வியாழன், 23 செப்டம்பர், 2010

வடலூரில் அருள் ஒளி தெரிகிறது !

         வடலூர் !
   வடலூர் என்று வாய் திறக்குமுன்னே வள்ளலார் வந்து
முன் நிற்பார் ,நாவு பேச தொடங்கு முன்னே ''ஞான சபை ''
அறிவில் ஒளி வீசும் ,மனம் என்னும் முன்னே'' தருமச்சாலை ''
மணக்கண்ணில் காட்சி தரும்.

      வையகத்தில் வேறெங்கும் காணாதது வடலூர் என்பதாகும்.
உலகில் உள்ளோர் வடலுரை பார்வதிபுரம் என்றும் ,அருளியலார்
உத்தரஞான சிதம்பரம் என்றும் ,உத்தரஞான சித்திபுரம் என்றும்
பெயரிட்டு அழைக்க வேண்டும் என்பது ,வள்ளல் பெருமானின்
ஆணையாகும் .

      வடலூர் ,வீதியிலே அருட்பெருஞ்ஜோதி விளையாடி அருள்
ஓங்குவதாகும்,வருபவர்களுக்கு மருளைத் தவிர்த்து ,நல்ல
வரமளிப்பதாகும் .!கலக்கமில்லாத்து ,அனைவருக்கும் திலகம்
என விளங்குவது ,சமரச சுத்த சன்மார்க்கம் கலந்தது.
உலகம் எல்லாம் தொழக் கூடியது,பாவம் தவிர்த்துச சாகாவரம்
அளிப்பது.

      ஏழை ,பணக்காரர் ,உடையார் ,வறியார்,ஆண்டான் ,அடிமை ,
முதலாளி தொழிலாளி ,உயர்ந்தோர் தாழ்ந்தோர் ,என்ற நிலையை
மாற்றி,ஒத்தார் உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாவரும் ஒருமித்து ,
வாழச செய்வது !ஏகாந்தமாகி எங்கும் வெளியாய் இருப்பது .

      உலகில் எங்கும் இல்லாத வகையில் ,தருமச்சாலை ,
ஞானசபை ,இருப்பது .பசித்தவர்களுக்கு உணவளிப்பது ,
அருள் இல்லாதவர்களுக்கு அருளை அள்ளித் தருவது .
இறந்தாரை எழுப்பித் தருவது,மூபபினரைஇளமையாக்குவது ,
போன்ற அருள் நிறைந்த இடமாகும் வடலூர் .காணாத
காட்சிகளைக் காட்டக் கூடியது,ஈடு  இணையில்லாதது,
தான் தனக்கே ஏற்றது என வடலூரின் சிறப்பை விளக்குகிறார்
வள்ளலார் அவர்கள் .

          வள்ளல் வருகை !

    வள்ளலார் என்னும் அருலாளர்!வெப்பம் தவிர்க்கும்
கற்பக விருடஷம்,மருதூரில் தோன்றி ,சென்னையில்
கிளைத்து , ஒற்றியிலும் தில்லையிலும் பூத்து ,வடலூரில்
காய்த்து, சித்திவளாகத்தில் கனிந்து ,அருள் என்னும் அமுதம்
சரந்து  தானும் அருந்தி ,எல்லா உயிர்களுக்கும் அமுதம்
கொடுத்து ,மணம் பரப்பிக் கொண்டு இருப்பவராகும்
எல்லா உலகிற்கும் இனிமையான செய்தியை, தந்து கொண்டு
இருப்பவராகும் வள்ளலார் அவர்கள் .

      சாதி ,மதம் ,சமயம் .

    பெரிய உலகின் கண் நிலவும் ;--சிவம் ,பாசுபதம் ,கனாமுகம்,
வாமம்,வயிரவம் ,மீமாம்மிசை,பவுத்தம்,சமணம் ,
பாஞ்சராத்ரம்,ஏகான்ம வாதம் ,உலகாயதம் ,கிருத்துவம் ,
மகமதியம் ,ஆக பதினான்கு சமயங்களும் !

     இதனுள் பாஷாண்டம்,விரோசனம் ,சாருவாகம் ,உபாசகம் ,
ஷ்ணிகம் ,அந்தாரளம், ஆகமம் ,நிகம்பரம் ,பிரமகரம் ,
தார்க்கீகம்,பாட்டம் ,சாங்கியம் ,யோகம் ,பதஞ்சசலியம்,
விஷ்வ ரூபம் ,பிரஜாபத்தியம்,காணாபத்தியம் ,கெளமாரம்,
பெள்ராணியம்,கன்மம் ,கத்தோலிகம், பிராட்டஷ்ட்டென்ட் ,
பெந்த கோஷ்தே,லப்பை ,ராவுத்தர் ,பட்டாணி. ,இன்னும்
அநேகவிதமான உட்பிரிவுகள் கொண்ட மதங்களும் ,
சமயங்களும் ,மனிதனுக்கு அபயமளித்து ஒற்றுமையை
வளர்த்து, உன்னத நிலையில் வைக்க வந்த சமயக்
கூட்டங்களாகும்,

     இந்த கூட்டங்கள் உயர்வு தாழ்வு கோரி ,என்மார்க்கம்
பெரியது ,உன்மார்க்கம் பெரியது என்று போரிட்டு அழிந்து
வீணாக மாண்டு போனார்கள் .ஆதலால் உண்மை யான
மார்க்கம் எது என்று தெரியாமல், அவதிப்பட்டு கொண்டு
இருக்கிறார்கள் .

     மக்களின் அறியாமையால் நிகழுகின்ற ,வெவ்வினைக்
காடுகளை வேரோடு அகற்றவும் ,கொத்தித்த உலக ஆச்சாரக்
கொதிப்பெல்லாம் அடக்கவும் ,சாதி ,சமயச சழக்குகளைப்
போக்கவும் அவனிக்கு அருளார்களை ,அனுப்பிக் கொண்டு
இருப்பவர் அருட்பெரும்ஜோதி ஆண்டவராகும் .

     சித்தர்கள் ;---

பற்று அற்ற நிலையில் சித்தர்கள் வந்தார்கள் ,மக்களுக்கு
எவ்வளவோ எடுத்து உரைத்தும் ,திட்டியும் ,எழுத்து மூலமாக
எழுதியும் வைத்தார்கள் ,சாதிக்கு, சமயத்துக்கு,மதத்துக்கு தீ
இட்டு கொளுத்துவோம் ,அழிப்போம் என்று பலவழிகளிலும்
போராடினார்கள் , மக்கள் திருந்துவதாக இல்லை ,
என்பதை அறிந்த சித்தர்கள் ,காடுகளிலும் ,மலைகளிலும் ,
குகைகளிலும் பொந்துகளிலும் ,தனக்குதானே தவம் ,யோகம் ,
தியானம் செய்து ,சமாதியானார்கள் ,அவ்ரகளாலும் பயன்
ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்த ஆண்டவர் மனம்
உடைந்து, சலிப்புற்று முடிவாக ஒருவரை அனுப்பிவைக்கிறார் .

வள்ளலார் ;---

         காடுவெட்டி நிலம் திருத்தி கஷ்டப்பட்டு காட்டெருவும்
போட்டு ,நன்செய் பயிரான கரும்பு ,நெல, வாழை போன்ற
பயிர்களை வைக்காமல் ,விஷமான கடுகு விதைத்து களிப்பது
போன்று ,பல பிறவிகளுக்கு பின் தவப்பயனால் ,வந்த இந்த
அறிய மனிதப்பிரவியாகும்,என்பதை அறியாமல் அழிவதை
கண்ணுற்ற பெருங்கருணைப் பெருமான் அருட்பெரும்ஜோதி
ஜோதி ஆண்டவர் !இந்த உலகத்திற்கு ஒரு உயர்ந்த பக்குமுள்ள
ஆன்மாவை உயிர் ஒளியை அனுப்பிவைக்கிறார் .

     நீ விரைந்து சென்று உலகில் உள்ளவர்களுக்கு ,புதிய
மார்க்கமான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை ,
தோற்றுவித்து ,உண்மையை உணர்த்தி ,மெய்ப்பொருளை
அறிவித்து ,அருள் நிலையை காட்டி ,அனைவரும் அருளை
அடையும்படி செய் ,நீ எனது பிள்ளை என்பதாலே உனக்கு
இந்த வேலையை கொடுக்கிறேன் !வேறொன்றும் எண்ணாதே !
விரைந்து செல் என்று ஆணை இட்டாராம் .

     அந்த ஆணையை சிரமேற் தாங்கி அவனிக்கு வருகை தந்தவர்
தான் வள்ளல் பெருமான் ஆவார் !

     உள்ளொன்று வைத்து புறம்ஒன்று பேசி ,அகம் கருத்துப்
புறம் வெளுத்து இருக்கும் உலகத்தைத் திருத்தி -சன்மார்க்கச
சங்கத்தில் சேர்த்து அனைவரையும் புனிதர்களாக்க வேண்டும்
என்ற ஆணையை ஏற்று வருவிக்க உற்றேன், வந்தேன் ,
என்பதை முதலில் ,தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்
வள்ளலார் அவர்கள் .

    எந்நாட்டிலும் மேம்பட்டு விளங்கும் தென்னாட்டிலே
ஆகாயத்தலம் என்று பல வகைகளிலும் சிறப்புற்று விளங்கும்
தில்லைச சிதம்பரத்தின் வட மேற்கு எல்லையில் உள்ள
மருதூரில்,அவல் வயிற்றை வளர்ப்பதற்கு,அல்லும் பகலும்
தொல்லைப் பட்டாலும் ,இறைவன் பாதத்தை எண்ணுதலே
தொழிலாக உடைய ,இராமையாவிற்கும் ,பிள்ளைக்
கலிதீர்த்து,உள்ளக் கவலை யொழிக்க வந்த ,உத்தமியாம்
சின்னம்மைக்கும் ஐந்தாவது குழந்தையாக அவதரித்தார்
வள்ளலார் அவர்கள் .

     வள்ளலார் தனது தாய் ,தந்தை ,தமையன் ,தமைக்கை ,
இவர்களுடைய பெயர் இன்னது என எந்த இடத்திலும்
அறிவிக்கவில்லை .'' தாய முதலாரோடு தில்லைத்
தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது ''என்றும்
'பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சி பேருணவு
உண்டனன் சில நாள்''என்றும் ''தாயாராதியர் சலிப்புறுகிற்பர்
தமரும் எந்தனைத் தழுவதல் ஒழிவர் ''என்றும் ''என்னைப்
பெற்றவர் ,நேயர் ,உற்றவர் பிரிவை உற்றிடும் தோறும
உள்ளம் உடைந்தேன் ''என்றும் பெயர் குறிப்பிடாமலே
கூறியுள்ளார்.

      நமது தாய் தந்தையர்கள் ,உபகாரக் கருவிகள் என்கிறார் .
அதாவது குயவன் மண்பாண்டம் செய்ய நிழல் உதவுவது
போன்று ,நாம் தோன்றுவதற்கு உதவியாக உள்ளவர்கள் ,
என்றும் உபசாரத்தால் பெற்ற தாய் தந்தையர்கள் ஆவார்கள்
என்பதை தெளிவாக குறிப்பிட்டு உள்ளார் .உண்மையான
உடம்பை கொடுத்த தாய் ''பெருமாயை''என்னும் பெண்ணாகும் .
உண்மையான ''தந்தை'' உயிரை கொடுத்த ''அருட்பெருஞ்சோதி''
என்னும் தந்தையாகும்

     தாயும் தந்தையும் ஞான சபையிலே தனி நடம் புரியும் தலைவர் ,
என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.நமது தாய் ,தந்தையர் நம்மை
காப்பதில் சலிப்பும் ,வெறுப்பும் கொள்ளுவார்கள் ,அருட்பெரும்ஜோதி
இறைவன் ,நம்மைக் காத்தலில் கண நேரம் கூட,வெறுப்போ ,
சலிப்போ கொள்ள மாட்டார் . மேலும் தாய் தந்தையர் நாம் பிறந்த
பின்னர் பால் உணவு கொடுத்து காப்பாற்றுவார்கள்.இறைவன்
நம்மை உருவாக்கியதோடு கருவறையிலே நாம் பசித்த போது ,
பூத காரிய அமுதத்தை ஊட்டுவித்துப் பசியை தவிர்த்தவர் என்பதை
விளக்குவார் .பெற்றவர் சஞ்சனன் என்றும் ,தாய் வினைச்சி என்றும்
தந்தை ஆசை என்றும் பொதுவாக குறிப்பிட்டு உள்ளார் .

       கல்வி ;--

     வள்ளலார் அவர்கள் இலக்கணங்களிலே உள்ள பிழைகளை
எடுத்துக் காட்டுவதால் ,அவர் ஓரளவேனும் ஆசிரியர் இடத்தில்
பயின்று இருக்க வேண்டும் என்று பலர் கூறுவார்கள் .
திரு அருட்பாவை ஊன்றிப் பார்த்தால் படித்தால் ,அவர் ஆசிரியர்
இடத்தில் பயிலவில்லை என்பது தெளிவாகும் உறுதிபடுத்தும் .
ஒருவன் பல பிறவிகளில் படிக்க முடியாத நூல்களை ''அருள் ''
முன்னிடமாக நோக்கினால் கண நேரத்தில் படித்து விடலாம்
என்பது வள்ளலார் கண்ட முடிவாகும் .

     கற்றே யறியாக் கடை நாயேன் எனவும் ,கற்ற நற்றவர்க்கே
அருள் வீரேல் கடையனேன் எந்தக் கடைத்தலை செல்கேன்,
என்று தன்னைத் தாழ்த்திக் கூறும் வள்ளலார் ,
இறைவா !நினது அருளாலே'' கற்றதும் நின்னிடத்தே ,கேட்டதும்
நின்னிடத்தே''எனவும் .''ஓதும் மறை முதற்கலைகள் எல்லாம்
ஓதாமல் உணர உணர்விலிருந்து அருள் உண்மை நிலை காட்டி ''
எனவும் , ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக்கேட்ப எனைத்தான்
ஓதாமல் உணர்ந்து உணர்வால் உறவுறச செய்த உணர்வு எனவும் ,
குமாரப் பருவத்தில் என்னைக் கல்வி பயிற்றும்ஆசிரியர் இன்றியே
என் தரத்திற்குரிய அருமையான கல்வியை என் உள்ளகத்தே
இருந்து பயிற்று வித்து அறிளினீர்!என்றும் தெளிவு படுத்துவதால்
வள்ளலார் ஆசிரியர் இடத்தில் கல்வி பயிலவில்லை என்பது
நன்கு உணர்த்தப் பட்டு உள்ளது .வள்ளலாருக்கு குரு
அருட்பெரும்ஜோதி ஆண்டவர்தானே தவிர வேறு யாரும்
குருவல்ல என்பது தெளிவாகும் ,

      உணவு ;---    
             
    வள்ளலார் இளமையில் பள்ளியில் கல்வி பயிலாமையால்
அண்ணன் உணவும் உடையும் கொடுக்க மறுத்து விட்டார் ,
வள்ளலார் அண்ணனுக்குத் தெரியாமல் வீட்டின் பின்புறமாக
வந்து உணவு உண்பார் என்பது வரலாறு தரும் செய்தியாகும் .
வள்ளலார் அப்படி உணவு உண்பதாக அருட்பாவில் தெரியப்
படுத்தவில்லை .அவர்கூறுவது,நான் இரண்டு பொழுது
உண்டதெல்லாம் இனிய உணவாயிற்று !என்பதால் வள்ளலார்
இளமையில் ஒரு நாளைக்கு இருவேளை உண்டார் என்பதும் ,
அறிவில்லாத சிருபருவத்திம் அருந்தலில் எனக்குள் இருந்த
வெறுப்பை பிரிவிலாது என்னுட் கலந்த நீயறிவாய் என்று
கூறுவதால்,தான் இளமையிலே வெறுப்போடு உண்பதாக
தெரிவித்துள்ளார் .

      உப்பிடாத கூழிடினும் உவந்து உண்பேன் என்று கூறுவதால்
கிடைத்ததை இறைவன் கொடுத்தாகக் கருதி உண்பார் என்பதும் ,
''இன்புறு சுகமாம் உணவினைக் கண்ட காலத்தும் இச்சுகத்தால்
இனியாது துன்புறுங் கொல்லோ என்று உளம் நடுங்கி சூழ் வெறு
வயிற்றோடு இருந்தேன் ,என்பதால் வள்ளலார் அறுசுவையில்
விருப்பம் கொள்ளவில்லை என்பதும் ,தெற்றியிலே நான் பசித்து
படுத்த இளைத்த தருணம் திருவமுதோர் திருக்கரத்தே திகழ்
வள்ளத்தெடுத்தே ஒற்றியிற் போய் பசித்தனையோ என்று எழுப்பி
உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கினிதான் தாயே ''
என்பதால் ,வள்ளலார் ஆங்காங்கு பசியுடன் இருப்பதை அறிந்து
இறைவன் உணவு கொண்டு வந்து ஊட்டினான் என்பது வள்ளலார்
எழுதிய திருஅருட்பா தரும் செய்திகளாகும் .

     அருள் உணவு ;--  உணவு இரண்டு வகைப்படும் ஒன்று
அருள் உணவு .மற்றொன்று பொருள் உணவு ,வள்ளலார்
பொருள் உணவு விரும்பவில்லை .அருள் உணவு தான்
விரும்புவார்கள் ,பொருள் உணவு உண்டால் மரணம்
வந்து விடும்.அருள் உணவு உண்டால் மரணம் வராது
என்பது வள்ளலாரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும் .

     ஆதலால் அருள் உணவிலே நாட்டம் கொண்டார் .அருள்
உணவு தவிர வேறு எந்த உணவும் உண்ணமாட்டேன் என்பதில்
அழுத்தமாகவும் ,அசைக்க முடியாத நம்பிக்கை யுடனும்
வைராக்கியத்துடனும் இருந்தார் .அதை அறிந்த அருட்பேரொளி
என்னும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் .அருள் உணவு கொடுக்க
தானே வந்து கொடுத்ததாக வள்ளலார் பல பாடல்களில்
தெரியப்படுத்தி உள்ளார் !

     பாடல் ;---
நான் பசித்த போதெல்லாம் தான் பசித்த் தாகி
நல்லுணவு கொடுத்து என்னைச செல்வமுற வளர்த்தே
ஊன்பசித்த விளைப்பொன்றும் தோற்றாத வகையே
ஒள்ளிய தெள்ளமுது எனக்கு இங்கு உவந்தளித்த வொளியே
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் மரிதாம்
வாழ வெனக்கே யாகியுற வரமளித்த பதியே
தேன் பசித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
திருநடஞ் செய் யரசே என் சிறு மொழி யேற்று அருளே !

என்று தெளிவு படுத்தியுள்ளார் ;--அடுத்து

நான் பசித்த போதெல்லாம் தான் பசித்தராகி
நல்ல திரு அமுதளித்தே யல்லல் பசி தவிர்த்தே
ஊன்பதித்த வென்னுடய வுளத்தேகம் முடைய
உபயபதம் பதிததருளி யபய மெனக் களிததார்
வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும்
மணவாளர் எனைப் புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்
நான் பதித்த பொன்வடிவம் தனை யடைந்து களித்தேன்
சாற்றும் அகப் புணர்ச்சியினால் ஏற்றம் உரைப்பதுவே !

என்று வள்ளலார் பல பாடல்களில் தெரியப்படுத்தியுள்ளார்
ஊன உடம்பு ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க ஞான அமுதம்
நல்கிய நாயகனே, என்றும் ஊன  உடம்பு ஒளி உடம்பாக
மாறியதையும் .தன் உடம்பு ஒளியாக மாறியதையும்.
ஒளி உடம்பு கிடைத்தால்தான்  மரணம் வராது என்பதையும்
தெள்ளத் தெளிவாகத்  தான் அனுபவித்து தெரிவித்துள்ளார்

உலகில் தோன்றிய யாவருக்கும் கிடைக்காத அருள் தேகம்
தனக்கு கிடைத்ததாக அறிவிக்கறார் ! .
எல்லார்க்கும் கடையாகி இருந்தஎனக்கு அருள் புரிந்தாய் !
என்னைவிட பெரியவர்கள் நிறைய பேர் இருந்துள்ளார்கள்
அவர்களுக்கு செய்யாமை யாது என்று. அருட்பெரும்ஜோதி
ஆண்டவரை கேட்கிறார் வள்ளலார் ,உன்னை கேட்பதற்கு
யாரும் இல்லை என்றா ?இப்படி செய்தீர் என வினவுகிறார் .

பாடல் ;---
எல்லார்க்குங் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே
எல்லார்க்கும் துணையாகி இருக்க வைத்தாய் யெம்பெருமான்
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்றாய் யிவவண்ணம்
எல்லார்க்குஞ் செய்யாமை யாது குறித்து இசை யெனக்கே

நாட்பாரில் அன்பரெலாம் நல்குக வென் றேத்தி நிற்ப
ஆட்பாரில் அன்போர் அணுத்துணையும் மில்லேற்கே
நீட்பா அருள் அமுதம் நீ கொடுத்தாய் நின்னை யிங்கே
கேட்பாரில்லை என்று கீழ் மேல் தாக்கினையே .!

என்பதை பல பாடல்களில் ஆண்டவரிடத்தில் கேள்வி
கேட்கிறார் வள்ளலார். .அதற்க்கு அருட்பெரும்ஜோதி
ஆண்டவர் பதில் சொல்லுவதாக வரும் செய்திகள் .

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து பல ஆன்மாக்களை
அனுப்பினேன் .அதில் பக்குவமுள்ள ஆன்மாக்கள் பல
அனுப்பினேன் .அவைகளுக்கு அருள் கொடுத்து அனுப்பி
வைத்தேன்.அவைகளும் பூலோகத்திற்கு வந்து ,வந்த
நோக்கம் என்ன என்று தெரியாமல் மற்ற ஆன்மாக்கள்
போலவே உலகப் பொய்யான வாழ்க்கையிலே ,வாழ்வதற்கு
ஆசைப்பட்டு அழிந்துவிட்டார்கள் .

மறுபடியும் தேவ தூதர்களை அனுப்பினேன் ,அவர்களும்
மாயையில் சிக்குண்டு ,பொய்யான கதைகளும் ,பொய்யான
கற்பனைகளும் சொல்லி மக்களை ஏமாற்றி விட்டார்கள் .
மக்களும் அதையே உண்மை என்று நம்பி ஏமாந்து கொண்டும்
 அழிந்து கொண்டும்  இருந்தார்கள்,அதன்பிறகு உன்னை அனுப்பி
வைத்தேன் நீ ஒருவர்தான் உலகத்தின் உண்மைகளையும் ,
உயிர்களின் உண்மைகளையும் ,ஆண்டவர் யார் என்ற
உண்மையையும் ,தெளிவாக உலக உயிர்களுக்கு [ஆன்மாக்களுக்கு ]
தெரியப்படுத்தி உள்ளீர் .பொருள் உணவு உண்ணாமல் ,அருள்
உணவு உண்டு அழியாப் பெருவாழ்வு வாழ்ந்துள்ளீர் ,ஆதலால்
நீ ஒருவன் தான் என பிள்ளையாக தேர்வு பெற்று உள்ளீர்
அதனால் உனக்குமட்டும் அனைத்து ஆற்றல் களையும்
கொடுத்துள்ளேன் ,நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல்
உலகத்தில் ஆடி பாடி விளையாடி மகிழ்க என்றார் அருட்
பெரும்ஜோதி ஆண்டவர்

ஆண்டவர் அருளைப் பெற்ற வள்ளலார் ,உலக மக்களுக்கு
அனைத்து உண்மைகளையும் திரு அருட்பா நூலின் வாயிலாக
எழுதி வைத்துள்ளார் .

பாடல்;--- 

அகத்தே கருத்துப் புறத்து வெளுததிருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச சன்மார்க்க சங்கத் தடை வித்திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கென்றே எனையிந்த
யுகத்தே யிறைவன் வருவிக்க வுற்றேன் அருளைப் பெற்றேனே.

இறைவன் அனுப்பிய நோக்கம் என்னவோ !அனைத்தும் முறை
தவறாமல் செயல்பட்டதால், இறைவன்! அவருடையப்
பொறுப்புகள் அனைத்தும் வள்ளலாரிடம் ஒப்படைத்து
விடுகிறார் .

ஆதலால் அருட்பெரும்ஜோதியின் அனுமதியோடு
தன்னுடைய மார்க்கத்திற்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்''
என்று பெயர் சூட்டுகிறார் .இந்த மார்க்கம் மற்ற மார்க்கங்கள்
போல் அல்லாமல், உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான
மார்க்கமாகும் என்று தெளிவுப் படுத்துகிறார் வள்ளலார் .

பாடல்கள்;----

துன் மார்க்கமெல்லாம் தொலைத்து விட்டேன் சுத்தசிவ
சன்மார்க்கச சங்கம் தலைப் பட்டேன் ----என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றே வானாட்டார் புகழ்கின்றார்
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து .

பன்மார்க்கம் எல்லாம் பசையற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே ---சொன்மார்க்கத்
எல்லா வுலகமும் இசைந்தனவே யெம்பெருமான்
கொல்லா நெறி அருளைக் கொண்டு.

சாதிகுல மென்றும் சமயமத மென்றும் முப
நீதியிலா ஆச்சிரம நீட்டென்றும்---ஓதுகின்ற
பெயாட்டமேல்லாம் பிதிர்ந்து ஒழிந்த்துவே பிறர்தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று !

உலகிலுள்ள பொய்யான மார்க்கங்கள் அத்தனையும்
ஒழித்து புதியதோர் சன்மார்க்கத்தை வடலூரில் 1873 ,ஆம்
ஆண்டு [ஆங்கிரசவருடம் ]ஆடி மாதம் 5 ,ஆம் தேதி ,
தொடங்கி வைக்கிறார் வள்ளலார் .

தொடங்கி வைத்த பிறகு அருட்பெரும்ஜோதி ஆண்டவர்! ,
உலக அரசாட்சியை வள்ளலாரிடம் ஒப்படைக்கிறார் .
சன்மார்க்க சங்கத்தை நீயே தலைமை  யேற்று நடத்த வேண்டும்
என்று ஆணையிடுகிறார் .ஆணையிட்டதுமட்டும் அல்லாமல்
என்னோடு கலந்து விடவேண்டும் .இனிமேல் நீ வேறு, நான் வேறு
என்பது இல்லை, இருவரும் ஒரேஉருவமாக அனைவருக்கும்
காட்சி கொடுப்போம் .இதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை
தெரிவிக்கிறார்

அருட்பெரும்ஜோதிக்கு இருந்த துன்பமெல்லாம் வள்ளலார்
மூலமாக போயிற்று என்பதை பின்வரும் பாடல் மூலமாக
தெரிவிக்கிறார் !

துன்பெலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச
சூழ்ந்து அருளொளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை யனுபவம் நினைக்கே
சுதந்தரமானது உலகில்
வன்பெலாம் நீக்கி நல வழி யெலாமாக்கிமெய்
வாழ்வெலாம் பெற்று மிகவும்
மன்னுயிர் எலாம் களித்திட நினைத்தனை யுன்றன்
மன நினைப்பின் படிக்கே
அன்பை நீ பெறுக வுலவாது நீடூழி விளை
யாடுக அருட்ஜோதியாம்
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணை நம் ஆணை யென்றே
இன்புறத் திரு வாக்களித்து என் உள்ளே கலந்து
இசைவுடன் இருந்த குருவே
எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மன்றினில்
இலங்கு நட ராஜ் பதியே .!

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வள்ளலாரிடம் உலக
ஆட்சியை ஒப்படைத்து வள்ளலாரின் உடம்பை ஒளி
உடம்பாக மாற்றி,தானும் வள்ளலார் உடம்பில் கலந்து
இரு அருள் ஒளியும், ஒரே அருள் ஒளியாகமாற்றி விட்டார் !

பாடல்கள்;----

சத்தியவான் வார்த்தையிது தானுரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்ஜோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும் தினங்களெல்லாம் இன்பமுறு தினங்கள்
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலாவுலகும்
தூய்மையுறும் நீயுரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார்
திருவருட் செங்கோல் என்றும் செல்லுகின்றதாமே !

என்சாமி எனது துரை என்னுயிர் நாயகமே
இன்று வந்து நானிருக்கும் இடத்தில் அமர்கின்றார்
பின்சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது
பேருடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார்
தன்சாதி யுடையப் பெரிய தவத்தாலே நான்தான்
சாற்றுகின்றேன் அறிந்ததிது சத்தியஞ் சத்தியமே
மின்சாரும் இடைமடவாய் என் மொழி நின்தனக்கே
வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே !

வ்டலூறுக்கு அடுத்த மேட்டுக்குப்பம் என்னும் ஊரில்உள்ள
சித்தி வளாக திரு மாளிகையில் அருட்பெரும்ஜோதியும்
வள்ளலாரும்,[ 30 -- 1 --1874 ,ஸ்ரீமுக ஆண்டு தை மாதம் 19 ,ஆம்
நாள் வெள்ளிகிழமை அன்று ] அருள் ஒளியாக ஒன்றுடன்
ஒன்றாக இணைந்து விட்டார்கள் .அன்று முதல் இன்று வரை
வடலூரில் இருந்து அருள்ஒளி  தெரிந்து கொண்டு இருக்கிறது

வருவார் அழைத்து வாரீர் வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே !

வடலூர் சத்திய ஞான சபையில் அருட்பெரும்ஜோதி
அணையா தீபம் அனைவரையும் அழைக்கிறது .

என்ற வாசகம் உலகம் முழுவதும் பரவி உள்ளது ,
வடலூரில் அருள் நிறைந்து இருக்கிறது .உலகத்தில் உள்ள
அனைவரும் வந்து  அருளைப் பெற்று ஆனந்த வாழ்வு
வாழ்வோம் .

அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அருளை பெற்று
மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெறு வாழ்வு
வாழ்வோம் .அனைவரும் வாரீர் அருளைப் பெறுவீர் !

வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை வாங்கிப் படித்து
உண்மையை உணர்ந்து ஒழுக்கத்துடன் வாழ்ந்து
அருளைப் பெற்று ஆனந்தம் அடைவோம் .

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் !
ஜீவ காருண்யமே இறை வழிபாடு !
கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும் ஜோதியர் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !

அன்புடன் ;--கதிர்வேலு .
மீண்டும் பூக்கும் ..
      
     .    

      



















































































































































































































































































































































































          

  
  
i  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு