திங்கள், 28 செப்டம்பர், 2020

ஒரு ஒளி உதயமானது ! பாகம் !

 *ஒரு ஒளி உதயமானது* பாகம் 1

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!!

ஒவ்வொரு யுகத்திற்கும் மனிதகுலத்தை நல்வழிப்படுத்த இயற்கை உண்மையாம்  அருட்பெருஞ்ஜோதி அருட்பேரொளி என்னும் ஆண்டவரால் பக்குவம் உள்ள ஆன்ம ஒளியை இவ்வுலகத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

உலக வரலாற்றில் மிகச்சிறந்த ஆன்மீக புண்ணிய பூமியாம் இந்தியாவின் தெய்வத்திரு தமிழ்நாட்டிலுள்ள  கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு வடமேற்கில் 20 கி.மீ தொலைவில் உள்ள மருதூர் என்னும் ஒரு சிறிய கிராமத்தில் கணக்குப் பிள்ளையாக பணியாற்றிவந்த இராமய்யா அவரது மனைவி சின்னம்மையார் என்பவருக்கும் சபாபதி.பரசுராமன் என்னும் இரு ஆண் மக்களும்.

உண்ணாமலை.சுத்தரம்பாள் என்னும் இரு பெண் மக்களும் பிறந்தனர்.

*சிவனடியார் வேடத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*

ஒருநாள் மருதூரில் உள்ள இராமய்யா வீட்டிற்கு சிவனடியார் வேடத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகிறார். அம்மா பசிக்கிறது உணவு இருந்தால் கொஞ்சம் போடுங்கள் என்று கேட்கிறார்.. அக்குரல் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்து பார்க்கிறார் சின்னம்மையார். சிவனடியாரைக் கண்டதும் கைகூப்பி வணங்கி வீட்டின் உள்ளே அழைத்து பாய்விரித்து அமரவைத்து தலைவாழை இலைப்போட்டு பயபக்தியுடன் உணவு பரிமாறுகிறார்.

அக மகிழ்ச்சியுடன் பசிஆற  உணவு உண்டு சிவனடியார் ஒருவரம்  வழங்குகிறார். சின்னம்மையார் ஆச்சரியத்துடன் கவனிக்கிறார். என்னுடைய பசியைப்போக்கிய உமக்கு.உலக உயிர்களின் பசியைப்போக்க ஒரு ஞானக்குழந்தை பிறக்கும் என்று ஆசீர்வாதம் செய்துவிட்டு சின்னம்மையார் கண்களுக்குத் தெரியாமல் சென்று விடுகின்றார்.

சிவனடியார் சொல்லிய வண்ணம்.

05- 10-1823 ஆம்நாள் சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5-30 மணிஅளவில்  ஐந்தாவது குழந்தையாக *இறைவனால் வருவிக்க உற்றவர்தான் பக்குவம் உள்ள ஆன்மாவாகிய  இராமலிங்கம் என்னும் வள்ளல்பெருமான் ஆவார்கள்*

*திருஅருட்பா பாடல்*!

அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித் திட அவரும்

இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந் திடுதற் கென்றே எனை இந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

என்னும் பாடல்வாயிலாக *தான் இவ்வுலகிற்கு இறைவனால் எதற்காக வருவிக்க உற்றேன் என்ற உண்மையை வெளிப்படையாக  தெரியப் படுத்துகின்றார்*.

*குழந்தை சிரித்தது*

குழந்தை பிறந்து ஐந்தாவது மாதத்தில்.தந்தை இராமைய்யாவும் தாய் சின்னம்மையாரும் தங்கள் ஐந்தாவது குழந்தையான இராமங்கத்தை எடுத்துக்கொண்டு குடும்பத்தோடு.சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செல்கிறார்கள்.

நடராசர் தரிசனம் முடிந்ததும் இறைவன் சந்நிதிக்கு வலது பக்கத்திலுள்ள சிதம்பரம் ரகசியம் காண நகர்கிறார்கள்.ரகசியங்களுக்கு எல்லாம் ரகசியமானது அது.அந்த ரகசியம் ஒருதிரையினால் மூடப்பட்டு இருக்கிறது.தினந்தோறும் நடைபெறும் ஆறுகாலப் பூசைகளின் இறுதியில் சிதம்பர ரகசியத்தை மறைத்துள்ள திரை விளக்கப்பட்டு தரிசனம் காட்டுவது  வழக்கம்.

அப்பய்ய தீக்ஷிதர் என்பவர் மிகுந்த பக்தி பரவசத்தோடு திரையை விளக்கி சிதம்பர ரகசியத்தை  காட்டுகிறார். அங்கே கூடியிருந்த பக்தர்கள் சிதம்பர ரகசியத்தை பார்த்து கைகூப்பி வணங்குகின்றனர்.தாயார் சின்னம்மையாரின் கையிலிருந்த *ஐந்துமாதக் குழந்தையான இராமலிங்கம் அந்த ரகசிய வெட்ட வெளியைப் பார்த்து கலகல என்று சிரித்தது*.

*அந்த சிரிப்பு சாதாரண குழந்தை சிரிக்கிற சிரிப்புபோன்றது அல்ல.தெய்வீக மணம் கமழும் பேரின்பம் பொங்கும்  சிரிப்பாக ஒலித்தது*.

அந்த சிரிப்பு ஒலி அங்குள்ள பக்தர்கள் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. அச்சிரிப்பு ஒலியை கண்டு கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு பரவசமாயினர்.ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது தான் கண்ட காட்சியை பின்னாளில் ஆறாம் திருமுறை அருள்விளக்கமாலை என்னும் தலைப்பில் பாடலாக பதிவுசெய்கிறார்.

*பாடல் *! 

தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத் தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது

வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே

காய்வகை இல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே

தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும் சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.! 

என்னும்பாடலின் வாயிலாக. இராமலிங்கம் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோதே... கடவுள் உருவமாக இல்லை.அருள் நிறைந்த வெட்ட வெளியில் அருள் ஒளியாக உள்ளார்என்பதை அச்சிறு குழந்தைக்கு இறைவன் காண்பித்தார் என்பதை பாடலின்வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.

*குடும்பம் சென்னைக்கு செல்லுதல்*

இராமலிங்கம் பிறந்த எட்டாம் மாதம் தந்தை இராமைய்யா காலமாகிறார்.சின்னம்மையார் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தாம் பிறந்த ஊரான. சென்னைக்கு அடுத்த பொன்னேரிவட்டம் சின்னகாவனம் என்னும் சிறிய கிராமத்திற்கு சென்றுவிடுகின்றார். அங்கே சிலகாலம் வாழ்ந்தபின் தம்மக்களுடன் சென்னைக்குக் குடிபெயர்கிறார்.

மூத்த பிள்ளையாகிய சபாபதி காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி அவர்களிடம் பயின்று புராணச் சொற்பொழிவு செய்வதில். வல்லவராகிக் குடும்பத்தை நடத்தி வந்தார்.

*கன்னி சொற்பொழிவு!*

இராமலிங்கம் பள்ளிப்பருவம் எய்தியதும் தமையனார் சபாபதிஅவர்கள் தாம்கற்ற ஆசிரியர் காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி அவர்களிடம் கல்வி கற்க அனுப்பினார்.

இளைய இராமலிங்கத்தின் அறிவுத் தரத்தையும்.பக்குவநிலையையும். சென்னை கந்தகோட்டம் சென்று கவிபாடும் திறைமையும் கண்ட மகாவித்வான்.இவ் இளைஞர் கல்லாது உணரவும்.சொல்லாது உணரவும் வல்லவர் என்று உணர்ந்து உமக்கு ஏட்டுக்கல்வி வேண்டாம். ஞானக்கல்வியை இறைவனே வழங்கியுள்ளார் என்பதை அறிந்த மகாவித்வான் கற்பிப்பதைக் கைவிட்டுவிடுகிறார்.

இராமலிங்க பெருமகனார் எப்பள்ளியிலும் பயின்றதில்லை.எவ்வாசிரியர் இடத்தும் படித்தது இல்லை.கற்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார்.கேட்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார்.

வள்ளல்பெருமானின் கல்வியும் கேள்வியும் இறைவனிடத்துப் பெற்றதேயொழிய வேறு எவ்வாசிரியிடத்தும் பெற்றதன்று. *இறைவன் பள்ளியில் பயிற்றாது  தானே கல்வி பயிற்றினான் என்பதற்கு அவர் எழுதிய திருஅருட்பா ஆறாம் திருமுறையில் நிறைய சான்றுகள் உள்ளன*. *உலகில் உள்ள எல்லா மொழிகளும் இராமலிங்கப் பெருமகனார்க்குத் தெரியும்*. எல்லா மொழிகள் தெரிந்து இருந்தாலும்.

தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் பிறப்பித்த இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றார்.

டம்பத்தையும்.ஆரவாரத்தையும்.பிரயாசத்தையும்.பெருமறைப்பையும். உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது. *பயிலுதற்கும்.அறிதற்கும்.மிகவும் லேசுடையதாய் பாடுதற்கும் துதிப்பதற்கும் மிகவும் இனிமை யுடையதாய்* *சாகாக்கல்வியை இலேசிலே பயிற்றுவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றிடத்தே மனம் பற்றச்செய்து* *அத்தென் மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடவித்து அருளினீர்* *என்று போற்றுகிறார்.*

* இதுவே உலகளாவிய செம்மொழியாம் தமிழ்மொழியின் தனிச்சிறப்பாகும்*

*கன்னி சொற்பொழிவு*

சென்னையில் சோமு ஐயா என்பவர் மிகப்பெரிய தனவந்தர்.

அவர்வீட்டில் ஒவ்வொருவருடமும் தம் அண்ணார் சபாபதி அவர்கள் ஆன்மீக சொற்பொழிவு செய்வது வழக்கம்.சபாபதி அவர்களுக்கு நோய்வாய்ப்படவே அவ்வருடம் சொற்பொழிவு தடைப்பட நேர்ந்த்து.தம்பி இராமலிங்கத்தை அனுப்பி ஓரிரு பாடல்களைப்பாடி வழிபாடு செய்து நிகழ்ச்சியை ஆரம்பித்துவரும்படி அண்ணார் சபாபதி அனுப்பிவைத்தார்.

அன்று இராமலிங்கம்  ஆற்றிய கன்னிச் சொற்பொழிவைக் கேட்ட அவையோர்கள். ஆனந்த பரவசம் அடைந்து  அவரையே தொடர்ந்து சொற்பொழிவு நிகழ்த்தும்படி வேண்டினர். அதற்கிசைந்து சிலநாட்கள் தொடர்ந்து சொற்பொழிவு செய்தார். 

உலகு எல்லாம் உணர்ந்து ஓதற்கு அறியவன் என்னும் சேக்கிழார் பாடிய கடவுள் வாழ்த்துப்பாடலுக்கு உலகு என்ற வார்த்தைக்குக்குமட்டும் அவர் ஆற்றிய முதற்  கன்னி சொற்பொழிவு மக்களை மயக்கம் அடைய செய்வித்துவிட்டது. அந்த நிகழ்ச்சி சென்னை மாநகரம் முழுவதும் புயல்மழை காற்றுபோல் பரவி இராமலிங்கத்திற்கு பெரும்புகழைத் தேடி தந்த்து.

தொடரும்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு