சனி, 27 ஆகஸ்ட், 2016

சிறு தெய்வ வழிபாடுகள் ஏன் கூடாது !

சிறு தெய்வ வழிபாடுகள் ஏன் செய்யக்  கூடாது !

மலேசியாவில் வாழும் அன்பு சகோதரி மலர் அவர்களுக்கு வந்தனம் .உங்கள் கேள்வி மிகவும் முக்கியமானதாகும் .ஒவ்வொரு மனித தேகம் எடுத்தவர்கள்  அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

வள்ளலார் சிறிய தெய்வம், பெரிய தெய்வம் என இரண்டு பிரிவுகளாக பிரித்து உள்ளார் .அதிலே உயிரைப் பலி வாங்கும் தெய்வங்கள் எல்லாம் சிறிய தெய்வம் என்றும்,உயிரைப் பலி வாங்காத தெய்வங்கள் எல்லாம் பெரிய தெய்வம் என்று சொல்லுகின்றார் ..

உதாரணத்திற்கு ;-- சிவன்,பெருமாள்,விஷ்ணு ,முருகன்,விநாயகர்,போன்ற தெய்வ சன்னதிகளில் உயிர் பலி செய்வது இல்லை,மற்ற தெய்வங்களின் பெயரால் உயிர் பலி செய்கின்றார்கள் .ஏன் அப்படி செய்கின்றார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள்  வேட்டையாடி மிருகங்களை உணவாகப் பயன் படுத்தி உண்டு வந்தார்கள்.பிறகு மிருகங்களை வீட்டிலே கொண்டு வந்து வளர்த்தி கடவுள் பெயரால் அந்த உயிர்களை பலி கொடுத்து உணவாக உண்டு வந்தார்கள்..உயிர்களைக் கொன்று உணவாக உண்பது தவறானது என்று மக்களுக்கு போதிக்க வந்ததுதான் சமயங்கள் மதங்கள் .என்பவைகளாகும் ,  உண்மையை எடுத்துச் சொல்லத்தான் சைவ சமயமும்,வைணவ சமயமும் ,புத்த சமயமும் தோன்றின .ஆனால் அவர்கள் சொல்லிய விதம் சரியில்லை,தெளிவாக சொல்லவில்லை .அதனால் அவை மக்களுக்குப் போய் சேரவில்லை.,

சைவ ,வைணவ சமயத்தில் உள்ளவர்களே மாமிசம் உண்ணும் பழக்கத்தில் நிறையப்பேர் உள்ளார்கள் .அவர்களுக்கும் உயிரின் உண்மைத் தன்மை என்னவென்று புரியவில்லை,,தெரிந்த உயர்சாதிக் காரர்கள் என்னும் பிராமணர்களும் மக்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை.அவர்கள் உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் இருந்தார்கள் .

உயிர்க்கொலை செய்வதும் புலால் உண்பதும் கடவுளுக்கு ஏற்புடையது அல்ல என்று, அவர்கள்  மக்களுக்கு ஏன்? எடுத்து சொல்லவில்லை.எல்லாமே சூழ்ச்சிதான் ...மக்கள் திருந்தி விட்டால் அவர்களுக்கு வரும் லாபம் போய் விடும்.அவர்களை சாமி,சாமி,என்று சொல்ல மாட்டார்கள்.

மக்களின் அறியாமையைப் பயன் படுத்தி அவர்கள் மேல் நிலையிலே தங்களை தக்க வைத்துக் கொண்டார்கள்...அதனால்தான் .மற்றவர்கள் யாவரும் கீழ் நிலையிலே உள்ளார்கள்...

மக்களும் அறியாமையாலும் ,நாக்கு ருசி கொண்டதாலும்,மாமிசத்தை (புலாலை ) விட முடியாமல் உணவாக உட்கொண்டு வருகின்றார்கள்.

வள்ளலார் வந்துதான் உயிர்க் கொலை செய்வதும் ,அதன் புலாலை உண்பதும் மாபெரும் தவறு என்றும்,குற்றங்களிலே பெரிய குற்றம் என்பதை மக்களுக்கு தெரியப் படுத்தினார்.

உயிர்க் கொலை செய்வோர்க்கும் அதன் மாமிசத்தை உன்போர்க்கும் இறைவன் அருள் எப்போதும் கிடைக்காது என்னும் உண்மையை மக்களுக்குத் தெரிவித்து உள்ளார் ..அதனால் தீர்க்க முடியாத துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும் என்கின்றார்,/

ஏன் என்னும் விளக்கம் ;--சிறிய தெய்வங்கள் !
''எந்த உயிராக இருந்தாலும் அனைத்து உயிர்களும்  இறைவனால் படைக்கப் பட்டது ,அந்த உயிரைக் கொலை செய்வதற்கு, யாருக்கும் உரிமை இல்லை,.உங்களால் ஒரு உயிரை கொடுக்க முடியாத,உண்டாக்க முடியாத போது அந்த உயிரைக் கொன்று உணவாகக் கொள்வது பாவங்களிலே பெரியபாவம் என்கின்றார்''.

அதுவும் தெய்வங்களின் பெயரால் உயிர்பலி கொடுப்பது மிகவும் கொடுமையான பாவம் என்கின்றார்....அதனால் உயிரைப் பலி  வாங்கும் தெய்வங்கள் யாவும் சிறிய தெய்வம் .அதனால் உங்களுக்கு எந்தப்பயனும் எந்த லாபமும் இல்லை எனவே அந்த தெய்வங்களை வணங்கவோ ,வழிபடவோ  வேண்டாம் என்கின்றார்.சிறிய தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யாதீர்கள் என்கின்றார்.உயிர்பலி வாங்கும் தெய்வங்கள் தெய்வங்களே அல்ல,அந்த தெய்வங்கள் உண்மையான தெய்வங்கள் அல்ல  என்கின்றார்.அதனால் சிறு தெய்வ வழிபாடு செய்ய  வேண்டாம் என்கின்றார்.

மருவாணைப் பெண்ணாக்கி ஒரு கணத்தில்
கண் விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை
எழுப்புகின்ற உறுவனேனும்
கருவாணை யுற இறங்காது உயிர் உடம்பைக்
கடிந்து உண்ணும் கருத்தனேல் எங்கள்
குரு ஆணை எமது சிவக் கொழுந்தாணை
ஞானி எனக் கூற எண்ணாதே !

அதாவது ...ஒரு நிமிடத்தில் ஆணை பெண்ணாக்கவும், பெண்ணை ஆணாக்கவும் .,அருள் சித்தி  பெற்று  இருந்தாலும்,...இறந்த உயிர்களை எழுப்பும் ஆற்றல் படைத்த சக்தி பெற்று இருந்தாலும் ,அவன் மாமிசம் உண்பவனாக இருந்தால் அவனை ஞானி என்றோ ! அருளாளன் என்றோ ! சொல்ல வேண்டாம் ...இது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது ஆணை என்கின்றார்...

உயிர்க்கொலையும் புலைப் பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புற இனத்தார் என்கின்றார். வள்ளலார் .அதாவது கொலை செய்பவர்களும்,அதன் புலாலை உண்பவர்களும் கடவுளை வணங்கும் தகுதி அற்றவர்கள் ..மேலும் ஜாதி இரண்டு என்கின்றார் ,புலால் உண்பவர்கள் ஒரு ஜாதி,புலால் உண்ணாதவர்கள் ஒரு ஜாதி,..அக இனத்தார் ,புற இனத்தார் என்பதாகும்.

உயிர்க்கொலை வாங்கும் தெய்வங்கள் !

கொலை வாங்கும் சிறிய  தெய்வங்களைப் பார்த்து நான் பயந்து  நடுங்கிய நடுக்கம் அளவில் அடங்காது .இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்கப் போகின்றதோ ! என்று பதிவு செய்துள்ள பாடல்கள் கீழே !

நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பல பெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிக் குக்குடங்கள்
பலிகடா முதலிய உயிரைப்
பொலி உறக் கொண்டே போகவும் கண்டே
புத்தி நொந்து உளம் நடுக்கம் உற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில்
கண்ட காலத்திலும் பயந்தேன் !

என்கின்றார் /மேலும்

துண்ணெனக் கொடியோர் பிற  உயிர் கொல்லத்
தொடங்கிய போது எல்லாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போது எல்லாம்
எண்ணி என்னுள்ள நடுங்கிய நடுக்கம்
எந்தை நின் திரு உளம் அறியும் !

என்கின்றார் ..சிறிய தெய்வங்களின் பெயராலும் உயிர்களைக்  கொன்று உணவாக உட்கொள்ளுகிறார்கள் , ஆற்றிலே கடலிலே வலைகளை வீசியும்,தூண்டில் போட்டும் மீன்களை பிடித்து உணவாக உட் கொள்ளுகிறார்கள் .அவர்களைக் கண்ட காலத்திலும் பயந்தேன்,நடுங்கினேன்  என்கின்றார் வள்ளலார்.

அவர்களுக்கு ஆண்டவர் தண்டனைக் கொடுத்து ,அந்த தண்டனையைத் தாங்காமல் தவிப்பார்களே! துன்பம் அடைவார்களே! என்று அவர்களுக்காக இறைவனிடம் வேண்டுகின்றார்,அவர்களுக்கு உண்மையை அறிவையும் ! உண்மையான புத்தியும்!உண்மைத் தெள்வையும் ! கொடுக்கவேண்டும் என்கின்றார் வள்ளலார் .

ஆன்மா உயிர் உடம்பு !

ஆன்மா,உயிர்,உடம்பு அனைத்தும் ஆண்டவரால் கொடுக்கப் பட்டது,அனைத்து உயிரும்,,உடம்பும், இறைவன் வாழும் ஆலயம், அவற்றை அழிக்கவோ .அதன் புலாலை உண்ணவோ கூடவே கூடாது என்கின்றார்.

அடுத்தது எல்லா தெய்வங்களை விட ,பெரிய பெரும்  தெய்வம் எது ?   என்றால் ..

அருட்பெருஞ்ஜோதி தெய்வம்தான் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான தெய்வம் என்பதை வள்ளலார் மக்களுக்கு அறிமுகப் படுத்துகின்றார்.

தூண்டாத மணி விளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெருந் தெய்வம்
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
மாணிக்க வல்லியை யோர் வலத்தில் வைத்த தெய்வம்
ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருட்ஜோதித் தெய்வம்
ஆகம வேதாதி எல்லாம் அறிவரிதாம் தெய்வம்
தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

உலகில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் உண்மையான தெய்வங்கள் அல்ல .எல்லாமே தத்துவ சித்தி கற்பனைக் கதைகளில் வரும் கதா பாத்திரங்கள்.என்கின்றார் வள்ளலார் ....

எல்லாச் சத்திகளும்,எல்லாச் சத்தர்களும்,எல்லாத் தலைவர்களும்,அறிந்து கொள்ளுதற்கு மிகவும் அரியதாய் ,எல்லாத் தத்துவங்களுக்கும் ,எல்லாத் தத்துவி களுக்கும்,அப்பாலப் அப்பாலாய் விளங்கும் ''ஓர் சுத்த ஞான வெளியில்''தமக்கு ஒரு விதத்தாலும்,ஒப்பு உயர்வு சிறிதும் குறிக்கப் படாத ''தனிப் பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதியராகி ''விளங்குகின்ற ஒரேக் கடவுள்தான் வள்ளலார் காட்டிய உண்மைக் கடவுள் என்பதை அறிவுள்ளவர்கள் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த கடவுள்தான் ஒவ்வொரு உடம்பிலும், ,உயிராகவும்,ஆன்மாவாகவும்,உள் ஒளியாக இருந்து இயக்கிக் கொண்டு உள்ளவர் .அந்த ஒளி இயங்கும்  இடத்திற்குப் பெயர் ''சிற்சபை'' என்று பெயராகும் .

உள் ஒளி ஓங்கிட உயிர் ஒளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனல் !....அகவல்

சபை எனது உளம் என தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி !

இன்னும் விரிக்கில் பெரும் இத்துடன் நிறைவு செய்கிறேன்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896,
0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு