வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

வாழ்க்கை வாழ்வதற்கே !

 வாழ்க்கை வாழ்வதற்கே !


*மரண பயம் தவிர்க்காத வாழ்க்கையில் எந்த பயனும் கிடையாது.*


**வள்ளலார் பாடல்!*


கரணம் மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்

கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்


*மரணபயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ*

மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே


திரணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய ஒளி வழங்கும்

சித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில்


சரணம் எனக் களித்தெனையும் தானாக்க எனது

தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.! 


*மேலே கண்ட பாடல் ஒவ்வொரு மனிதனின் அறிவுக் கண்ணைத் திறக்கும் பாடலாகும்.*


*மனிதனின் உடம்பு நான்கு பிரிவுகளாக பிரித்து இணைக்கப்பட்டுள்ளது.அவை இந்திரியங்கள் கரணங்கள் ஜீவன்(உயிர்) ஆன்மா என்பவைகளாகும்* இதில் புறக்கருவிகள் கரணங்கள் இந்திரியங்கள் என்பனவாகும்.


*கடலும் கடல்சூழ் உலகமும் காற்றும் அக்கினியும் வானமும் சேர்த்து ஆளுகின்ற  அதிபதிகளும்* மேலும்  உலகியல்  சார்ந்த வாழ்க்கையில் வாழும் உயர்ந்த மனிதர்கள் *பட்டம். பதவி. புகழ். ஆட்சி. அதிகாரங்களும். உயர்ந்த வசதியான வாழ்க்கை முறைகளும். குறைவில்லாத செல்வம். விலை உயர்ந்த பொருட்களும். பிரமிக்கத்தக்க அரண்மனை போன்ற வீடுகளும் அவற்றில் பணிபுரிய ஆயிரக்கணக்கான வேலை ஆட்களும். தங்களைச் சுற்றிலும் திறமைமிக்க பாதுகாவலர்களும். அழகான மனைவியும் அறிவுசார்ந்த மக்களும் அன்பான பாசமிகு சுற்றங்களும். உயிருக்கு உயிரான இணைபிரியாத நட்புக்களும்.*


 *மற்றும் சிறப்புமிக்க விருந்தினர்களும். அவர்கள் தங்குவதற்கு ஆடம்பரமான வசதி வாய்ப்புக்களும் அனைவருக்கும் விருப்பமான வித விதமான மாடல்களில் வாகனங்களும்.அவர்கள் விரும்பும் அறுசுவை உணவு வகைகளும் மற்றும் தங்களை பாராட்டி புகழ்பாடும் கலைஞர்களும் கவிஞர்களும் மற்றும் நாட்டிய கலைஞர்களும். எதிலும் குறைவு இல்லாத  உலக வாழ்க்கை  வாழ்வதற்கு உண்டான சுற்றுபுற சூழ்நிலைகளும் மிகுந்த ஆடம்பரமான வாழ்க்கை முறைகள் யாவும் ஒவ்வொரு திறமைமிக்க மனிதனுக்கும் அமைந்து விடுகிறது.*

மேலும் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து வெற்றிவாகை சூடும் வல்லபமும் இவ்வுலகில் கிடைத்து விடுகிறது.


*மேலே கண்ட வாழ்க்கை வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது இவ்வுலகின் பொருள்கள் தான் ஆதாரமாக உள்ளது.*


*பொருள் சார்ந்த வாழ்க்கை வாழ்க்கைஅல்ல அருள்சார்ந்த வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்பதை மக்கள் நினைந்து உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்*


*மேலே கண்ட பொருள் வாழ்க்கையினால் அவ் வாழ்க்கையை அனுபவிப்பதும் மகிழ்ச்சி அடைவதும்  ஆனந்தம் அடைவதும்  களிப்படைவதும் எதுவென்றால்?* *மனித உடம்பில் உள்ள புறக் கருவிகளான இந்திரியங்களும் கரணங்களும் மட்டுமே* *களிப்படைகின்றது*  


நம் உடம்பில் உள்ள *ஜீவன் என்ற உயிரோ ஆன்மாவோ நம்மை படைத்த கடவுளோ எவ்வகையிலும் மகிழ்ச்சி அடைவதில்லை.*


*பொருள் சார்ந்த வாழ்க்கையால் இந்திரியங்கள் கரணங்கள் மட்டும். லாபம் அடைகின்றது  மகிழ்ச்சி அடைகின்றது. நெகிழ்ச்சி அடைகின்றது அதனால்  இந்திரியங்கள் கரணங்கள் சார்ந்த   உடம்பும் அதனுள் இயங்கும் தத்துவங்களும் முதிர்ச்சி அடைந்து நரை திரை பிணி மூப்பு அடைந்து இயங்கமுடியாமல்  இறுதியில் மரணம் வந்துவிடுகிறது.*


*இதைத்தான் வள்ளலார் மேலே கண்ட பாடலில் மரண பயம் தவிர்க்கமுடியாத வாழ்க்கையில் என்ன பயனோ என்பதை சுட்டிக் காட்டுகிறார்.* 


*இவ்வுலகில் எவ்வளவுதான்  உயர்ந்த பொருள் சா்ந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் இறுதியில் மரணம் வந்துவிடுகிறது.நாம் சம்பாதித்து ஆடம்பரமாக வாழ்ந்துவந்த பொருள்களில் ஒரு சிறிய துரும்பை கூட எடுத்துச் செல்லமுடியாது என்பதை ஒவ்வொரு மனிதனும் தெரிந்து புரிந்து அறிந்து கொள்ள வேண்டும்.*


*தெரிந்தும் பொருள் பற்றினால் அலைந்து திரிந்து பெற்று அழிந்து கொண்டே உள்ளார்கள்.பொருள் சுவையை அறிந்த மக்கள் அருள் சுவையை சுவைக்க தெரிந்து கொண்டால்  விடமாட்டார்கள். அருளின் சுவையை அறிந்து அனுபவித்து மரணத்தை வென்ற மகான் வள்ளலார் அருள்பெறும் வழியைக் காட்ட வந்துள்ளார்.*


*உயர்ந்த மனிததேகம் எடுத்த நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டியது ஆன்மலாபம் மட்டுமே* *அருள் பெற்று மரணத்தை வென்று வாழ்தலே ஆன்மலாபம் என்பதாகும்.* 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*


*ஆன்மாக்களுக்கு அருள் வழங்கும் ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே ! என்பதை மனித தேகம் எடுத்த உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்* *எனவேதான் எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரின் சிரநடு சிற்சபை என்னும் சித்திபுரத்தில் அமர்ந்து அருள்ஒளி வழங்கி மரணத்தை அகற்றி ஊன உடம்பை ஒளி உடம்பாக்கி உள் அமர்ந்து வாழ்ந்து வருகிறார்*. மேலும்

*வள்ளலாரைத் தன்மயமாக்கி தானாக்கி இயங்கி வருகிறார்.*

*நீங்களும் என்னைப்போன்று ஆன்ம லாபமான அருள் லாபத்தைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழலாம் வாருங்கள் என ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அன்புடன் அழைக்கிறார்.*


*வள்ளலார் பாடல்!*


இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்

*எல்லாம்செய் வல்லசித்தி* இறைமையும்பெற் றிடலாம்


அன்புடையீர் வம்மின்  இங்கே *சமரசசன் மார்க்கம்*

அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்


பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான

பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே


வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்

மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.!  


*மேலே கண்ட பாடலில் எளிய தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு வள்ளலார் பதிவு செய்துள்ளார். படித்து பயன் பெற வேண்டும் என்பதே    வள்ளலாரின் சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறி கொள்கையாகும்*

*அந்த ஒழுக்கங்கள் தான் இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்பதாகும்* 


*இந்த நான்கு ஒழுக்கங்களில் இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம் என்ற இரண்டு ஒழுக்கங்களை முழுமையாக கடைபிடித்தால் போதும். ஜீவ ஒழுக்கம் .ஆன்ம ஒழுக்கம் என்னும் இரண்டு ஒழுக்கங்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் போனஸாக வழங்கி அருளை வாரி வழங்கி மரணத்தில் இருந்து மீட்டு தன்னுடன் அணைத்து இனைத்துக் கொள்வார் என்பது சத்தியவான் வாக்காகும்.*


*மனிதவாழ்க்கை என்பது வாழ்வதற்கே  என்பதை அறிவால் அறிந்து மரணத்தை வென்று வாழ்ந்து காட்ட வேண்டும்*.


வள்ளலார் பாடல்! 


சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்

திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்


ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்

உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே


வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ

மரணம் என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா


சார்ந்திடும் அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்

தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.! 


*மரணத்தை வெல்ல வேண்டுமானால் ஒவ்வொருவரும்  தனித்திடு சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திட வேண்டும் என்பதை தெளிவாக கண்டிப்பாக சொல்லுகின்றார் வள்ளலார்*. 


அதற்கு சரியான நேர் வழி கீழே சொல்லுகிறார்.


உலகினில்  உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்

விலக நீ யடைந்து விலக்குக மகிழ்க! ( அகவல்)


சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக

உத்தமன் ஆகுக வோங்குக வென்றனை ! ( அகவல்)


போற்றிநின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர்

ஆற்றலின்  ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு