சனி, 18 நவம்பர், 2023

மூன்று வகை ஆன்மாக்கள்!

*ஆன்மாக்கள் மூன்று வகைப்படும்!*

எவ்வாறு எனில்? 

1,*பக்குவஆன்மா !*

2, *பக்குவா அபக்குவா ஆன்மா!*

3, *அபக்குவ ஆன்மா !*
 1,*தாவரம்,ஊர்வன,பறப்பன,நடப்பன யாவும் அபக்குவ ஆன்மாக்கள்,*

2,*அசுரர்,தேவர் பக்குவாஅபக்குவ ஆன்மாக்கள்*!

3,*மனிதர்கள் பக்குவ ஆன்மாக்கள்!* 

*மேலே கண்ட மூவகை பிறப்புகளிலும் பக்குவம்,பக்குவாபக்குவம், அபக்குவம் என மூன்று குணமுள்ள பிறப்புகள் உள்ளன.*

*அதேபோல் உயர்ந்த மனித பிறப்புகளிலும்  மூவை குணமுள்ள ஆன்மாக்கள் உள்ளன*

*தாவரம், ஊர்வன, பறப்பன, நடப்பன,அசுரர்,
தேவர்,
மனிதர்* போன்ற ஏழு வகையான பிற்விகளிலும்,*ஆன்மாக்களுக்கு உயிர் உடம்புகள் கொடுத்து, பல கோடி பிறவிகள் எடுத்து எடுத்து வாழ்ந்து வாழ்ந்து இறந்து இறந்து, பிறந்து பிறந்து இறுதியாக உயர்ந்த அறிவுள்ள மனிதப்பிறப்பு கிடைத்துள்ளது,*

*ஆகையினால் இந்த மனிதப்பிறப்பு லேசில் கிடைத்தது அல்ல,இந்த மனிதப் பிறப்பு போனால் மீண்டும் இந்த மனிதப்பிறப்பு கிடைக்கும் என்பது உறுதிஅல்ல என்கின்றார்!*

*இந்த மனிதப் பிறப்பு கொடுத்ததின்  நோக்கமே ஆன்மாக்கள் தன்னை அறிந்து தன்னை அனுப்பிய தன் தலைவனை அறிந்து தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று,மீண்டும் பிறப்பு இறப்பு இல்லாமல் பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழவேண்டும் என்பதற்காகவே உயர்ந்த அறிவுபெற்ற மனிதப்பிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது*

*மனிதர்கள் இதுவரையில் மரணத்தை வெல்ல முடியாமல் வாழ்வதற்கு காரணம் சமயம் மதங்களின் பொய்யான கடவுளின் கொள்கைகளாகும்* 

*வள்ளலார் பாடல்!* 

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
பேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
போகாத படிவிரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டி மெய்ப்
பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
றெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்திருள் அகற்றும்ஒளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
நீதிநட ராஜபதியே.! 

என்ற பாடலின் வாயிலாக சமயங்கள் மதங்கள் எல்லாம் உண்மையான கடவுள் யார்?* தெரியாமல்,*பொய்யான தத்துவக் கடவுள்களை அறிமுகப்படுத்தி அக்கடவுள்களுக்குண்டான ஆலயங்களை,சர்ச்சுகளை,மசூதிகளை,  பிரமீடுகளை அமைத்து வைத்து,மனிதர்களை பேய்பிடிப்புற்ற குரங்குகள் போல் ஆட்டம் ஆட வைத்து அலைய விட்டு விட்டார்கள், மேலும் தெய்வங்கள் பெயரால் உயிர்கள் பல பேதமுற்று போரிட்டு சண்டைப்போட்டு அழிந்து கொண்டு உள்ளார்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை என்கிறார் வள்ளல்பெருமான்*

மேலும் *ஒருபாடல்!*

கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
கூவுகின்றார் *பலன்ஒன்றும் கொண்டறியார்* வீணே

நீறுகின்றார் *மண்ணாகி நாறுகின்றார்* அவர்போல்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்

ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
இலங்கு திருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே

தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 

*என்ற பாடல்வாயிலாக எளிய தமிழில் பொய்யான சமயங்கள் மதங்களை சாடுகின்றார் இவைபோல் நூற்றுக் கணக்கான பாடல்கள் உள்ளன.*

*ஏன்? எதற்காக இவற்றை எல்லாம் சொல்லி விளங்க வைக்கின்றார் என்றால், உண்மையான கடவுளை நேரிடையாக அறிந்து தொடர்புகொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலைஅறிந்து அம்மயமாகி ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்று,தான் வாழ்ந்து வந்த வழிமுறைகளைக் காட்டி,அவ்வாறே மனிதர்கள் மேல்நிலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆன்மநேய உரிமையுடன் தெரிவிக்கின்றார்*

*வள்ளலார் கண்ட உண்மைக் கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி! என்னும் கடவுளாகும், அக் கடவுளுக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. அழிவும் இல்லை எக்காலமும் நிலையானது*

*வள்ளலார் பாடல்!*

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்

செயற்கை இல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்

வியப்புற வேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்

உயத்தரும் ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!

*வள்ளலார் இவ்வளவு சொல்லியும் மனித ஆன்மாக்கள் ஏன் ? மேல்நிலைக்கு செல்லாமல் இருக்கும் காரணத்தையும் சொல்லி புரிய வைக்கின்றார்* 

*ஆன்மாக்களின் நிலை !* 

*ஆன்மாக்களை ஆணவம், மாயை, கன்மம், என்கின்ற மூன்று  மலங்கள் கவ்விக் கொண்டுள்ளன என்று சமயங்கள் மதங்கள் சொல்லுகின்றன,ஆனால் வள்ளல்பெருமான் அவர்கள் ஆணவம்,மாயை,மாமாயை,பெருமாயை,கன்மம் என்கின்ற ஐந்து மலங்கள் ஆன்மாவைக் கவ்விக் கொண்டுள்ளன என்று சொல்லுகின்றார்*

*ஆன்மாக்களை  ஐந்து மலங்கள் பற்றி கொண்டு உள்ளதாலும், அதற்கு மேலும் சமயங்கள் மதங்களின் கலை உரைத்த கற்பனையை நிலை எனக் கொண்டதாலும் அறியாமை, அஞ்ஞானம் என்னும் ஏழு வகையான அழுத்தமான திரைகள் ஆன்மாவைத் தெரிந்து கொள்ள முடியாமல்  மறைத்து கொண்டுள்ளன, அதனால் மனித உடம்பில் சிரநடுவில் உள்ள ஆன்மாவைத் தெரிந்து கொள்ள முடியாமல் மூடமாக உள்ளார்கள் என்கின்றார்*

*ஆன்மாவைத் தெரிந்து கொண்டால் மட்டுமே அருளைப் பெற்று மரண்தை வெல்லமுடியும் எனபதை தெரியப் படுத்துகின்றார் ஆன்மாவைத் தெரிந்து கொள்ளும் சுத்த சன்மார்க்க ஜீவகாருண்ய ஒழுக்க நெறியும் சாகாக்கல்வி கற்கும் வழிமுறைகளையும் சொல்லித் தந்துள்ளார் இவை யாவும் ஆறாம் திருமுறை திருஅருட்பாவில் தெளிவாகச் சொல்லி உள்ளார்*

*பக்குவ ஆன்மா !*

*வள்ளல்பெருமான் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை  முழுமையாக ஏற்று அவ்வாறு பின்பற்ற தொடங்கும் ஆன்மாக்கள் எல்லாம் அறிவு தெளிவுள்ள பக்குவம் உள்ள ஆன்மாக்களாகும்*

*பக்குவாஅபக்குவ ஆன்மாக்கள்!*

*சமயங்களிலும் மதங்களிலும் மற்றும் பல மார்க்கங்களிலும் பற்று வைத்துக் கொண்டும் சன்மார்க்கத்திலும் பற்று வைத்துக் கொண்டும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களை விடமுடியாமல் உள்ளவர்கள் பக்குவாஅபக்குவம் உள்ள ஆன்மார்களாகும்.*

*சமயங்கள் மதங்கள் என்பது ஏதும் அறியாமல் தெரியாமல் புரியாமல் மூட பக்தியில் மூட நம்பிக்கையில் எல்லாச் சமய மதத் தெய்வங்களையும் வணங்கி வழிபாடு செய்பவர்கள் அபக்குவ ஆன்மாக்களாகும்*

*ஆதலால் சுத்த சன்மார்க்கத்தை பின் பற்றும் பக்குவம் உள்ள ஆன்மாக்களுக்கு வள்ளல்பெருமான் சொல்வது யாதெனில் ? எவ்வளவு தாழ்ந்த தரத்தில் உள்ளவர்களாக இருந்தாலும்,அவர்களை நம்மவர் ஆக்கிக் கொள்ளுங்கள் என்கின்றார்,அதுவே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும்*

*மேலும் அவர்களுக்கு சொல்லி புரிய வைப்பது சுத்த சன்மார்க்க அன்பர்களின்  கொள்கையும், உரிமையும் கடமையும் ஆகும்* 

*சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள்!*

*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் !*

*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.* 

*மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும்.*

*அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.*

*பக்குவ ஆன்மாக்கள் ஆடாமல் சற்றும் அசையாமல் வேறு ஒன்றை நாடாமல் பொய் உலகை நம்பாமல்,வாடாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்கொண்டு மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் *சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு