சனி, 7 ஜனவரி, 2017

ஆன்மீகத்துறவிகளின்அடையாளம் !

ஆன்மிக துறவிகளின் அடையாளம்,,,

வள்ளலார் வழியில் வாழ்ந்து காட்டுவோம்:::
ஆன்மிக துறவிகளின் அடையாளம்

1. சாதி, மதம், சமயம், தேசம், மொழி, இன, வேறுபாடுகள் எதுவும் இருக்கக் கூடாது.
2 . மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கனவிலும் இருக்கக் கூடாது.
3 . எல்லா ஜீவர்களிடத்தும் தயவும், மெய்ப்பொருளின் (கடவுள்) இடத்தில் அன்பும் இருக்க   வேண்டும்.
4. தம் உயிர் போல் எல்லா உயிர்களையும் ஒன்று என என்ன வேண்டும்.
5. ஆன்மநேய ஒருமைப்பாடு எக்காலத்தும் விலகாமல் இருக்க வேண்டும்.
6. ஆகாரம், மைத்துனம், நித்திரை, பயம் இவை நான்கும் இருக்கக் கூடாது.
7 . பஞ்ச பூத உணவுகள் எதுவும் புசிக்கக் கூடாது. ஏக தேசத்தில் கொள்ளலாம்.
8. அருள் என்ற அமுதம் ஆன்மாவில் சுரக்கும் அதைத்தான் சுவைக்க வேண்டும்.
9. நரை, திரை, பிணி, மூப்பு இவைகள் எதுவும் இருக்க கூடாது.
10. கடவுள் ஒருவரே! அவர் ஒளியாக இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து இருக்க வேண்டும்.
11. ஏழைல்களின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்பதை கடை பிடிப்பவராக இருக்க வேண்டும்.
12. தனக்கென்று வீடு, ஆசிரமம், மடம், குடில், ஆலயம் போன்ற எந்த வசதியும் இல்லாது இருத்தல் வேண்டும்.
13. யோகம், தவம், தியானம், வழிபாடு என்பவை யாவும், உடற் பயிற்சியே தவிர கடவுளை காணும் வழிபாடு அல்ல என்பதை மக்களுக்கு போதிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
14. தான் அணியும் ஆடை ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடாது.
15. காவி உடை உடுத்தவே கூடாது, காவி உடை உடுத்துபவர் கடின சித்தர்களாவர். ஆதலால் வெண்ணிற ஆடையைத் தான் உடுத்த வேண்டும். வெண்ணிற ஆடை தயவின் அடையாளமாகும்.
16. தன் உடம்பில் ஆடையை தவிர வேறு எந்த அணிகலன்களும் வேறு எந்த பொருளும் அணியவோ தொடவோ கூடாது.
17. சமய, மத சின்னங்கள் எதுவும் உடம்பில் இருக்கக் கூடாது.
18. எதிலும் பொது நோக்கம் தேவை.
19. எந்த உருவத்தையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது. பாத பூசை எதுவும் செய்யக் கூடாது, ஏற்றுக்கொள்ளவும் கூடாது.
20. மரணத்தை வெல்லும் முயற்ச்சியில் இருக்க வேண்டும்.
21. மறு பிறப்பு என்ற நிலையில் வாழ கூடாது.
22. ஒழுக்கம் முக்கிய தேவையாகும்.
      1. இந்திரிய ஒழுக்கம்
      2. கரண ஒழுக்கம்
      3. ஜீவ ஒழுக்கம்
      4. ஆன்மா ஒழுக்கம்
      இவை நான்கும் எவரிடத்தில் முழுமைப் பெற்று இருக்கிறதோ அவரையே துறவியாக   ஏற்றுக்கொள்ளலாம். (இதை இன்னும் விரிக்கில் பெருகும்).
மேற் கூறிய கட்டளைகளை யார் கடைப்பிடித்து வாழ்கிறார்களோ அவர்களை துறவி(ஞானி) என்று ஏற்றுக் கொள்ளலாம். அப்படி வாழ்ந்தவர்தான் நம் தமிழ் நாட்டில் தோன்றிய அருட் பிரகாச வள்ளலார் என்பவராகும்.

வள்ளலார் வழியில் வாழ்ந்து காட்டுவோம்::::::::::::::

ஆன்மநேய அன்புடைய அன்பர்களே! நாம் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பெருநெறியை திருவருட்பாவின் மூலமாக படிக்கிறோம், தெரிந்துகொள்கிறோம், மற்றவர்களுக்கு போதிக்கிறோம். ஆனால், அதன் படி நாம் வாழ்கையில் கடைபிடிக்கிறோமா என்று அடிக்கடி சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் திருவருட்பாவை படிப்பது பேசுவதற்காக அல்ல, வாதம் செய்வதற்காக அல்ல, விழா நடத்துவதற்காக அல்ல. வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பெருநெறி ஆகிய அருளைப் பெற வேண்டுவதற்காக.

மனித தேகம் எடுத்துக்கொண்டுள்ள நாம் அனைவரும் மனித தேகம் எடுத்ததின் நோக்கம் என்ன என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார், வாழ்ந்தும் காட்டியுள்ளார்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க
சுத்த சன்மார்க்க சுகநிலை பெருக
உத்தமனாகுக ஓங்குக

என அருட்பா அகவலில் தெளிவாகக் கூறியுள்ளார். நாம் உத்தமனாக வாழ வேண்டுமென்றால் உலகிலுள்ள உயிர்களுக்கு எந்த வகையிலும் துன்பம் நேராத படி பார்த்துக்கொள்ள வேண்டும். உயிர்களுக்கு துன்பம் வருகிற பொழுது எவ்வித தந்திரத்திலாவது அவைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி இடைவிடாது செய்து வந்தால் நம் உடம்பில் இருந்து உயிர் பிரியாமல் பாதுகாக்க முடியும் என்கிறார். நம் உடம்பும் உயிரும் நீண்ட நாட்களுக்கு பிரியாமல் இருக்கும்.

சுத்த சன்மார்க்கம் என்பது நம் உடம்பை சுத்தமாக வைத்திருப்பதல்ல ஆன்மா குடியிருக்கும் ஆலயமாகிய நம் உடம்பில் எந்த விதமான பஞ்ச பூதங்களான உணவை உண்ணாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். சோற்றாசையோடு காம சேற்றாசை படுவாரை துணிந்து கொள்ள கூற்றாசைப் படும் என்கிறார் வள்ளலார். நாம் உண்ணும் உணவும் உணவினால் உண்டாகும் காமமும் நம்மை கூற்றுவன் என்னும் எமன் ஆசையோடு கொன்றுவிடுவான் என்று கூறுகிறார் வள்ளலார்.

வள்ளலார் உணவு வகைகளை இரண்டாகப் பிரிக்கின்றார். ஒன்று அருள் உணவு மற்றொன்று பொருள் உணவு. அருள் உணவு ஆண்டவனால் கொடுப்பது. பொருள் உணவு மாயையினால் கொடுப்பது இவை இரண்டில் எது நமக்கு தேவை என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். பொருள் உணவு மரணத்தை உண்டாக்குவது. அருள் உணவு மரணத்தை வென்று பேரின்பத்தை அடையச் செய்விப்பது.

வள்ளலார் உணவை தேடிப் போய் உண்டதாக வரலாறு இல்லை. அன்பர்களுக்காக நண்பர்களுக்காக அவர்கள் தம்மேல் வைத்துள்ள அன்பிற்காக ஒரு பிடி அதாவது கைப் பிடி எடுத்து உண்டு இருக்கிறார். வேறு பொருள் உணவு உண்ணவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

அன்னமுன அழைக்கின்றார் தொளியிங்கே நான்தான்
அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல் அடிமலர்த்தேன்
உன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும்
ஒரு தலைமை பெருந்தலைவர் அவருடைய அருட்புகழாம்
இன்னமுதம் என்னுடைய அன்பெனும் நறுங் கனியின்
இரதமும் என் தனித்தனைவர்  உருக்காட்சிஎனுமோர்
கன்னனுளே தனித்தெடுத்த தேன் பாகும் கலந்தே
களித்துண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே.

என்னும் அனுபவமாலையில் விளக்கமாக எழுதி வைத்துள்ளார். நாம் எதை நினைத்து வாழ வேண்டுமோ அதை நினைத்து வாழ்ந்தால் தான் அது கிடைக்கும். பொருளை நினைத்துக்கொண்டு அருளை நினைத்தால் எப்படி கிடைக்கும்? ஒன்றை விட்டால் தான் மற்றொன்று கிடைக்கும்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

அன்று திருக்குறளில் திருவள்ளுவரும் மெய்ப்பொருளைப் பற்றி கூறியுள்ளார்.

அருட்பெருஞ்சோதியிடம் செல்லவேண்டுமானால் அருளைத்தேடு பூலோகத்தில் வாழ வேண்டுமானால் பொருளைத் தேடு. இரண்டையும் பிடித்துக்கொண்டு வீணாக அழிந்து விடக்கூடாது. வள்ளலார் வழியில் இருந்து கொண்டு வள்ளலார் கருத்துக்களை போதிக்கும் சன்மார்க்க அன்பர்கள் இன்று வரை சுத்த சன்மார்கத்தை கடைப்பிடித்து இருக்கின்றார்களா என்றால் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

வள்ளலாருடன் இருந்த மெய்யன்பர் வேலாயுதம் மற்றும் அன்பர்கள் அனைவரும் வள்ளலார் மீது அன்பும் பண்பும் பாசமும் மரியாதையும் வைத்துக்கொண்டிருந்தார்களே  தவிர அவர்க்காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடிக்கவில்லை. அதனால் வருத்தமடைந்த வள்ளலார் வேலாயுதமும் கைவிட்டுவிட்டார் என்பதை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஜாதி மத சமய சம்பிரதாயங்கள் அவர்களை விட்டு விலகவில்லை அவர்களும் விடவில்லை. உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துகொள்வாரில்லை என்று வேதனைப் படுகிறார் வள்ளலார். ஏன் தெரிந்து கொள்ளவில்லை என்றால் ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லது அந்த பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது.அது போல் தெய்வத்தை உண்மை அன்புடன் உள்ளபடி அனுபவித்தாலல்லது அத்தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது. ஆதலால் தெய்வத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற முக்கிய லட்சியத்தில் இருந்து கொண்டு விசாரம் செய்து கொண்டு இருங்கள் என்று நம்மை பார்த்து வேண்டிக்கொள்கிறார்.

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியே னுமது
தான் வணங்கிச் சாற்றுகிறேன் தயவினோடுங் கேட்பீர்
என்மார்கத்தில் எனை உமக்குள் ஒருவரெனக்கொள்வீர்
எல்லாம் செயவல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன்மார்கத்தவர் போல வேறு சிலப் புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மே விளங்குச் சுத்தசிவ மொன்றே
தன்னானை என்னானை சார்ந்தரிமி னீண்டே

என்று தன் மீது ஆணை வைத்து சொல்லுகிறார். சத்தியம் வைத்து சொல்லியும் நாம் வள்ளலார் கருத்துக்களை கேட்கவில்லை என்றால் சுத்த சன்மார்கத்திளிருந்து என்ன பயன் என்பதை சிந்தித்து பாருங்கள்.

கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்று நம் காலைத்தொட்டு வணங்கி சொல்கிறார். தயவு செய்து புன்மார்கத்தவர் போல் (அதாவது சமயவாதிகளைப் போல்) அறிவு மழுங்கி தெளிவில்லாமல் இருக்காதீர்கள் எல்லாம் வல்ல நம் அருட்பெருஞ்சோதியர் ஒருவர்தான் உண்மைக்கடவுள் என்பதை உறுதியாக நம்பிக்கை வைத்து சன்மார்க்க அன்பர்கள் கடைபிடிக்க வேண்டும். அதை பார்த்து மற்றவர்களும் நம்மை பின்தொடர்ந்து வருவார்கள்.

ஆடாதீர் சற்று மசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர் -- வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தை சார்வீர் -- விரைந்திநியிங்
கென் மார்கமு மொன்றாமே.

என்னும் கருத்தாழமுள்ள பாடலில் தெளிவு படுத்தியுள்ளார். சன்மார்கத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் அன்பர்கள் வள்ளலார் சுத்தசன்மார்க்க கருத்துக்களுக்கு விரோதமில்லாமல் தானும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன்............

ஆன்மநேயன்ஈரோடுகதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு