செவ்வாய், 24 மார்ச், 2015

வள்ளல்பெருமானுக்கு ஏற்பட்ட நடுக்கம் !

உயிர்களைக் கொல்லும்போது ஏற்பட்ட நடுக்கம் !


துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத்
தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
என் தந்தை நின் திரு உளம் அறியும்.

உலகினில் உயிர்களைக் கொல்லும் கொடியர்களைப் பார்த்த போதெல்லாம் பயந்தேன் என்கின்றார் வள்ளல்பெருமான் .

வாய் பேசாத உயிர்களைப் பதைக்க,பதைக்க அதன் உயிர்களை அழிக்கும் போது,அதைக் கண்ணால் கண்ட காலத்திலும் என் உள்ளமும், உயிரும், மனமும்,.ஆன்மாவும்,உடம்பும்  பதைத்தது  என்கின்றார்.

''மண்ணினில் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட காலத்திலும் பயந்தேன்''என்றும் ''உயிர்களைக் காவு கொள்ளும் சிறு தெய்வங்களின் கோயில்களைக் கண்ட போதெல்லாம் அஞ்சினேன் ''என்றும் நம் வள்ளல் பெருமானார் ஏன் ? தமது திருவருட்பாவில் அருளியுள்ளார் .

ஆடு மாடுகள் ,பன்றி, கோழி மற்றும் மீன் பிடிப்போர் தூண்டிலில் புழுவை வைத்து நீரில் வீசுவர் .அந்தப் புழுவும்,மற்ற உயிர்களும்,உயிர்ப் போகும் போது வலியால் துடித்துக் கொண்டு இருக்கும்,

அதேபோல் அதன் துன்பத்தை உணராத மீன் வகைகளும் அதை உணவாகப் புசிக்க வந்து தூண்டிலில் மாட்டி அந்தப் புழுவைப் போலவே துடிதுடித்து உயிரை இழக்கும்.இதேபோல் மற்ற உயிர்களும் மீன்களும்  படும் துன்பத்தைப் பாராது மனிதன் அதை உணவாகப் புசிக்கின்றானே இவன் கதி என்னவாகப் போகிறதோ என்றே வள்ளல் பெருமான் அஞ்சி வேதனைப்படுகின்றார் .

பொதுவாக நமக்கு துன்பம் நேரும் போதெல்லாம் இவரால்தான் எனக்கு துன்பம் வந்தது ,அவர்தான் அந்த துன்பத்திற்குக் காரணம் என்று பிறர் மீது குற்றம் சுமத்துகிறோம்.

ஆனால் நம்மால் பிறர் துன்பத்தை அனுபவிக்கும் போது அதை நாம் உணர்ந்து பார்ப்பது இல்லை.''வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் ''என்பது பழ மொழி . இதை பொதுவாக பிறர் துன்பபடும் போது நாம் கூறுவது.ஆனால் நமக்கு துன்பம் வரும்போது இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

இதைத்தான் நம் வள்ளுவப் பெருந்தகை ''இன்னா செய்யாமை ''என்ற அதிகாரத்தில் அருளியுள்ளார் .

நோயெல்லாம் நோய் செய்தார் மீதாம் நோய் செய்யார்
நோயின்மை வேண்டு பவர் ....என்பார் .

அதாவது ''பிறர் உயிர்களுக்கு துன்பம் செய்பவரையே துன்பம் வந்தடையும் .ஆதலால் துன்பம் இல்லாமல் வாழ விரும்புவோர் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்தல் கூடாது ''என்பதே அதன் பொருள்.

தாயின் பெருமையும் பசி தவிர்த்தலின் முக்கியத் தேவையும் எடுத்துரைத்த வள்ளுவப் பெருந்தகையும் ''வினைத்தூய்மை'' என்ற அதிகாரத்தில் கீழ் கண்டவாறு அருளி உள்ளார் .

ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை .....என்கின்றார் .

அதாவது பெற்றவள் பசியோடு இருந்தாலும் கூட தூய்மை இல்லாத செயல்கள் என்று வரை அறுத்துள்ள செயல்களை செய்யக் கூடாது .

நம் வள்ளல்பெருமான் ,வள்ளுவர் போன்ற உண்மை ஞானிகளிடம் உள்ள சிறப்புத் தன்மையே இதுதான் .முன் சொன்ன அருட்பாவும்,திருக்குறளும் ,துன்பம் வருவதற்கான காரணம் பற்றித் தெளிவாக விளக்கி உள்ளார்கள்.

நாம் செய்த உயிர்க் கொலைதான் எல்லா வினைகளுக்கும் முதற் காரணமாக இருக்கின்றது .அந்த வினையை நீக்குவதற்கு உண்டான வழியையும் அருளி உள்ளார்கள்.

மனிததேகம் !

அன்பு ஆன்மநேய உள்ளங்களே ! மனித தேகம் உயர்ந்த அறிவுள்ள பெறற்கரிய தேகம்.ஆனால் வாழ்நாளோ நீர்க்குமிழி போலத்தான் உள்ளது.காட்டில் வாழ்கின்ற துஷ்ட மிருகங்கள் எல்லாம் தன குணத்தை எப்போதும் மாற்றிக் கொள்ள முடியாது .அது கடைசிவரை அப்படித்தான் இருக்கும்.

ஏன் என்றால் அவற்றிற்கு அறிவு என்பது மறைக்கப் பட்டு உள்ளன .விலங்குப் போட்டு  கட்டி வைப்பதுபோல் அறிவு கட்டி வைக்கப்பட்டுள்ளது .அவற்றிற்கு உள் நோக்கிப் பார்க்கும் அறிவுத் தன்மை இல்லை.

ஆனால் மனிதனுக்கு மட்டுமே உள்முகமாகப் பார்த்து தன்னைத் திருத்திக் கொள்ளும் அறிவும்,சுதந்திரமும் கடவுளால் கொடுக்கப் பட்டுள்ளது .எனவே நாம் மனதாலும்,வாக்காலும்,தேகத்தாலும் பிற உயிர்களுக்கு துன்பம் கொடுக்காமல் வாழ்ந்து இன்பம் அடைவோம்.

உலகத்தில் எல்லாவற்றிற்கும் மன்னிப்பு உண்டு .உயிர்க் கொலை செய்வதற்கும் அதன் புலாலை உண்பவர்களுக்கும் மன்னிப்பு என்பதே கிடையாது.

இதுவரையில் தெரியாமல் அறியாமல் பழக்கத்தினால் செய்து இருந்தாலும் இனிமேல் செய்யாதீர்கள் .ஆண்டவர் மன்னிப்பார்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
      

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு