாலை ) என்பதாகும்.*


*வள்ளலார் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற தலைப்பில் மிகவும் தெளிவாக எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம்  அழகு தமிழில் நன்மைதரும் வகையில் எழுதி பதிவு செய்துள்ளார். அவற்றை பலமுறை படித்து தெரிந்து கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கையில்  பின்பற்றினால் எல்லா பாவங்களும் விலகிவிடும். மேலும் புண்ணியத்தை  சேர்த்து  மரணத்தை வென்று   மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழலாம்.*


*ஜீவகாருண்ய முதற்பதிப்பில் வள்ளலார் தெளிவாக சொல்லியுள்ளார்*!


*ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு!*

 *உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும்.*


*அந்த ஆன்மலாபம் எதுவென்று அறியவேண்டில்:?* 


*எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய அருட்பெருஞ்ஜோதி கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று*


*எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபம் என்று உண்மையாக அறியவேண்டும்.*


*இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்த ஒப்பற்ற பெரியவாழ்வை எதனால் அடையக்கூடும் என்று அறியவேண்டில்:-?* 


*கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடையக்கூடும் என்றறிய வேண்டும்.*


*கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருளை எதனாற் பெறக்கூடுமென்று அறியவேண்டில்:-?*


 *சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடும் அல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்.*


*கடவுள் அருளைச் சீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக் கூடுமல்லது வேறெந்த வழியாலும் பெறக்கூடாது என்பது எப்படி என்னில்:-?*


*அருளென்பது கடவுள் தயவு, கடவுளியற்கை விளக்கம்.* 


*சீவகாருணிய மென்பது சீவர்கள் தயவு, சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம்*. 


*அதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும் விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலுங் கூடும்.* 


*அதாவது சிறிய வெளிச்சைக் கொண்டு பெரிய வெளிச்சத்தை உண்டாக்குவதுபோல்.ஆன்மாவின் சிறிய தயவைக்கொண்டு கடவுளின் பெரிய தயவைப் (அருள்) பெறுதல் வேண்டும்.*


*வேறொன்றினால் பெறக்கூடாமை அனுபவமாகலின், சீவகாருணியத்தைக் கொண்டு அருளைப் பெறுதல் கூடும்; வேறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். இதற்கு வேறு பிரமாணம் வேண்டாமென்றறிய வேண்டும்.*


*அருளைப் பெறுவதற்குச் சீவகாருணியமே வழியாதலால், அவற்றிற்கு "ஞான வழி என்பதும்" "சன்மார்க்கம் என்பதும்" "சீவகாருணிய ஒழுக்கம் என்றும்,*" சொல்லப்படும்.


*அஞ்ஞான வழி என்பதும் துன்மார்க்கம் என்பதும் சீவ காருணிய ஒழுக்கம் இல்லாமை என்றும் அறியப்படும்.*


 *சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்;* *அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளுந் தோன்றும்.*


 *சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத் தீமைகளும் துன்பங்களும் தோன்றும்.*


 *ஆகலின் புண்ணிய மென்பது சீவ காருணியம்  ஒன்றே என்றும், பாவமென்பது சீவகாருணியம்  இல்லாமை ஒன்றே என்றும் அறியப்படும்.*


*வள்ளலார் பாடல் !*


கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம்


மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்


இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்


தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.! 


என்னும் பாடலில் தெளிவுப் படுத்துகின்றார்.


*கருணை வேறு கடவுள் வேறு அல்ல என்பதை உணர்ந்தவர் வள்ளலார்.*

*அதனால் ஜீவகாருண்யம் என்னும் அன்பு தயவு இரக்கம் என்னும் மூன்றும் கலந்ததே கருணை என்பதாகும். கருணையால் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை என்னும் அருளைப் பெற்று புண்ணியத்தை பூரணமாக பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழலாம்*.


 *கருணையுடன் வாழ்வதே ஆன்மலாபம்  என்று அறிய வேண்டும்*


**சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும், சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும்,*

 *இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால்கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே சீவன் முத்தரென்றும், அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள்மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்.*


*கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆதலே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்*

*அதுவே முத்தேக சித்தி என்பதாகும்.பேரின்ப சித்தி்ப்  பெருவாழ்வு என்பதாகும்*


*மனித வாழ்க்கைக்கு இதைவிட ஒரு சிறந்த விளக்கம் எவராலும் சொல்ல முடியாது.*


*வள்ளலார் எழுதியுள்ள ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் நூலை பலமுறை படித்து அதில் உள்ளவாறு* *ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கடைபிடித்தாலே போதும்* சாதி சமயம் மதம் என்ற  *வேற்றுமை இல்லாத ஒருமைப்பாட்டு  உலகத்தை காணலாம்.*


*உலகப்போர் ( சண்டை ) இல்லாத உயிர்களுக்கு ஆபத்து இல்லாமல். பயம் இல்லாமல். சமாதானத்துடன் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்*


 *எல்லோரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழலாம்*

*எல்லா உலகும் அமைதி பூங்காவாக திகழும் என்பது சத்தியம்* 


*நல்லோர் நினைத்த நலம் பெறுக ! எல்லோரும் வாழ்க இசைந்து*!*


*நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு