செவ்வாய், 11 ஜூலை, 2017

ஆன்ம தேகம் பெறுவது எப்படி ?


ஆன்ம தேகம் பெறுவது எப்படி ?


ஆன்மா என்றால் என்ன ?

ஆன்மா ஆவி வடிவமாகவும் ஒளி வடிவமாகவும் உள்ளது அதனால்.பூத உடம்பில் உள்ள புறக் கண்களுக்குத் தோன்றாது .

 நம் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங் கருணையால் ஆன்மாவை இந்த பூத உலகத்திற்கு அனுப்பு வைக்கிறார்.  இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வரும் போது ஆன்ம தேகம் என்னும் ஒளித் தேகத்தோடு தான் வந்தது .இந்த உலகத்தில் வந்த ஆன்மா ! ஆன்ம தேகத்தோடு வாழ முடியாது .

எனவே ஆன்மாவிற்க்கு வேறு ஒரு தேகமான பூத தேகம் கொடுக்க வேண்டும் என்பது இறைவன் ஆணை யாகும்.  தேகம் கொடுக்கும் பொறுப்பு மாயையிடம் இறைவனால்  வழங்கப் பட்டு உள்ளது .ஆன்ம தேகத்தின் மேல் பஞ்ச பூதங்களின் அணுக்களைக் கொண்டு .மனித தேகமான ஊன் உடம்பை மாயையால் கட்டிக் கொடுக்கப் படுகின்றது .உடம்பு இயங்க உயிர் அவசியம் ...உயிரை மையமாக வைத்துத் தான் உடம்பு இயங்க வேண்டும் ..உடம்பும் உயிரும் இயங்க அருள் ஒளி வேண்டும்.அந்த அருள் ஒளியை வழங்குகின்ற வேலை ஆன்மாவின் வேலை யாகும்..

ஆன்மா ..உயிர்...உடம்பு  முன்றும் சேர்ந்த வாழ்க்கைதான் மனித வாழ்க்கை !

இங்கே வாழ்வதற்கு இறைவனால் மூன்று சுதந்திரம் ஆன்மாவிற்கு  வழங்கப் பட்டு உள்ளன.

அவைதான்;---
தேக சுதந்தரம்.....போக சுதந்தரம் ....ஜீவ சுதந்தரம் என்பதாகும் !

இந்த மூன்று சுதந்தரத்தை வைத்துக் கொண்டு இந்த உலகத்தில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் அதற்கு இறைவன் தடை இல்லை .அதற்கு உண்டான நன்மை தீமைகள் அவரவர்களையே சார்ந்ததாகும். ..அந்த மூன்று சுதந்திரத்தையும் விரும்புவதுதான் ''மனம்'' என்னும் கருவியாகும் மனம் என்னும் கருவி மிகவும் வலிமை  உடையது ..அதனால் தான் மனம் போனபடி போக வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்லி உள்ளார்கள் .

மனதை அடக்கும் வழி தெரியாமல் .மாற்றும் வழி தெரியாமல் பல வழிகளில்  தியானம்.தவம்.யோகம்.வழிபாடு போன்ற தவறான வழிகளில் சென்று   அலைந்து கொண்டு உள்ளோம்.

இவற்றை எல்லாம் ஆன்மா மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டும்   ஆன்மாவில் பதிவு செய்து கொண்டும்  இருக்கும்.அந்தப் பதிவுகள்தான் மாயை என்னும் அஞ்ஞான  திரைகள் என்பதாகும்.இந்த பூலோக வாழ்க்கையில் இன்பம் துன்பம் அனுபவித்து பின்பு வெறுத்து இந்த உலகத்தை விட்டு செல்ல வேண்டும் என்று ஆன்மா நினைக்கும் போது வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றது ..

ஆன்மா உடம்பையும் உயிரையும் விட்டு வெளியே  செல்ல வேண்டுமானால்
பழைய தேகமான  ஆன்ம தேகம் பெற வேண்டும் .ஆன்ம தேகம் பெறுவதற்கு மாயா திரைகள் என்னும் அறியாமையான அஞ்ஞான  திரைகள் விலக வேண்டும் .திரைகள் விலக வேண்டுமானால் ''அருள்'' வேண்டும்.அருள் வேண்டுமானால் இறைவன் தொடர்பு வேண்டும் . உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அருள் கிடைக்க வழி கிடைக்கும்.அருள் சுதந்திரம் கிடைக்கும் .அருள் பெற்றால் தான் ஆன்ம சுதந்திரம் என்னும் திருவருள் சுதந்திரம்  கிடைக்கும் .

மேலும்  அருளைப் பெறுவதற்கு பல ஞானிகள்,பல அருளாளர்கள்  பலப்பல  வழிகளைக் காட்டி உள்ளார்கள் .எல்லாம் தவறான வழிகளாகவே இருக்கின்றன .

வள்ளலார் வந்து தான் நேர் வழியைக் காட்டி உள்ளார் ! அதற்கு சுத்த சன்மார்க்கம் என்றும் ..சாகாக் கல்வி என்றும்,,,.மரணம் இல்லாப் பெரு வாழ்வு என்றும் பெயர் வைத்து உள்ளார் .

வள்ளலார்  காட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் மட்டுமே.ஊன தேகத்தை மாற்றம் செய்து. ஆன்ம தேகமான ஒளி தேகத்தைப் பெற முடியும் ..ஆன்ம தேகம் கிடைக்காத வரை இந்த உலகத்தில் .இறந்து இறந்து..பிறந்து பிறந்து பல பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான் ..

வள்ளலார் சொல்லும் எளிய வழி ! எளிய விண்ணப்பம் !

சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில் மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார் அவற்றை ஊன்றி கவனமாக பல முறை படிக்க வேண்டும் .

  4. சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.
உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!
இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தித்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.
எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லாவற்றியும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடும் என்று அறியத்தொடங்கிய தருணத்து வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது,எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
பின்னர், திருவருட்சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேகசுதந்தரம், போகசுதந்தரம், ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
ஆகலில், எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரத்தையும், போக சுதந்தரத்தையும், ஜீவ சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன் கொடுத்த தருணத்தே இத்தேகமும் ஜீவனும் போகப்பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது. தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.
இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.
தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம்! வந்தனம்! என்று வள்ளலார் பதிவு செய்து உள்ளார் !
மேலே கண்டபடி நமக்கு கொடுத்த தேக சுதந்திரம் .போக சுதந்திரம் .ஜீவ சுதந்தரத்தை.திரும்ப மாயையிடம் ஒப்படைக்க வேண்டும்..அதற்கு சிறந்த வழிதான் ஜீவர்கள் இடத்தில் தயவும்,கருணையும் .கடவுள் இடத்தில் இடைவிடாது அன்பும் செலுத்த வேண்டும் ...அதற்குத்தான் சத் விசாரம் ...பரோபகாரம் என்று இரண்டு வழிகளைக் காட்டி உள்ளார்.
நாம் ஜீவ காருண்யம் செய்கிறோம் .உண்மையான விசாரம் செய்வதில்லை ,சமயம் மதங்கள் காட்டிய விசாரம் தான் செய்து கொண்டு உள்ளோம்.வள்ளலார் காட்டிய உண்மை  விசாரம் செய்வதில்லை .
வள்ளலார் சொல்லியுள்ள விசாரணையில் இருந்தால் .!

இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.
இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும்,இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டதுயாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

எல்லா வற்றையும் விட்டு விட்டேன் என்கின்றார் வள்ளலார் ..அவைதான் தேக சுதந்திரம்...போக சுதந்திரம்.....ஜீவ சுதந்திரம் ...என்பதாகும் .இந்த மூன்றிற்க்குள் தான் எல்லாம் அடங்கி உள்ளது .. இவற்றை விடாமல் இருக்கும் ..வரையில் அறிவு விளங்காது ..அருள் கிடைக்காது ..மரணத்தை வெல்ல முடியாது ..ஆன்ம தேகம் கிடைக்காது  அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர் இடம் தொடர்பு  கொள்ள முடியாது .பேரின்ப லாபம் கிடைக்காது .ஆன்மா எங்கும் செல்ல முடியாது 

வள்ளலார் தன் சுதந்தரத்தை திருப்பிக் கொடுத்துள்ள பாடல்! 

வள்ளலார்  தனக்கு கொடுத்த சுதந்தரத்தை திரும்ப கொடுத்து விட்டப் பிறகுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருள் சுதந்தரம் பெருகின்றார் .

சுதந்திரம் உனக்கே கொடுத்தனன் உனது 
தூய நல் உடம்பில் புகுந்தேம் 
இதம் தரும் உளத்தில் இருந்தனம் உனையே 
இன்புறக் கலந்தனன் அழியாப் 
பதந்தனில் வாழ்க அருட்பெருஞ்ஜோதிப் 
பரிசு பெற்றிடுக பொற்சபையும் 
சிதந்தரும் சபையும் போற்றுக என்றாய்
தெய்வமே வாழ்க நின் சீரே !

வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வைப் பெற வேண்டுமானால்  
ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகள் நீங்க வேண்டும்.அத் திரைகளை நீங்க வேண்டுமானால் வள்ளலார் காட்டிய சத்த சன்மார்க்க கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.அப்போதுதான் ஆன்ம தேகம் பெறமுடியும்  வேறு தவறான வழியில் செல்லக் கூடாது .

இவைதான் வள்ளலார் சொல்லியுள்ள  ஆன்ம தேகம் பெரும் வழி .முயற்ச்சி செய்வோம் முடியாதது எதுவும் இல்லை !   எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு 
கதிர்வேல் 
9865939896 ...


1 கருத்துகள்:

9 ஜூலை, 2020 அன்று PM 2:54 க்கு, Blogger senrajarc கூறியது…

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் குறித்த உங்கள் பதிவை விரும்புகிறேன் நன்றி

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு