ஞாயிறு, 15 நவம்பர், 2020

கற்றது எல்லாம் பொய்யே !

 *கற்றது எல்லாம் பொய்யே* ! 

இவ்வுலகில் பொய்யும் மெய்யும் இரண்டும் கலவையாக உள்ளது. மெய்யை பொய் மறைத்துக் கொண்டுள்ளன. நம் புறத்தில் உள்ள ஊணக் கண்களால் பார்ப்பதுயாவும் பொய்யே ! அகத்தில் உள்ள அருள் கண்களால் பார்ப்பது மட்டுமே மெய்யாகும்.

நாம் கற்கும் கல்விகள் யாவும் பொய்யான பொருள் ஈட்டும் பொய் கல்வியாகவே உள்ளன.அருள் ஈட்டும் சாகாக்கல்வியை கற்றுத்தரவே இவ்வுலகிற்கு இறைவனால்  வருவிக்க உற்றவரே திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

*வள்ளலார் பாடல்* ! 

கண்டதெலாம்  அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

*கற்றதெலாம் பொய்யே* நீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகு சிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.! 

மேலே கண்ட பாடலில் நாம் இதுவரையில் கண்டது. கேட்டது. கற்றது. களித்தது. உண்டது. உட்கொண்டது அனைத்தும் அநித்தியமானது பொய்யானது என்பதால் இவ்வுலகில் மக்களுக்காக போதித்த கொள்கைகள் எவற்றையும் நம்பவேண்டாம் பின்பற்ற வேண்டாம் என்கிறார் வள்ளலார். 

மெய்பொருள் உண்மையை வெளிப்படையாக ஒருவரும் சொல்லவில்லை.

ஆதலால் நாம் பிறவிப் பெருங்கடலை நீந்த முடியாமல் இறந்து இறந்து பிறந்து பிறந்து கொண்டே உள்ளோம். 

*ஆன்மாவின் சுகநிலை*

ஆன்மா என்னும் உள்ஒளியானது இறைவன் தகுதி பெறும் வாய்ப்புள்ளதால்

(அதாவது கடவுள் நிலைஅறிந்து அம்மயமாதல் ) இறைவன் குழந்தைகள் என்று சொல்லப் படுகின்றது.

ஆன்மாவானது தான் யார் ? என்பதை தெரிந்து கொள்வதற்கும். தன்தகுதி எவ்வளவு உயர்ந்தது சக்திவாய்ந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்த பஞ்ச பூத உலகத்தை இறைவன் படைத்துள்ளார். 

*ஆன்மா உயிர்பெற்று உடல்பெற்று

பலகோடிபிறவிகள் எடுத்து உருமாற்றம் அடைந்து இறுதியாக மிகவும் உயர்ந்த பிறவியான மனித பிறப்பு என்னும் உருவம் கொடுக்கப்படுகிறது*. 

மனித பிறப்பில்தான் உயர்ந்த அறிவும் உயர்ந்த அருளும் பெற்று வாழும்வகை வழங்கப்பட்டுள்ளது. 

அறம்.பொருள் இன்பம் பெற்று மற்ற உயிர்களின் நலன்கருதி சிறப்புடன் வாழ்ந்து இறுதியாக வீடுபேறு அடையவேண்டும்.

*வீடுபேறு என்பது மரணம் இல்லாப்பெருவாழ்வு வாழ்வதாகும்*. அதுவே ஆன்மாவிற்கு இறைவன் கொடுத்த கொடையாகும்.அவற்றை அனுபவிக்க வேண்டும் என்பதே அருள் நியதியாகும் அன்பு கட்டளையாகும்.

ஆனால் மனித்தேகம் பெற்ற ஆன்மாக்கள் தன் அறிவை பயன்படுத்தாமல் மற்ற மனிதர்கள் சொல்லிய பொய்யான அறிவால் தோன்றிய கருத்துக்களையும் கற்பனைக் கதைகளின் வாயிலாக தோன்றிய கொள்கைகளையும் பின்பற்றி வாழ்ந்து வந்ததால்.

அறியாமை அஞ்ஞானம் என்னும்  வினைகள் ஆன்மாவைப் பற்றிக் கொண்டுள்ளன.

அதுவே ஆன்மாவின் இயற்கை உண்மையை மறைத்துக் கொண்டுள்ள மாயா திரைகளாகும்.

ஆதலால் மனிதர்களால் உண்மையை உணர்ந்து கொள்ள முடியாமல் அருள் பெற முடியாமல் பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளது. 

*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்* !

 கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெற மெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே

உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே

உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே

சிலைநிகர் வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

என்னும் பாடல் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

*இறைவன் வருகை*

இவ்வுலகில் மனிதன் இறைவனை முழுமையாக தொடர்புகொள்ள முடியாமல்.சிறிய முயற்சியால் சுத்ததேகம்.பிரணவதேகம் பெற்று வெளிப்படுத்திய சாதி சமய மதக் கொள்கைகள் வெவ்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் உலகம் முழுவதும் பதிந்து. உயர்ந்த அறிவுபெற்ற மக்கள் உண்மை அறியமுடியாமல் அழிந்து கொண்டுள்ளார்கள்.

*வள்ளலார் பாடல்* !

அறங்குலவு தோழிஇங்கே நீ உரைத்த வார்த்தை

*அறிவறியார் வார்த்தை*

எதனால் எனில் இம் மொழிகேள்

உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்

உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்

*மறங்குலவும் அணுக்கள் பலர் செய்தவிர தத்தால்*

*மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்* அங் கவர்பால்

இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்

இறைவர் அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.! 

*இறப்பதும் பிறப்பதுமாய் உள்ள மனிதர்களின் எண்ணம் சொல் செயல்களினால் உண்மை வெளிப்படாமல் போயிற்று. ஆதலால் அவர்களின் கொள்கைகள் கருத்துக்கள் யாவும் பொய்யானது எனவே கற்றது எல்லாம் பொய் என்கிறார் வள்ளலார்*.

*இறைவனே வருகை*!

*உயர்ந்த அறிவுபெற்ற மனிதர்களை காப்பாற்றவே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருஅருட்பிரகாச வள்ளலார் என்ற மனித உருவம் தாங்கி உலகில் தோன்றியுள்ளார்*

இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம்தான் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற பொது நெறியாகும்.

திருநெறியாகும். பொது மார்க்கமாகும்.

இம்மார்க்கத்தின் மூலமாகத்தான் உண்மையை தெளிவாக வெளிப்படையாக அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளமுடியும்.

*இச்சங்கத்திற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தலைவராகும்.* எவரும் தனிஉரிமை கொள்ளமுடியாது.

இம்மார்க்கம் எந்த சாதி சமயம் மதங்களையும் சார்ந்த்து அல்ல என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

*வள்ளலார் பாடல்* ! 

உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி

இலகஅருள் செய்தான் இசைந்தே 

திலகன்எனநானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து.!  

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நடத்திக் கொண்டுள்ளார்*.

*வேறு எவரும் நடத்துவதற்கு உரிமை வழங்கவில்லை*. 

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை சார்ந்து வள்ளலார் காட்டிய கொள்கைகளைப் பின்பற்றி வாழ்வதே மக்களின் தலையாய கடமையாகும்.அதைவிடுத்து பலபல தலைப்புகளில் சங்கங்களை அமைத்து தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் என்று சேர்த்து.சாதி சமயம்.மதம்.மற்றும் அரசியல் சார்ந்தது  போல் சன்மார்க்க சங்கங்கள் செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. 

*தயவு உடையவர்கள் எல்லாரும் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்களே*.

*தயவுக்கு தடையாக உள்ளதே சாதி சமய மதங்கள் என்பதை அறிந்து கொண்டால் தயவு என்றால் என்ன என்பது தெரியவரும்*.

தயவு இல்லாமல் அருள் விளங்காது.அருள் விளங்காமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியாது.அருள் பெறுவதே சன்மார்க்கிகளின் பணியாகும். அருள் பெறுவதற்கு தடையாக இருப்பதே சாதி சமய மதங்களின் கொள்கைகளாகும். 

நாம் கற்கும் உலகியல் கல்விகள்யாவும்  சாகும் கல்வியாகும்.

*வள்ளலார் கற்றுத்தரும் கல்வி அருள்கல்வி அதுவே சாகாக் கல்வியாகும்*

சாகாக்கல்வி கற்பதற்கு சாகும்கல்விகள் தடையாக உள்ளது.

எனவேதான் வள்ளலார் சொல்லுகின்றார்.

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றைநாடாதீர் 

*பொய்உலகை நம்பாதீர்* - வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்

கென்மார்க்கமும் ஒன்றாமே.! 

*வள்ளலார் பாடல்* !

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை

நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்

வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்

தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்

யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.! 

நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நேரிடையான உண்மை வார்த்தைகளாகும்.

*இனிமேல் பொய்யை ஒழித்து புறப்பட்டு மெய்யை தொடர்பு கொள்ளவேண்டும்.*

மனித்தேகம்  கொடுத்ததே சித்தி பெறவேண்டும் என்பதே. பஞ்ச பூத  பொய் உடம்பை திருஅருளால் மெய் உடம்பாக மாற்றி மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் இணைந்து கொள்ள  வேண்டும். உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் மேன்மை அடையவேண்டும் என்ற எண்ணத்தோடும் இரக்கத்தோடும் ஆன்மநேய உரிமையோடு உணர்வோடு அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்.

பொய்யை ஒழித்து புறப்பட்டேன் மன்றாடும் அய்யரைக் கண்டேன் என்கிறார் வள்ளலார்.நாமும் பொய்யை அகற்றி மெய்யைத் தொடர்பு கொள்வோம். *அருள் பெறுவதே நம் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்*

*அருட்பெருஞ்ஜோதி அகவல் !*

அருளறியார் தமை யறியார் எம்மையும்

பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே!

அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை

பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே!

அருள் வடிவதுவே யழியாத் தனிவடிவு

அருள்பெற முயலுகென் றருளிய சிவமே !

அருளே நம்மியல் அருளே நம்முரு

அருளே நம்வடி வாமென்ற சிவமே !

அருளே நம்மடி யருளே நம்முடி

அருளே நம்நடு வாம் என்ற சிவமே !

அருளே நம்மறிவு வருளே நம்மனம்

அருளே நங்குண மாமென்ற சிவமே!

அருளே நம்பதி யருளே நம்பதம்

அருளே நம்மிட மாமென்ற சிவமே!

அருளே நந்துணை யருளே நந்தொழில்

அருளே நம்விருப் பாமென்ற சிவமே!

*அருளே நம்பொருள் அருளே நம்மொளி*

*அருளே நாமறி வாயென்ற சிவமே!*

அருளே நங்குல மருளே நம்மினம்

அருளே நாமறி வாயென்ற சிவமே!

அருளே நஞ்சுகம் அருளே நம்பெயர்

அருளே நாமறி வாயென்ற சிவமே!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு