வியாழன், 13 ஏப்ரல், 2017

சுத்த சன்மார்க்க காலம் ! உண்மையான கடவுள் !


சுத்த  சன்மார்க்க காலம் ! உண்மையான கடவுள் !

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து கடவுள் யார் ?என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டு வந்துள்ளோம் .உண்மையான கடவுளை அறிந்தவர்கள் எவரும் இல்லை ..எனவே இறைவனே தான் யார் ? என்பதையும் தான் எங்கு இருந்து இயங்கி இயக்கிக் கொண்டு உள்ளேன் என்பதையும் உலக  மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதை அதி தீவரமாக தீர்மானித்து அவரே மனிததேகம்  உருவெடுத்து இந்த உலகத்திற்கு வருகை புரிகின்றார் .
அவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் .
திருவருண் மெய்மொழி !

உலகத்தின் இடத்தே பெறுதற்கு முகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் யாதெனில் ?

இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இரண்டும் படாத பூரண இன்பமானவர் என்றும்,

எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும் ,எல்லா பதங்களையும்,எல்லா சத்திகளையும்,எல்லாச் சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,எல்லாப் பொருள்களையும்,எல்லாத் தத்துவங்களையும்,எல்லாத் தத்துவிகளையும் ,

எல்லா உயிர்களையும்,எல்லா செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும் ,எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபங்களையும்,மற்றை எல்லா வற்றையும் ,தமது திருவருட்  சத்தியால் ,

தோற்றுவித்தல்,...வாழ்வித்தல்,...குற்றம் நீங்குவித்தல்,....பக்குவம் வருவித்தல்,...விளக்கஞ் செய்வித்தல்,என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப் பெருந்தலைமை ''அருட்பெருஞ்ஜோதியர்'' என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே '' என்றும்

அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில் ,(அருள் வெளி }அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.என்ற உண்மையை வள்ளல் பெருமான் வெளிப்படுத்துகிறார்.

அந்த உண்மைக் கடவுளை அறிந்து கொள்வது எப்படி ?

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகின் இடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து, அன்பு செய்து, அருளை அடைந்து, அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று ( மரணம் அடையாத உடம்பாகிய மரணம் இல்லாப் பெருவாழ்வு  ) வாழாமல் பல்வேறு கற்பனைகளால்,பல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,  பல்வேறு மார்க்கங் களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு நெடுங்காலம் பிறந்து பிறந்து ,அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம் போகின்றோம்,

ஆதலால் ,இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து ,இறந்து இறந்து, வீண்போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று ,நற்செய்கை உடையவர்களாய் ,

எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும் ,உண்மைப் பொது நெறியாகி விளங்கும் ''சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப்'' பேரின்ப சித்திப் பெருவாழ்வில்,பெருஞ் சுகத்தையும்,,பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருஉள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ''ஞானசபையை'' சித்திவளாகம் என்னும் இச் சன்னிதானத்திற்கு அடுத்த ,

உத்தர ஞான சிதம்பரம், அல்லது, ஞான சித்திபுரம் என்று குறிக்கப்படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து

''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கபடாத நெடுங்காலம் அற்புத ''சித்திகள்''
எல்லாம் விளங்க யாமே அமர்ந்து அருள் திருவிளையாடல் செய்து அருள்கின்றாம்

என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினும் சிறந்த பெருந் தயவுடைய நமது கருணையாங் கடலாராகிய அருமைத் தந்தையார்
''அருட்பிரகாச வள்ளலார் ''முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்திப்பட வெளிப்படுத்தி ,

அருட்பெருஞ்ஜோதி சொரூபராய் ( அருள் ஒளி }  அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித்து அருளி ,அறிய அவரது திருமேனியில் தாம் கனியுறக் கலந்து அருளிய எல்லாம் வல்ல சித்தத் திருக்கோலங் கொண்டு ,''அருள் அரசாட்சித் திருமுடி ''பொறுத்து அருள் விளையாடல் செய்து அருளும் நிமித்தம் ,ஈரேழு பதினான்கு உலகங்களில் உள்ளவர்கள் யாவரும் ஒருங்கே ,

இஃது என்னே ! இஃது என்னே ! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதிசமீபித்த தருணமாய் இருத்தலினால் அங்கனம் வெளிப்படும் திருவரவு பற்றி எதிர் பார்த்தலாகிய விரதங் காத்தலில் நிற்கும் அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லாவரும் மேற் குறித்த அதிசிய அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்தில் தானே ,

சுத்த சன்மார்க்க அரும் புருஷார்த்தங்களின்{ஒழுக்கம் } பெரும் பயன்களாகிய எக்காலத்தும் நாசமடையாத சுத்த அல்லது சுவர்ணதேகம் ,பிரணவதேகம், ஞான தேகம்,என்னும் சாகாக்கலை அனுபவ சொரூப சித்தித் தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும் ,

கடவுள் ஒருவரே என்று அறிகின்ற உண்மை ஞானமும், கருமசித்தி, யோகசித்தி,ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைவதற்கான சுத்த சன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்கு உரிய உண்மை ஒழுக்கங்களில் நாம் எல்லவரும் தனித்தனி ஒழுக வேண்டுவது அவசியம் ஆதலில் அவ் வொழுக்கங்களை இவை என உணரவேண்டுவது அவசியமாகும். என்பதை வெளிப்படுத்துகிறார் .


ஒழுக்கம் நான்கு வகைப்படும் !

இந்திரிய ஒழுக்கம் .கரண ஒழுக்கம் .ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் என்ற
அங்கு ஒழுக்கங்களை கரைபிடித்தால் ஒழிய இறைவன் அருளைப் பெற
டியாது என்பதை தெளிவாக விளக்கி
உள்ளார் .

இந்த உண்மையை தெரிய  வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.
இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.
உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.
எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இது ஆண்டவர் கட்டளை.என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார் .


தொடரும் ;---

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு