புதன், 29 செப்டம்பர், 2010

வருவிக்க உற்ற வள்ளலார் !

      சுபானு வருடம் ,புரட்டாசி மாதம் 21 ,ஆம் தேதி [5---10 ---1823 ,]
ஞாயிற்றுக் கிழமை அன்று உலகம் உய்ய உதித்தது ,ஒரு  ஞான
பேரொளியாகும்.

உலகம் தழைக்க வந்துதித்த உருவே வருக ஓதாதே
உற்ற கலைகள் அனைத்தினையும் உணர்ந்தோய் வருக
ஒன்று இரண்டு அற்று இலங்கும் பாரமானந்த சுக இயல்பே வருக
யிம்பர்தமை இறவாக்கதியில் ஏற்றுகின்ற இறையே  வருக
என்போல்வார் கலக்கம் தவிர்த்துக் கதியளிக்கும் கண்ணே வருக
கண்ணிறைந்த களிப்பே களிப்பில் ஊறுகின்ற கனிவே வருக
கலைமதிதோய் வலகஞ் செறிந்த வடற்பதியின் வாழ்வே வருக
இராமலிங்க வள்ளல் எனுமோர் மாணிக்க மணியே வருக!
         
    உலகம் முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகரித்துக்
மக்களை அடிமைகளாக்கி ஆண்டு கொண்டு இருந்த காலம்.
சாதி, சமயம்,மதம் போன்ற கற்பனை கதைகளை,உருவாக்கி 
மனிதர்களை பிரித்து வைத்து விட்டார்கள் நமது முண்ணோர்கள். 
உலகமே சிதறுண்டு சின்னாபின்னமாகி அழிந்து கொண்டு 
இருந்தகாலம் .


     மனிதனை மனிதன் ,அடித்து ,உதைத்து ,கொன்று,அழிந்து 
அவதிப்படும் நிலைமையை உருவாக்கி விட்டார்கள் .
பெரியவர்கள் வகுத்து தந்த வழிமுறைகளை உண்மை என்று 
நம்பி அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி வாழ்ந்துக் 
கொண்டு வருகிறார்களே !என்பதை உணர்ந்த அருட்பெரும்ஜோதி 
ஆண்டவர் வேதனைப்படுகிறார் .


      உலகக் கொடுமைகளை கண்ணுற்ற அருட்பெரும்ஜோதி 
ஆண்டவர், அக்கொடுமைகளை அகற்றி புனிதமுறு 
சுத்தசன்மார்க்கத்தை உருவாக்க வேண்டுமென்றுக்கருதி 
மாபெரும் சக்தி வாய்ந்த ஒரு உயிரை [ஆன்மாவை ] இந்த 
உலகத்திற்கு அனுப்பிவைக்கிறார் .அவர்தான் இராமலிங்கம் 
என்னும் வள்ளலார் என்பவராகும் .


      வருகைப்பாடல் திருஅருட்பா;--


பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெலாம் 
பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப் 
பிள்ளை விளையாட்டென உணர்ந்திடாது உயிர்கள் பல 
பேதமுற்று அங்கும் இங்கும் 
போறுற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண் 
போகாதே படிவிரைந்தே 
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறிகாட்டி மெய்ப் 
பொருளினை உணர்த்தி யெல்லாம் 
ஏருற்ற சுகநிலை யடைந்திடப் புரிதி  நீ
என்பிள்ளை யாதலாலே
இவ்வேலை புரிக வென்று இட்டனன் மனத்தில்
வேறு எண்ணற்க வென்ற குருவே 
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள் 
நிறைந்து இருளகற்றும் ஒளியே 
நிற்க் குணானந்த பரநாதாந்த வரை யோங்கும் 
நீதி நடராஜ பதியே .


என்ற பாடலின் வாயிலாக வள்ளலார் அவர்கள், தான் 
இந்த உலகத்திற்கு வருவிக்க உற்ற காரணக் காரியத்தைப்  
பற்றி தெரியப் படுத்துகிறார் .அடுத்தபாடலில் ;--


அகத்தே கருத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் 
சகத்தே திருத்திச சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும் 
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்க்கு என்றே எனையிந்த 
யுகத்தே இறைவன் வருவிக்க யுற்றேன் அருளைப் பெற்றேனே !


என்பதை தான் இவ்வுலகத்திற்கு வருவிக்கப் பட்டத்தின் 
நோக்கத்தைப் பற்றி தெளிவுபடுத்துகிறார் .


     கடலூர் மாவட்டம் ,சிதம்பர வட்டம் வடலுரில் இருந்து 
சுமார் 10 ,கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மருதூர் என்னும் 
கிராமத்தில் ,கிராமக் கணக்குப் பிள்ளையாக பணியாற்றிவந்த, 
பக்தியில் சிறந்த பற்றுடைய,இராமய்யா மனைவி 
சின்னம்மையாருக்கும் ஐந்தாவது குழந்தையாகபிறந்தவர்தான் 
இராமலிங்கம் என்னும் வள்ளலாராகும் .


     19  ,ஆம் நுற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றியது 
அந்த பகுத்தறிவு சூரியன், வள்ளலார் அவதரித்த தினத்தை 
உலக ஒருமைப்பாடு உரிமை தினமாகக் கொண்டாடப்பட்டு 
வருகிறது. 


      இராமைய்யா அவர்கள் குடும்பத்துடன் தில்லை நடராசர் 
சன்னதிக்கு ,ஐந்து மாதக் குழந்தையான இராமலிங்கரை 
அழைத்துக் கொண்டு நடராஜர் பெருமானை தரிசனம் செய்ய 
சென்று இருந்தார் .சன்னதியில் சிதம்பர ரகசியம் என்ற திரை 
விளக்கி காட்டப்பட்டது, -காட்டப்பட்டதும் ஐந்து மாதக் குழ்ந்தை 
யான இராமலிங்கம் ,கல கல வென சிரித்தது .கடவுள் ஒளியாக 
உள்ளார் என்பதை அப்பொழுதே அக்குழந்தை பார்த்து புரிந்து 
கொண்டது.ஐந்து மாதக் குழந்தையாக இருந்த போது கண்ட 
காட்சியை ஐம்பதாவது வயதில் பாடுகிறார் வள்ளலார் .


தாய் முதலோரோடு சிறு பருவத்திற் தில்லைத் 
தலத்திடையே திரை தூக்கித் தரிசித்த போது 
மேல்வகை மேற் காட்டாதே என்தனக்கே யெல்லாம் 
வெளியாகக் காட்டிய என் மெய்யுருவாம் பொருளே 
காய்வகை இல்லாது உளத்தே கனிந்த நறுங்கனியே 
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே 
தூய்வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் 
ஜோதி நடத்தரசே என் சொல்லும் மணிந்தருளே !


    தில்லை கோவில் தீட்சிதர் அப்பய்யர் என்பவர் 
குழ்ந்தை சிரித்ததை கண்ணுற்று அதிசயித்து போயினர் .
இக்குழந்தை இறைவன் உங்களுக்கு அளித்த ஞானச   
செல்வமாகும் என்று வாழ்த்தி வழி அனுப்பிவைத்தார் .


    சிறிது மாதம் கழித்து திடுமென்று தந்தை இராமய்யா 
காலமானார் .தாய் சின்னம்மை தன் குழந்தைகளுடன்
சென்னையிலுள்ள பொன்னேரிக்கு சென்றார் அங்கிருந்து 
வடசென்னையிலுள்ள ஏழு கிணறுப் பகுதியிலுள்ள ஒரு 
வீட்டில் குடியேறினார்கள் ,


     இராமலிங்கருடைய அண்ணார் சபாபதி புராணச 
சொற்பபொழிவுகள் செய்து பொருள் ஈட்டி குடும்பம் நடந்து 
கொண்டுவந்தது.தம்பி இராமலிங்கத்திற்கு ஐந்து வயதானபோது 
கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பிவைத்தார்கள் ,பள்ளிக்கு செல்ல 
விருப்பமில்லாமல்,கந்த கோட்ட முருகன் கோயிலுக்கு 
சென்று பக்தி பாடல்கள் பாடுவதில் ஆர்வம் கொண்டார் .


      இறையருளால் இயற்கையாகவே அறிவுத் திறனும் 
அருள் திறனும் வாய்க்கப் பெற்று இருந்த இராமலிங்கருக்கு 
உலக ஏட்டுப் படிப்பில் நாட்டம் கொள்ளவில்லை .தம்பியின் 
செய்கை பிடிக்காமல் கோபம் கொண்ட அண்ணன் சபாபதி,
பின் நாளில் இராமலிங்கரின் செய்கையும் ,புலமையும் கண்டு 
ஆச்சரியமும் ஆனந்தமும் பெருமையும் கொண்டார் .பள்ளிக்கு 
செல்லாமல் அருள் பாடல்கள் பாடும் திறமையைக் கண்டு 
சென்னை நகரமே அதிசயித்தது 


    ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற 
    உத்தமர் தம் உறவு வேண்டும் 
    உள்ளொன்று வைத்துப்  புறம் மொன்று பேசுவோர் 
    உறவு கலவாமை வேண்டும் .


என்ற பாடல்கள் இன்னும் மக்கள் மத்தியில் நீங்காத 
இடம் பெற்றுக்கொண்டு இருக்கிறது.
அடுத்து தமிழகத்திலுள்ள அனைத்து ஆலயங்களுக்கும் 
சென்று அனைத்து கடவுள்கள் மீதும் அளவுகடந்த பாடல்கள் 
பாடி அருளினார் இராமலிங்கர் என்னும் வள்ளலார் .


     பல்லாயிரம் பக்திப்  பாடல்கள் பாடியவர் ,உலக உயிர்கள் 
படும் துன்பத்தைக் கண்டு கொதித்து மனம் நொந்து வேதனைப் 
பட்டார் கொந்தளித்தார் என்பது அவர்பாடிய பாடல்கள் மூலம் 
தெரிகின்றன. 


      ஆங்கிலேயர் ஆட்சிமுறைகளும் ,அடக்குமுறைகளும் ,
கொடுமைகளும் ,அவைகளால் உயிர்கள் படும் துன்பங்களையும் 
கண்டு மனம் தாளாமல் எதிர்ப்பு தெரிவித்து .பல பாடல்கள் 
எழுதி பாடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் .ஆங்கிலேயர்களை 
எதிர்த்து முதன்முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்தவர் 
வள்ளலார் என்பது இன்றுவரை நிறையப் பேருக்கு தெரியாமல் 
இருப்பது வேதனைக்குறியதாகும்.


    கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக 
    அருள் நயந்த நன்மார்க்கர் ராள்க----தெருனயந்த
     நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத் 
     தெல்லோரும் வாழ்க விசைந்து .


    அச்சம் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற 
    விச்சை அரசே விளங்கிடுக ---நச்சரவ 
    மாதிக் கொடிய உயிர் அத்தனையும் போய ஒழிக 
   நீதிக் கொடிவிளங்க நீண்டு .


   நடுநிலை இல்லா கூட்டத்தைக் கருணை 
  நண்ணிடார் தமையரை நாளுங் 
  கெடு நிலை நினைக்கும் சிற்றதிகாரக்
  கேடரைப் பொய்யலார் கிளைத்தாய்
  படுநிலை யவரைப் பார்த்த போதெல்லாம் 
  பயந்தனன் சுத்த சன்மார்க்கம் 
  விடு நிலை யுலக நடை எலாம் கண்டே 
  வெருவினேன் வெருவினேன் எந்தாய் .


என்று பலபாடல்கள் பாடி அனனிய ஆட்சியைப் பற்றி 
எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அனனிய ஆட்சியின் கொடுமைகளால் 
மக்கள் படும் துன்பம் துயரங்களை கண்ட வள்ளலார் 
வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் 
பசியினால் இளைத்தே வீடு தோறும இரந்தும் பசியறாது 
அயர்ந்தே வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் .நீட்டிப் 
பிணியால் வருந்து கின்றோர் நேருறக் கண்டுளம் 
துடித்தேன் .ஈடின் மானிகளாய் ஏழை களாய் நெஞ்சு இளைத்தவர் 
தமைக் கண்டே இளைத்தேன் .


    என்று உயிர்கள் படும் துன்பத்தையும் ,பசியினால் 
மக்கள் படும் துயரங்களையும் கண்ணுற்ற வள்ளலார் 
பசிக்கொடுமையை போக்க,பசி என்னும் அரக்கனை 
விரட்ட, வடலூர் பெருவெளியில் 23 --5 --1867 ,ஆம்ஆண்டு 
சத்தியச தருமச சாலையை தோற்றுவிக்கிறார் வள்ளலார் .


     சாதி,சமயம் ,மதம் ,உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் ,ஏழை ,
பணக்காரர் என்ற பேதமில்லாமல் ,சமரச உணவு வழங்க
ஏற்பாடு செய்துள்ளார் .அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்றுவரை 
அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறது .அனைத்து 
மக்களின் பசியைப் போக்கிக் கொண்டு இருக்கிறது .


    ஆன்மீக வழியில் நாட்டம் கொண்ட வள்ளலார் ஆலய 
வழிப்பாட்டு முறைகளை எதிர்க்கிறார் .சாதி,சமய ,மதங்களின் 
கொள்கைகளை எதிர்க்கிறார் .கலை உரைத்த கற்பனையை 
நிலை எனக் கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம்
மண் மூடிப் போகவேண்டும் என்கிறார் .


     கடவுள் பெயரால் உயிர்களை கொலை செய்யக் கூடாது 
என்கிறார்,வேதங்களும் ,புராணங்களும் ,இதிகாசங்களும் ,
ஆகமங்களும், சாத்திரங்களும் உண்மைகளை சொல்ல 
தவறிவிட்டது என்கிறார் .உண்மைகளை உலக மக்களுக்கு 
சொல்ல வேண்டுமென்று உறுதி கொள்கிறார் .
  
    ஜீவ காருண்யமே இறை வழிபாடு ,கடவுள் ஒருவரே 
அவர் அருட்பெருஞ் ஜோதியாகஉள்ளார்,உலக மக்கள் 
அனைவருக்கும் ஒரே கடவுள் தான் என்பதை தெளிவுப் 
படுத்துகிறார் .


     அவர் எழுதிய நூல்கள்;--


ஜீவகாருண்ய ஒழுக்கம் !
தொண்ட மண்டல சதகம் !
சின்மய தீபிகை !
மனுமுறை கண்ட வாசகம் !
திரு அருட்பா ஐந்து திருமுறை !
திரு அருட்பா ஆறாம் திருமுறை !


போன்ற அருள் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் .
பக்தியை விளக்கும் ஐந்து திருமுறைகளும் ,பகுத்தறிவை
விளக்கும் ஆறாவது திருமுறைகளும் அவர் இவ்வுலகத்திற்கு 
கொடுத்துள்ள அருட்க் கொடையாகும் .உண்மையை 
உணர்த்தும் உன்னதமான நூல் ஆறாம் திருமுறையாகும் .


    ஒவ்வொரு உயிர்களும் பிறப்பு ,இறப்பு என்பது இயற்க்கை 
விதித்த விதி என்பது உலக வழக்கமாகும்.


     மனிதனாக பிறந்தவர்கள் இறப்பு இல்லாமல் வாழமுடியும்
என்ற அறிய மாற்றத்தை கண்டுபிடித்து வாழ்ந்து காட்டியவர் 
வள்ளலார்.தன் உடம்பை மண்ணுக்கோ ,நெருப்புக்கோ 
இரையாக்காமல்,ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றியவர் 
வள்ளலார்,


      ஒளிதேகம் பெற்றால்தான் இறைவனை அடையமுடியும் 
என்ற உண்மையை உலகுக்கு உணரவைத்தவர் வள்ளலார் .
அவர் எழுதிய ஆறாம் திருமுறையில் ஒளி தேகம் பெரும் 
வழி முறைகளை ,அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ளும்
வகையில் எழுதிவைத்துள்ளார்.எழுதி வைத்ததோடு நில்லாமல் 
தானும் ஒளிதேகம் பெற்று இறைவனோடு இணைந்து 
செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார் .அதற்க்கு மரணம் 
இல்லாப் பெருவாழ்வு என்று பெயர்வைக்கிறார் .


    கடவுள் ஒளியாகத்தான் இருக்கிறார் என்பதை 
விளக்குவதற்கு வடலூரில் ,எண் கோண வடிவமாக 
''சத்திய ஞான சபையை ''தோற்றுவித்து ஒளி வழிபாட்டு 
முறையை அமைத்துள்ளார் .


    கோவில் ,ஆலயம் ,சர்ச்சு ,மசூதி ,பிரமிடு போன்ற 
பிரிவினை இல்லாமல்,உலகிலுள்ள அனைத்து மக்களும் 
ஏற்றுக்கொள்ளும் வகையில் ,சமரச வழிபாட்டு முறையை 
அமைத்துள்ளார் ,


உலகமக்களுக்கு அவர் அமைத்துள்ள நிறுவனங்கள் ,;--
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சித்திவளாகம் !


.வள்ளலாரின் முக்கிய கொள்கைகள் ;--
1 ,கடவுள் ஒருவரே !
2 ,அவர் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் !
3 ,சிறு தெய்வ வழிபாடு கூ டாது !
4 ,தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது !
5 ,புலால் உண்ணக் கூடாது !
6 ,சாதி ,சமய ,மத முதலிய வேறுபாடுகள் கூடாது !
7 ,எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும் !
8 ,ஆன்ம நேய ஒருமைப் பாட்டுஉரிமையைக் 
    கடைபிடிக்க வேண்டும்.!
9 ,ஏழைகளின் பசியை தவிர்த்தல் வேண்டும் !
10 ,ஜீவகாருண்யமே மொட்சவீட்டின் திறவு கோல்!
11,  ஜீவகாருண்யமே இறை வழிபாடு !
12 ,புராணங்களும் வேதங்களும் ,ஆகமங்களும் ,
     சாத்திரங்களும் ,உண்மையை தெரிவிக்கமாட்டாது !
13 ,இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது !
14 ,கருமாதி ,திதி முதலிய சடங்குகள் வேண்டாம் !
15 ,எதிலும் பொது நோக்கம் வேண்டும் !


போன்ற கொள்கைகள் இன்று உலகம் முழுவதும் 
ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது .அவரெழுதிய திருஅருட்பா 
இன்று உலக அறிவியல்  ஆராய்ச்சிகளுக்கு எடுத்துக் 
கொள்ளப்பட்டுள்ளது ,மனிதன் மனிதனாக வாழ்வதற்கு 
வழி வகுத்து தந்துள்ளது ..வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை 
படித்தால் ,படித்தபடி வாழ்ந்தால் உலகமுழுவதும் அமைதி 
நிலவும் ,ஆன்மநேயம் வளரும் உலக ஒற்றுமை ஓங்கும் .


   வள்ளலார் அவர்கள் சாதி ,சமய ,மத பேதமற்ற ஆன்ம 
நேய ஒருமைப் பாட்டுடன் வாழ்ந்ததால் இறைவன் 
அவருக்கு அழியாப் புகழையும் ,மரணமில்லாப் பெரு
வாழ்வையும் தந்து ஒளி உடம்பாக மாற்றி தன்னுடன் 
இணைத்துக் கொண்டார் .


     வடலூறுக்கு அடுத்த மேட்டுக்குப்பம் என்னும் ஊரில்
உள்ள சித்திவளாகத் திரு மாளிகையில், ஸ்ரீமுக வருடம்
தைமாதம் 19  ,ஆம் நாள் [30 --1 --1874 ,] வெள்ளிக் கிழமை
அன்று திருக்காப்பிட்டுக் கொண்ட தருணம் வெளியிட்டவை ;--


    ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ;--நாம் உள்ளே 
பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறோம் .
பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள் ,ஒருகால் 
பார்க்க நேர்ந்து பார்த்தால்,யாருக்கும் தோன்றாது 
வெருவீடாகத்தான் இருக்கும்படி செய்விப்பார் .இறைவன் 
என்னைக் காட்டிகொடார் .சுத்த பிரணவ ஞானத் தேகத்துடன் 
வெளிப்படுவோம்.நாம் திருக்கதவை மூடிஇருக்குங்கால் 
அதிகாரிகள் திறக்கும்படிஆணையிட்டால் ஆண்டவர் 
அருள் செய்வார் .என்று திருஅருட்பாவில் தெளிவாக 
எழுதி வைத்துள்ளார் .


     அதே போல் அதிகாரிகள் வந்து திறந்து பார்க்கிறார்கள் ,
வெறும் வீடாகத்தான் இருந்தது ,இவை உண்மை 
செய்திகளாகும்.


     ஒவ்வொரு வருடமும் வடலூர் தைப் பூசம் திருவிழா 
முடிந்ததும் இரண்டாம் நாளில் ,திருவறை தரிசனம் 
என்ற முறையில் ,சித்திவளாகத் திருமாளிகையில் 
ஜன்னல் வழியாக திருவறை தரிசனம் காட்டப்படும் .
லட்சக்கணக்கான மக்கள் பார்த்து அருளைப் பெற்று 
ஆனந்தம் அடைந்து செல்கிறார்கள் .


    வள்ளலார் வருவிக்க உற்ற நாளில் நாம் அனைவரும் 
அன்னதானம் செய்து அருட்பெரும்ஜோதி ஆண்டவர் 
அருளைப் பெறுவோமாக.!வள்ளலார் காட்டிய தெய்வம் ,

    அருட்பெருஞ் ஜோதி 
    அருட்பெருஞ் ஜோதி
    தனிப் பெருங்கருணை 
   அருட்பெருஞ் ஜோதி!
என்னும் மந்திரத்தை தினமும் ஓதி அருட்பெரும்ஜோதி 
ஆண்டவர் அருளைப் பெறுவோம் .
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக! 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
           அருட்பெரும்ஜோதி 


ஆன்மநேய அன்பன் 
செ ,கதிர்வேலு 
பொதுச செயலாளர் ,
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ,
ஈரோடு .
              






           


  






      .  


௦ 




  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு