செவ்வாய், 19 ஜூலை, 2011

இறைவன் இருக்கிறானா?


இறைவன் இருக்கிறானா?

ஒரு பெரியவர் தனிமையான இடத்தில் அமர்ந்து இறைவனை தியானித்துக்
கொண்டிருந்தார்.அவரைக் கண்ட ஒரு இளைஞன் அவரருகே சென்றான்.
ஐயா தங்கள் என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்?என்பதை
நான் அறிந்துகொள்ளலாமா?என்று கேட்டான்.

அதற்கு அவர்,இளைஞனே!!
"அனைத்திற்கும் ஆதாரமாய் விளங்கும் இறைவனுடன் இரண்டற
கலக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன்"என்றார்.
உடனே அவன்,
"ஐயா கடவுள்,கடவுள் என்று கூறுவது மூடத்தனம்,
"கடவுளை நீங்கள் கண்ணால் கண்டிருக்கிறீர்களா?"என்று கேட்டான்.

"தம்பி காண முயல்கிறேன்"

"கடவுளின் குரலை காதால் கேட்டுருக்கிறீர்களா?"

"இல்லை."

"இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்துக்கொண்டு
அரிய நேரத்தை வீணடிக்கிறீரே?"

"தம்பி உன் சட்டைப் பையில் என்ன உள்ளது?"

"இது தேன் பாட்டில்."

"அப்பா,தேன் இனிக்குமா?,கசக்குமா?"

"இது தெரியாதா?இனிக்கும்"

"தம்பி இனிக்கும் என்றாயே!அந்த இனிப்பு என்பது கருப்பா,சிவப்பா?"

"ஐயா,தேனின் இனிமையை எப்படி சொல்வது?
இதை கண்டவனுக்கு தெரியாது,உண்டவனே உணர்வான்."

பெரியவர் புன்முறுவல் பூத்தார்.

"அப்பா,இந்த பௌதிகப் பொருளாக,ஜட பொருளாக உள்ள
தேனின் இனிமையையே உரைக்க முடியாது.உண்ணடவனே
உணர்வான் என்கிறாயே?ஞானப் பொருளாக,அனுபவப் பொருளாக விளங்கும் இறைவனும் அப்படித்தான்.அவரவர் சொந்த அனுபவத்தில்தான் உணர்தல் வேண்டும்" என்றார்.

இதையே திருமூலரும்

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவனிவன் ஆமே.

நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான்அறிந் தார் அறியாது மயங்கினர்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறி யான்பின்னை யார்அறி வாரே?

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே!
என்றுரைக்கிறார்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்

சார் உலக வாதனையை தவிர்த்தவர் உள்ளகத்தே
சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தம சற்குருவை
நேர உறவே எவராலும் கண்டு கொள்ள அரிதாம்
நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தானாகி
ஏருறவே விளங்குகின்ற இயற்கை உண்மை தன்னை
எல்லாம் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பதியை
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடுமின்
உள்ளமெலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே!

என்று பதிவு செய்துள்ளார்.அடுத்து எப்படி நினைக்க வேண்டும் என்று பதிவு எய்துள்ள பாடல் வருமாறு ;--

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான
நடத்தரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகிலீர்
மரணம் இல்லா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல் கின்றேன்
பொற் சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே!

என்பதை தான் அடைந்த அனுபவத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதை தெரிவித்து உள்ளார் .இந்த உலக வாதனைகள் எதிலும் தொடர்பு இல்லாமல் இறைவனை நினைந்து உணர்ந்து கண்ணீர் மல்க அழவேண்டும் என்கிறார் வள்ளலார்.அவர் சென்ற பாதை அதாவது வழியை நமக்கும் தெரியப்படுத்தி யுள்ளார் அவர் காட்டிய சுத்த சன்மார்க்க பாதையில் நாமும் சென்று மரணம் இல்லா பெருவாழ்வில் வாழ்வோம்.

அன்புடன் உங்கள் ஆன்மநேயன்;--கதிர்வேலு.          

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு