வெள்ளி, 26 மார்ச், 2021

உயிர் எலாம் நடம் புரியும் ஒரே இறைவன் !

 *உயிர் எலாம் நடம் புரியும் ஒரே இறைவன்!*


*வள்ளலார் பாடல்!*


உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்

ஒரு திருப்பொது என அறிந்தேன்


செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்

சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்


மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து

மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்


பயிரெலாம் தழைக்கப்  *பதியெலாம்* *களிக்கப்*

*பாடுகின்றேன்* *பொதுப் பாட்டே*


எல்லா உயிர்களிலும் எக்காலத்தும் எவ்விடத்தும்.

எவ்வளவும் தடைபடாது இடைவிடாது பொது நடம்புரியும் ஒரே இறைவன் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்னும் உண்மையை முழுமையாக சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் அறிந்து கொண்டேன். உலக மக்கள் அனைவரும் என்போன்று அச்சம் திரிபு மயக்கம் இன்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற பேராசைப் பற்றியே பொது நோக்கத்தோடு வெளிப் படுத்துகிறேன் என்கிறார் வள்ளலார் .


*அவ்வாறு விளங்குகின்ற  உண்மைக் கடவுள் ஒருவரேயாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்*.


எல்லா அணுக்களிலும் காரியத்தாலும். எல்லா 

உயிர்களிலும் காரண காரியத்தாலும். *அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும்* நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்றவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே ! என்ற உண்மையை. *ஒழுக்கத்தால் தயவால்.அன்பால் கருணையால். அறிவால். அருளால். அனுபவத்தால் அறிந்து கொண்டேன் என்கிறார்.*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்கிருந்து இயங்கிக் கொண்டுள்ளார் ?*


சமய மதங்கள் சொல்வதுபோல் பஞ்ச பூத தத்துவங்களில் ஆன்மாவோ.

உயிரோ. உணர்ச்சியோ.

மனமோ.

புத்தியோ.

அறிவோ

இயக்கமோ எதுவும் இல்லை. அதில் கடவுளும் இயங்கவில்லை.


இயங்குகின்ற பொருளில் கடவுள் இருக்கின்றார்.

இயங்காதப் பொருளில் கடவுள் இல்லை. உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்தில் காரணத்தாலும் காரியத்தாலும் *ஆன்ம ஒளியாக.உயிர் ஒளியாக செயல்படுகின்றார்* 


எல்லா அண்டங்களையும்.

எல்லா உலகங்களையும்.

எல்லா உயிர்களையும் எல்லாப் பொருள்களையும்.

மற்றை எல்லா வற்றையும். 


1 தோற்றுவித்தல்.

2.விளக்கஞ் செய்வித்தல்.

3.துரிசு நீக்குவித்தல்.

4.பக்குவம் வருவித்தல்.

5.பலன் தருவித்தல் .

போன்ற ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை  இயற்றிக் கொண்டு்ம் இயங்கிக் கொண்டும் எங்கும் பூரணராகி விளங்கிக் கொண்டுள்ள உண்மைக் கடவுள் ஒருவரே! தனிப்பெருந் தலைமை *அருட்பெருஞ்ஜோதியர் என்பதை சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக்கடவுள் ஒருவரே !*  


அவர் அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த *சுத்தமெய் அறிவு என்னும் பூரண பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்கி கொண்டு ள்ளார் *அருட் செங்கோல் ஆட்சி நடத்தும் இடம் தான் அருட்பெருவெளி என்பதாகும்*


*அருட்பெருவெளி என்பது அருள் நிறைந்த பெருவெளி என்பதாகும்* *அங்கு பஞ்சபூத அணுக்கள் கிடையாது*.


*வள்ளலார்பாடல்* ! 


வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா

வகுக்குமடி வெளிகள் எலாம் வயங்குவெளி யாகி


எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்

இசைத்தபர வெளியாகி இயல் உபய வெளியாய்


அண்ணுறு சிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்

அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்


*திண்ணமுறும்* 

*தனிஇயற்கை* *உண்மைவெளி யான*

*திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.!*


இயற்கை உண்மை வெளியான தனிப்பெரும் 

வெளியே திருச்சிற்றம்பலம் என்னும் அருட்பெரு வெளியாகும்.அதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் இடமாகும். 


மேலும் வள்ளலார் சொல்வதை கேளுங்கள்.


*வள்ளலார் பாடல்*


ஒரு பிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே

உன்ன முடியாது அவற்றின்

*ஓராயிரங் கோடி மால்அண்டம்* *அரன்அண்டம்*

*உற்ற கோடாகோடியே*


*திருகலறு பலகோடி ஈசன் அண்டம்* *சதாசிவ அண்டம்* *எண்ணிறந்த*

*திகழ்கின்ற மற்றைப் பெருஞ் சத்தி சத்தர் தம்*

*சீரண்டம் என் புகலுவேன்*


உருவுறும் இவ் வண்டங்கள் அத்தனையும் *அருள்வெளியில்*

*உறுசிறு அணுக்களாக*

*ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்*

ஒருபெருங் கருணைஅரசே


*மருவி எனை ஆட்கொண்டு* *மகனாக்கி அழியா*

*வரந்தந்த மெய்த்தந்தையே*

*மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வமே*

 *எலாம்வல்ல நட ராஜபதியே*.!  


மேலே கண்ட பாடலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் இடத்தை தெளிவாக எளிய தமிழில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தெரியப்படுத்துகின்றார்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நாம் தெரிந்து கொள்வது எங்கனம்*? 


அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், 


*பலவேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும் பலவேறு மதங்களிலும் பலவேறு மார்க்கங்களிலும் பலவேறு லக்ஷியங்களைக்  கொண்டு,* *நெடுங்காலம் பிறந்து பிறந்து, அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துக்களினால் துன்பத்திலழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம்;* *வீண்போகின்றோம்.*


ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் *உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம்* முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், 


எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் *உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப்* பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு - 


மேற்குறித்த இயற்கை உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு *சுத்த சன்மார்க்கத்தின்* முக்கிய லக்ஷியமாகிய *உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையைச்* சித்திவளாகம் என்னும் இச்சந்நிதானத்திற் கடுத்த *உத்தரஞான சிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில்* 


தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து, *இக்காலந்தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம்* அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம்என்னும் திருக்குறிப்பை 


இவ்விடத்தே தாயினுஞ் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணையங் கடலாராகிய *அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார்* முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி, அருட் பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை *வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித் தருளி,* 


அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளி எல்லாம் வல்ல சித்தத் திருக்கோலங் கொண்டு, 

அருள் அரசாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்தருளுகின்றார்  


*உலகங்களில் உள்ளவர்கள் யாவரும் ஒருங்கே, இஃது என்னை! இஃது என்னை! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட்டு எழுந்தருளி அருள் வழங்கி கொண்டுள்ளார்.*


*சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம் !*


நாம் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய  ஒழுக்கங்களாகிய இந்திரய ஒழுக்கம். கரணஒழுக்கம்.

ஜீவ ஒழுக்கம்.

ஆன்ம ஒழுக்கங்களை முழுவதும் கடைபிடித்து.


அவற்றின்  பெரும் பயன்களாகிய


1.சாகாக்கல்வி.

2.தத்துவ நிக்கிரகம் செய்தல்

3.ஏமசித்தி.

4.கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்.


போன்ற  எக்காலத்தும் நாசமடையாத 

சுத்ததேகம்.

பிரணவ தேகம், ஞானதேகம் என்னும் சாகாக்கலானுபவ சொரூப சித்தித் தேகங்களும் 

தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும், 


கடவுள் ஒருவரே என்றறிகின்ற உண்மை ஞானமும், *கருமசித்தி, யோகசித்தி, ஞானசித்தி* முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைவதற்கான காலம் இக்காலமே.


*இக்காலமே சுத்த சன்மார்க்க காலம்*


உயர்ந்த அறிவுள்ள மனிததேகம் பெற்றவர்கள் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழிக்காமல்.

உண்மை அறிவை பயன்படுத்தி தெளிவு பெற வேண்டும்.


உலகியலில் இயற்கைக்கு புறம்பான பஞ்ச பூத தத்துவக் கடவுள்களான தெய்வங்களை ( அதாவது ஜடபொருள்களை) தொடர்பு கொள்ளாமல்.


*இயற்கை உண்மை கடவுளான மெய்ப்பொருள் என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அவரின்  தனிப்பெருங் கருணையினால் பூரண அருளைப்பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.* 


எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து  ஆன்ம ஒளியையும் உயிர் ஒளியையும் இயக்கிக் கொண்டுள்ள இயற்கை உண்மைக் கடவுள் ஒருவரே ! அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு