திங்கள், 16 செப்டம்பர், 2019

மனதை மாற்ற வேண்டும் !

*மனதை மாற்றினால் இன்பம்பெறலாம்!

நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்.

மனிதனுக்கு மனம் உள்ளதால் மனிதன் என்ற பெயர் வழங்கப்பட்டது..

மனிதப் பிறப்பு எடுத்த நாம் மனத்தின் உணர்வுகளுக்குத் தகுந்தாற் போல்தான் இந்த உலகியல் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம்.

*இறைவன் படைப்பு ரொம்ப விசித்திரமானது..*

நம் உடம்பில் நான்கு பிரிவுகளாக பிரித்து நான்கும் ஒன்றோடு ஒன்று இணைந்து செய்பட்டுக் கொண்டுள்ளன.

அவைகள் யாதெனில்..

அகம்.அகப்புறம்.புறம்.
புறப்புறம் என்னும் நான்கு வட்டங்களாகும். நான்கு பிரிவுகளாகும்.

நான்கும் தனித்தனியாக இயங்கிக் கொண்டுள்ளது.
ஆனாலும் இணைக்கப்பட்டுள்ளது.

1.அகம் என்பது நம் தலைப்பாகத்தில்  புருவ மத்தியில் உள்ள வெற்று  இடத்திற்கு அகம் என்று பெயர்  அங்குதான் ஆன்மா என்னும் உள் ஒளி எந்த தொடர்பும் இல்லாமல் இயங்கும் இடமாகும்.(அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்பு மட்டும் உள்ளது). அது ஒரு புள்ளி வடிவமாக இருக்கும்.அதன் சக்தி. ஆற்றல் கோடி சூரிய பிரகாசம் உடையது.

2. அகப்புறம் என்பது உள் ஒளிக்கு வெளியே உள்ளதால் அதற்கு அகப்புறம் என்று பெயர். அந்த வட்டத்தில் தான்  உயிர் ஒளி என்னும் ஜீவன் இயங்கும் இடமாகும்..

3. புறம் என்பது...ஆன்ம ஒளிக்கும்.ஜீவ ஒளிக்கும் வெளியில் உள்ளதால் புறம் என்று பெயர்..அங்குதான்
கரணங்கள் என்னும் மனம்.புத்தி.சித்தம்.அகங்காரம்.உள்ளம் என்னும் ஐந்து சூட்சும கருவிகள் இருக்கும் இடமாகும். இதுவும் ஒளித்தன்மை உடையதுதான்.

4.புறப்புறம் என்பது புறத்தில் இருக்கும் கரணங்களுக்கு அடுத்து இருக்கும் இடமாகும்..அங்குதான் கண்.காது.மூக்கு.வாய்.மெய் போன்ற கருவிகளான இந்திரியங்களை இயக்கும் சூட்சும கருவிகள் இருக்கும் இடமாகும்...

மேலே கண்ட நான்கு பாகங்களின் மூலமாகத்தான் மனித உடம்பு இயங்கிக் கொண்டுள்ளன.

அண்டத்தில் உள்ளது அக்கினி.சூரியன்.
சந்திரன். நட்சத்திரங்கள்.
அதேபோல் பிண்டத்தில் ஆன்மா.ஜீவன்.கரணங்கள்.இந்திரியங்கள் உள்ளது.எல்லாமே ஒளித்தன்மை உடையது.

அதாவது
*ஆன்மா என்பது அக்கினி போன்றது.*

*ஜீவன் என்பது சூரியனைப் போன்றது*.

*கரணங்கள் என்பது சந்திரனைப் போன்றது*.

*இந்திரியங்கள் என்பது நட்சத்திரங்கள் போன்றது*.

என்னும் நான்கு விதமான. உண்மை ஒளித் தனைமையை தெரியப்படுத்துகின்றார்

இறைவன் படைப்பில் உலக வாழ்க்கை வாழ்வதற்காக புறம் புறப்புறக் கருவிகளான கரணங்கள்.இந்திரியங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. புறத்தில் வாழ்வதற்கு அழியும் பொருளான மண். பொன்.பெண் தேவைப்படுகிறது.. இவற்றைத்தான் மனித மனம் விரும்புகிறது.

அவற்றைப் பெறுவதற்கு மனித  *மனம் * தான் முதல் கருவியாக இருக்கிறது... அதற்குத் துணையாக புத்தி.சித்தம்.
அகங்காரம்.உள்ளம் என்னும் கருவிகளும் மேலும் புறப்புற கருவிகளான கண்.காது.மூக்கு.வாய்.உடம்பு போன்ற இந்திரியங்களும்..உடம்பில் உள்ள தத்துவ உருப்புக்களும் துணை புரிகின்றன..

*மனத்தால் தான் மரணம்
வருகின்றது !*

மனித மனமானது உலகியல் வாழ்க்கை யில் மிகவும் அதிக ஈடுபாடு கொண்டது.

இந்த உலக வாழ்க்கை அழியும் வாழ்க்கை என்றும்.

இது நிரந்தரம் இல்லாதது என்பதை அறியாது மனம் போன போக்கில் சென்று கொண்டு உள்ளது...

*எனவே தான் மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்றார்கள் சான்றோர்கள்*

*புறத்தில் செல்லும் மனத்தை அகத்தில் மாற்றினால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்*

மனத்தை மாற்றத் தெரியாமல் மனத்தை அடக்க முயற்சி செய்தார்கள் சான்றோர்கள்.
எல்லோரும் தோல்வியே கண்டார்கள்.

புறவழிப்பாட்டு முறைகள் தவறானது !

நம்மைப் படைத்த இறைவனை அறிந்து.தெரிந்து கொண்டு அருளைப் பெற்று இறைவனோடு சேர்ந்து விடலாம் என்பதற்காக ஆலய வழிப்பாட்டு முறைகளையும்.தவம்.
தியானம்.யோகம் போன்ற வழிமுறைகளை எல்லாம் பல ஆன்மீக அருளாளர்கள்  வெளிமுகத்தில் காட்டி அமைத்து வைத்துள்ளார்கள்.
சன்மார்க்கிகளும் அதே பாணியில் சென்று கொண்டுள்ளார்கள்

அதனால் உண்மையான இறைவனையும் காணமுடியவில்லை.
மனதை அடக்க முடியவில்லை. முழுமையான அருளைப் பெறவும் முடியாமல் இறந்து இறந்து.பிறந்து பிறந்து கொண்டே உள்ளார்கள்.

இக்கால கட்டத்தில் தான் மக்களுக்கு உண்மையை உணர்த்த உணரவைக்க.வள்ளல்பெருமானை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கிறார்...

வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை பின்பார்ப்போம்.

இந்திரிய.கரண.ஜீவ.
ஆன்மாவைப்பற்றி வள்ளலார் என்ன சொல்லுகிறார் என்பதை மேலே உள்ளபடி அகம்.அகப்புறம். புறம்.புறப்புறம் என்னும் அடுக்கு முறையில் தெரியப் படுத்தி உள்ளார்...

உலக வாழ்க்கை வாழ்ந்து அழிந்து போகும் மனிதர்களை அழியாமல்  காக்கும் அருள் வாழ்க்கை வாழ்வதற்கு உண்டான  வழி முறைகளைச் சொல்லித் தருகிறார் வள்ளலார்..

வள்ளலார் பாடல் !

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன் அன்றி பகைவன் என நினையாதீர்  உலகில்

கற்றவரும் கல்லாரும் அழிந்திட காண்கின்றீர்
கரணம் எல்லாம் கலங்கவரும் மரணமும் சம்மதமோ

சற்றும் இதை சம்மதியாது என் *மனம்தான்* உமது
*தன்மனம்* தான் *கன்மனமோ* *வன்மனமோ* அறியேன்

இற்றிதனைத் தடுத்திடலாம் என்னோடு சேர்ந்திடுமின்
என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் தானே !

என்னும் பாடலிலே தெளிவாக விளக்குகின்றார்...

மரணம் வருவதற்கு அடிப்படை காரணமே *மனம்* தான் என்பதை வள்ளலார்  தெளிவான விளத்தைத் தருகிறார்.

*பொருளைத்தேடும் மனைத்தை அருளைத்தேடும் வழிக்கு மாற்றுவதே சுத்த சன்மார்க்கம் காட்டும் வழியாகும்*.

மனம் இரண்டு வகையாக உள்ளது..ஒன்று உள் உள்ள ஆழ்மனம்.ஒன்று புறத்தில் உள்ள வெளிமனம் என்பதாகும்..

புறத்தில் செல்லும் மனத்தை அகத்தில் செலுத்த வேண்டும் என்பது தான்  வள்ளலார் சொல்லும் வழியாகும்

மனத்தை எக்காரணத்தைக் கொண்டும்  அடக்க முடியாது.வேறு பாதைக்கு மாற்றமுடியும்.

எனவேதான் மனத்தை சிற்சபையின் கண் செலுத்த வேண்டும் என்ற புதிய பாதையைக் காட்டுகின்றார்... இதற்கு கரண ஒழுக்கம்  என்று பெயர் வைக்கின்றார்.

ஒழுக்கத்தை நான்கு வகையாக பிரிக்கின்றார் ..

இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம்  என நான்கு வகை ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

இதில் முக்கியமானது இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் என்கின்ற இரண்டு ஒழுக்கத்தைக் கடைபிடித்தால் ஜீவ ஒழுக்கம். ஆன்ம ஒழுக்கம் தானே கைகூடும்.

*மனம். தானே சிற்சபை பக்கம் செல்லாது* அதற்கு அன்பு.தயவு.கருணை என்னும் உணர்வு.நெகிழ்ச்சி.மகிழ்ச்சி வந்தால் தான் சிற்சபை பக்கம் மனம் செல்லும்...மனம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கரணங்களும்.
இந்திரியங்களும் சென்றுவிடும்.என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்பு.தயவு.கருணை பெற வேண்டுமானால்.உயிர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும் .அந்த  உபகாரத்திற்குப் பெயர் தான் ஜீவ காருண்ய ஒழுக்கம் என்பதாகும்.

ஜீவர்களுக்கு உண்டாகும்  பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.கொலை.போன்ற துன்பங்கள் உண்டாகின்றன. இவற்றை நீக்குவதே ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்.

ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் மட்டுமே  அன்பும். அறிவும் தானே விளங்கும்.அதனால் உபகாரசக்தி தோன்றும்.அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் உண்டாகும் என்கிறார் வள்ளலார்..

உபகார சக்தியால்  மனம் மகிழ்ச்சி பெற்று மாற்றம் அடையும்.

இப்போது மனம் என்னவாகும் என்பதைக் கவனிப்போம்.

வெளியில் செல்லும் மனமானது..ஜீவகாருண்ய வல்லபத்தால் வெளி உலக இன்பத்தை வெறுத்து.ஆன்ம இன்ப லாபத்தை பெறுவதற்கு மனம் தயாராகிவிடும்.

ஆன்ம இன்ப லாபத்தினால் இந்திரிய இன்பம்.கரண இன்பம்.ஜீவன் என்ற உயிர் இன்பம்.ஆன்ம இன்பம்.தனித்த அறிவு இன்பம்.சத்திய பேரின்பம்.முத்தி இன்பம் அதற்கு மேலான மெய்பொருள் இன்பம்.

அதற்கும் மேலான நிரந்தர அதிசய இன்பம்.ஞான சித்தி பெரும்போக நாட்டரசின் இன்பம் .மேலும் என்றும் அழியாத இயற்கை இன்பம் யாவும். அருள் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கிடைக்கும் இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் ! பதி விளக்கம் என்ற பகுதியில் பதிவு செய்துள்ளார் !

இடம் பெறும் இந்திரிய இன்பம் கரண இன்பம் உலக இன்பமும் உயிர் இன்பமுமாகித்

தடம்பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம் சத்தியப் பேரின்பம் முத்தி இன்பமுமாய் அதன்மேல்

நடம் பெறு மெய்ப்பொருள் இன்பம் நிரதிசய இன்பம் ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் இன்பமுமாய்த்

திடம் பெற வோங்கிய இயற்கைத் தனியின்ப மயமாம் திருச்சிற்றம்பலம் தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் !

மேலே கண்ட பாடலில் நாம் பெரும் இன்பங்கள் யாவும் வழங்கும் ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர் மட்டுமே என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றார்.

இந்த இன்பங்களை மனம் பற்றிக் கொண்டால் மட்டுமே. மனம் வெளி உலக அழியும் இன்பத்தை விட்டு அழியா இன்பத்தைப் பற்றிக் கொள்ளும்.

நம் ஒவ்வொருவரும்  மனத்தை சிற்சபையில் உள்ள ஆன்மாவிடம் தொடர்பு கொள்ள வேண்டும்.

மனத்தை மாற்றுவதற்கு தெரிந்தவர் எவரோ அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப் பெற முடியும்.

வள்ளலார் மனதை மாற்றிய வழியைச் சொல்லுகிறார்...!

மனம் எனுமோர் பேய்க் குரங்கு மடப்பயலே நீதான்
மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய்

இனமுற என்சொல் வழியே யிருத்தி எனில் சுகமாய்
இருந்திடு நீ என் சொல்வழி யேற்றிலை யானாலோ

தினையளவும் உன் அதிகாரம் செல்ல வொட்டேன் உலகஞ்
சிரிக்க உனை யடக்கிடுவேன் திருவருளாற் கணத்தே

நனவில் எனை நினையாயோ யாரென இங்கு இருந்தாய்
ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே !

என்னும் பாடலில் ஞானசபை தலைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டதால் நல்லபிள்ளை என்ற பெயர் பட்டமும் பெற்றுக் கொண்டேன் என்கிறார்..நாமும் மனத்தை மாற்றி நல்லபிள்ளை என்ற பெயரைப் பெற்றுக் கொள்ளலாம்..

அடுத்த பாடல் !

விரிந்த மனம் எனுஞ் சிறிய விளையாட்டுப் பயலே
விரிந்து விரிந்து அலையாதே மெலியாதே விடயம்

புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறி வாய்ப்
புரையாதே விரையாதே புகுந்து வயங்காதே

தெரிந்து தெளிந்து தொருநிலையில் சித்திரம் போல் இரு நீ
சிறிது அசைந்தாலும் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்

பரிந்தெனை நீ யாரென்று பார்த்தாய் சிற்சபை வாழ்
பதிதனக்கே அருட்பட்டம் பலித்த பிள்ளை நானே !

மேலே கண்ட பாடலில் மனத்தை அடக்கி ஆளும் வல்லபத்தை தெரிவிக்கிறார் வள்ளலார்.

வெளியே செல்லும் மனத்தை சிற்சபையில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வைப்பதே *சத்விசாரம்* என்பதாகும்.

மனம் புற பொருள் மகிழ்ச்சியை விட்டு.அகத்தில் உள்ள அருள் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்.

எனவே அன்பர்களே  மனத்தை அகத்தில்  மாற்றினால் மட்டுமே இறைவன் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும்.

ஜீவகாருண்யத்தால் இந்திரியங்களை கட்டுபடுத்துவது எளிய வழியாகும்.

சத்விசாரத்தால் மனம் முதலான கரணங்களை திசைமாற்றம் செய்வதே சத்விசாரம் என்னும் எளிய வழியாகும்.

ஜீவகாருண்யம் ! சத்விசாரம்!  செய்ய தடையாக இருப்பது சாதி.சமய.மதம் போன்ற பொய்யான பிரிவினைக் கொள்கைகளாகும்.

அவற்றை மனம் பற்றாமல் .ஆன்மா இருக்கும் இடமான சிற்சபையை பற்றுவதே சிற்றம்பலப் பற்றாகும்.

பற்றிய பற்று அனைத்தையும் பற்று அற விட்டு அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறவீரே என்பார் வள்ளலார்.

மனதை மாற்றி மனிதனாக வாழ்ந்து இறை அருளைப் பெற்று வாழ்வதே சாகாக்கல்வி என்பதாகும்.

சாகும் கல்வியான சாதி.சமய.மதக் கல்வியை கற்காமல் .வள்ளலார் காட்டிய சாகாக்கல்வியை கற்று தேர்வில் வெற்றிப் பெற்று மரணத்தை வெல்வோம்.

மனதை மாற்றுவோம் மரணத்தை வெல்வோம்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு