சனி, 31 ஜனவரி, 2015

மெய் ஞானத்தை அடையும் வழி--6.

மெய் ஞானத்தை அடையும் வழி
பகுதி-6
சதுர் நிலை வழிபாடுகள்
ஈரெண்ணிலையென வியம்பு மேநிலையிற்
பூரண சுகமாய்ப் பொருந்து மெய்ப் பொருளே
-(அகவல் 893 - 894)
இறைவனை வழிபடும் வழிபாட்டு முறைகள் சமயங்கள் ரீதியாகவும்,மதங்கள் ரீதியாகவும் மார்க்கங்கள் ரீதியாகவும், வருணங்கள் ரீதியாகவும், ஆசிரமங்கள் ரீதியாகவும், பல பல என எண்ணிலடங்காத எண்ணிக்கையில் உலகம் முழுவதும் பல்கி பெருகி இருந்தாலும் அவையனைத்தையும் இலக்கண ரீதியாக தொகுத்தால் கீழ்கண்ட கோட்பாடுகளின் அடிப்படையில்தான் வரும் எந்த ஒரு வழிபாடும் கீழ்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றில் அடங்கும். அவைகள்.
சரியை நிலை வழிபாடுகள்
கிரியை நிலை வழிபாடுகள்
யோக நிலை வழிபாடுகள்
ஞான நிலை வழிபாடுகள்
என நான்கு பிரிவுகளில் அடங்கும். அந்த நான்கு பிரிவுகளை விரிக்கையில்
சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என்றும்,
கிரியையில் சரியை, கிரியையில் கிரியை,கிரியையில் யோகம், கிரியையில் ஞானம் என்றும்,
யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை, யோகத்தில் யோகம்,யோகத்தில் ஞானம் என்றும்,
ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்றும்
16 நிலைகளாக பிரிக்கலாம்.
இந்த சதுர்நிலை(4 நிலைகள்) வழிபாடுகளுக்கும் நாம் ஏற்கனவே கடந்த அத்தியாயத்தில் ஆய்வு சதுர்யுகங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. வரலாற்று ரீதியாக ஆய்வு செய்தாலும் இந்த தொடர்பானது உறுதிபடவெ அமைகிறது. எல்லா யுகங்களிலும் எல்லா வழிபாடுகளும் கடைபிடிக்கப்பட்டாலும்,
கிருதயுகத்தில் ஞான நிலை வழிபாடும்
த்ரேதா யுகத்தில் யோக நிலை வழிபாடும்,
துவாபர யுகதில் கிரியை நிலை வழிபாடும்
கலி யுகத்தில் சரியை நிலை வழிபாடும்
மிகப்பெரும்பாலான மக்களால் பின்பற்றபடுகின்றன.மற்ற வழிபாடுகள் ஆங்காங்கெ ஒரு சிலரால் மட்டும் பின்பற்றபடும்.
சரியை நிலை வழிபாடு என்பது தெய்வநிலை அடைந்த மனிதர்களை தெய்வமாக கருதி அவர்களின் உருவங்களை விக்கிரகங்களாக உருவாக்கி அவற்றை வழிபடுவது. கலி யுகத்தில் பெரும்பாலான மக்களால் பின்பற்றபடுவது.
கிரியை நிலை வழிபாடு என்பது தெய்வநிலைப்பதவிகளை நோக்கி பஞ்சபூதங்களான அக்கினி,நீர் ஆகியவற்றின் மூலம் யாகம்,ஹோமம் ஆகியவற்றின் மூலம் வழிபடுவது. துவாபர யுகத்தில் பெரும்பாலான மக்களால் பின்பற்றபடுவது.
யோக நிலை வழிபாடு என்பது தானெ தெய்வநிலை பதவிகளை அடைய தவம்,தியானம்,யோகம் போன்ற முறைகளால் முயற்சிப்பது. இந்த வழிபாடு த்ரேதா யுகத்தில் பெரும்பாலான மக்களால் பின்பற்றபடுவது.
ஞான நிலை வழிபாடு என்பது எல்லா உயிகளும் இறைவன் இருப்பதாக கருதி அன்பு செலுத்துவதின் மூலம் தெய்வநிலை மனிதர்களும் தம்மை வணங்கும் நிலை எய்துவது இந்த வழிபாடு கிருதயுகம் எனும் சத்ய யுகத்தில் பெரும்பாலான மனிதர்களால் பின்பற்றப்படுகிறது.
விஷ்ணு பதவியடைந்த கிருஷ்ணனை விக்கிரகத்தின் மூலம் வணங்குவது சரியை நிலை.
விஷ்ணு பதவியில் யார் இருந்தாலும் அந்த பதவியிலிருப்பவர்களுக்கு அக்கினி மற்றும் நீரால் சடங்குகள் மூலம் துதி செய்து யாகங் ஹோமங்களை நடத்துவது கிரியை நிலை.
தானே விஷ்னு பதவியை அடைவதற்காக தவமும் யோகமும் செய்து சித்துகளையும், கிருத்தியங்களையும் பெற்று விஷ்ணு பதவி பெற பஞ்ச கிருத்தியங்களை பெறுவது யோக நிலை.
பஞ்ச கிருத்தியங்கள் அடைந்தவர்களும் அடையமுடியாத அதையும் கடந்த நிலையை அன்பினால் அடைந்து பஞ்ச கிருதி கர்த்தாக்களும் தன்னை வணங்கும்படி செய்து இறைவனில் கலப்பது ஞான நிலை.
சரியை வழிபாடு செய்பவன் விக்கிரகத்தின் மூலம் இறைவனை காண முயற்சிக்கிறான்.
கிரியை வழிபாடு செய்பவன் அக்கினி, நீர் அகிய பஞ்ச பூதங்களின் இயற்கை சக்தி மூலம் இறைவனை காண முயற்சிக்கிறான்.
யோக வழிபாடு செய்பவன் தனக்குள்ளேயே இருக்கும் மனம் எனும் சாதனத்தை பக்குவப்படுத்தி தனது ஆத்மாவிலேயெ இறைவனை காண முயற்சிக்கிறான்.
ஞான வழிபாடு செய்பவன் தனது ஆன்மாவுடன் நின்று விடாமல் எல்லா உயிர்களிலும் இறைவனை காண அன்பினால் முற்சிக்கிறான்.
முதல் மூன்று வழிபாடுகளிலும் மனிதனுக்கு அகங்காரம் உடன் வரும் ஞான நிலை வழிபாட்டில் அகந்தையற்றவன் மட்டுமே வழிபாடு நடத்த இயலும்.
மேலும் சதுர்யுகத்தையும் சதுர்நிலை வழிபாடுகளையும் ஒப்பாய்வு செய்கையில் நமது வள்ளல் பெருமான் அளித்த யுகங்களின் காலக் கணக்கு சரியாகவே வருகிறது என்பதை காணலாம்.
அவற்றின் விவரம் வருமாறு
வள்ளல் பெருமானின் கால கணக்குபடி இதற்கு முன் நடந்த கலியுகமானது கி.மு. 14,800 முதல் கி.மு. 10000 வரை நடந்துள்ளது. (யுக தாக்கம் கி.மு.15,100 முதல் கி.மு. 9,900 வரை என கொள்க) வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி ஏறக்குறைய இந்த காலகட்டத்தில் சிந்து சமவெளி நாகரீகம் என்ற நாகரீகம் சிறந்து விளங்கியதாக தெரிகிறது. இந்த முழு சிறப்பை கண்டு பிடிக்க இயலவில்லை என்றாலும் வழிபாட்டை பொறுத்தவரை உருவ வழிபாடுநடந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் என்பதால் கலியுகம் நடந்த சாத்தியக் கூறு நிரம்ப உள்ளது.
அடுத்ததாக நடந்த கிருத யுகமானது, கி.மு.10,000 முதல் கி.மு. 8,800 வரை(யுக தாக்கம் 10,400 முதல் கி.மு.8,600 வரை என கொள்க) இது ரிக்வேத காலம், சப்த ரிஷிகளும் ஞானிகளும் மனைவி மக்களுடன் அனைவரும் ஞானத்தை அடிப்படையாக கொண்டு வாழ்ந்த காலம். சாதி, சமய பேத மற்ற காலம். உதாரணமாக சப்த ரிஷிகளில் மூத்தவரான வசிஷ்டர் அவர்கள் திருமணம் செய்த பெண் தோல் தொழில் செய்பவரின் மகள் அந்த கால கட்டம் சாதி எனும் சதி ஏற்படாத ஞானிகள் காலம் என்பதால் இது சாத்தியமாயிற்று.
அடுத்ததாக நடந்த திரேதா யுகமானது கி.மு.8,800 முதல் கி.மு. 6,400 வரை( யுக தாக்கம் கி.மு.8,900 முதல் கி.மு.6,100 வரை எனக் கொள்க) யஜுர், சாம, அதர்வண வேதங்களின் காலம். இந்த காலத்தில் பெரும்பாலானோர் குடும்பத்தை துறந்து சந்நியாச வாழ்க்கை மேற்கொள்வதே ஆன்மீகத்தின் உயர்ந்த நிலை எனக் கருதி துறவறம் மேற்கொண்டனர். இந்த கருத்தின் தாக்கமானது இன்னும் கூட சமுதாயத்தில் இருக்கிறது. துறவிகளே மேலானவர்கள் என்று கருதப்படுகிறது. அதனடிப்படையில் யோகிகள் நிறைய உருவாகி அதற்கான இயம நியமங்கள் இந்த காலத்தில் உருவாகி யோக நிலை காலமாக நடந்தது.
அடுத்ததாக நடந்த துவாபர யுகமானது கி.மு.6,400 முதல் கி.மு. 2,800 வரை(யுக தாக்கம் கி.மு.6,600 முதல் கி.மு.2,400 வரை என கொள்க) எல்லாரும் ஞானத்தையும் யோகத்தையும் கைவிட்டு பெரும் பொருட்செலவில் யாகங்கள் ஹோமங்கள் போன்ற கிரியைகள் மூலம் தெய்வ ஆராதனைகள் நடைபெற்றன. இது வரலாற்று அறிஞர்களால் இதிகாச காலம் என வர்ணிக்கப்படுகின்றது.
அடுத்ததாக நடந்த கலியுகமானது கி.மு.2,800 முதல் கி.பி.2000 வரை (யுக தாக்கம் கி.மு.3,100 முதல் கி.பி.2,100 வரை என கொள்க) பெரும்பாலும் உருவ வழிபாட்டை மேற்கொண்ட நவீன கலியுகம் ஆகும்.
இந்த அடிப்படையில் இனி கி.பி.2000 முதல் கிருதயுகம் எனும் சத்திய யுகம் ஆரம்பமாகிறது.
கிருதயுகம் என்பது யுகங்களில் முதன்மையானது. அதற்கு முன்னதாக இந்த சதுர்நிலை வழிபாடுகளை மேலும் ஆய்வு செய்வோம்.
முதல் நிலையான சரியை நிலையில் உள்ள நான்கு நிலைகளுடன் விக்கிரக ஆராதனை முடிந்து போகிறது.
இரண்டாவது நிலையான கிரியையில் உள்ள ஐந்தாவது நிலையிலிருந்து எட்டாவது நிலைவரை உள்ள வழிபாட்டிற்கு உருவங்கள் அவசியமில்லை. ஆனால் தர்ப்பை, பூணூல், மடிவஸ்திரம் சமய சின்னங்களான விபூதி, திருமண். ஆகியவை கண்டிப்பாக சாதனங்களாக தேவைப்படுகின்றது.
மூன்றாவது நிலையான யோகத்தில் ஒன்பதாவது நிலையிலிருந்து 12 வது நிலை வரை உள்ள வழிபாட்டிற்கு சமய சின்னங்கள், சாதனங்கள் அவசியமில்லை. ஆனால் பயன் படுத்துவதை தவறாக கருதுவதுமில்லை. அதே சமயம் புலால் மறுத்தல், நன்கொடை வாங்காமல் இருத்தல், பொய் சொல்லாமல் இருத்தல் போன்ற ஒழுக்கங்கள் கடைபிடிக்க வேண்டும் அத்துடன் பிரம்மச்சரியம் காக்கப்பட வேண்டும். மேலும் கடும் தவம் செய்வதும் மனக்கட்டுபாடும் வலியுறுத்தப்படுகிறது. சித்துவிளையாடல் செய்து தானே தெய்வநிலை அடைவதை குறிக்கோளாக கொண்ட வழிபாட்டு நிலையாகும். இதன் மூலம் மனிதன் பஞ்ச கிருத்தியங்கள் செய்யும் சக்தியையும் பெற இயலும்.
நான்காவது உள்ள ஞானநிலை வழிபாட்டில் 13வது நிலை முதல் 16வது நிலைவரை வழிபாடு அமைய பெறுகின்றது. ஞான வழிபாடு பற்றி அடுத்துவரும் அத்தியாயங்களில் விவரமாக காண்போம்.
ஒவ்வொரு வழிபாட்டிலும் மேநிலை இருக்கிறது. அந்தந்த வழிபாட்டில் மேநிலை அடைந்த மாபெரும் ஞானிகளை கணக்கிட்டால்,
சரியை நிலை வழிபாட்டில் திருஞான சம்பந்தரையும்
கிரியை நிலை வழிபாட்டில் ஆதிசங்கரரையும்,
யோக நிலை வழிபாட்டில் விஸ்வாமித்திரரையும்,
ஞானநிலை வழிபாட்டில் நமது ஞானகுருவாகிய,
திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் கருணைமிகு
சிதம்பரம் இராமலிங்கம் ஐயா அவர்களையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இத்ல் ஞான நிலை மட்டுமே இறுதி நிலை வரை ஆன்மாவை அழைத்து செல்லும் மற்றைய நிலைகள் குறிப்பிட்ட காலம் வரை மனிதனை பல படிநிலைகளை உயர்த்தி பிறகு மீண்டும் பிறவிக்கு அழைத்து வந்துவிடும் அதன் விவரங்களை ஜீவாத்மாக்களின் ஜீவித உரிமை எனும் அடுத்த அத்தியாயத்தில் விவரிப்போம்.
(தொடரும்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு