வெள்ளி, 4 மார்ச், 2011

நெறி நின்றார் நீடு வாழ்வார்

.

      திரு வருட்பிரகாச வள்ளலார் அருளிய விண்ணப்பம்.

அருட் பெருஞ் ஜோதி ஆண்டவரே !

      இந்த உலகத்தில் உண்மையான கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி 

ஆண்டவராகிய கடவுள் ஒருவர் உள்ளார் என்றும்,அவர் அருட்பெரும் 

கருணையாக உள்ளார் என்றும்,அவர் அருட்பெரும் ஒளியாக உள்ளார் 

என்றும்,சத்திய அறிவால் அறிந்து கொண்டேன்.

      அருட்பெருஞ் ஜோதி ஆண்டவராகிய உண்மைக்கடவுளை 

இந்த உலக மக்கள் அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ள 

வேண்டுமென்ற பேராசையால் எல்லா உயிர்களும் அழியாத 

பேரின்ப சித்தி பெருவாழ்வு பெற்று மரணத்தை வென்று என்றும் 

அழியாத சுத்ததேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம்,பெற்று 

அருட்பெருஞ் ஜோதியை அடைய வேண்டும் என்பதற்காக,

      பூர்வ ஞான சிதம்பரத்தின் வடபால் பார்வதி புரமென்று

குறிக்கப்படுகின்ற உத்தர ஞான சித்திபுரத்தில் அருட்பெருஞ் ஜோதி 

ஆண்டவர் அமர்ந்து அருள் நடம் புரிவதற்கு அடையாளமாக 

ஓர் ஞான சபை காணுதல் வேண்டுமென்றும திருவருளால் அறிவிக்க 

உள்ளபடி அறிந்து கொண்டேன்


அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே !             

        தேவரீர் அருளுருவாகி எங்களகத்தும் புறத்தும் அமர்ந்தருளி 

நாங்கள் செய்யும் இவ்வலங்காரத் திருப்பணியில் எவ்விதத்தாலும்,

யாதொரு தடையும் வராத வண்ணம் செய்வித்து அவ்வலங்காரத்

திருப்பணியை முற்றுவித்து அருளல் வீண்டும். 

சர்வ வல்லபராகிய தனித்தலைமை கடவுளே !

       அத்திரு வலங்காரத் திருப்பணி முற்றிய தருணத்தே தேவரீர் 

அமர்ந்தருளி அற்புதத் திருவருள் விளக்கத்தால் எங்களையும் 

இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மை 

அடியார்களாக்கி,உண்மையறிவை விளக்கி உண்மை இன்பத்தை 

அளித்துச சமரச சுத்த சன்மார்க்க சத்திய நிலையில் வைத்துச 

சத்திய வாழ்வை யடைவித்து,நித்தியர்களாக்கி வாழ்வித்தல் 

வேண்டும் .

       எல்லாமுடைய அருட்பெருஞ் ஜோதி அற்புதக் கடவுளே !

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய 

தடைகளாகிய சமயங்கள்,மதங்கள் .மார்க்கங்கள் என்பவற்றின் 

ஆசார சங்கற்ப விகற்பங்களும்,வருணம் ஆசிரமம் முதலிய 

உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றா

வண்ணம் அருள் செய்தல் வேண்டும். 

     சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய

ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் ,எவ்விடத்தும் 

எவ்விதத்தும்,எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச 

செய்வித்தருளல் வேண்டும். எல்லாமாகிய தனிப்பெருந்தலைமை 

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே !தேவரீர் திருவருட் பெருங் 

கருணைக்கு வந்தனம் !வந்தனம் !

இப்படிக்கு 
சிதம்பரம் இராமலிங்கம் .

மேலே கண்ட விண்ணப்பத்தை நம் வள்ளல் பெருமான் தெளிவாக 

எழுதி வைத்துள்ளார் இந்த விளக்கத்தை அறிந்து புரிந்து கொண்டு 

நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டுமாறு உங்கள் அனைவரையும் 

வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் .

மேலும் பூக்கும்;--

அன்புடன் கதிர்வேலு .         


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு