செவ்வாய், 1 மார்ச், 2022

கலந்தாரா? மறைந்தாரா ? கரைந்தாரா ?

 *வள்ளலார் இறைவனுடன்*


*கலந்தாரா ? மறைந்தாரா ? கரைந்தாரா ?*


*வள்ளலார் இறைவனுடன் கலந்தாரா ? பஞ்ச பூதங்களில் மறைந்தாரா ? தன் உடம்பை தானே கரைத்துக் கொண்டாரா ? என்பன போன்ற பல சந்தேகங்கள் மக்கள் மனதில் நிலவுகின்றது* 


*இதற்கு எல்லாம் சரியான விடை தெரிந்தால்தான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றால்  என்னவென்று தெரிந்து கொள்ள முடியும்.  இந்த உண்மையை சன்மார்க்கிகள் தெரிந்து அறிந்து புரிந்து பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.*


*துறையிது வழியிது* *துணிவிது நீசெயும்*

*முறையிது* வெனவே மொழிந்தமெய்த் துணையே !* என அகவலில் சொல்லி உள்ளார்.


**வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  காட்டிய  துறையும் வழியும் துணிவும்  அவற்றை பின்பற்றும் செயலும் அறிந்து.அருட்பெருஞ்ஜோதியைத் தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற்று மரணத்தை வென்றவர் வள்ளலார்*


*தான் அடைந்ந அருள்  அனுபவத்தை உலக மக்கள் அனைவரும் தெரிந்து அவற்றை பின்பற்றி பூரண அருள்பெற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்ற பெருங்கருணையோடு திருஅருட்பா ஆறாம் திருமுறையில் பல கோணங்களில் பலப்பல பாடல்களிலும். உரைநடைப் பகுதியிலும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக  தெரியப்படுத்தி உள்ளார்*


மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே ! 


நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்

உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே! 


என்றே யென்னினு மிளமையோ டிருக்க

நன்றே தருமொரு ஞானமா மருந்தே! (அகவல்)


 *ஆனாலும் வள்ளலார் கடைபிடித்த உண்மையை அனுபவத்தை தெளிவாக புரியவைத்தும் தெரியப்படுத்தியும் வாழ்ந்தும் காட்டியுள்ளார். சன்மார்க்கிகள் இன்னும் குழப்பத்திலே உள்ளார்கள் என வள்ளலாரே வருத்தப்படுகிறார்*


*என் மார்க்கம் இறப்பு ஒழுக்கும் சன்மார்க்கம் தானே!  என்று மிகவும் அழுத்தமாகவும் தெளிவாகவும் சொல்லுகின்றார்* *இதுவரையில் எந்த ஒரு அருளாளர்களும் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்றும் சொல்லவில்லை. இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிமுகப்படுத்தவும் இல்லை.அவரை தொடர்பு கொள்ளவும் இல்லை.* 


*நீங்கள் எந்த தத்துவ கடவுள்களை வணங்கி. வாழ்த்தி. போற்றி.  வேண்டி வழிப்பட்டாலும் உங்கள் பிரார்த்தனைகள் யாவும் செல்லும் ஒரே இடம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகத்திற்கு மட்டுமே செல்லும் என்பதை வள்ளலா அகவலில் பதிவு செய்கிறார்.* 


எங்கெங் கிருந்து உயிர் ஏதேது வேண்டினும்

அங்கங் கிருந்து அருள் அருட்பெருஞ் ஜோதி!! ( அகவல்) 


*மனிதர்கள் இவ்வுலக வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்தை தாங்கமுடியாமல்  வெறுத்து துறவறம் ( சந்நியாசம்) கொண்டு பிறப்பு அறுக்க வேண்டும் என எதாவது ஒரு தத்துவ தெய்வத்தை நினைந்து இடைவிடாது வேண்டுகிறார்கள். அவர்கள் வேண்டுவதில் மூன்று வகையான முக்கிய அருளை அவரவர்கள் தகுதிக்கு தகுந்தவாறு பெற வாய்ப்புள்ளது.*


*அருள் வழங்கும் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்*


*அறிவார் அறிகின்ற வண்ணங்களும்.* *கருதுவார் கருதுகின்ற வண்ணங்களும்.*துதிப்பார் துதிக்கின்ற வண்ணங்களும் ஆகிய எல்லா வண்ணங்களும் உடையவர் அருட்பெருஞ்ஜோதித் தனிப்பெருங்கருணை கடவுளாகும்.* 


*அவ்வாறு விளங்குகின்ற கடவுளின் பூரண அருளைப்பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றினால் மட்டுமே உயிர் உடம்பு அழியாது* *அருள் ஒளி உடம்பாக மாற்றம் பெற முடியும்.அதுவே ஞானதேகமாகும். அருள் உடம்பானதும் அருள் உடம்பான ஞான தேகம் கொண்டுள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலப்பதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.*


வள்ளலார் பாடல்!


சோதிமலை மேல்வீட்டில் தூய திருஅமுதம் மேதினிமேல் நான் உண்ண வேண்டினேன்...

ஓதரிய ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ் *ஞானதேகா* கதவைத்திற ! 


*அருள் ஒளி உடம்பான ஞான தேகம் பெற்றால்தான் ஞானதேகமான அருட்பெருஞ்ஜோதி யுடன் கலக்கமுடியும்*


*வள்ளலார் மற்ற ஞானிகள்போல் மண்ணிலும் தண்ணீரிலும் கரைந்து போகவும் இல்லை.பஞ்ச பூதங்களில் மறைந்து போகவும் இல்லை.* 


*கரைந்து போனவர்களுக்கும் பஞ்ச பூதங்களில் மறைந்து போனவர்களுக்கும் அவரவர் தகுதிக்கு தகுந்தவாறு மீண்டும் எதாவது ஒரு பிறப்பு எடுப்பார்கள்.*


*வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியுடன் கலந்து நிலையாக வாழ்ந்துகொண்டு இருப்பவர்* அவருக்கு மீண்டும் பிறப்பும் இறப்பும் கிடையாது.

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மேட்டுகுப்பம் சித்திவளாகத் திருமாளிகைக்கு வந்து வள்ளலார் உடம்பில் கலந்து கொண்டார் என்பதை பாடல் வாயிலாக தெரிவிக்கின்றார்.*


*வள்ளலார் பாடல்!*


என்சாமி எனதுதுரை என் உயிர் நாயகனார்

இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்


பின்சாரும் இரண்டரை நா ழிகைக்குள்ளே *எனது*

*பேருடம்பில்* *கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்*


தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்

சாற்றுகின்றேன் அறிந்திதுதான் *சத்தியம்சத் தியமே*


மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே

வெளியாகும் *இரண்டரைநா ழிகைகடந்த போதே.!* 

(இரண்டரை நாழிகை என்பது ஒருமணிநேரம்)


என்னும் பாடல் மூலம் மக்களுக்குத் தெரியப் படுத்துகின்றார்.


*ஞானம் என்பது மூன்று  வகைப்படும்* அவை ! 


*உபாயஞானம்* *உண்மை ஞானம்* *அனுபவ ஞானம்*


1. *நட்சத்திரப் பிரகாசம் போல் தோன்றிய ஜீவ அறிவே உபாய ஞானம் என்பதாகும் இவர்களுக்கு சகலர் என்றும் பெயர்.இவர்கள் மண்ணிலோ தண்ணிலோ கரைந்து போகின்றவர்களாகும்.*


2. *சந்திரபிரகாசம் போல் தோன்றி அறியும் ஆன்ம அறிவே உண்மை ஞானம் என்பதாகும்* . *இவர்களுக்கு* *பிரளயாகலர் என்பதாகும்*

*இவர்கள் ஐந்து பூதங்களான காற்றிலோ வானத்திலோ அக்கினியிலோ மறைந்து போனவர்களாகும்.  இவர்களுக்கும்/ மீண்டும் பிறப்பு உண்டு*


3. *எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள் அறிவே அனுபவஞானம் என்பதாகும்* *இவர்களுக்கு விஞ்ஞானகலர் என்று பெயராகும்.* *இவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் போல் காலம் கடந்தவர்கள்.* *இவர்கள் மரணத்தை வென்றவர்கள்.*


இதற்கு வள்ளலார் பாடல் விளக்கம் தருகிறது!


வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது

வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்


மையகத்தே *உறுமரண வாதனையைத் தவிர்த்த*

வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே


மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது

மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே


செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே

சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.! 


என்னும் பாடல் விளக்கம் அளிக்கிறது.


மேலும்

*காலம் கடந்தது... எவ்வுயிரையும் தம் உயிர்போல்  என்னும் கடவுள் அறிவான அனுபவ ஞானம் பெற்று தன் உடம்பை அருள் உடம்பாக மாற்றி (ஞானதேகம்) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்தவர் வள்ளலார் ஒருவரே !*

 

*எக்காலத்திலும் வள்ளலாருக்கு பிறப்பு இறப்பு என்பது எப்போதும் கிடையாது.*

*வள்ளலார் மட்டுமே கடவுள் நிலை அறிந்து  அம்மயமானவர்.* *அதாவது அருட்பெருஞ்ஜோதி யுடன் கலந்தவர்.* 


*அதாவது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.தான் செய்யும் ஐந்து தொழில்களையும் வள்ளலாருக்கு வழங்கி உள்ளலார்*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் நிலையானவர் அதேபோல் வள்ளலாரும் என்றும் நிலையானவர் என்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்* 

*சுத்த சன்மார்க்கிகள் இவ்வுண்மையை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.* 


*வள்ளலார் பாடல்!*


பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்

சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும்பேற்றை

ஓத முடியாது தென்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.! 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் தங்கியிருக்கும் மேட்டுகுப்பம் சித்திவளாக திருமாளிகைக்கு சென்று பாதி இரவில் வள்ளலாரை எழுப்பி அருட்ஜோதி அளித்து அவர் உள்ளகத்தே கலந்து சூழ்ந்து நிலைத்து விளங்குகிறாய். நீதிநடஞ் செய்யும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! எனக்கு அளித்த பேரின்ப நிதி போதாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டும் என உலக மக்களுக்காக ஆண்டவரிடம் வேண்டுகிறார்*


வள்ளலார் பாடல்!


சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது

தூயநல் உடம்பினில் புகுந்தேம்


இதந்தரும் உளத்தில் இருந்தனம் *உனையே*

*இன்புறக் கலந்தனம்* அழியாப்


பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்

பரிசுபெற் றிடுகபொற் சபையும்


சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்

தெய்வமே வாழ்கநின் சீரே.!


*வள்ளலார் மற்ற ஞானிகள்போல் கரைந்து போகவும் இல்லை பஞ்ச பூதங்களில் மறைந்து போகவும் இல்லை.*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்தவர் வள்ளலார் ஒருவரே !*


மரணத்தை வென்றவரை எதனாலும் அழிக்க முடியாது என்பதை கீழே வரும் பாடல் வாயிலாக பதிவு செய்கிறார்.


வள்ளலார் பாடல்!


காற்றாலே புவியாலே ககனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே


கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே


வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே


ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்

எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.! 


*என்னும் பாடல் அனைவருக்கும் விளக்கம் அளிக்கிறது. வள்ளலாரின் உண்மை தெரியாமல் வள்ளலாரை எவரும் சந்தேகப்பட வேண்டிய அவசியமே கிடையாது.*


நாமும் வள்ளலார்போல்  பூரண அருள் பெற்று மரணத்தை வென்று  வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!


அன்புடன் ஆன்மநேயன் டாக்டர் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு