திங்கள், 5 மார்ச், 2018

அருட்பெருஞ் ஜோதி!

அருட்பெருஞ்ஜோதி !
                 அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
                 அருட்பெருஞ்ஜோதி !
                       ஆன்மா
                         ******
           ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்.

    இந்தப் பதிவை தயவுசெய்து ஐந்து நிமிடம் பொறுமையுடன் படித்து நமது ஆன்மாவின் லட்சியத்தை புரிந்து தெரிந்துகொள்ளவேண்டுமாய் ,
யான் சார்ந்துள்ள சுத்தசன்மார்க்க சங்கத்து சார்பாய் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

          அண்டத்தையும் பிண்டத்தையும் படைத்து அதில் வாழ்வதற்கு உயிர்களையும் அந்த உயிர்கள் வாழ்விற்கு தேவையான பொருள்களையும் படைத்து அனைத்தையும் தனது இயற்கை விளக்கமாகிய அருள் சக்தியால் ,
ஆக்கல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல்  என்னும் ஐம்பெருந் தொழில்களால் தடையின்றி இடையறாது அசைந்து ,அசைத்து
அருள்பாளிக்கின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஓரறிவு முதல் ஆறறிவு வரை உயிர்களைப் படைத்தார்கள் ,
அவைகளுக்கு ஆசை, கோபம், லோபம்,மோகம்,மதம்,மார்ச்சரியம் என்னும் செயற்கை குணங்களையும் கொடுத்து ,
  உலகஇயல், அருளியல் என்ற இருவாழ்விற்கும் தேவையான வாழ்வியல் நீதியாக அருள்நியதி என்ற ஒருபொது நீதியையும் வகுத்து ,
அந்த நீதியின்படி வாழ்பவர்களுக்கு புண்ணியத்தையும்,
அந்த நீதியை தவிர்த்து வாழ்பவர்களுக்கு பாவத்தையும் சேர்க்கச்செய்து ,
நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளால் அவர்களை மீண்டும் மீண்டும் பிறக்கச்செய்து மறைத்தல் அருளல் என்னும் இருக் கருணைத் தொழில்களால் அவைகளுக்கு அறிவில் மறைப்பைக் கொடுத்து,
    விசாரத்தைக் கொடுத்து பிறகு அறிவின் பக்குவத்தில் அனுபவத்தையும், அனுபவத்தின் முடிவில் பக்குவத்தையும் ,
அந்தப் பக்குவத்திற்கு உரிய பதத்தையும், பதத்திற்குரிய நிலைகளையும் கொடுத்து,
அந்த பக்குவ முடிவில் தன்மயமாக்கிக் கொள்வதே நமது கடவுளின் அருட்பெருஞ்செயலாக இருக்கின்றது.
      ஆகலில் ஆன்மாக்களாகிய நமக்கு பிறவி கொடுக்கப்பட்டதன் காரணத்தை உணர்ந்தால்தான் நாம் நமது லட்சியத்தை தடையின்றி திருவருள் துணையுடன் விரைந்து எய்திட முடியும்.

     அதற்கு, உயர்வுடைய ஆறறிவு தேகத்தைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு மனிதர்களும் சத்தியம் நமக்குள் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டிய மிகமுக்கியமான கேள்விகளும் பதிலுமாக ,
இக்கடையவனின் எண்ணத்தில் திருவருள் அறிவுறுத்திய வண்ணம் ஆன்மாக்களின் வாழ்வு உய்யும்பொருட்டு அனைவருக்கும் ஒருவாறு தெரிவிக்க
முயலுகின்றேன்;

   1:நான் யார் ?
      அனாதியாகிய பரந்து விரிந்த பரம ஆகாசத்தில் , அனாதியாகிய இயற்கை உண்மைக் கடவுளாகிய பரம ஆகாச சொரூபராகிய கடவுள் சமுகத்தில் சந்தானமயமாய் (வழிவழியாக) நிரம்பி இருந்த, இருக்கின்ற அணுக்கூட்டத்தில் நெடுங்காலம் அறிவு ஒரு சிறிதும் இல்லாமல் ,
 பாசாந்தகாரம் எனும் பேரிருளால் மூடப்பட்டு இருந்த ஓர் சிற்றனு வடிவினன்தான் நான் .
ஆம் "நான் ஒரு ஆன்மா";

2: எனக்கு பிறவி கொடுத்தது யார் ?
       அண்டகோடிகள் அணைத்தையும் படைத்து அவற்றை தனது அருட்சக்தியால் தடையறாது இயக்கிகொண்டிருக்கும் அந்த பரமஆகாச சொரூபராகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே
   எனக்கு முதன் முதலில் ஓரறிவு என்னும் தொடுஉணர்வைக்  கொடுத்து தாவரமாகப் பலப்பிறவிகள் எடுத்து பிறக்கவைத்தும் ,
அதன்பிறகு ஈறறிவு மூவறிவு என்று பலப்பிறவிகளில் பலஆயிரம் பிறவிகள் பல ஆயிரம் ஆண்டுகள்
எடுத்து எடுத்து பிறந்து பிறந்து இறந்து இறந்து முடிவில் உயர்வுஉடைத்தாகிய ஆறறிவுடைய இந்த மனிதப் பிறப்பை பெருந்தயவுடன் கொடுத்தருளியுள்ளார்கள்;
ஆம் எனக்கு இந்த மனிதப்பிறவியை பெருந்தயவுடன் கொடுத்தருளியது ,
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரேயாகும்.

3: இந்தப் பிறவி கொடுக்கப்பட்டதன் காரணம் என்ன ?
      இந்த மனிதப் பிறவி மற்றைய பிறவிகள்போன்று எளிதில் கிடைக்கக்கூடிய பிறவி அல்ல,
    இந்தப் பிறவியினால்தான் நான் யார் என்ற கேள்வியை எனக்குள் கேட்டு விசாரிக்கக்கூடிய ஆன்ம அறிவு விளக்கம் எனக்கு கடவுளால் வழங்கப்பட்டு விளங்குகின்றது.
ஆகலி்ல் இந்த அறிவைக்கொண்டுதான் நான் யார் என்றும் ,எனது தலைவர் யார் என்றும், நான் பிறவி எடுத்ததன் காரணம் என்னவென்றும், அந்த லட்சியத்தை எப்படி அடைவதென்றும் விசாரித்து அறியக்கூடிய ஆன்ம அறிவு எனக்குள்
நிறைந்து விளங்குகின்றது .
 
    ஆகலில் இந்த மனிதப் பிறவியைக்கொண்டுதான் எனது பிறவி பயனத்தின் லட்சியமாகிய ஆன்மலாபத்தை நான் அடையவேண்டும் என்பதற்காகவே
  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருங்கருணையால் எனக்கு இந்த மானிடப்பிறவி கொடுக்கப்பட்டுள்ளது;

3: எனக்குள் கடவுள் எப்படி விளங்குகின்றார் ? எனது லட்சியம்தான் என்ன ?
         எனக்குள் கடவுள்,
 "மெய் அறிவு ஆனந்த சொரூபராக" விளங்குகின்றார்.
ஆதாவது "சச்சிதானந்த சொரூபராக"
விளங்குகின்றார்.
அதாவது சத்து சித்து ஆனந்த மயமாய் விளங்குகின்றார்,
சத்து என்பது இயற்கை உண்மை,
சித்து என்பது இயற்கை விளக்கம்,
ஆனந்தம் என்பது இயற்கை இன்பம்,
ஆகும்.

சத்து: என்றும் ஓர்நிலையாய்,
என்றும் ஓர் இயலாய் ,
என்றும் உள்ளதுவாய் இருக்கின்றுது.

சித்து :என்றும் உள்ளதுவாய்,
எங்கும் நிறைந்து விளங்குவதாய்,
என்றும் விளங்கிடுவதாய் உள்ளது.

இன்பம்: எல்லா நிலைகளிலும் எல்லா உயிர்களிலும்  எல்லா இன்பமுமாய் விளங்குவதாய் உள்ளது;

   அதனால் இந்த "மெய்யறிவுஆனந்த" சொரூபராய் இருக்கின்ற கடவுள் ,
தனது உண்மையை ஆன்மாக்கள் எல்லாம் அறிந்து அறிவித்து அடையச்செய்வதற்காகவும்,
அந்த "மெய்யறிவு ஆனந்த" மயமாக அனைத்து ஆன்மாக்களையும் தன்மயமாக்கிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில்தான் எனக்கும் இந்த மானுடப் பிறவி கொடுக்கப்பட்டு எனக்குள் ஆண்டவர் " சச்சிதானந்த சொரூபராய்" விளங்குகின்றார்கள்.

    ஆகலில் எனக்கு பிறவிகொடுக்கப்பட்டதன் காரணம் நானும் "சச்சிதானந்த சொரூபமாய்" கடவுள் மயமாய் விளங்கவேண்டும் என்பதே ஆகும்;

4: நான் எனது கடவுள் மயமாகுவதற்கு என்ன செய்யவேண்டும் ?
         முதலில் இவ்வுலகம் கடவுளது மாயையால் படைக்கப் பட்டது என்பதும், அந்த மாயை என்பது கடவுளுக்கு எதிரானது அல்ல என்ற அறிவையும்,
ஆன்மாக்களை பக்குவப் படுத்துவதற்காக கடவுளது அருட்சக்தியின் ஒரு தன்மைதான் உள்ளதுதான் இந்த மாயாசக்தி என்பதையும்,
 இவ்வுலகப் பொருள்கள் எல்லாம் நிலையற்றது என்றும்,
என்றோ ஓர்நாள் இவைஎல்லாம் அழியக்கூடியது என்பதும்,
அப்படி அழியக்கூடிய பொருளால் கிடைக்கும் இன்பம் நிலையற்றது என்பதும்  அறிவால் அறிந்து ,

அழிவில்லாத என்றும் நிலையான, எல்லாவுமாய் விளங்குகின்ற,
எல்லாம் தானாய் விளங்கி விளக்கம் செய்விக்கின்ற கடவுளால் பெறப்பட்டு அனுபவிக்கின்ற இன்பமே நிலையான
இன்பம் என்பதை அறிந்து ,
அவற்றைப் பெறுவதற்குரிய பக்குவத்தை நமக்கு கொடுத்துள்ள அறிவின் சுதந்திரத்தால் நிலையற்ற பொருள்களின் மீது விருப்பு வெறுப்பற்று,
இவ்வுலக வாழ்வில் வாழ்ந்தாலும்
புளியம்பழத்தின் ஓடுபோன்றும்,
 சேற்றிலே வாழும் பிள்ளைப்பூச்சியைப் போன்றும்,
தண்ணீரிலே வாழும் தாமரை இலைப்போன்றும் ஒட்டி ஒட்டாமல்
வாழ்ந்து என்றும் நிலையான கடவுளது அருளைப் பெறுவதற்கு அக்கடவுள்மீது பற்றுகளை வைத்து வாழ்ந்தும்,
நமது மேலான அறிவின் பக்குவத்தில்
அருளறிவையும், கடவுளறிவையும் பெற்று அக்கடவுள் மயமாகிடவேண்டும் ;

5: நான் கடவுள் மயமாகிட வேண்டும் என்றால் , மாயையாலும் வினையாலும் அறிவு விளக்கமில்லாமல் வருந்துகின்ற நான் யாரைத் துணைக்கொண்டு,
எந்த நெறியைப் பின்பற்றி வாழ்ந்து பிறவிக்கடலை நீந்துதல் வேண்டும் ?
       இதுவரை இந்த உலகம்தோன்றிய காலத்தில் இருந்து கடவுளால் படைக்கப்பட்ட ஆன்மாக்களில் பல ஆன்மாக்கள் தமது அறிவால் கடவுளை அறிந்து ,அவரது அருளை பூரணமாக பெறாவிட்டாலும் ஒரு சிறு அருளொளி கிடைக்கப்பெற்று அந்த அருள்ஒளியிலேயே திளைத்து ,
அருட்பெருஞ்ஜோதியில் கலந்து நிறைந்து மறைந்து போனார்கள்;

அவர்களால் இவ்வுலகில் என்றும் நிலையாய் என்றும் ஓர் இயலாய் என்றும் உள்ளதுவாய் எங்கும் பூரணமாய் நிறைந்து விளங்கிடும் கடவுளது பூரணமான அருளை பெற இயலாததால் அவர்கள் தனது தேகத்துடனேயே இவ்வுலகில் கடவுளைப்போன்று கடவுள்நிலையில்
 என்றும் அழியாமல் நிலைத்து வாழ இயலாமல் தனது பிறப்பு இறப்பு என்னும் பவக்கடலை நீந்தி முக்தி என்னும் நிலையை மட்டும் அடைந்து அருட்பெருஞ்ஜோதியில் கலந்து மறைந்தார்கள்.

     ஆனால் முதன் முதலில் இவ்வுலகம் தோன்றிய காலத்தில் இருந்து கடவுளால் படைக்கப்பட்ட ஆன்மாக்களில் முதல் ஆன்மாவாக ,
நமது வள்ளல் பெருமானது ஆன்மாதான் "கடவுளது பூரணமான அருளைப்" பெற்றுக்கொண்டு ,
அக்கடவுளை நேரில் கண்டு களித்து,
அக்கடவுளை தனக்குள் கலந்து நிறைத்துக் கொண்டு " ஒரு ஆன்மா அடையவேண்டிய முடிவான லட்சியத்தை, ஆன்மலாபத்தை "
எக்காலத்தும்,
எவ்விடத்தும்,
எவ்விதத்தும்,
எவ்வளவும் தடைபடாமல்,
 மரணத்தை தவிர்த்து இவ்வுலகதிலேயே என்றும் இளமையுடன் பூரணமான கடவுள்தன்மையுடன் ,சுத்தம் பிரணவம், ஞானம் என்னும் முத்தேக சித்தியையும் பெற்றுக்கொண்டு ,
இறந்தாரை எழுப்பும் கடவுள் வல்லபத்தையும் பெற்றுக்கொண்டு "அருட்ஜோதி இயற்கை" என்னும் அருட்தேகத்துடன் , திருவருட் சுதந்திரத்துடன் வாழுகின்ற முதல் ஆன்மா நமது அருட்பிரகாச வள்ளல் பெருமான் அவர்களது ஆன்மாவாகும்.

ஆகலில் அவரைத்தான் அவருடைய அருள் அனுபவத்தைதான் நாம் துணையாகக் கொள்ளல் வேண்டும்;

மற்றும் பெருமான் அவர்கள் தன்னைப்போன்றே மற்ற ஆன்மாக்களும் அருள் நிலைப் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என்ற பெருங்கருணையில் ,
தான் பெருவாழ்வு அடைவதற்கு காரணமாக இருந்த,
 சுத்தசன்மார்க்க  பெருநிலையை அடைவதற்கு என்று சுத்தசன்மார்க்க நெறியை இவ்வுலகவருக்கு வழங்குவித்து,
அந்த நெறியை நடத்துகின்ற பக்குவ ஆன்மாக்கள் வேறுயாரும் இல்லாததால் தானே அதை முன்னிருந்து இவ்வுலகமெல்லாம் சுத்தசன்மார்க்க அருளாட்சி நடத்தி வருகின்றார்கள்.
     
     ஆகலில்  நாம் நமது ஆன்மா முடிவான லட்சியத்தை அடையவேண்டும் என்றால் ,
ஏற்கனவே அந்த லட்சியத்தை அடைந்த ஒருவரைப் பின்பற்றி அவர் நெறிப்பட நடந்து வாழ்ந்தால்தான் முடியும் என்பதால் ,
வள்ளல் பெருமானை நமக்கு உற்ற துணையாகவும், அவர்களது சுத்தசன்மார்க்க நெறியே நமது நெறியாகவும் கொண்டு பின்பற்றி வாழ்ந்திடல் வேண்டும் ,
வாழ்வோம்,
வாழ்வடைவோம்;
......நன்றி.
.......வள்ளல் மலரடிப் போற்றி போற்றி,
..........பெருமான் துணையில்,
...............வள்ளல் அடிமை,
.......................வடலூர் இரமேஷ்;

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு