திங்கள், 19 மார்ச், 2018

மரணத்தை வெல்ல முடியுமா ? முடியாதா ?

மரணத்தை வெல்ல முடியமா ? முடியாதா ?

மனிதன் மரணத்தை வெல்ல முடியுமா ?முடியாதா? என்ற வினா மக்களிடையே பல்லாண்டு காலமாக உள்ள சந்தேகங்களாகும் .இதற்கு பதில் ஆன்மீக வாதிகளாலும் ,அறிவியல் வல்லுனர்களாலும் அணுக்களை ஆராய்ச்சி செய்யும்,ஆணு ஆராய்ச்சி யாளர்களாலும் ,விஞஞான ஆராய்ச்சி யாளர்களாலும் ,மற்றும் உள்ள பகுத்தறிவு வாதிகளாலும் ,பொது சிந்தனை யாளர்களாலும் இன்றுவரை {வள்ளலாரைத் தவிர } யாராலும் பதில் சொல்ல,பதில் காண முடியாமல் விழிக்கிறார்கள் .

ஒரு சிலர் உலகில் தோன்றியது எல்லாம் அழிந்து கொண்டேதான் இருக்கும் என்கிறார்கள்.ஒருசிலர் எல்லா உயிர்களும் பிறந்து பிறந்து இறந்து இறந்து கொண்டேதான் இருக்கும்,அதுவே இறைவனுடைய திருவிளையாடல் என்கிறார்கள்.ஒருசிலர் உலகில் படைக்கப் பட்ட அனைத்தும் மனிதர்களுக் காகத்தான் ஆதலால் அனைத்தையும் அழித்து தின்று ஏப்பம் போட்டுவிட்டு மனிதனும் அழிந்துவிட வேண்டியது தான் என்கிறார்கள்.ஒருசிலர் மனிதன் ஒழுக்க முள்ளவனாக வாழ்ந்து சொர்க்கம் ,சிவலோகம் ,வைகுண்டம் என்னும் இடத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்கிறார்கள்.

ஒருசிலர் உடம்போடு சமாதி நிலை அடைந்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்,ஒருசிலர் காசி ராமேஸ்வரம் ,இமயமலை,கைலாயமலை ,போன்ற புண்ணிய தீர்த்தங்களை தரிசித்து ஆலய வழிபாடு போன்ற கர்மங்கள் செய்வதால் கர்மம் தொலைந்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள் .ஒருசிலர் உயிர்களின் பரிணாம வளர்ச்சி தோற்றமும மாற்றமும் இயற்கை யாகும் .அதலால் கடவுள் என்பது ஒன்றும் இல்லை எல்லாம் அணுக்களின் சேர்க்கையாகும் என்கிறார்கள் .ஒருசிலர் வேதம் ஆகமம் புராணங்கள் இதிகாசம் சாத்திரம போன்றவைகளை படித்து அதன்படி வாழ்ந்து வருபவகள் மட்டும்தான் இறைவனையே அடைய முடியும் என்கிறார்கள்,ஒருசிலர் உயிர்களுக்கு தொண்டு செய்தால்போதும்,பிற உயிர்களை வதைக்காமல் இருந்தால் போதும்,இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்.

சமய,மதத் தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனைக் கண்ணை முடிக்கொண்டு அதன்படி வர்ணம் ஆசிரமம் ஆசாரங்கள் போன்ற சங்கற்ப விகற்பங்களை செய்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்.இப்படி எண்ணற்ற வழிமுறைகள் ,என்பனப் போன்ற கருத்துக்கள் மனித வாழ்க்கைக்கு பலபேர் பல வழிகளில் வகுத்து வைத்துள்ளார்கள்

ஒரு சிலர் எல்லா வற்றிற்கும் ஆசைதான் காரணம் ஆசையை அழித்தால் இறை நிலையை அடையலாம் என்கிறார்கள் ஒரு சிலர் துறந்தாற்க்கும்,துவ்வா தார்க்கும் இறந்தார்க்கும் இல் வாழ்வான் துணை என்கிறார்கள் அவர்களே இறைவனை அடையமுடியும் என்கிறார்கள்.

எதைப் பற்றியும் கவலைப் படாமல் பணம் கிடைத்தால் போதும் எப்படி வேண்டுமாலும் வாழலாம் பணம், பெண், பொன் இருந்தால் போதும் என்று எண்ணி மக்களின் உழைப்பை சுரண்டி, பகல் கொள்ளை அடித்து வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.இப்படி மக்கள் மனநிலையை குழைப்பி வைத்துள்ள நிலையில் மக்கள் குழம்பிக் கொண்டு உள்ளார்கள்.எவை உண்மை ,எவை பொய் என்பது தெரியாமல், மலத்தில் புழுத்த புழுக்களைப் போல் மக்கள் தவித்துக் கொண்டு உள்ளார்கள்

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட,இறைவனால் இந்த உலகிற்கு வருவிக்கப் பட்டவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

மனித பிறப்பு மனித வாழ்க்கை என்பது என்ன?

மனித பிறப்பு என்பது எல்லாப் பிறப்பு களிலும் உயர்ந்த பிறப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியாகும்.மனிதன் பிறப்பு என்பது இந்த மாயை உலகில் அறம்,பொருள் இன்பம்,வீடுபேறு,என்ற நான்கையும் அனுபவித்து பின் பற்று அற்று ,இறைவன் அருளைப் பெற்று இறை நிலையை அடைவதுதான் {அதாவது வந்த இடம் தெரிந்து செல்வது } உண்மையான மனித வாழ்க்கையாகும் ,அதுதான் பேரின்பமாகும்.மற்றவை அனைத்தும் அழிந்து போகும் சிற்றின்பமாகும். ஆனால் மனித பிறப்பு எடுத்த எந்த மனிதர்களும் அந்த நிலையை அடையவில்லை.அப்படி அடைந்ததாக சொல்வதெல்லாம் சுத்த பொய்யாகும்.

உடம்புடன் செல்ல முடியுமா ? உடம்பை அழித்து விட்டு செல்லமுடியுமா ? மரணம் வந்து விட்டால் செல்ல முடியுமா?சாமாதி நிலையில் செல்ல முடியுமா ?என்றால் இந்த வழி முறைகளில் செல்ல முடியாது .இதற்கு இறைவன் அனுமதியும் கிடையாது .இதற்கு வள்ளலார் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம் ,

கல்வி இரண்டு வகைப்படும் !

ஒன்று சாகும் கல்வி! ,ஒன்று சாகாக் கல்வி!

சாகும் கல்வி என்பது மாயையால் உண்டாக்கிய ஐம்பூதப் பொருள்களை பலவழிகளில் சம்பாதித்து அனுபவித்து அதனால் வரும் துன்பங்களினால் அச்சம் பயம்,பருவ மாற்றம்,பின் முதிற்சி,பிணி, துன்பம் அடைந்து பின் மரணம் அடைவது சாகும் கல்வியாகும். உலகில் உள்ள அனைத்துக் கல்விகளும் பொருள் ஈட்டுவதற்கு பயன் படும் கல்வியாகும்.இதனால் என்ன பயன் என்றால் ,நம் உடம்பில் உள்ள கண்,காது,மூக்கு,வாய்,மெய் என்னும் உடம்பு,போன்ற இந்திரியங்களும்.மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,என்னும் கரணங்களும் மட்டும் தான் மகிழ்ச்சி அடைகின்றன,ஜீவனும் ஆன்மா என்னும் உள்ஒளி மகிழ்ச்சி அடைவதில்லை.இதற்கு வள்ளலார் சொல்லும் பாடல் வருமாறு --

கரணம் மிகக் களிப்புறவே கடல் உலகும் வானுங்
கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவீர்
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ
மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் நீண்டே
திரணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய வொளி வழங்குஞ்
சித்திபுரம் என ஓங்கும் உத்தம சிற்சபையில்
சரணம் எனக்கு அளித்து எனையும் தானாகக எனது
தனித் தந்தை வருகின்ற தருணம் இது தானே .

என விளக்கம் அளிக்கிறார் .

கடலையும் ,உலகையும் நாட்டையும் ஆளும் அதிபதிகளாக இருந்தாலும்,உங்களுக்கு வரும் மரணத்தைத் தவிர்த்துக் கொள்ள முடியுமா?மரணத்தை தவிர்த்துக் கொள்ளாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?என்று கேட்கிறார் வள்ளலார் .அப்படி வாழ்வதால் என்ன பயன் அடைந்து உள்ளீர்கள்.?உங்கள் வாழ்க்கையில் இந்திரியங்களும் ,கரணங்களும் மட்டும் மகிழ்ச்சி அடைகிறது,ஜீவனோ ,ஆன்மாவோ மகிழ்ச்சி அடைவதில்லை ,ஜீவனும் ஆன்மாவும் மகிழ்ச்சி அடையாத வாழ்க்கை மிருக வாழ்க்கையாகும் மிருகங்களும் உண்ணுகின்றன உறங்குகின்றன பின் இறந்து விடுகின்றன ,அது போலத்தான் மனிதன் வாழ்க்கையா ?மனிதன் அறிவு படைத்தவன் இல்லையா ?சிந்திக்க வேண்டாமா ?உணரவேன்டாமா? மனிதப் பிறப்பு உயர்ந்த பிறப்பு என்பது எல்லாம் ,பொய்யா?அறிவை பயன் படுத்த வேண்டும்,அதுவே மனித பண்பு என்பதாகும் .

சாகும் கல்வி !   

உண்ணுவதும் உறங்குவதும் பின் இறப்பதும் சாகும் கல்வியாகும்.நாம் உண்ணுகின்ற உணவு இரைப்பையில் சென்று ஐந்து நாழிகையில் பால் போன்று அரைத்து பிரித்து ஊட்டவேண்டிய அனைத்து உறுப்பு களுக்கும்.நரம்புகளின் வழியாக அனுப்பி வைக்கப் படுகிறது,அதனால்  எழுபத்தி இரண்டாயிரம் நாடியும் அக்கிரம மின்றி நிலை பெறுகின்ற படியால் உடல் இயங்கிக் கொண்டு இருக்கிறது .இதை விரிக்கில் பெருகும் .

நாம் உண்ணுகின்ற உணவில் உள்ள சத்தை பிரித்து ரசாயன மாற்றம் போல் ,ரத்தமாகவும் அதில் இருந்து சத்தை பிரித்து விந்து வாக மற்றம் செய்து குண்டலினிப் பைக்குள் அனுப்பிவைக்கிறது .இவை பதினாறு வயதுக்கு மேல் அதன் வேலையை தொடங்குகிறது .இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான செயல்களாகும்,இந்த விந்து நாம் உண்ணும உணவுக்கு தகுந்தாற் போல் சுரக்கும் .விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பது பழமொழி யாகும்,விந்துவின் ஆதிக்கத்தால் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் ,துணிவையும் உணர்வையும் ,ஊக்கத்தையும் கொடுப்பது விந்து என்னும் திரவம்தான்,உலகில் உண்டாகும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரண காரியமாக உள்ளது மனிதனின் விந்து விளக்கமே யாகும்.

இந்த விந்துதான் எல்லா வற்றிற்கும் காரண காரியமாகும் .இதுதான் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை போன்ற ஆசைகளை உருவாக்குவதாகும்.இந்த மூன்று ஆசைகளினால் மனிதன் அழிந்து விடுகிறான்,விந்தைக் கட்டுபடுத்தி வெளியே விடாமல் இருந்தால் அருள் கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் உணவைக் குறைத்து வாழத் தொடங்கினார்கள் ---இதுவே மரணத்திற்கு காரணமாகும் .இதை அறிந்தவர்கள் ஆசையைத் துறக்க வேண்டும் என்கிறார்கள் .ஆசையைத் துறந்தாலும் பசியைத் துறக்க முடியவில்லை--அவற்றை துறந்தவர்கள் துறவிகள்,சந்நியாசிகள் ,சித்தர்கள் யோகிகள் ,ஞானிகள் எனப் படுபவர்களாகும்,

மேலே கண்டவர்கள் சரியை கிரியை யோகம ஞானம் என்னும் படி நிலைகளில் இருந்து இறைவனை அடையலாம் என்று ஒவ்வொருவரும் ஒரு ஒரு வழியைக் கடைபிடித்து வாழ்ந்து வந்துள்ளார்கள் .அவர்கள் முயற்ச்சிக்கு  தகுந்தாற் போல் சில,பல சித்துக்கள் கிடைத்து இருக்கிறது .அதனால் அவர்கள் அந்த சித்தை வைத்துக் கொண்டு எல்லாம் கிடைத்து விட்டது போல் இறுமாப்பு அடைந்து,நீண்ட நாள் வாழ்ந்து, மரணத்தை வெல்ல முடியாமல் அழிந்து போய் விட்டார்கள். மரணத்தை வென்றால்தான் இறைவனை அடைய முடியும் என்ற ரகசியத்தை யாரும் கண்டு பிடிக்க வில்லை .

ஏன் என்றால் மரணம் என்பது இயற்கை என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள் ,அதனால் உடம்போடு இறைவனை அடையலாம்,என்பது அனைவருடைய கொள்கைகளாகும்,ஆதலால் ஆசைதான் எல்லா வற்றுக்கும் காரணம் ஆசையை ஒழித்து விட்டால்,இறைவன் அருளைக் கொடுத்து விடுவார், இறை நிலையை அடைந்து விடலாம், என்பது சமய மதக் கொள்கைகளின் கோட்பாடுகளாகும்.இவை முற்றிலும் தவறானது என்பதை வள்ளலார் விளக்குகிறார் ,

உடம்பின் ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் ,கண்டதே காட்சி ,கொண்டதே கோலம் என்று வாழ்ந்து,கதைகளாகவும்,கற்பனைகளாகவும்,தத்துவங்களை உண்மை போல் அமைத்து வைத்து தாங்களும் குழம்பி மக்களையும் குழம்ப வைத்து விட்டுப் போய் விட்டார்கள்.அதனால் இன்றுவரை மக்கள் உண்மை என்ன வென்று தெரியாமல்,பொய்யையே உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் .

மரணம் இயற்கை அல்ல அவை செயற்கை என்பதை வள்ளலார் ,;;தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்'' என்பார் இவை இன்று நேற்று அல்ல என்றும் உள்ளதால் இந்த நோவை நீக்க வேண்டும் என்கிறார் அவர் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு,

சாவதென்றும் பிறப்பதென்றுஞ் சாற்றுகின்ற பெரும் பாவம் தன்னை எண்ணி நோவது இன்று புதியது அன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே யாகும் மற்றை இறைவராலே
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இச்சிறியே னால்ஆவது என்னே ! 

என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்தி உள்ளார் .மரணம் என்னும் நோவை நீக்குவது எந்த கடவுளாலும் முடியாது .உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரியாமல் ,அதன் ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் மரணத்தை வெல்ல முடியாது ,அதற்கு வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு ;--

உடம்பு வருவகை அறியீர் உயிர் வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம் புகு பேய் மனத்தாலே மயங்கு கின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர்
இடம் பெரும் பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம்புரி என் தனித் தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே !

மனம் என்பது உலக போகத்திலே இட்டுச்செலவது ,அது பேய் குரங்குப் போன்றது அதை வசப படுத்த தெரியாமல் ,வழி துறை தெரியாமல் பொய்யான  வாழ்க்கை வாழ்ந்து இன்பம் துன்பம் என்ற அற்ப செயல்களால் அனுபவித்து பின் எண்ணி எண்ணி இளைத்துக் கொண்டு உள்ளீர்கள் , உலகில் உள்ள அனைவரும் ஏழைகள் தான் ,ஒருவரும் பணக்காரன் அல்ல ,மரணத்தை வேல்லுகிறவன் யாரோ அவனே பணக்காரன் என்பதை வள்ளலார் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ,

நாடு ,மொழி,கடவுள்,மதம்,சமயம்,ஜாதி,ஆண்,பெண், உலகப் பொருள்கள்,என்ற எந்தப் பற்றும் இன்றி ,உயிர்களின் உண்மையை அறிந்து உயிரை உண்டாக்கும் ஆன்மாவை,--உண்மை அறிவைக் கொண்டு அறிந்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும்,ஒருமை வந்தால் அன்றி ,அறிவு விளக்கம் வெளிப்படாது,அருள் விளக்கம் வெளிப் படாது என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார்,உலக பற்றை ஒழித்தால் மட்டும் போதாது ,தியானம்,யோகம,தவம்,பக்தி,காயகல்பம், போன்ற செயல்களால் அருளைப் பெற முடியாது,பின் எப்படி பெற முடியும்.

சாகாக் கல்வி !

மரணத்தை வெல்ல முடியும் ! முடியும் !அதற்கு சாகாக் கல்வி என்று பெயர் வைத்துள்ளார் வள்ளல்ளார் .

சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்
தான் என அறிந்த அறிவே
தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே
தனித்த பூரண வல்லபம்
வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்
விளைய விளைவித்த தொழிலே
மெய்த் தொழில தாகும் இந் நான்கையும் ஒருங்கே
வியந்து அடைந்து உலகம் எல்லாம்
மாகாதல் உற எல்லாம் வல்ல சித்தாகி நிறை
வான வரமே இன்பமாகும்
மன்னுமிது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின்
மரபு என்று உரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்
தேற்றி அருள் செய்த சிவமே
சிற்சபையில் நடு நின்ற ஒன்றான கடவுளே
தெய்வ நடராஜ பதியே ! 

சாகாத கல்வி என்பது ஒன்று உண்டு என்பதை முதன் முதலில் கண்டு பிடித்து உலகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் வள்ளலார் ,கல்வி என்பது மரணத்தை வெல்லும் கல்வியைக் கற்றுக் கொள்வதே சாகாக் கல்வி என்பதாகும்
கடவுள் ஒருவர் என்பதை அறிவதே உண்மை அறிவாகும்,ஐந்து மலமான ஐந்து பூதங்களின் தொடர்பு இல்லாமல் அதை வென்று வாழ்வதே பூரண வல்லபம் என்பதாகும்.என்றும் அழியாமல் வாழ்ந்து அனைத்துப் பொருள்களையும் உருவாக்கும் தொழிலே உண்மையான தொழிலாகும்.கல்வி,அறிவு,வல்லபம் ,தொழில் போன்ற என்றும் அழிவில்லாத செயல்களை செய்யும் செயல் பெற்றதே என்றும் அழியாத இன்பமாகும்.மனிதனாக பிறந்து இந்த உலகத்தில் மேலே கண்ட செயல்களை கண்டு பிடித்து அதன்படி வாழ்ந்து வழிகாட்டியவர் வள்ளலார் ஒருவர்தான் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் .

எப்படி கண்டு பிடித்தார் ? என்பதைப் பார்ப்போம்.!

இவ்வுலகில் உள்ள அனைத்தும்,உயிர்கள் வாழ்வதற்காக இறைவனால் படைக்கப் பட்டதாகும்.படைக்கப் பட்ட எந்த பொருளையும் அனுபவிக்கலாம் ,அழிக்கக் கூடாது,சேர்த்து வைக்க கூடாது,அளவுக்கு அதிகமாக அனுபவிக்கக் கூடாது .எங்கும் எடுத்து செல்லக் கூடாது,என்பதை அறிந்த வள்ளலார் .அதற்கு மேல் இந்த உடம்பு ஏன் வந்தது ?உயிர் எப்படி வந்தது என்பதை அறிய தொடங்குகிறார்.அப்படி அறியும் போது ,உயிர்களுக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு மூன்று சுதந்திரம்,இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்கிறார் ,

அந்த சுதந்திரத்தை மனிதன் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் ,அந்த சுதந்திரத்தை பயன் படுத்தி வாழும் வாழ்க்கையில் இன்பம் துன்பம் தொடர்ந்து கொண்டே வரும் என்பதை உணருகிறார்.நல்லது செய்தால் நல்வினையாகவும்,தீயவை செய்தால் தீவினை யாகவும் ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே இருக்கிறது, இதுவே பிறப்பு இறப்புக்கு காரண காரியமாக இருந்து கொண்டு உள்ளது என்பதை அறிந்த வள்ளலார் இந்த உலகத்தில் உள்ள எதையும் அனுபவிக்காமல் வாழ்வது எப்படி என்பதை நினைந்து நினைந்து ,உணர்ந்து உணர்ந்து ,அவருடைய அறிவுக்கு அதிகமான வேலைக் கொடுக்கிறார் ,

அறிவை அறிவாலே அறிகின்ற போது உண்மையான அறிவு பதில் சொல்கிறது..அதற்கு வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு.

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவ மாகின்றது என்னடித் தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே.

அருளாலே அருள் இறை அருள் கின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு நட இன்பம் என்று அறியாயோ மகளே.!

என்ற பாடல் நமக்கு அறிவை விளக்கும் ,ஆற்றலைக் கொடுக்கும் உண்மையை உணர்த்தும் பாடல்களாகும் .

அருளைப் பெற்றால் மரணத்தை வெல்ல முடியும் என்பதை அறிந்த வள்ளலார் ,அருளைப் பெறுவதற்கு எவை தடையாக இருக்கிறது என்றால் ,இறைவன் நமக்குக் கொடுத்த சுதந்தரத்தை ,நாம் உபயோகப் படுத்தக் கூடாது,வேண்டாம் என்று திருப்பித் தந்து விடவேண்டும் என்பதை வள்ளலார் அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் எப்படி விண்ணப்பம் செய்கிறார் என்பதை அனைவரும் பார்ப்போம் .

ஆறாம் திருமுறையில் முதல் விண்ணப்பம் "'சத்திய விண்ணப்பம் "

எல்லாம் வல்ல தனித் தலைமைக் கடவுளாகிய
அருட்பெரும்ஜோதி ஆண்டவரே !

தேவரீர் திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளுகின்ற சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்;--

இவ்வுலகத்தின் இடத்தே ஆறறிவுள்ள உயர்வு உடைத்ததாகிய தேகத்தைப் பெற்ற யான் ,இத்தேகத்திற்கு இடைக்கு இடை நேருகின்ற மரணம்,பிணி,மூப்பு ,பயம்,துன்பம் முதலிய அவத்தைக்கள் எல்லா வற்றையும் நிவர்த்தி செய்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொண்டு,எக்காலத்தும் ,எவ்விடத்தும்,எவ்விதத்தும்,எத்துணையும்,தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.

எனது விருப்ப முயற்ச்சி இங்கனமாக ,அவத்தைகள் எல்லா வற்றையும் நீக்கி,இத்தேகத்தை நித்திய தேகமாக்கி,எக்காலத்தும் ,அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல்,எதனால் பெறுதல் கூடும் என்று அறியத் தொடங்கிய தருனத்தே;--

வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது,எல்லாம் உடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடும் என்று தேவரீர் திருவளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன் ,

பின்னர் திருவருட் சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து.;--

எனது யான் என்னும்,தேக சுதந்தரம்,போக சுதந்தரம்,ஜீவ சுதந்தரம் .என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கிய விடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.ஆதலில்,

எனது சுதந்தரமாகக் கொண்டு இருந்த தேக சுதந்தரத்தையும்,போக சுதந்தரத்தையும்,ஜீவ சுதந்தரத்தையும்,தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன் ,கொடுத்த தருணத்தே,இத்தேகமும் ,ஜீவனும்,போகப் பொருள்களும்,சர்வ சுதந்தராகிய கடவுள் பெருங் கருணையால் கொடுக்கப் பெற்றன மன்றி ,நமது சுதந்தரத்தால் பெற்றன அல்ல என்னும் உண்மையை அறிந்து கொண்டேன் .

இனி,இத் தேகத்தினிடத்தும்,ஜீவன் இடத்தும் ,போகப் போருகள் இடத்தும்.தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்ற மாட்டாது.

தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்து அருளி,மரணம்,பிணி,மூப்பு,பயம்,துன்பம் முதலிய அவத்தைகள் எல்லா வற்றையும் தவிர்த்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கி,எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல்.வேண்டும்.

இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர் களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து அவரவர்களையும் .உரிமை உடையவர்கள் ஆக்கி வாழ்வித்தல் வேண்டும்.

தேவரீர் பெருங் கருணை ஆட்சிக்கு வந்தனம் !வந்தனம் !

மரணத்தை வெல்லுவதற்கு இதைவிட வேறு சாத்தியக் கூறுகள் உண்டா ?தேவையா?சிந்தித்துப் பார்க்க வேண்டும்.வள்ளலாரைப் போல் வாழ்ந்தால் நிச்சயம் மரணத்தை வெல்ல முடியும்.அதை விடுத்து ,எல்லா பற்றுகளையும் விடாமல் வைத்துக் கொண்டு மரணத்தை வெல்ல முடியுமா ?சத்தியமாக முடியாது. பற்றிய பற்று அத்தனையும் பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறவீரே என்பார் வள்ளலார் .

அருள் !

இந்த உலகம் பொருளினால் உண்டாக்கப் பட்டது,பொருளை வைத்துக் கொண்டு அருளைத் தேடமுடியாது ,அப்படி தேடினாலும் கிடைக்காது .அருளைத் தேடுவதற்கு தடையாக இருப்பது என்ன என்பதை வள்ளலார் விளக்குகிறார் நாம் இதுவரையில் அருளைத் தேடாமல் பொருள் மீது பற்று வைத்து இருந்ததற்கு காரணம் ,

நாம் இதுவரையில் பார்த்தும் கேட்டும் லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனினும் லஷியம் வைக்க வேண்டாம் ,ஏன் என்றால் அவைகளின் ஒன்றிலாவது தெய்வத்தை இன்னபடி என்றும் தெய்வத்தின் உடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.அணு மாத்திரமேனும் தெரிவிக்காமல் பிண்ட லஷ்ணத்தை ஆண்டத்தில் காட்டினார்கள்.யாதெனில், கைலாசபதி என்றும்,வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும் பெயரிட்டு இடம்,வாகனம்,ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷியனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

தெய்வத்துக்குக் கை,கால் முதலியன இருக்குமா ?என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும் ,உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கிறார்கள்,ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் ,அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை ,

அவன் பூட்டிய பூட்டை ஒருவரும் திறக்கவில்லை,இதுவரைக்கும் அப்படிப் பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லி இருக்கின்றார்கள் ,அதற்காக அவற்றில் லஷியம் வைத்தால் ஆண்டவர் இடத்தில் வைத்துக் கொண்டு இருக்கிற லஷியம் போய் விடும் அவைகளில் லஷியம் வைக்காமல் ஆண்டவர் இடத்திலே லஷியம் வைக்க வேண்டியது நமது விருப்ப முயற்சியாக இருக்க வேண்டும் ,

மரணத்தை வெல்லும் அருளைக் கொடுக்க கூடியவர் உண்மைக கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஒருவரால்தான் முடியும் .அதற்கு சாஷி நானே இருக்கிறேன் ,நான் முதலில் சைவ சமயத்தில் லஷியம் வைத்துக் கொண்டு இருந்தது இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது அந்த லஷியம் எப்படிப் போய் விட்டது பார்த்தீர்களா ?நான் பாடி இருக்கிற திருஅருட்பாவில் அடங்கி இருக்கிற பாடலையும் மற்றவர்கள் பாடலையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாஷி சொல்லிவிடும்.ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் ,அப்போது எனக்கு அவ்வளவு அற்ப அறிவாக இருந்தது.என்பதை வெளிச்சம் போட்டுக் கட்டுகிறார் .

காரணம் என்ன ? அவைகள் பக்தி மார்க்கம்,வள்ளலார் கண்டது அருளைப் பெரும் ஞான மார்க்கம் .ஞானம் என்பது ஒன்றும் இல்லாதது.ஒன்றும் இல்லாமல் இருந்தால்தான் அருள் என்னும் ஞானம் கிடைக்கும்.மேலும் வள்ளலார் சொல்லியது.

இப்போது அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் .இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ?என்றால் பெற்றுக் கொள்ளவில்லை.என்னை மேலே ஏற்றிவிட்டது யாதெனில்.

உண்மை பெருநெறி ஒழுக்கமும் கருணையும் தான் என்னை ஏற்றிவிட்டது உண்மை பெருநெறி ஒழுக்கம் யாதெனில்,''கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக '' என்றதுதான் என்னை ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது .அது யாதெனில் தயவு ,தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது .அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும் அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும் தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கும் அப்பாலும் கடந்து இருக்கின்றது .அது அந்த ஒருமையினால் தான் வந்தது நீங்களும் என்னைப் போல் ஒருமையுடன் இருங்கள் ,அருள் தானே கிடைக்கும்.அருள் கிடைத்தால் மரணத்தை வெல்லலாம்.

அருள் என்பது என்ன ?

அருள் என்பது அருட்பெரும்ஜோதி ஆண்டவரால் எல்லா ஆன்மாக்களிலும் வைக்கப் பட்டுள்ள மாபெரும் பொக்கிஷமாகும்.அவை ஆண்டவருடைய கருணையால் தான் சுரக்கும் .அதை தாங்கும் அளவிற்கு நாம் நம்முடைய உடம்பை தயார் படுத்த வேண்டும் .அருளைத் தாங்கும் அளவிற்க்கு தகுதி உடையவர் யார் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார் .

நிந்தை இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந் தகையை
நிலை அனைத்துங் காட்டி அருள் நிலை அளித்த குருவை
என்தையை என் தனித்தாயை என் இரு கண்மணியை
என்னுயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை
சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
செய்ய வல்ல தனித் தலைமைச் சிவபதியை உலகீர்
முந்தை மல இருட்டு ஒழிய முன்னுமினோ கரண
முடுக்கு ஒழித்துக் கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே !

இந்திரியம் கரணம் என்னும் கருவிகள் செயல்படாமல் ஜீவனும் ஆன்மாவில் அடங்கும் போதுதான் அருள் என்னும் அமுதம் சுரக்கும் .{அதாவது ஆபரேஷன் செய்யும் போது வலி தெரியாமல்இருக்க ,மயக்க மருந்து கொடுத்து மயக்க நிலையில் இருப்பது போன்று } அமுதம் சுரக்கும் போது உடம்பின் மாற்றங்கள் என்னவாக மாற்றம் அடையும் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார் ,ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றுவதுதான் மரணத்தை வெல்லும் வழியாகும் .அதாவது வேதியல் மாற்றம் போல் .

உடம்பு மற்றம் அடைவதைப் பற்றி வள்ளலார் சொல்லுவதைக் கவனிப்போம்!

தோல் எலாங் குழைந்திடச் சூழ் நரம்பு அனைத்தும்
மேல் எலாங் கட்டவை விட்டு விட்டு இயங்கிட
என்பு எலாம் நெக்கு நெக்கி இயல் இடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசை எலாம் மெய்யுறத் தளர்ந்திட
இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம்
உரைத்திட பந்தித் தொரு திரளாயிட
மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடல் எலாம ஊற்று எடுத்து ஓடிநிரம்பிட
ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திடத்
தண்ணிய உயிர்ப்பினிற் சாந்தம் ததும்பிட
உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட

வாய் துடித் அலறிட வளர் செவித் துணைகளில்
கூயிசைப் பொறி எலாங் கும்மெனக் கொட்டிட
மெய் எலாங் குளிர்ந்திட மென் மார்பு அசைந்திடக்
கை எலாங் குவிந்திடக் கால் லெலாஞ் சுலவிட
மனங் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட
இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட
அகங்காரம் ஆங்காங்கே அதிகரிப்பு அமைந்திடச்
சகங் காண உள்ளம தழைத்து மலர்ந்திட
அறிவுருவு அனைத்தும் ஆனந்தம் மாயிடப்
பொறியுறு மான் மதற் போதமும் போயிடத்

தத்துவம் அனைத்தும் தாமொருங்கு ஒழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட
உலகம் எலாம் விடயமும் உளவு எலாம மறைந்திட
அலகிலா அருளின் ஆசை மேற் பொங்கிட
என்னுளத்தே எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட
என்னுளத்தே ஓங்கிய என் தனி அன்பே !

பொன்னடி கண்டு அருள் புத்தமுத உணவே
என்னுளத்தே எழுந்த என்னுடைய அன்பே
தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால்
என்னை வேதித்த என் தனி அன்பே !

அருள் என்னும் அமுதம் சுரக்கும் போது உடம்பு எப்படி வேதியல் மாற்றம் உண்டாகிறது என்பதை மிகத் தெளிவாக வள்ளலார் தெரியப் படுத்தி உள்ளார். இந்த உலகத்தில் யாராவது என்னைப் போல்,மரணம் இல்லாப் பெருவாழ்வு  பெற்று இருக்கிறார்களா என்பதை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் கேட்கிறார்.

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் மெஞ்ஞான்றும்
சாகா வரம் எனைப் போற் சார்ந்தவரும் --தேவா நின்
பேர் அருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் நீ சற்றே யறை !

மரணத்தை வென்ற மாபெரும் மகான் நமது வள்ளல்பெருமான் அவர்கள்,அருட்பெரும்ஜோதி ஆண்டவரைப் பார்த்து கேட்கும் கேள்விக்கு ஆண்டவர் என்ன பதில் சொல்கிறார் என்பதைப் பார்ப்போம் .

துன்பெலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச்
சூழ்ந்த அருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
சுதந்தரம் ஆனது உலகில்
வன்பெலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய்
வாழ் வெலாம் பெற்று மிகவும்
மன்னுயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன்
மனம் நினைப்பின் படிக்கே
அன்ப நீ பெருக உலவாது நீடுழி விளை
யாடுக அருட்ஜோதியாம்
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணை நம் ஆணை என்றே
இன்புறத் திருவாக்களித்து என் உள்ளே கலந்து
இசைவுடன் இருந்த குருவே
எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மனிறில்
இலங்கு நடராஜ பதியே !

என்ற பாடல் மூலமாக விளக்கம் அளிக்கிறார் வள்ளலார் .
உலகம் இதுவரையில் உண்மை அறியாமல் இருந்தது ,ஆதலால் எனக்கு துன்பம் இருந்தது ,அந்த துன்பங்கள் யாவும் உன்னால் தீர்ந்து விட்டது,நீ ஒருவன் தான் என்னுடைய செல்வப் பிள்ளை,நல்லப் பிள்ளை ,தாவரங்களும் துன்பம் இல்லாமல் வாழ வேண்டும் என்று வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய உனக்கு ,உன் மன நினைப்பின் படிக்கே அன்பையும் அருளையும் பெற்று ,நீடுழி காலம் விளையாடி மகிழ வேண்டும். ஆதலால் என்னுடைய ஆட்சியை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று,அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வள்ளலார் வசம் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறார் ,உனை என்றும் கைவிடாமல் உன்னுடனே இருப்பேன் இது நம் இருவருடைய ஆணையாகும் என்று மகிழ்ச்சி யுடன் வாக்களித்து உள்ளார் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் .

இதைவிட பெரிய பேறு உலகத்தில் யாருக்காவது கிடைத்தது உண்டா ?மரணத்தை வென்றால் மட்டும் போதாது அதற்கு உண்டான தகுதியும் வேண்டும் .''அருளாட்சி பெரும்'' அந்த தகுதியை வள்ளல் பெறுமான் பெற்று உள்ளார் .

நமது உடம்பு தாயின் கருப்பையில் அணுக்களின் கூட்டு சேர்க்கையால் பூத காரிய அமுதத்தினால் {அணுவை ஒட்டும் பசையால்} பின்னப் பட்டதாகும் ,அந்த உடம்பை பிரிக்க வேண்டும்,வேறு எதைக் கொண்டும் பிரிக்க முடியாது .அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,நம் ஆன்மாவில் உள்ள அமுதத்தை எப்போது வெளிப் படுத்து கிறாரோ அப்போதுதான்,அந்த அருள் அமுதத்தால் ---பூத காரிய அமுதத்தால் பின்னப்பட்ட அணுக்களை பிரிக்க முடியும்,அப்போது ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும் .இதுவே மரணத்தை வெல்லும் வழியாகும் ,இன்னும் விரிக்கில் பெருகும் என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன் .

மரணத்தை வெல்ல முடியும் இதில் எந்தவித சந்தேகமும் தேவை இல்லை .மனிதர்களாக பிறந்தவர்கள் மரணத்தை வென்று இறைவனை அடைவது தான் மனிதர்களின் இறுதி நிலையாகும் .அதைத்தான் வள்ளலார் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பார்! ,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பார்! ,பேரின்ப பெருவாழ்வு என்பார் ! பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பார் ! 
       
மனிதனாக வாழ்ந்து பின் மரணத்தை வெல்வோம் !

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு