வெள்ளி, 8 ஜூலை, 2011


சிருட்டி ஞாயம் !

ஆகாசம் அனாதி. அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி. அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி. அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ, அப்படிக் கடவுளிடத்தில் அருட்சத்தி அனாதியாய் இருக்கின்றது. ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பியிருக்கின்றன. இது போல் கடவுள் சமுகத்தில் - ஆன்மாகாசத்தில் - அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பியிருக்கின்றன. அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்.



பூதாகாயத்தி லிருக்கும் சாதாரண அசாதாரண அணுக்கள் எழுவகையாய்ப் பிரியும். அவையாவன: வாலணு, திரவவணு, குருவணு, லகுவணு, அணு, பரமாணு, விபுவணு, மேற்படி அணுக்கள் அனந்தவண்ண பேதமாய் இருக்கும். இவற்றில் காரியவணு, காரிய காரணவணு, காரணவணு என மூன்றுவகையாய் நிற்கும். யாவையெனில் பக்குவ ஆன்மா, அபக்குவ ஆன்மா, பக்குவாபக்குவ ஆன்மா என மூவகைப்படும். ஆகாயத்திலிருக்கும் அணுக்கள் மூன்று விதமானதற்குக் காரணம் அங்குள்ள காற்றேயாம். அதுபோல் ஆன்மாக்கள் மூவிதமானதற்குக் காரணம் கடவுள் சமுகத்திலுள்ள அருட்சத்தியேயாம்.



அப்படி மூவகையான ஆன்மாக்களுக்கு - அருட்சத்தியின் சமுகத்தில் தோன்றிய ஞானங் கிரியை யென்னும் பேதத்தால் ஆன்மாக்களுக்குத் தேகம் மூன்றுள. யாவையெனில்: கர்ம தேகம், பிரணவ தேகம், ஞானதேகம், என மூன்று விதம். அப்படி மூன்று தேகம் உண்டானதற்குக் காரணம்: பூத ஆகாயத்தி லுண்டான வாயு பேதத்தினால் சோமசூரியாக்கினி யென மூன்று வகை நிற்பன போலுணர்க. அந்த ஆகாயத்தை விரிக்கில் அனந்த பேதமாம். வாயுவின் பேதம் அதுபோலனந்தம். ஒருவாறு அறுபத்து நான்குகோடி பேதம். இவற்றில் அமுதபாகம், விஷபாகம், பூதபாகம், உஷ்ணபாகம் எனப் பலபேதப்படும்.



மேற்படி அணுக்கள் அனந்த வண்ண மாதலால், அனந்த அணுக்கள் சேர்ந்து ஒரு வித்தாய், இவ்வித்து திரவஅணு சம்பந்தமாய் குரு அணுவோடு சேரும்போது, பூதகாரிய அணுவாகிய கிரண உஷ்ணத்தால் ஜீவிக்கும். ஜீவித்த ஓஷதி முதலியன இந்த நியாயத்தால் வர்ணம் ருசி முதலிய பேதப்படுகின்றன. இவ்வண்ணமே பௌதிக பிண்ட அணுக்கள் காரண சூரிய உஷ்ணமாகிய ஜீவ உஷ்ணத்தால் வடிவமாய், பரமகாரணதயையால் ஜீவிக்கின்றன. சிலகாலத்தில் வித்துக்களாதியாம். சிலகாலத்தில் விருக்ஷமாதியாம். எல்லாவற்றிற்கும் ஆதியாயுள்ளது பூதகாரிய அணுவாகிய சூரிய கிரணமேயாம்.



இவ்வண்ணமே, ஒரு காலத்தில் கடவுள் பிரேரகத்தால் அருட் சத்தி ஆன்மாகாசத்தில் விசிரிம்பிக்க, ஆன்மாக்கள் வெளிப்பட்டுப் பஞ்சகிருத்தியத் தொழிற்படும். மேற்படி ஆன்மாக்கள் வெளிப்பட்ட அக்கணமே, மேற்படி ஆகாயம் சந்தானமாதலால், ஆன்மாக்கள் நிரம்பி நிற்கும். ஆதலால் பஞ்சகிருத்தியம் எக்காலத்தும் தடையுறாது. ஆன்மாக்கள் தாழ்ந்த கதியடைவது அனாதியியற்கை யல்ல; ஆதி செயற்கையே யாம். ஆணவம் அனாதி யியற்கையே யாம். இதன் ரஹஸ்யம் குருமுகமாயறிக.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு