வியாழன், 19 அக்டோபர், 2017

வள்ளலார் அடைந்த நிலை என்ன?

*வள்ளலார் அடைந்த நிலை என்ன?அவருடைய தூல தேகம் என்ன ஆயிற்று?*
🍎🍎🍎🍎🍎🍎🍎
ஜீவகாருண்யம்,பக்தி ,ஒழுக்கம், தவம் ஆகிய நான்கினாலும், வள்ளலாருடைய தூல தேகம் முதலில் சுத்த தேக நிலை பெற்றது. சுத்த தேகமாக அவர் தேகம் மாறியதால் அவர் தேகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்.
பொன் வண்ணம்,பன்னிரண்டு வயது பருவம், நரை,திரை ,பிணி,மூப்பு, மலம்,ஜலம்,வியர்வை,ஆகாரம்,சாயை முதலியன இல்லாமை.ரோமம் வளர்ச்சி தாழ்ச்சி இல்லாமை. இந்த நிலையை வள்ளலார் அடைந்ததனால் சென்னையிலிருந்து திரு மாசிலாமணி முதலியார் என்பவர் வள்ளலாருக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒன்பது முறை அவரைப் போட்டோ பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் வள்ளலாரின் தேகம் போட்டோவில் விழவில்லை.அதனால்தான் வள்ளலாரின் போட்டோ இல்லை. அவருடைய உண்மையான உருவம் நமக்குக் கிடைக்கவில்லை.இப்போது உள்ள படங்கள் எல்லாம் கற்பனையாக எழுதப்பட்ட உருவமேயன்றி வள்ளலாரின் உண்மை உருவம் அல்ல. வள்ளலார் சுத்த தேகம் அடைந்தார் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.

அவருடைய தொடர்ந்த முயற்சியால் அடுத்து அவர் பிரணவ தேக நிலை அடைந்தார்.சுத்த தேகத்தில் அவர் அடைந்த நிலையோடு அவருடைய தேகம் ஐந்து முதல் எட்டு வயது பருவமாக மாறியது. அவரைக் கண்களால் பார்க்க முடிந்ததே தவிரக் கைகளால் பிடிக்கமுடியததாக ஆயிற்று. சுடர் போலத் தோன்றுமடா தூல தேகம் என்ற சித்தர் வாக்கும் இதை நிரூபிக்கின்றது.

இறுதியாக அவர் தேகம் ஞான தேகமாக மாறியது. ஞான தேகம் என்றால் அது தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் என்கிறார் வள்ளலார். சில நாட்கள் வள்ளலார் தோன்றாமலும் இருந்திருக்கின்றார். 1874 ம் ஆண்டில் வள்ளலார் திருக் காப்பிட்டுக்கொண்டு மறைந்தது அனைவருக்கும் தெரியும்.ஆனால் 1870ம் ஆண்டே வள்ளலார் காணாமல் போயிருக்கிறார். வள்ளலாருடைய தலை மாணாக்கராகிய தொழுவூர் வேலாயுத முதலியார். தருமச்சாலையை நிர்வகித்து வந்திருந்த ஆனந்த நாத சண்முகநாத சரணாலய சுவாமிகளுக்கு 8-6-1870 அன்று எழுதிய கடிதத்தில் நம் பெருமான் இப்போது எவ்விடத்து எழுந்தருளி இருக்கின்றது? சாலை என்ன ஸ்திதியில் இருக்கின்றது?அவ்விடத்திய காரியங்களை யார் பராமரிக்கின்றார்கள் இது விபரங்களை உடனே கட்டளையிடும்படிக் கோருகிறேன். அந்தப் பக்கங்களிலிருந்து இங்கு வருபவர்கள் தங்கள் தங்களுக்குத் தோன்றியபடியே சில பல சொல்லுந்தோறும் மனம் துடிக்கின்றது.ஆதலால் உண்மை விடயங்களை உணர அருள் செய்தல் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இந்தக் கடிதத்தை ஊன்றிப் படித்தால் வள்ளலார் தோன்றாமலேயே இருக்கும் நிலை பெற்றார் என்றும் உண்மை அறியாத ,மக்கள் வேலாயுத முதலியாரிடம் சில பல சொல்லியிருக்கின்றார்கள்.என்றும், உண்மையை உணரவேண்டி வேலாயுத முதலியாரும் தருமச்சாலையில் இருந்த ஆனந்த நாத சண்முக சரணாலய சுவாமிகளுக்குக் கடிதம் எழுதி இருக்கின்றார் என்றும் அறிய முடிகிறது. பிறர் கண்களுக்குத் தோன்றாமல் வள்ளலார் மறைந்திருந்தார் என்பது நிரூபணமாகின்றது
. இதற்குப் பதில் எழுதுவது போல் வள்ளலாரிடமிருந்து ஓர் அறிக்கை வெளியாகின்றது. வள்ளலார் அறிக்கை வெளியிட்ட நாள் 26-10-1870

அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடன் அறிவிப்பது.ஒருவனைப்பற்றி அநேகம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாக நம்பி இருங்கள் .என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம்.நான் இன்னும் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன்.அது பரியந்தம் பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில்தானே வெளிப்படுவேன்.அஞ்சவேண்டாம்.சாலையை இலகுவாய் நடத்துங்கள்.

சென்னையில் இருக்கும் பிரம்ம ஞான சங்கத்தாருக்கு வேலாயுத முதலியார் கொடுத்த வாக்கு மூலத்தில் கூட வள்ளலார் அடிக்கடி மறைந்து இருந்ததைக் குறிப்பிடுகின்றார். அவர் கூறியுள்ளது: 1855ம் ஆண்டில் சென்னையைவிட்டு சிதம்பரத்திற்குப் போனார். அங்கிருந்து வடலூர்,கருங்குழி என்ற இடங்களுக்குச் சென்று அங்கு நீண்ட காலம் இருந்தார். அங்கிருக்கும்போது இவர் அடிக்கடி தம் சீடர்கள் அறியாவண்ணம் மறைந்திருப்பது உண்டு. இவர் எங்கு சென்றார் என்பதை அறிவோர் எவரும் இலர். இப்படி வெகுநாள் மறைந்திருப்பார்.

ஞான தேகத்தின் தன்மை தோன்றியும் தோன்றாமலும் இருக்கும். தான் ஞான தேகம் பெற்றதை இவ்வாறு அடிக்கடி மறைந்து மறைந்து சோதித்துப் பார்த்திருக்கின்றார்.என்பதே உண்மை.
ஞான தேகம் பெற்ற வள்ளலாரால் யார் கண்ணுக்கும் புலப்படாமலும் இருக்க முடியும். அவர் நினைத்தால் மீண்டும் தோன்றவும் முடியும்.

வள்ளலார் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார் என்கிறார்களே ?

உண்மைதான். வள்ளலார் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டது உண்மையே. அவர் கலந்ததை அப்படிச் சொல்லக்கூடாது. இறைவன் வள்ளலாருடன் கலந்துவிட்டான் என்றுதான் கூறவேண்டும்.இதுவரை வந்த அருளாளர்கள் இறைவனைத் தேடி ஊர் ஊராக அலைந்தார்கள். ஆனால் அந்த இறைவனோ வள்ளலார் இருந்த குடிசையைத் தேடி வலிய வந்து அவருடன் கலந்தான் என்பதே உண்மை. ஆதாரம் அருட்பா.

வானிருக்கும் பிரமர்களும் நாரணர்களும் பிறரும் மாதவம் பன்னாட் புரிந்து
மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையிநூடே திருவடி சேர்த்து அருள்க
எனச் செப்பி வருந்திடவும்
நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு அருளமுதம்
நல்கியதன்றியும் என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளமெனும் சிறு
குடிசையுள்ளும் நுழைந்தனையே ( திரு அருட்பா)

வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்டதற்குச் சில ஆண்டுகட்கு முன்பே இறைவன் வள்ளலாருடன் கலந்துவிட்டான்.ஆண்டவன் வள்ளலாருடன் கலந்ததை அவர் திருக்காப்பிட்டுக்கொண்டபின் நடந்ததாகச் சொல்வது தவறு.

வள்ளலாரின் தேகம் அணு அணுவாக மாறி உலகமெங்கும் பரவிவிட்டது என்று கூறுகிறார்களே?

வள்ளலார் தான் எழுதிய திரு அருட்பாவில் பலப் பலப் பாடல்களில் தான் என்றும் அழியாத தேகம் பெற்றுவிட்டதாக அறிவிக்கின்றார். உதாரணமாக:

காற்றாலே ,புவியாலே, ககனமதனாலே,கனலாலே,புனலாலே, கதிராதியாலே
கூற்றாலே,பிணியாலே, கொலைக் கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும்
செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான் றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்கவேண்டும் என்றேன்
விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருட்பெருஞ்சோதி
இறைவனைச் சார்வீரே

தேகம் எப்போதும் சிதையாத வண்ணம் செய்வித்து எலாம் வல்ல சித்தியும் தந்தே போகம் எல்லாம் எந்தன் போகமதாக்கிப் போதாந்த நாட்டைப் புரக்க மேலேற்றி ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பளித்து என்னை ஆகம வீதியில் ஆடச் செய்தீரே அருட்பெருஞ்சோதி என் ஆண்டவர் நீரே
வள்ளலார் அழியாத தேகம் பெற்றுவிட்டதைப்\ பல பாடல்களில் கூறியுள்ளார்.
அவர் தேகம் அணு அணுவாகச் சிதையவில்லை என்பதையும் இவ்வாறு சொல்வோர் வள்ளலாரைப் பற்றிய உண்மையை அறியாதவர் என்றும் உணரவேண்டும்.
தேகம் அணு அணுவாகச் சிதைந்து போனால் அவருடைய அந்த உடம்பில் இருந்த அவரது உயிர் என்ன ஆயிற்று என்று கேட்டால் என்ன பதில் சொல்வார்கள். ?

வள்ளலார் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொண்டார் என்கிறார்களே?

இந்த உடம்பில் இருக்கிறோம் இனி எல்லா உடம்புகளிலும், புகுந்து கொள்வோம் என்று வள்ளலார் கூறியது உண்மைதான். கார்த்திகை மாதம் உள்ளே போனவர் மார்கழி மாதமே வெளியே வந்துவிட்டார்.தை மாதம்தான் மீண்டும் வள்ளலார் தனது அறைக்குள்ளே நுழைந்து திருக்காப்பிட்டுக் கொள்கிறார்..அவர் எல்லோருடைய உடம்பிலும் புகுந்து கொண்டார் என்றால் அப்போதிருந்த மக்கள் உடம்பில் மட்டும்தானா இப்போதுள்டோள நம் உடம்புகளிலும்கூட என்று சொல்லலாமா?
உண்மையிலேயே வள்ளலார் நமது உடம்பிலே புகுந்தால் நாம் இப்படியா இருப்போம் ?இதுவரை வந்த மக்கள் உடம்பில் எல்லாம் வள்ளலார் புகுந்து கொண்டார் என்றால் அவர்கள் எல்லோரும் இறந்துதானே போனார்கள் அந்த உடம்புகளில் எல்லாம் புகுந்து கொண்ட வள்ளலார் என்ன ஆனார்?வள்ளலார் யாருடைய உடம்பில் புகுந்து கொண்டாலும் வள்ளலார் புகுந்து கொண்ட உடம்பிற்கு மரணம் வராது. ஆனால் வள்ளலார் தவிர மற்ற எல்லோரும் மரணம் அடைந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். எனவே வள்ளலார் யாருடைய உடம்பிலும் புகுந்துகொள்ளவில்லை. எவ்வளவு சொன்னாலும் திருந்தாத மக்களைக் கண்டு அவர்கள் மீது மனம் இரங்கி அவர்கள் உடம்பில் புகுந்தாவது அவர்களைத் திருத்தலாம் என்று வள்ளலார் எண்ணினார். மக்கள் அந்த அளவிற்குப் புண்ணியம் பண்ணவில்லை. அதனால் வள்ளலார் யாருடைய உடம்பிலும் புகுந்து கொள்ளவில்லை. சரி அப்பட்டியானால் அவர் என்னதான் ஆனார்?

வள்ளலார் ஒளி உடம்பு பெற்றார் என்கிறார்களே அது உண்மைதானே?

ஒளி உடம்பு பெற்றார் என்பது உண்மைதான்.நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழில் ஒரு சொல்லுக்கு எத்தனையோ பொருள் உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் சிறு பிள்ளைகளாக இருந்தபோது கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடியதை நினைவில் கொண்டுவாருங்கள்.அப்போது என்ன செய்தோம்.ஒருவன் கண்ணை மூடிக்கொள்வான். மற்றவர்கள் ஒளிந்துகொள்வார்கள்.கண்ணைமூடிக்கொண்டு இருந்தவன் ஒளிந்து கொண்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். ஒளி என்ற சொல்லுக்கு ஒளிந்துகொள்ளுதல் என்று ஒரு பொருள் உள்ளது புரிகின்றதா? வள்ளலார் நமது கண்களுக்குத் தோன்றாமல் இருக்கும் ஒளி தேகம் பெற்றார் என்பதே உண்மை. ஒளி என்ற சொல்லுக்குப் பிரகாசம் என்று பொருள் கொண்டால் அவர் தேகம் தோன்றவேண்டும். ஒளியை மறைக்கமுடியாது.ஞான தேகம் என்பது தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் என்றால் தோன்றாமல் இருக்கும் நிலையே ஒளி தேகம் என்பது. தோன்றவில்லை என்பதால் வள்ளலார் இல்லை என்று சொல்லி விடலாமா. இறைவன்கூடத் தோன்றவில்லை அவன் இல்லை என்றா சொல்கிறோம். ஆகாயம் கூடத் தோன்றவில்லை.அதனால் ஆகாயமே இல்லை என்றா சொல்கிறோம். இதுவும் வள்ளலார் கருத்துதான்.

கனமுடையேம் கட்டுடையேம் என்று களித்து இறுமாந்து இருக்கின்றீர் என்ற பாடலில் வள்ளலார் ஒளிப்பிடமும் அறியீர் என்கிறார்.அடுத்த வரியில் சினமுடைய கூற்று வரும் செய்தி அறியீரோ என்று கேட்கிறார். கூற்று வரும்போது ஒளிப்பிடம் அறிந்தால் கூற்றைத் தடுக்கலாம் என்று அறிகிறோம். ஞான சரியை முதல் பாடலிலேயே கடைசி வரியில் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே என்றார் . அடுத்த பாடல் முதல் வரியிலேயே புகும் தருணம் இது கண்டீர் என்று ஆரம்பிக்கின்றார். இதுதான் ஒளிப்பிடம். ஆக ஒளி என்ற சொல்லுக்கு இங்கே பிரகாசம் என்று பொருள் கொள்வது தவறு.ஒளிந்து கொள்ளுதல் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.

வள்ளலார் என்னதான் ஆனார்?

தன் தேகத்தை மறைத்துக்கொண்டார். !!வள்ளலார் ஞான தேகம் பெற்றுவிட்டதையும் அவரால் பிறர் கண்களுக்குத் தோன்றாமல் மறைந்திருக்க முடியும் என்றும் முன்பே விளக்கப்பட்டுள்ளது. 30-1-1874 வெள்ளிக்கிழமையன்று மேட்டுக் குப்பத்தில் ஓர் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டார் என்பது எல்லோரும் அறிந்ததே. சில நாட்கள் கழித்து அரசாங்கத்தார் வந்து கதவைத் திறந்து பார்த்ததில் அங்கு ஒன்றும் இல்லாதிருந்தது என்றும் நாம் அரசாங்கத்தாரின் அறிக்கையிலிருந்து அறிகிறோம்

. தான் என்ன செய்துகொண்டேன் என்று அவரே விளக்குகின்றார்.
பஞ்ச பூதங்களாகிய மண் ,நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் ஆகியவற்றில் மண் ,நீர்,நெருப்பு ஆகிய மூன்றும் நம்முடைய கண்களால் காணமுடிகிறது. காற்றைக் கண்களால் காணமுடியாவிட்டாலும் உணரமுடிகிறது.வானத்திலே அண்ணார்ந்து பார்த்தால் தெரிகிற நீல வண்ணம் ஆகாயம் அல்ல.சூரிய ஒளியின் நீல வண்ணம்தான் நமக்கு ஆகாயம்போல் தோன்றுகிறது. ஆகாயம் என்பது ஒன்றுமல்லாத ஒரு வெளிதான்.மண்,நீர்,நெருப்பு,காற்று ஆகிய நான்கும் தன்னைக் காட்டுகின்றன. ஆனால் ஆகாயம் மட்டும் தன்னைக் காட்டவில்லை.ஆகாயம் எப்படித் தன்னைக் காட்டவில்லையோ அதுபோல் நானும் என்னைக் காட்டவில்லை. வான் செய்து கொண்டதை நான் செய்து கொண்டேன் என்கிறார் வள்ளலார்

மன் செய்துகொண்ட சன்மார்கத்தில் இங்கே வான் செய்துகொண்டதை
நான் செய்து கொண்டேன்
முன்செய்துகொன்டதும் இங்ஙனம் கண்டீர் மூவகையாம் உடலாதியை நுமது
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன்னடி காணப்
பொருந்திக் கொடுத்தேன்
என் செய்துகொண்டாலும் செய்து கொள்கிர்ப்பீர் எனைப் பள்ளி எழுப்பி
மெய் இன்பம் தந்தீரே

வான் எப்படித் தன்னைக் காட்டவில்லையோ அதுபோல் நானும் என்னைக் காட்டவில்லை என்று வள்ளலார் தான் பெற்ற நிலையைதெளிவாகஅறிவிக்கின்றார்.

வள்ளலாருடைய தேகம் மண்ணில் புதைக்கப்படவில்லை,நெருப்பினால் தகனம் செய்யப் படவில்லை.எனவே வள்ளலார் இன்றும் தன் தேகத்துடன் இருக்கின்றார். அவருடைய ஞானதேகம் நம் கண்களுக்குப் புலப்படவில்லை. இதுவே உண்மை

வள்ளலார் இருக்கிறார் என்று நாம் அறிவதனால் நமக்கு என்ன நன்மை?
நாம் செய்த,செய்கின்ற வினையின் காரணமாக நமக்குத் துன்பம் நேரிடுகிறது.நாம் செய்த வினைக்குரிய பலனை இறைவன்தான் நமக்கு ஊ ட்டுகிறான்.தீவினை நல்வினை எனும் வன் கயிற்றால் இந்த ஜீவர்களை ஆட்டுகின்ற தேவே என்கிறது மகாதேவ மாலை.
மக்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை நீக்குவதற்கே வள்ளலாரை இறைவன் இந்த உலகிற்கு அனுப்பி இருக்கிறான்.இந்தச் செய்தியை வள்ளலார் தான் எழுதியுள்ள அகவலில் தெரிவிக்கின்றார்
. \
உலகினில் உயிர்களுக்குரும் இடையூ றெலாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க
சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக
உத்தமனாகுக ஓங்குக என்றனை

இந்த அகவல் வரிகளை ஊன்றி நோக்கினால் நமக்கு வரக்கூடிய இடையூறுகள் எல்லா வற்றையும் வள்ளலார் விலக்கவேண்டும் இது ஆண்டவன் வள்ளலாருக்கு இட்ட கட்டளை. இந்த உத்தரவு வேறு எந்த அருளாளருக்கும் தரப்படவில்லை .வள்ளலார் ஒருவர்தான் இந்த உத்தரவைப் பெற்றவர். இதை உணர்ந்து அவரிடம் போனால், அவரை வணங்கினால், நம்முடைய இடையூறுகள் விலகிப் போகும். இதை விட வேறு என்ன வேண்டும்?

ஆண்டவன் இத்துடன் நிற்கவில்லை. வள்ளலாரை அழைத்து நீ இந்த மக்களுக்கெல்லாம் துணையாய் இருப்பாயாக என்றும் ஆணை இட்டுள்ளான்

எல்லாருக்கும் கடையாய் இருந்தேனுக் கருள் புரிந்து
எல்லோருக்கும் துணையாய் இருக்க வைத்தாய் எம்பெருமான்
எல்லோருக்கும் பொதுவில் நடம் இடுகின்றோய் இவ்வண்ணம்
எல்லோர்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே/

வள்ளலார் என்ன ஆனார் என்று தெளிவாகப் புரிந்ததா?
அதனால் நமக்கு என்ன நன்மை?
வள்ளலாரை யார் உண்மையாக வணங்குகிறார்களோ, யார் அவர் காட்டிய வழியாகிய ஜீவகாருண்யத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை நீக்குவது மட்டுமின்றி எல்லோருக்கும் அவர் துணையாகவும் இருக்கின்றார். இதைவிட வேறு என்ன பலன் நமக்கு வேண்டும்?
வள்ளலாரைச் சரணாகதி அடைந்ததால் நான் எவ்வளவோ நன்மைகளை அடைந்துள்ளேன்.அடைந்துகொண்டிருக்கின்றேன்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு