புதன், 12 ஜனவரி, 2022

கடவுளுக்கு கை கால் முதலியன இருக்குமா ?

 *கடவுளுக்கு கை கால் முதலியன இருக்குமா ?* 


கடவுளுக்கு மனித உருவம் போல்  கை கால் முதலியன இருக்குமா என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் சமய மதவாதிகள் விழிக்கின்றார்கள்.


*நாம் இதுவரை பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் முதலிய கலைகளில் தெய்வத்தை  இன்னபடி என்றும் தெய்வத்தின் உண்மை இன்னதென்றும்  கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.*


*அணு ( அளவாவது) மாத்திரமேனும் தெரிவிக்காமல்  பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டி உள்ளார்கள் யாதெனில்? கைலாசபதி என்றும். வைகுண்டபதி என்றும். சத்திய லோகாதிபதி என்றும். பரலோகம் என்றும்.சிவலோகம் என்றும். சொர்க்கம் என்றும். நரகம் என்றும். பெயரிட்டு அதற்கு தகுந்தாற்போல் நம்பும்படியாக ஆலயங்களை எழுப்பி அதற்கு தகுந்தாற் போல் பலவிதமான சிலைகளைச் செதுக்கி அவற்றிற்கு தகுந்தாற்போல் பெயரிட்டு இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம  முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்* மேலும் அசுத்தமான நீர்நிலைகளை புண்ணிய ஸ்தலங்களாக தீரத்தங்களாக சொல்லி காட்டி அதில் மூழ்கவும். குளிக்கவும். சாகவும் வழிவகை செய்துள்ளார்கள். உண்மைக்கு புறம்பாக வெளிப்படுத்தி மக்களை  அலைய வைத்து உள்ளார்கள்


கடவுளை நம்புகின்ற ஆன்மீகவாதிகளும் அறிஞர் பெருமக்களும் பிரபஞ்ச அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகளும் மற்றும் கடவுள் மறுப்பு கொள்கை உடைய பகுத்தறிவாளர்களும் மேலும் கடவுளைத் தெரிந்து கொள்ள விரும்பும் அறிவு சார்ந்த சான்றோர் பெருமக்களும் *தெய்வத்துக்கு கை கால்கள் முதலியன இருக்குமா ?* என்று கேட்பவர்களுக்கு. தெளிவான பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள்.


( *கடவுளை நேரில்  பார்த்து இருந்தால் மட்டுமே கடவுளின் உண்மையை வெளிப்படுத்த முடியும்*)


*மேலே கண்ட  வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் போன்ற கற்பனைக் கதைகளில் கற்பித்த கடவுள்கள்  உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும் உண்மையை அறிந்து கொள்ளாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ( குருடர்கள்போல்) உளறி இருக்கிறார்கள்* ஆதலால் எவற்றையும் நம்ப வேண்டாம் என்கிறார் வள்ளலார்.

  

*ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஒர் வல்லவன் அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை* *அவன் பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்கவில்லை இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை என்கிறார் வள்ளலார்*


*வள்ளலார் வந்து கடவுளின் உண்மையை நேரிலே கண்டு களித்து கலந்து  வெளிப்படையாக மக்களுக்கு சொல்லியுள்ளார்*

 வள்ளலார் பாடல் !


இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்

ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்


செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்

திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்


வியப்புற வேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்

மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்


*உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபைதனிலே*

*ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!*


*மேலே கண்ட பாடலில்.. சமய மதவாதிகள் சொல்லிய பாசங்களோ. குணங்களோ. தத்துவங்களோ எதுவும் இல்லாதவர் கடவுள்* 


*மேலும் செயற்கையானவர் அல்லர் பிறப்பு இறப்பு இல்லாதவர் திரிபுஇல்லாதவர் தீமை ஒன்றும் செய்யாதவர்* *வேண்டுதல் வேண்டாமை  இல்லாதவர் மெய்யே மெய்யாகி  எங்கும் விளங்கி இன்பமயமாய்* *எல்லோருக்கும் பொதுவாய் விளங்குபவர். பஞ்ச பூதங்கள் அற்ற. இரவு பகல் அற்ற  அருட்பெரு வெளியில்  இயற்கை உண்மையாய் விளங்கி எங்குமாய் நிறைந்து இயங்கிக் கொண்டு இருப்பவர் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்* 


அவர்தான் *தனித்தலைமை பெரும்பதியான தனிக்கடவுள் ஒருவரே*! *என்னும் உண்மையை உலகம் அறிய வெளிப்படுத்துகின்றார்.*


மேலும் ஒருபாடல்!


ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்

உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்


அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்

ஆதியிலார் அந்தமிலார் *அரும்பெருஞ்சோதியினார்*


என்று கனல் மதிஅகத்தும் புறத்தும் விளங் கிடுவார்

யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்


ஒன்றுறு தாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற *தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!*


என்பதை எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படி கடவுளின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துகின்றார்.


மேலும் ஒரு பாடல் !


*எவ்வுலகில் எவ் எவர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே*

*இறைவர்* என்பது அறியாதே இம்மதவாதிகள் தாம்


கவ்வைபெறு *குருடர் கரி கண்டகதை போலே*

கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்


நவ்விவிழியாய் இவரோ சிலபுகன்றார் என்றாய்

ஞானநடம் கண்டேன் மெய்த் தேன்அமுதம் உண்டேன்


செவ்வைபெறு *சமரசசன் மார்க்கசங்கந் தனிலே*

*சேர்ந்தேன்*  அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.! 


*மேலே கண்ட பாடலில் எல்லா உலகிற்கும் எல்லா உயிர்களுக்கும் மற்றும்  எல்லா மனிதர்களுக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே உள்ளார் என்ற உண்மைத் தன்மையை அறியாமல்*  *சமய மதவாதிகள் அனைவரும் கண் இல்லாத குருடன் யானையைக் கண்ட கதைபோலே கடவுளுக்கு கை கால் தலை போன்ற உறுப்புக்களை வைத்து பொய்யான கடவுள்களைப் படைத்துள்ளார்கள்*


*அவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொள்ளும் தகுதியோ. அருளைப் பெறும் தகுதியோ. சாகாத நிலையை அடையும் தகுதியோ அவற்றை அடையவோ முடியுமா  என்றால் முடியவே முடியாது என்கின்றார்* 


*நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஞானநடம் கண்டேன்  மெய்த் தேன்போன்று தெவிட்டாத அமுதம் உண்டேன்* *இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தனிலே சேர்ந்தேன் சாகாத கல்விகற்று மரணத்தை வென்றேன் என்பதை வெளிப்படையாக சொல்லுகின்றார்* 


*ஆதலால் பொய்யான சமய மதங்களின் தீமொழியில் இருந்து விலகி தேன்மொழியாகிய இறைவன் மொழியில் சேர்ந்து  மரணத்தை வென்று  சுத்த பிரணவ ஞானதேகம் பெற்று என்றும் அழியாமல் வாழ்ந்து கொண்டுள்ளேன்*  *நீங்களும் என்போன்று இன்புறலாம்* *எல்லா உலகும் ஏத்திட  வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்* *வாருங்கள் வாருங்கள் என ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையோடு அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்.* 


வள்ளலார் பாடல் ! 


கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்

*கதவுதிறந் திடப்பெற்றேன்* *காட்சியெலாம் கண்டேன்*


அடர்கடந்த திருஅமுதம் 

உண்டு அருள்ஒளியால் அனைத்தும்

அறிந்துதெளிந்து அறிவுருவாய் அழியாமை அடைந்தேன்


உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்

*உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்*


இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே

*இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.!*


*மேலே கண்ட பாடலில் தான் கண்ட இயற்கை உண்மை கடவுளின் காட்சியும்  கதவு  திறந்து அருள் அமுதம் உண்ட அனுபவத்தையும் உடல் குளிர்ந்து உள்ளம் மகிழ்ந்து தழைத்து உயிர்பிரியாமல் என்றும் அழியாமல் ஓங்கும் ஒளிவடிவம் பெற்று. கடவுள் நிலைஅறிந்து அம்மயமாய் விளங்கிகொண்டு உள்ளேன் என்ற உண்மையை தெளிவாக பதிவு செய்கிறார்*


*எனவே மனிதனைப்போல்  கடவுளுக்கு கை கால் தலை போன்ற உறுப்புக்கள் கிடையவே கிடையாது. கடவுள் அருள் ஒளியாக உள்ளார். அதனால் அவருக்கு அருட்பெருஞ்ஜோதி என்று பெயராகும் என்பதை அறிவும் தெளிவும் உள்ள அன்பர்கள் அறிந்து தெரிந்து  புரிந்து கொள்ள வேண்டும்.*


*மனிதன் கடவுள் ஆகலாம் கடவுள் மனிதனாக முடியாது*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு