திங்கள், 21 செப்டம்பர், 2015

ஆண்டவரை அறியாத மக்கள்.!

ஆண்டவரை அறியாத மக்கள்.!

உண்மையான கடவுள் யார் ? என்று தெரியாமல் கல்லையும்,மண்ணையும் ,பொன்னையும்,மனிதர்களே சிலைகளாக  செய்து வழிப்பட்டு அதையும் அழிக்கின்றார்கள் .என்னே இவர்களின் அறியாமை .

எத்தனை ஆமைகள் அவர்களை கவ்விக் கொண்டு உள்ளது,

அறியாமை,தெரியாமை,புரியாமை,விளங்காமை,தெளிவில்லாமை,அறிவில்லாமை,போன்ற அளவில்லா ஆமைகள் அவர்களைக் பிடித்துக் கொண்டு உள்ளது.

படித்தவர்களில் இருந்து பாமரர்கள் வரைஉயில்  இந்த அறியாமை என்னும் ஆமைகள் பிடித்துக் கொண்டுள்ளது.

இதற்கு எல்லாம் அடிப்படைக் காரணம்,சமய மதங்களின்   கொள்கைகளின் புரிதல் இல்லாமையாகும்.

உதாரணம்.;--

நேற்று சென்னையில் மட்டும் ஐந்து ஆயிரம் விநாயகர் சிலைகளை கடலில் கரைத்து உள்ளார்கள்.

இந்தியா முழுவதும் எத்தனை கோடி விநாயகர் சிலைகளை கரைத்து இருப்பார்கள்.

அவற்றால் இந்தியாவிற்கோ,இந்தியாவில் வாழும் ஏழை எளிய மக்களுக்கோ என்ன லாபம்

சமயங்களின்,மதங்களின் பொய்யான கொள்கையினால் மக்களின் அறியாமையால் எத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள  பொருட்கள் அழிவு .

இவற்றைப் பற்றி  ஆன்மீக வாதிகளோ,அரசியல் வாதிகளோ ,அறிவியல் வல்லுனர்களோ ,விஞ்ஞாநிகளோ நீதி அரசர்களோ சிந்தித்தார்களோ.

இறைவன் இப்படியா வழிப்படச்சொன்னார் .கடவுளின் மீது வைத்துள்ள மூட நம்பிக்கைகள், மனித அறிவை எப்படி பாழ் படுத்தி மழுங்க வைத்துள்ளது பாருங்கள்

இதற்காகவா உயர்ந்த அறிவை மனிதர்களுக்கு இறைவன் கொடுத்துள்ளார்  .உயர்ந்த அறிவு இருந்தும் மனிதர்கள் தாழ்ந்த நிலையிலே சென்று கொண்டுள்ளார்கள் என்று நினைந்து வள்ளல்பெருமான் வேதனைப்படுகின்றார் .

கலை உரைத்த கற்பனையை நிலை எனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப்போக வேண்டும் என்கின்றார்.

மதம் எனும் பேய் பிடித்து ஆட்ட எல்லோரும் மனம் போனபடி ஆடிக் கொண்டு இருக்கின்றார்கள் என்கின்றார்.

உண்மையான இறைவன் யார் என்று தெரியாமல்,மதவாதிகளும்,சமயவாதிகளும்,குருடர்கள் யானையைக் கண்ட காட்சிபோல் கதைகளைக் கட்டிவிட்டு சென்று விட்டு விட்டார்கள்.

மதம் என்னும் பேய் பிடித்தவர்களும்,சமயம் என்னும் பைத்தியம் பிடித்த குரங்கு போன்றவர்களும் மன்றில் நடம்புரியும் உண்மையான அருட்பெருஞ்ஜோதி இறைவனைக் காண முடியுமா >என்று கேட்கின்றார் வள்ளல்பெருமான்.

சாதி குலம் என்றும் சமயம் மதம் என்றும் உப
நீதி இயல் ஆச்சிரம நீட்டு என்றும் --ஓதுகின்ற
பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்ததுவே பிறர் தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

இனிமேல் சாதி,சமயம் ,மதங்களை எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் ஒழித்து விடுவேன்  என்கின்றார்.

ஒழிப்பதற்கு உண்டான அருளையும் ஆற்றலையும் எனக்கு இறைவன் தந்துள்ளார் .

உலக மக்களுக்கு உண்மையைப் போதித்து  உண்மையான சுத்த சன்மார்க்க நெறியில் கொண்டு வந்து அனைவரையும் புனிதர்களாக மாற்றுவதே,இறைவன் எனக்கு இட்ட கட்டளையாகும் அதுவே என்னுடைய தலையாய கடமையாகும்  என்கின்றார் .

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ் சோதி என் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்தது நானும்
நித்தியன் ஆயினேன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்தியச் சுத்த சன்மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுதல் உண்மை
விளம்புனேன் வம்மினோ விரைந்து.!

உயர்ந்த அறிவை சார்ந்த மக்களே இறைவன் யார் ? என்பது தெரியாமல் வீணிலே அலைய வேண்டாம் .

இருக்கும் இடத்தை விட்டு எங்கு எங்கோ அலைவது அறியாமையாகும்.உங்கள் அறிவைப் பயன் படுத்துங்கள். அறியாமை நீங்கும்.

கருணையை கையில் எடுங்கள் கடவுள் உங்கள் இல்லம் தேடி வருவார்.நீங்கள் நிறைவு பெற்ற மனிதர்களாக வாழலாம் .வாழமுடியும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு