வியாழன், 5 செப்டம்பர், 2019

மரணத்தை வெல்லமுடியுமா ? முடியும் !

மரணத்தை வெல்ல முடியுமா ? முடியும் !

சன்மார்க்கத்தை சார்ந்த அன்பர்கள்.சங்கம் வைத்து நடத்துபவர்கள்.
சன்மார்க்கத் துறவிகள் என்று வாழ்பவர்கள். மரணத்தை வெல்ல முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது.
வள்ளலார்போல் வாழ்வதற்கு முயற்சி செய்தால் முடியும்

காரணம் !

அருள் என்பது சாதாரண பொருள் அல்ல.அவை அளவில் அடங்காத ஒளித்தன்மை உடையது.

ஆன்மாவே  கோடி சூரிய பிரகாசம் உடையது.அதைவிட பலகோடி பிரகாசம் உடையது அருள்..

அவற்றைத் தாங்கிக்கொள்ளவும். ஏற்றுக்கொள்ளவும்  நம் உடம்பு மாற்றம் அடைந்திருக்க வேண்டும்.

அதற்குத்தான்.அபர ஜீவகாருண்யம்.பர ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற பயிற்சி முறைகளை கடைபிடிக்க. வள்ளலார் வகுத்து தந்து உள்ளார்.

நாம் எந்த பயிற்சி முறையும் கடைபிடிக்காமல் மரணத்தை வென்று விடலாம் என்ற கற்பனையில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்..

நாம் இடைவிடாது உணவு வழங்குவதாலும்.
திருஅருட்பா பாராயணம் செய்வதாலும் மரணத்தை வெல்ல முடியாது.ஆன்ம நெகிழ்ச்சி.ஆன்ம உருக்கம்.ஆன்ம மகிழ்ச்சி அடையவேண்டும்.

வள்ளலார் எவற்றை எல்லாம் விடச்சொன்னாரோ அவற்றை எல்லாம் விட்டு விட்டோமா என்றால். எதையும் விடாமல் பிடித்துக்கொண்டும் வாழ்ந்து கொண்டும் உள்ளோம்.எந்தவழியில் அருள் கிடைக்கும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மை ஏற்றுக் கொள்வாரா என்றால் ஏற்றுக்கொள்ளவே மாட்டார். நாம் கருணையே வடிவமாக மாற வேண்டும்.கருணையே வடிவமானால்தான் ஆன்ம மகிழ்ச்சி உண்டாகும்.ஆன்மா மகிழ்ச்சி அடைந்தால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிழ்ச்சி அடைந்து ஆன்ம கதவைத் திறப்பார்.

இல்லையேல் வள்ளலாரின் முதல் மாணாக்கர் வேலாயுதம் போல் மனித தரத்தில் வாழலாம்.அருள் பெற முடியாது .அருள் பெறும் தகுதிக்கு உடம்பை பாதுகாக்க வேண்டும்.
அருள்பெறும் தகுதியைப்பற்றி வள்ளலாரே சொல்லுகின்றார்.

நரை.திரை.பிணி.மூப்பு.பயம் இல்லாமல் வாழுகின்ற உடம்பிற்கு அருள் பெறும் வாய்ப்பு
உள்ளது என்கிறார் வள்ளலார்.

நம்மிடத்தில் உண்மை அறிவு.உண்மை அன்பு.உண்மை இரக்கம் இருக்கிறதா என்பதை நம்மை நாமே பரிசோதித்துப் பார்த்து கொள்ள வேண்டும்.

அற்பத்தனமான சாதி.சமய.மதக் கொள்கைகளைத்தான் அதிகமாக பின்பற்றி வருகிறோம். சுத்த சன்மார்க்கம் என்று திருஅருட்பாவைப் படித்துவிட்டு பேசுகிறோம்.
விதண்டாவாதம் செய்கிறோம்.
கடைபிடிப்போர் ஒருவரும் இல்லை என்றே தோன்றுகிறது.

வள்ளலார் சொல்லுகிறார் !

ஓடாது மாயையை நாடாது நன்னெறி
ஊடாது இரு என்றீர் வாரீர்
வாடாது இரு என்றீர   வாரீர். என்றும்

கடவுளைக் காண உண்மையாக விரும்பினால்.அழுத கண்ணீர் மாறுமா ? ஆகாரத்தில் இச்சை செல்லுமா ? என்ற கேள்வியை எழுப்புகிறார்.

தன்னை வெளியே காட்டாது ஒழிக்க வேண்டும் என்கிறார்.

இகபர காமங்களை விரும்பாமல் இருத்தல் வேண்டும் என்கிறார்.

தங்களைப் பார்க்க வேண்டுமானால் என்னைப் பாருங்கள்.

என்னைப் பார்க்க வேண்டுமானால் தங்களைப் பாருங்கள்.

தங்களைப் பார்த்தால் .என்னைப் பார்ப்பீர்கள்.

என்னைப் பார்த்தால் தங்களைப் பார்ப்பீர்கள் என்கிறார்.

நாம் எவற்றைப் பார்த்துக் கொண்டுள்ளோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

உள்ளும் புறமும் ஓர் துணையாக அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை  வள்ளல் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு என்ன என்னவோ செய்து கொண்டுள்ளோம்.

நம் உடம்பை காபாற்ற நிறைய வழிமுறைகள் சொல்லியும்.நாம் காற்றில் பறக்கவிட்டு நம் விருப்பம்போல் செய்வதால் எந்தபயனும் இல்லை.

நம் பூத உடம்பை. ஆன்ம உடம்பாகிய ஒளி உடம்பாக மாற வேண்டும் .மாற்ற வேண்டும்.மாற்றினால்தான் இறைவன் அருளை வழங்குவார்.அருளைப் பாதுகாக்க முடியும்..

நம் உடம்பில் உள்ள பெரிய ஒன்பது துவாரங்களும்.உடம்பில் உள்ள அணு துகள் முடி துவாரங்களும் அடைக்கப்பட வேண்டும்.
அதற்குத்தான் தேகமாற்றம் என்கிறார் வள்ளலார்.

அசுத்த பூதகாரிய தேகமானது.முதலில் சுத்த பூதகாரிய தேகமாக மாற்றம் அடையவேண்டும்.அதற்குத்தான் இந்திரிய.கரண ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.

நாம் இந்திரிய.கரண ஒழுக்கத்தையே கடைபிடிப்பதில்லை.
எவ்வாறு சுத்ததேகமாக மாற்றம் அடையும்.

சுத்த தேகமாக மாற்றினால்தான்.
திரைகள் விலகி. ஆன்மாவில்   இருந்து முதல் அமுதம் சுரக்கும் அவை நாக்கினடியில் இனிப்புள்ள ஊற்றுஜலம் போல் இருக்கும் என்கிறார்.அவற்றை தக்கவைத்துக் கொண்டால்தான்.
இரண்டாவது அமுதம் சுரக்கும்.அவற்றையும் தக்க வைத்துக் கொண்டால் தான்.

அடுத்து சுத்த தேகமானது பிரணவ தேகமாக மாற்றம் அடையும்..

பிரணவ தேகத்தில் மேலும் இரண்டு அமுத்தாரைகள் வெளிப்பட்டு தக்க வைத்துக் கொண்டால்தான்.
மூன்றாவது ஞான தேகத்திற்குண்டான ஐந்தாவது அமுதம் சுரக்கும்.அதற்கு மவுனாஅமுதம் என்று பெயர். இறைவன் கருணையால் மட்டுமே ஐந்தாவது அமுதம் வழங்கப்படும்....

இந்த ஐந்து அமுதத்தையும்.பூரணமாக உண்டவர்கள்தான் மரணத்தை வெல்லமுடியும்.

இந்த ஐந்து அமுதத்தையும் பெற்றவர்கள் சுத்த பிரணவ ஞானதேகிகள் என்று பெயர்.பேரின்ப வாழ்க்கை வாழ தகுதிப் பெற்றவர்களாவார்கள்

அமுதம் உட்கொள்ளும் போது தேகமாற்றம் எவ்வாறு உண்டாகும் என்பதை திருஅகவலில் தெளிவாக தெரிவித்துள்ளார்.

725.தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட

726. என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட

727. இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட

728. மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்
உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட

729. ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட

730. உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட

731. வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்
கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட

732. மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட

733. மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்த மியைந்து களித்திட

734. அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச்
சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட

735. அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்
பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்

736. தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்
சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட

737. உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட

738. என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட
என்னுளத் தோங்கிய என்றனி யன்பே

739. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே

740. தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்
என்னைவே தித்த என்றனி யன்பே

741. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடை யன்பே

742. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து
என்னுளே கனிந்த வென்னுடை யன்பே

743. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே
என்னுளே நிறைந்த என்றனி யன்பே

744. துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை
யின்புறு வாக்கிய என்னுடை யன்பே

745. பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா
என்னுளங் கலந்த என்றனி யன்பே

746. தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி
என்வசங் கடந்த என்னுடை யன்பே !

மேலே கண்ட அகவலில் சொல்லிய வண்ணம் .அருள் பெற்றால் உடம்பு எவ்வாறு மாற்றம் அடையும் என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளார்.

நாம் அந்த தகுதியைப் பெறுவதற்கு எவ்வாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே திருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்ந்து காட்டியுள்ளார். வள்ளலார் போல் வாழ்ந்தால் மட்டுமே மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழமுடியும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு