சனி, 31 ஜனவரி, 2015

மெய் ஞானத்தை அடையும் வழி.6.

மெய் ஞானத்தை அடையும் வழி

பகுதி-7

ஜீவாத்மாக்களின் ஜீவித உரிமை

படிநிலை பலவாய்ப் பத நிலை பலவாய்
இடிவற விள்ங்கிடு மென்றனிச்சித்தே
-(அகவல்- 1221-1222)

ஈஸ்வர சொரூபமே எல்லா உயிர்களும் என ஞானிகள் கூறுகிறார்கள். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வதற்கு என்ன வழி என்றும் பெருமான் எடுத்துரைக்கிறார். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என தமிழ் மூதாட்டி பாடியுள்ளார்.

இந்த கருத்துகளையும் மற்றும் நம் நாட்டில் உள்ள ஞானிகளும் யோகிகளும் கண்டறிந்த ஆன்மீக ஆய்வுகளயும் ஒரு பகுதியாக கொண்டு வள்ளல் பெருமான் தாம் பெற்ற ஞான தேகத்தின் துணையால் நமக்கு ஆன்மாக்களைப் பற்றி என்ன விவரமளிக்கிறார் என்று பார்க்கையில் பல்வேறு விஷயங்கள் வெளியாகின்றன.

ஆன்மாவானது இந்த பிரபஞ்சத்திலுள்ள பூமியில் ஜீவித்து கடைசியில் கல்ப முடிவிலோ அல்லது இடைவிடாத முயற்சியின் காரணமாக கல்பத்தின் இடையிலோ பரமாத்மாவில் ஐக்கியமாகி மற்ற ஜீவாத்மாக்களுக்கு ஜீவிதத்திற்கு வழி காட்டியாக அமைகிறது.

இவ்வாறாக கல்பத்தின் ஆரம்பத்தில் பரமாத்மாவிலிருந்து இந்த ஜீவாத்மா தனிப்பெருங்கருணையால் விடுவிக்கப்பட்டு மீண்டும் அந்த பரமாத்மாவை சென்று அடையும் வரை அது பல பல காலம் பல்வேறு படிநிலைகளையும், யோனி வர்க்கங்களையும் கடந்து மீண்டும் பரமாத்மா நிலையை அடைவதென்பது மிக நீண்ட பிரயாணமாக அமைகிறது. அந்த பிரயாணத்தின் தன்மையையும் அந்த பிரயாணத்தில் இறைவன் அந்த ஜீவாத்மாவிற்கு அளித்துள்ள உரிமைகள், கடமைகள், சக்தி, செயல் ஆகிய விவரங்களை முடிந்த அளவு எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் வள்ளல்பெருமானின் அருளாணைப்படி ஆய்வு செய்தோம்.

இந்த ஜீவாத்மாவின் பிரயாண நிலையை முதலில் வகைப்படுத்தினால் கீழ்க்கண்ட பகுதிகள் கிடைக்கின்றன.

ஏழு வகையான பிரயாண நிலையை ஜீவன் அடைகிறது.

1, அளவற்ற நிலையில் அணுவுக்குள் அணுவாய் அமைந்து அறிவு நிலைக்காக காத்திருப்பது.

2, ஓரறிவிலிருந்து ஐந்தறிவு வரை ஆன்மாவின் வெளிப்பாடின்றி பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட ஸ்தூல தேகத்தையும் அடைந்து ஆன்ம வெளிப்பாட்டிற்காக காத்திருப்பது.

3, ஆறறிவு அடைந்து ஆன்மா தன்னியக்கம், அடைந்து சூக்கும தேகமும். காரண காரியங்களும் அடைந்து தமது அடுத்த பயணத்தின் நோக்கத்தை தானே முடிவு செய்து எல்லா நிலைகளுக்கும் மூலதாரமாக ஸ்தூல தேகத்துடன் மனித நிலையில் காத்திருப்பது.

4, ஆறறிவு அடைந்து ஆன்மா தன்னியக்கம் அடைந்து, சூக்கும தேகமும் காரண காரியங்களும் அடைந்து ஸ்தூல தேக உதவியின்றி செயல்படும் நிலையடைந்து ஆடுறு சித்துக்கள் எனும் மாயா நிலை ஆன்மாவாக செயல்பட்டு வருவது.

5, ஆறறிவு, தன்னியக்கம், சூக்கும தேகம், காரணம், காரியம், காலம், இடம் ஆகியவைகளுக்கு உட்பட்டு பஞ்ச கிருத்தியங்களும், அஷ்டமாசித்துக்களும் அடைந்து, கூட்டுறு சித்துக்கள் எனும் யோக சித்தர் நிலையடைந்து எல்லா கீழ்படி நிலை உயிரினங்களை செயல்படுத்தும் சக்தியை இறைவனிடம் பெற்று செயல்படுவது.

6, ஆறறிவு, தன்னியக்கம், சூக்கும தேகம், ஸ்தூல தேகத்தையே சுத்த தேகம் பிரணவ தேகம் என மாற்றி பஞ்ச கிருத்தியங்கள் அஷ்டமாசித்துக்கள் அடைந்து அறிவுறு சித்துக்கள் எனும் ஞான சித்தர் நிலையடைந்து எல்லா உயிரினங்களுக்கும் அருளரசாட்சி காரண காரிய இடம், காலம் ஆகியவைகளுக்கு உட்பட்டு செய்தல்.

7, சுத்தமாதி தேகங்களை அடைந்து ஞான தேகத்தில் சூக்கும, ஸ்தூல தேகங்களை காரணம், காரியம், இடம், காலம், ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுத்துவது. மேலும் எல்லா உயிரினங்களையும் எல்லா அண்டங்களையும் எல்லாமாகிய எல்லாவற்றையும் கட்டுபடுத்தி தான் வேறு பரமாத்மா வேறு என்ற நிலை இல்லாமல் ஒன்றியிருந்து செயல்படுவது. இதுவே இறுதி நிலை என்பதுடன், இதுவே வள்ளல் பெருமானின் நிலை என்பதையும் அவரை அகத்தும் புறத்தும் உணர்ந்து அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களால் அறிந்து கொள்ளலாம்.

இந்த ஏழுவகையான நிலைகளையும் எந்த படி நிலைகளால் ஜீவாத்மா அடைகிறது என்பதை இனி காண்போம்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எனும் பரமாத்மாவிலிருந்து ஜீவாத்மா வெளிப்பட்டு இந்த ஏழு வகையான பிரயாண நிலைகளில் 108 படிநிலைகளை கடந்து மீண்டும் பரமாத்மாவில் ஐக்கியமாகிறது.

இந்த 1 முதல் 108 படிநிலைகளில் ஜீவாத்மாக்களின் ஜீவித உரிமை முற்றிலுமாக எவ்வாறு வழி நடத்தப்படுகிறது என்று ஞானகுரு கருணைமிகு இராமலிங்கம் அவர்களிடம் சத்விசாரம் செய்கையில் கிடைத்த விவரங்கள் வருமாறு.

முதலாவது படிநிலை முதல் 36வது படிநிலை வரை அறிவற்ற நிலையிலிருந்து ஓரறிவு உயிரினமாக உள்ளவரை கடந்து வருகிறது.

இரண்டு அறிவு பெற்று பல்வேறு யோனி வர்க்க பேதங்களில் நுழைந்து 37வது படிநிலை முதல் 61வது படிநிலை வரை ஆன்மா படிப்படியாக கடக்கிறது.

மூன்று அறிவு பெற்று பல்வேறு யோனி வர்க்க பேதங்களில் நுழைந்து 62வது படிநிலை முதல் 77 வது படிநிலை வரை ஆன்மா படிப்படியாக பயணம் செய்கிறது.

நான்கு அறிவு பெற்று 78வது படிநிலை முதல் 86வது படிநிலை வரை பல்வேறு யோனி வர்க்க பேதங்களில் நுழைந்து பயணம் செய்கிறது.

ஐந்தறிவு பெற்று 87வது படிநிலை முதல் 90 வது படிநிலை வரை பல்வேறு யோனி வர்க்க பேதங்களில் நுழைந்து பயணம் செய்கிறது.

1 முதல் 90 வரை உள்ள படிநிலை ஆன்மாக்கள் தமது உள்ளுணர்வு பூர்வமாக இறைவனின் இயற்கை நியதிக்கு உட்பட்டு செயல்படுகின்றன. இந்த ஆன்மாக்களுக்கு தன்னியக்கமும் வெளிப்பாடும் கிடையாது. அவற்றின் படிநிலை பயணம் என்பது இறைவனின் உரிமையாகிவிடுகின்றது.

இந்த 90 படிநிலைவரை உள்ள ஆன்மாக்களுக்கு மனிதனும் சேர்ந்து 84 லட்சம் யோனி பேதங்கள் உள்ளதாக ஞானிகள் கூறுகிறார்கள்.

91வது படிநிலை வரும் போது ஆற்றிவு பெற்று மனிதன் எனும் பெயரால் அறிவும், ஆன்மாவும் தனித்து செயல்படும் வழிவகை ஏற்படுகிறது. மனம் எனும் அதிகப்படியான ஒரு தத்துவமும் கூடுகின்றது. 96 தத்துவங்க்ள் ஆன்மாவுடன் இணைந்து மனிதன் எனும் பெயரை விளங்க வைக்கின்றன.

மேலும் மனிதனுக்கு ஆன்ம நிலையில் மேலேறுவதா கீழிறங்குவதா என்ற அடிப்படையில் தமது பயணத்தை அமைத்து கொள்ள முழு சுதந்திரமும் கிடைக்கிறது. மனிதனை தவிர எந்த படிநிலையிலும் இந்த சுதந்திரம் கிடையாது.

மனிதனை விட மேல் நிலையில் இருக்கும் அருவ நிலை ஆன்மாக்கள் கூட தன்னிலையை உயர்த்திக் கொள்ள விரும்பினால் மீண்டும் மனித நிலைக்கு இறங்கி வந்துதான் தன்னை உயர்த்தி கொள்ள இயலும். அதே சமயம் காலத்துக்கு உட்பட்டவர்கள் என்பதால் யுகமாற்றத்தில் மனிதனாக வந்து விடுவார்கள்.

(தொடரும்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு