செவ்வாய், 10 ஜனவரி, 2017

வேலாயுதம் !

"எனது குரு வள்ளலார் தமது மார்க்கம் அறுவியலையே அடிப்படையாகக் கொண்டதென்று இடையறாது வற்புத்துவார்." - தொழுவூர் வேலாயுத முதலியார்

தியாசபிகல் சொசைட்டி யாருக்குத் தொழுவூர் வேலாயுத முதலியார் அளித்த‌ வாக்குமூலத்தின் தமிழாக்கம்

நான், தென்னிந்தியாவில் புகழ் வாய்ந்த‍ யோகியரான அருட்பிரகாச வள்ளலா ரென்னும் சிதம்பரம் இராமலிங்க பிள்ளை யவர்களின் சீடன். மகாத்மாக்கள் இருக்கிறார்களா என்பதிலும் அவர்களது விசேஹ கட்டளைப்படியே பிரம்மஞான சபை ஏற்படுத்தப்பட்டதா என்பதிலும் ஆங்கிலேயரும் இந்தியருட் சிலரும் ஐயுறுவதாகத் தெரிகிறது. தாங்கள் பெரிது உழைத்து மகாத்மாக்களைப்பற்றி எழுதி வரும் நூலைப்பற்றிக் கேள்வியுற்றேன். எனது குருவைஎனது குருவைப்பற்றியப்பற்றிய சில செய்திகளை வெளிப்படுத்த விரும்புகிறேன். அவை முற்கூறிய ஐயங்களை அகற்றுவதோடு பிரம்மஞானம் பொருளற்றதொரு மயக்கமன்று என்பதையும் பிரம்மஞா ச‌பை வலிவற்ற அடிப்படையில் அமைக்கப்பட்டதன்று என்பதையும் மெய்ப்பிக்கும் என நம்புகிறேன்.

முதலில் இராமலிங்க பிள்ளையின் தனித்தன்மைகளையும் கொள்கைகளையும் சுருக்கமாக விவரிக்கிறேன்:

சென்னைமாகாணத்தில் தென்னார்க்காடு ஜில்லா சிதம்பரம் தாலுகாவிலுள்ள மருதூரில் அவர் பிறந்தார். இளமையிலேயே சென்னைக்கு வந்து நெடுங்காலம் வசித்தார். ஆரியர்களாலும் திராவிடர்களாலும் ஒப்பப் பாராட்டப்பெறும் அகத்தியர் முதலிய முனிவர்களின் நூல்களை ஓதாமலேயே ஒப்புவிக்கும் ஆற்றலை அவர் ஒன்பதாம் வயதிலேயே பெற்றிருந்ததைப் பலர் நேரில் அறிவர். 1849ஆம் ஆண்டில் நான் அவரது சீடனானேன். அவர் யாரிடம் உபதேசம் பெற்றார் என்பதை ஒருவரும் அறியார், ஆயினும் சில காலத்துள் பல சீடர்கள் அவரைச் சூழ்ந்தனர். அவர் ஒரு பெரிய ரசவாதி. புலால் உண்பவர்களைப் புலால் உண்ணாதவர்களாக மாற்றும் ஒரு தனிச் சக்தி அவரிடம் இருந்ததைக் கண்கூடாகக் கண்டோம். அவரது பார்வை ஒன்றே ஒருவரது புலால் விருப்பத்தை ஒழிக்கப் போதுமானது. பிறரது உள்ளத்தை ஊடுருவி அறியும் வியத்தகு ஆற்றல் அவரிடம் இருந்தது. 1855ஆம் ஆண்டில் அவர் சென்னையை விட்டுச் சிதம்பரம் சென்றார். பின் அங்கிருந்து வடலூருக்கும் கருங்குழிக்கும் சென்று அங்கேயே பல ஆண்டுகள் தங்கினார் அக்காலங்களில் பலமுறை தம்மைச் சூழ்ந்திருந்தவர்களைப் பிரிந்து பிறர் கண்களுக்குப் புலப்படா வண்ணம் மறைந்துபோவார். நீண்டகாலம் அவ்வாறே பிறரறியா வண்ணமிருப்பார்.

தோற்றத்தில் இராமலிங்கர்:

நடுத்தர உயரமுள்ளவராக, பார்ப்பதற்கு எலும்புக்கூடெனவே தோன்றும் மெலிந்த மேனியராக இருப்பார். ஆயினும் வலிமையுடையவர். மிக விரைந்து நடப்பார். நிமிர்ந்த தோற்றம், தெள்ளிய சிவந்த முகம், நேரான கூரிய மூக்கு, ஒளி வீசும் பெருங்கண்கள். முகத்தில் இடைவிடாத ஒரு துயரக்குறி.இறுதிக் காலத்தில் தலைமயிரை நீள வளரவிட்டிருந்தார்.யோகிகளின் வழக்கத்திற்கு மாறாக ஜோடு அணிவார்.உடை இரண்டு வெள்ளை ஆடைகளே.எதிலும் மிக்க அளவோடு இருப்பார்.ஓய்வு கொள்வதேயில்லை கடும் மரக்கறி யுணவினர்.இரண்டு மூன்று நாளைக்கு ஒரு முரையே உண்பார்.அதுவும் சில கவளங்களே.அக்காலங்களில் சிறிது சர்க்கரை கலந்த வெந்நீரை மட்டுமே அருந்துவார் அவர் சாதி வேற்றுமைகளைக் கண்டித்துப் பேசியதால் அனைவரது பெரும் பாராட்டுக்குரியவராக இல்லை, ஆயினும் எல்லாச் சாதியாரும் பெருந்திரளாக அவரைச் சூழ்ந்திருந்தனர். உபதேசங்களைக் கேட்டுப்பயன் பெற அவர்கள் வரவில்லை. சித்தாடல்களைக் கண்டு களிக்கவும் அவற்றின் பயனைப் பெறவுமே வந்தனர். சித்தாடல்களில் அவர் வல்லவர் இயற்கைக்கு மேம்பட்ட எதையும் அவர் ஒப்புவதில்லை. தமது மார்க்கம் அறுவியலையே அடிப்படையாகக் கொண்டதென்று இடையறாது வற்புத்துவார்.

அவர் போதித்தவற்றுள் சில பின்வருவன:

1. இந்துக்கள் தம் கருத்துகளுக்குச் செவி சாய்க்காத போதிலும் வேதங்கள் முதலிய கீழை நாட்டுப் புனித நூல்களின் உட்கிடையை அவற்றைக் காப்பாற்றி வைத்திருக்கும் மகாத்மாக்கள் அயல் நாட்டார்க்கு அறிவுறுத்த அவர்கள் மகிழ்வுடன் கேட்பர்

2. உலகைத் தற்போது ஆளும் கலிபுருசனின் கொடிய ஆட்சி ஏறத்தாழப் பத்தாண்டுகளில் சமனாகும்.
3. புலாலுணவு படிப்படியாகக் காலப்போக்கில் கைவிடப்படும்.

4. சாதி சமய வேற்றுமைகள் இறுதியில் ஒழிந்துபோம். அகில உலக சகோதரத்தும் வரும். இந்தியாவில் அது நிலை நாட்டப்படும்.

5. மக்களால் கடவுள் என்று சொல்லப்படுவது உண்மையில் எல்லா உயிர்களிடத்தும் காட்டும் அன்பே. இவ்வன்பே இயற்கை முழுவதையும் ஒழுங்காக இயங்கச் செய்கிறது.

6. மக்கள் தமக்குள்ளே மறைந்து கிடக்கும் தெய்விக சக்தியை உணர்ந்து கைவரப்பெற்றால், பூமியின் ஈர்ப்பாற்றல் முதலிய இயற்கை நியதிகளையும் மாற்றும் அரிய சக்திகளையும் பெற‌க்கூடும்.
அகில உலக சகோதரத்துவத்தின் அடிப்படையில் வேதாந்தத்தின் உண்மைக் கருத்துகளைப் பரப்புவதற்காகச் சமரச "சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" என்றொரு சங்கத்தை 1867ஆம் ஆண்டில் நிறுவினார் அவரது கொள்கைகள் பிரம்மாஞான சபையின் கொள்கைகளை ஒத்தன. எங்கள் சங்கம் ஐந்தாறு ஆண்டுகளே நிலவிற்று. அக்காலத்தில் பேரெண்ணிக்கையான ஏழைகளுக்குச் சங்க உறுப்பினர்கள் செலவில் அன்னதானம் செய்யப்பட்டது.

அவர் தனது 50 ஆம் வயதை அடைந்த போது (1873) இவ்வுலகைத் தாம் நீப்பதற்கேற்பத் தமது சீடர்களைப் பக்குவப்படுத்தத் தொடங்கினார். தாம் சமாதி கூடுவதற்கு எண்ணியிருப்பதையும் தெரிவித்தார்.1873 ஆம் ஆண்டின் முற்பாதியில் மனித சகோதரத்துவத்தை மிகவும் வற்புறுத்திப் போதித்து வந்தார். அவ்வாண்டு இறுதி மூன்று மாதத்தில் பேசுவதையும் உபதேசிப்பதையும் அறவே விடுத்து இடையறா மெளனத்தில் ஆழ்ந்தார். 1874ஜனவரி மாதம் இறுதி நாள்களில் பேசத் தொடங்கித் தாம் கூறி வரும் தீர்க்க தரிசனங்களை மீண்டும் கூறினார். அவை பின் வருவனவாம்.

அம்மாதம் 30 ஆம் தேதி நாங்கள் மேட்டுக்குப்பத்தில் எங்கள் குருவைக் கடைசியாகப் பார்த்தோம். சீடர்களிடம் அன்போடு விடைபெற்ற பின் ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறு கட்டிடத்தின் தனி அரை ஒன்றில் நுழைந்து விரிப்பில் சயனித்துக் கொண்டார். அவரது கட்டளைப் படி அறைக்கதவு பூட்டப்பட்டது. இருந்த ஒரே துவாரமும் சுவர் வைத்து அடைக்கப்பட்டது. ஓராண்டுக்குப்பின் திறந்து பார்த்தபோது அறையில் ஒன்றுமில்லை. வெற்றறையாகவே இருந்தது. பின் ஒரு சமயம் தோன்றுவதாக உறுதியாகக் கூறிடிருந்தாரெனினும் தோன்றும் காலம் இடம் சூழ்நிலைகளைத் தெரிவிக்கவில்லை. அப்படித் தோன்றும் வரை இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா அமெரிக்கா முதலிய மற்றெல்லாத் தேசங்களிலும் தக்கவர்களின் உள்ளத்தில் அதிட்டித்து உலகைத் திருத்தும் பணியில் வேலை செய்யப் போவதாகக் கூறினார். இதுவே இப்பெரியாரின் வரலாற்றுச் சுருக்கம். மேற்கூறிய செய்திகள் ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தெரிந்தவையே. இந்து சாத்திரங்களிலுள்ள ஆழ்ந்த நீதிகள், அகில உலக சகோதரத்துவம், உயிரிரக்கம், அறம் இவற்றைப் பாமரமக்களுக்கும் விளக்கி உபதேசிப்பதே அவரது முழுவேலையாக இருந்தது ஆயினும் அவரைச் சூழ்ந்த‌ பெருங்கூட்டத்தாரில் மிகச்சிலரே அவரது உயர்ந்த உபதேசங்களை உணர்ந்ததைக் கண்டு பெரிதும் ஏமாற்ற மடைந்தார்.

கட்புலனாகிய அவரது இகவாழ்வின் பிற்பகுதியில் இவ்விரங்கத்தக்க நிலையால் தமக்குண்டான பெருவருத்தத்தை அடிக்கடிக் குறிப்பிட்டு அடுத்தடுத்து அவர் கூறியதாவது:

"இவ்வகில உலக சகோதரத்துவ சங்கத்தின் உறுப்பினராவதற்கு நீங்கள் அருகரல்லர். உலக சகோதரத்துவத்தின் உண்மையான உறுப்பினர்கள் இந்தியாவுக்கு வடக்கே வெகு தொலைவில் இருக்கிறார்கள் நீங்கள் பின்பற்றவில்லை. நான் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளுவதில்லை என்று நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள் போலும். ரஸ்யாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் (இவ்விரு நாடுகளின் பெய‌ர் அடிக்கடி சொல்லப்படும்) இன்னும் வெளி நாடுகளிலிருந்தும் வந்து இதே அகில உலக சகோதரத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்போதுதான் நான் உங்களுக்கு வீணில் இப்போது சொல்லிவரும் பேருண்மைகளை உணர்ந்து பாராட்டுவீர்கள். வடக்கே வெகு தொலைவில் வாழும் அச்சகோதரர்கள் இந்தியாவுக்கு வந்து வியக்கத்தக்க பணிகளால் நம் நாட்டிற்கு அளவிடற்கரிய நன்மைகளைச் செய்வதை நீங்கள் காண்பீர்கள்."

இந்தத் தீர்க்கதரிசனம் அப்படியே பலித்து விட்டதெனக் கருதுகிறேன். வடக்கே மகாத்மாக்கள் இருக்கிறார்கள் என்பது இந்துக்களுக்குப் புதிய கருத்தன்று. ரஸ்யாவிலிருந்து மேடம் பிளாவட்ஸ்கியும் அமெரிக்காவிலிருந்து கர்னல் ஆல்காட்டும் இந்தியா வருவதற்குப் பல ஆண்டுகள் முன்னமே அவர்கள் வருகை இங்கு முன்னறிவிப்பாகக் கூறப்பட்டுவந்ததே பின்னர் பிரம்மஞான சபை நிறுவக்கட்டளையிட்ட மகாத்மாக்களுடன் எங்கள் தொடர்புடையவர் என்பதற்கு மறுக்கவொண்ணாச் சான்றாகும்.

நன்றி : ஊரன் அடிகளுக்கு .

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All Possible, I swear on Divine Abode
Exalt HIM - the Almighty only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss!
Let the Grace-Feet reign Grace-Rule!

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு