வெள்ளி, 14 ஜனவரி, 2022

சாதி சமய மதங்களைச் சாடிய பாடல்கள்!

 *சாதி சமயம் மதங்களை சாடிய சில பாடல்கள்!* 


*வள்ளலாரைப் போல் சாதி சமயம் மதங்களை சாடியவர் உலகில் எந்த ஞானியும் இல்லை அதிலே சில பாடல்களை உங்கள் பார்வைக்கு!* 


சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென

ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்

நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்

நித்திய வாழ்க்கையும் சுகமும்

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா

அருட்பெருஞ் சோதிஎன் !றறிந்தேன்

ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்

உரைப்பதென் அடிக்கடி உனக்கே.!


சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே

நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த

நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே

வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய

மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.!


சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப

நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற

பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்

வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.!


சாதி சமயச் சழக்கெலாம் அற்றது

சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது

மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது

மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம் அற்புதமே ! அருள் அற்புதமே !


சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்

சோதியைக் கண்டேன டி - அக்கச்சி

சோதியைக் கண்டேனடி.!


சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே

ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே

அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்

ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்

உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்

சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்

சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.!


சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே

சாற்றப் புகினும் சாலார்அருளின் பெருமை உன்ன வே

அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே

அனந்தத் தொன்றென் றுரைத்துஞ் சாலா நின்பொன் னடியி லே.!


தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்

சேர்கதி பலபல செப்புகின் றாரும்

பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்

பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்

மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்

மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்

எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.! 


எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்

எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்

ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்

அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்

உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.!


வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை.! 


வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே

ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்

எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே

தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்

சித்தசிகா மணியேஎன் திருநட நாயகனே.!


இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்

இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்

மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்

மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக

செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே

திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே

அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.!


சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்

சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ

விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா

வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்

பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்

பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்

அதுஇது என்னாமல் ஆடேடி பந்து

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி!


பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்

செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்

தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!


ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்

உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்

வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்

மன்றினை மறந்ததிங் குண்டோ

ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்

ஐயவோ சிறிதும்இங் காற்றேன்

பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்

பரிந்தருள் புரிவதுன் கடனே.!


கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்

கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே

நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்

நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்

ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே

இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே

தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 


கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்

கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்

கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்

காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்

பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே

பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே

தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.!


நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே

மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே

கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே

காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே

மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற

வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.!


பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்

போகாத படிவிரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்

பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ

என்பிள்ளை ஆதலாலே

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் 

அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.! 


இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி

சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே! 



குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்

பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்

செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்

சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!


மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்

மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ

சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே

சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ

பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்

பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்

சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று

தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.!


எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே

இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்

கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே

கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்

நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்

ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்

செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே

சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.! 


 மேலே கண்ட பாடல்கள் தவிர சாதி சமய மதங்களைச் சாடி இன்னும் நூற்றுக்கணக்கான பாடல்களை திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளார்.

மேலும்  உரைநடைப்பகுதிகளிலும் நிறைய விளக்கங்களும்  சான்றுகளும் உள்ளன படித்து  பயன் பெறுங்கள்.


எல்லா உயிர்களும். இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு