வியாழன், 1 பிப்ரவரி, 2018

தமிழ் மொழி !


தமிழ் இறைவனால் எழுதப்பட்டது !

தமிழுக்கு வள்ளலார் சொல்லும் விளக்கம்.

த...என்பது இயற்கை உண்மை என்றும்.
மி...என்பது இயற்கை விளக்கம் என்றும்.
ழ்...என்பது இயற்கை இன்பம் என்றும்
விளக்கம் தருகிறார்..

மேலும் தமிழ் என்ற தமிழ் மொழியில்தான்.உயிரைப்பற்றியும்.உடம்பைப்பற்றியும்.கடவுளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்...எனவேதான்.உயிர்எழுத்து.மெய்எழுத்து.உயிர்மெய் எழுத்து.ஆயுத எழுத்து என்று பெயர் வைக்கப்பட்டது.

நம் உடம்பு.உயிர்.ஆன்மா என்ற மூன்றையும்.வெளியே கண்களுக்குத் தெரியாமல்.தாயின் கருவறையில். தானாக இயங்கும் ஒரு மனித உருவத்தை இருட்டு அறையில் உருவாக்கப் படுகிறது...

அந்த மனித தேகத்தை.படைத்தல்.காத்தல்.அழித்தல் போன்ற செயல்கள் எதனால் ? யாரால் ? எப்படி ? நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளத்தான்.தமிழ் மொழியை இறைவனால் படைக்கப்பட்டது.

எனவேதான் தன்மை.முன்னிலை.படர்க்கை என்ற பெயர் சூட்டப்பட்டது. முதலில் நான் யார்? என்று தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள தன்மை என்றும்.கண்களுக்குத் தெரிந்த ஜீவன்களையும்.மற்ற பொருள்களையும் தெரிந்து கொள்ள முன்னிலை என்றும். ..கண்களுக்குத்தெரியாத பரந்த உலகத்தை தெரிந்து கொள்ள படர்க்கை என்றும் சொல்லப்பட்டதாகும்.

மூன்று பிரிவுகளின் உண்மையைத்  தெரிந்து கொள்வதற்காகவே இறைவனால் தமிழ் மொழி  படைக்கப்பட்டது.

சங்கரமடம் !

தமிழ்மொழியை இழிவு படுத்தும் சங்கரமடக் கும்பலுக்கு எதிராக  தமிழ்மொழியை நெஞ்சிலேந்திய வள்ளலாரை நினைவு கூறுவோம்!

 தமிழ் ஆரிய எதிர்ப்பு என்பது தமிழர்களின் வரலாற்றில் ஆதிகாலம் தொட்டே இருந்து வந்துள்ளது. திருவள்ளுவர் இதனை தொடங்கி வைத்தார். பிறகு ஆன்மீகத் தளத்தில் நின்று சித்தர்கள் போர் தொடுத்தனர். இருப்பினும் ஆரியம் தமிழோடு கலந்து தன்னை புதுப்பித்துக் கொண்டது. இதனை எதிர்த்து தமிழை கருவியாக்கி போராடிய மாபெரும் புரட்சியாளர் தான் இராமலிங்க அடிகளார்.

அவர் எப்போதும்  தமிழை இயற்கையுண்மைச் சிறப்பியல் மொழி என்றும், எல்லா மொழிகளுக்கும் தந்தை மொழி என்றும் திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி என்றும் போற்றிப் புகழ்ந்திடுவார்.

மேலும் தமிழுக்கு செந்தமிழ் என்றும் .அருள் மொழி என்றும் பெயர் வைத்துள்ளார். இறைவனை சிற்சபையில் நடிக்கின்றாய் செந்தமிழில் வளர்கின்றாய் என்று போற்றி புகழ்கின்றார்.

தமிழை எவரும் வளர்க்க வேண்டியது இல்லை..தமிழைக் கற்று தமிழில் பேசினாலே போதும் தமிழ் தானே வளரும்.

மொழிகள் தோன்றுவதற்கு முன்னரே ! உலக மொழிகளுக்கும் எல்லாவற்றிற்கும்  மூத்த முதன் மொழி தமிழ் தான் என்று அறிவியல் ஆராய்ச்சி மூலம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மனிதன் மரணத்தை வென்று வாழ்வதற்கு வழிகாட்டும் ஒரே மொழி தமிழ்தான் என்பதை வள்ளலார் தெளிவான விளக்கம் திருஅருட்பா நூலில் தந்துள்ளார்.

வள்ளலார் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள் இராமகிருட்டிண பரமகம்சர், தயானந்த சரசுவதி, இராசராம் மோகன் ராய், விவேகானந்தர் ஆகியோர் வடமொழியை ஏற்று வைதீக மதத்தை போற்றி வந்தனர். இவரோ தமிழை ஏற்காத வைதீக மதத்தையும் வடமொழியையும் புறக்கணிக்கத் துணிந்தார். ஆரிய மொழிகளில் மனம் செல்லாத படியால் சாகாக் கல்வியை தரும் ஆற்றல் மொழியான தென்மொழியில் பற்று கொண்டதாக பின்வருமாறு கூறுகிறார்:

"இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெரு மறைப்பையும் பொழுது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில்  எனக்கு ஆசை செல்ல ஒட்டாது பயிலுதற்கும் பாடுதற்கும்.இசைப்பதற்கும்.பேசுதற்கும்   மிகவும் இலேசுடையதாய்ச் சாகாக் கல்வியை இலேசிலே அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யொன்றனிடத்தே மனம் பற்றச் செய்து, அத் தென்மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்!"

மேலும், வள்ளலார் 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்' எனும் பெயரில் உலகப் பொதுவான சங்கத்தை தோற்றுவித்து, கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ் ஜோதி ஒளிவடிவமானவர்! எல்லா உயிர்களிடத்திலும் அன்பும் இரக்கமும் கொள்வீராக! என்று தமிழ் மொழியில் தான் மக்களிடம் முழங்கினார்.

 "இருட்சாதித் தத்துவச்
 சாத்திரக் குப்பை
 இருவாய்ப் புன்செயில்
 எருவாக்கிப்போட்டு
 மருட்சாதி சமயங்கள்
 மதங்களாச் சிரம
 வழக்கெல்லாம் குழிக்கொட்டி
 மண்மூடி போட்டு" மூட வேண்டும் என்கின்றார்.

வள்ளலாருக்கு உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரியும்.அவற்றில் உள்ள குற்றம் குறைகள் அனைத்தும் தெரியும்.

 சாதி,சமயம்.மதம் போன்றவற்றை தோற்றுவித்த மொழிகள் யாவும் சாத்திரக் குப்பைகள் என்கிறார். வேற்று மொழிகள் தான். இருட்சாதி தத்துவத்தையும் ஆச்சிரம வழக்கத்தையும் சமய மதத்தையும் தோற்றுவித்தன.மொழிகள் வாயிலாக.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஏற்றுக் கொண்டு வாழ்ந்த  மனித இனத்தை மொழி வாரியாக பிரித்தன. ஆகவே அவற்றைக் குழியில் கொட்டி மண்போட்டு மூடுங்கள் என்றார் வள்ளலார். சாதி.சமயம்.மதம் என்று பித்துப் பிடித்து அலைவோர்க்கு தமிழில் தான் அறிவுரை புகட்டினார்.

வள்ளலார்  ஆடம்பர காவி உடைக்கு எதிராக வெள்ளுடை தரித்தார். ஒருமுறை அவர் காலத்தில் வாழ்ந்திருந்த சங்கராச்சாரியார் வடமொழி நூலொன்றில் உள்ள வார்த்தைக்கு விளக்கம் தெரியாமல் ஐயம் தோன்ற அதற்கு சரியான விளக்கம் யாரிடம் கேட்பது என்று புரியாமல் தவித்துக் கொண்டு இருந்தார்.

 வேறு ஒரு நண்பர் மூலமாக வள்ளலாரிடம்,அதனை விளக்குமாறு கேட்டுள்ளார்.அதற்கு சரியான விளக்கத்தை தந்தவுடன்.. அப்போது, 'சமசுகிருதமே உலக மொழிகளுக்கு எல்லாம் (மாத்ரு பாஷை)'  தாய்மொழி என்று சங்கராச்சாரியர் கூறிடவே, உடனே வள்ளலார்,ஆமாம் ஆமாம். "சமசுகிருதம் மாத்ரு பாஷை என்பது உண்மை தான், ஆனால் தாய் இருந்தால் தந்தை இருக்கனும் இல்லையா? என்று வினா எழுப்பி அதற்கு  'எமது தமிழே பித்ரு பாஷை'  (உலக மொழிகளுக்கு எல்லாம் தந்தை மொழி) என்று பதிலடி கொடுத்தவர் வள்ளலார்.சங்கராச்சாரியார் வாய்மூடி மவுனமானார்.

.சங்கர மடத்து குரு பீடங்கள் பெண்களை 'உவர்நிலங்கள்' என்று வர்ணித்த போது ஆணும், பெண்ணும் சமமாக இறைவனால் படைக்கப்பட்டவர்கள். ஆதலால் பெண்களை பாவப் பிறவி இழிபிறவி என்று ஒதுக்கி வைக்காமல்.தமிழில் கல்வி புகட்டுங்கள்! என்று புத்தி புகட்டிவிட்டு வந்தார்

தமிழ் மொழியிலிருந்து பிரிந்து வடமொழியோடு கலந்து போன ஏனைய திராவிட மொழிகளையும் அவர் விட்டு வைக்க வில்லை. அந்த மொழிகளில் இல்லாத தமிழ்மொழிக்குரிய இலக்கண சிறப்புகளை பின்வருமாறு கூறுகிறார்.

"ஆரியம், மகாராட்டிரம், ஆந்திரம் என்று பற்பல பாஷைகளைப் போலாகாமல்- பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாகவும், ஒலியிலே சாயும் கூட்டென்னும் சக்தி அதி சுலபமாயும் எழுதவும் கவி செய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்காரமின்றி எப்பாஷையின் சந்தங்களையும் தன் பாஷையுள்ளடக்கி ஆளுகையால் ஆண் தன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற ழ் ற் ன் என்னும் முடி நடு அடி சிறப்பியலக் கரங்களில்  முடிநிலை இன பாநுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கையுண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பிய யொலியாம்."

 கடினமான இந்த சாரத்தைப் பிழிந்து "தமிழ்ப் பாஷையே அதிக சுலபமாகச் சுத்த சிவானுபூதியைக் கொடுக்குமென்பதாம்" என்னும் அருள்வாசகமாக வடித்துத் தருகிறார் வள்ளலார்.

அடிகளார் காலத்தில் கால்டுவெல் அவர்களின் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் வெளிவரவில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இருந்தும், 'தமிழ் தனித்தியங்கும் மொழி' என்பதை ஆராய்ச்சிச் சான்றுகளுடன் மெய்ப்பித்த தமிழர் இவரே.

 வள்ளலாரை மானசீகமாக நேசித்த தமிழறிஞர் ம.பொ.சிவஞானம் அவர்கள் "தாய்மொழிப் பற்றும் துறக்க முடியாதது, துறக்கவும் கூடாது என்பதனை உலகினர்க்கு உணர்த்தியவர் வள்ளலார் ஒருவரே" என்பார். தாய்மொழிப் பற்றை துறந்து வாழும் தமிழர்கள் இனியாவது வள்ளலாரின் நூல்களைப் படித்து தமிழ்மொழி உணர்ச்சிப் பெறுதல் வேண்டும். அது ஒன்றே தமிழினத்தை உய்விக்கும் வழியாகும்.என்றார்

எனவே தொழில் ரீதியாக பொருள் சம்பாதிக்க பல மொழிகளை கற்றாலும்.  இறைவனிடம் அருள் பெறுவதற்கு தமிழ்மொழி ஒன்றே உலகின் சிறந்த மொழி என்பதனை அறிந்து.தெரிந்து.புரிந்து தமிழ் மொழி கறபோம் மற்றவர்களுக்கும் கறபிப்போம்..விரித்தால் பெருகும் என்பதால் நிறைவு செய்கிறேன்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

2 கருத்துகள்:

3 பிப்ரவரி, 2018 அன்று AM 3:29 க்கு, Blogger Unknown கூறியது…

ஐயா சிறந்த கட்டுரை. என்றாலும் பிரிக்கவே காரணம் தேடுகின்றீர். ஒன்று சேர காரணம் தேடவும். ஒற்றுமையின்மையால் நாம் அழிந்தது போதாதா?

 
25 மார்ச், 2022 அன்று AM 11:38 க்கு, Blogger தாசெ கூறியது…

பதிவுக்கு நன்றி..
அன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ ளறறள

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு