கீழ்நிலை சுக்கிலம்! மேல்நிலை சுக்கிலம்!
*மேல்நிலை சுக்கிலம்! கீழ்நிலை சுக்கிலம்!*
நம் உடம்பில் முக்கியமான இரண்டு ஆற்றல் மிகுந்த திரவம் சுரக்கின்றது.
*ஒன்று குண்டலினியில் இருந்து சுரக்கும் விந்து என்னும் கீழ்நிலை சுக்கிலமாகும்*
*ஒன்று சிரநடு சிற்சபையில் இயங்கும் ஆன்மாவில் இருந்து சுரக்கும் அருள் என்னும் மேல்நிலை சுக்கில அமுதமாகும்*
*கீழ்நிலை சுக்கிலம் என்பது,!*
*நாம் தினமும் உட்கொள்ளும் பஞ்ச பூதகாரிய ஆறுசுவை உணவானது இரைப்பையில் சென்று அங்கு அரைக்கப்பட்டு,சக்கையை மலக்குடலில்தள்ளிவிட்டு, அதில் உண்டாகும் திரவம் அதாவது சத்துப் பொருளை உடம்பிற்கு தேவையான முக்கிய திரவமாக்கி, அதாவது இரத்தமாக்கி வேதியல் போல் மாற்றமாகி, உடம்பின் கருவிகள் இயக்கத்திற்கு தேவையான இரத்தத்தை எடுத்துக் கொண்டு மீதியை குண்டலினி பைக்கு அனுப்பி விடுகிறது, அங்குதான் இரத்தம் வீரியமுள்ள சுக்கிலமாக மாற்றப் படுகிறது.*
*பூதகாரிய உணவால் உண்டாகும் கீழ்நிலை சுக்கிலம் என்னும் விந்துவால் உயிர்கள் தோன்றுகிறது, மேலும் உலக வாழ்க்கையில் ஜீவர்களுக்கு மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை போன்ற ஆசைகளும் அந்த கீழ்நிலை சுக்கிலமான விந்துவால் தோன்றுகிறது,இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்மாகவே இருக்கின்றன இந்த ஆசைகளையும் வாழ்க்கை முறையும் சாதாரணமாக தடுக்க முடியுமா ? நிறுத்த முடியுமா ? அடக்க முடியுமா? என்பதும் தான் இதுவரையில் இருந்து வந்த வினாக்கள், இதற்கு சரியான விடைகளோ விளக்கமோ,பொதுவான வழிகளோ,கொள்கைகளோ எந்த ஒரு ஆன்மீக அருளாளர்களும் ஞானிகளும்,விஞ்ஞான அறிவியல் வல்லுனர்களும் முறையாக சரியாக பதில் அளிக்கவில்லை,மேலும் தெரிந்து கொள்ளவில்லை.*
*உலக உயிர்களின் இன்ப துன்பங்களுக்கு காரணம் ? உடம்பில் உற்பத்தியாகும் கீழ்நிலை சுக்கிலமான விந்துவே காரண காரியமாக இருக்கின்றது*
*ஆண்களின் கீழ்நிலை சுக்கிலமான விந்துவில்தான் விந்துவின் தன்மைக்குத் தகுந்தவாறு ஆன்மா வந்து புகுந்து கொள்ளும், ஆன்மா வாழ்வதற்கு அங்குதான் ஜீவன் என்னும் உயிர் தோன்றுகிறது.*
*ஆன்மாவின் வாழ்க்கைக்கு ஜீவன் என்னும் உயிர் தன்மைக்குத் தகுந்தவாறு உடம்பு எடுத்துக் கொள்வதற்காக ஒருபெண்ணின் உடம்பில் உள்ள சோனிதத் திரளின் துவார வழியாக உள்ளே சென்று விடுகிறது. அங்கு கருவறையில் ஏழுவிதமான அணுக்களின் கூட்டுறவால், உபகாரக் கருவி என்னும் உடம்பு கட்டிக் கொடுக்கப் படுகிறது*
*இதுதான் கீழ்நிலை சுக்கிலத்தின் உயிர் உடம்பு உற்பத்தியாகும் தொடர் கதையாகும்*
*அழியும் உலகப் வாழ்க்கை நிறுத்தி அழியாத அருள் வாழ்க்கை வாழவேண்டும் என்பதே எல்லா ஆன்மீக அருளாளர்களின் ஒத்தக் கருத்தாகும்,ஆனாலும் அவற்றை எவ்வாறு பெற வேண்டும் என்பதில்தான் வெவ்வேறு கருத்துக்களும் போட்டிகளும் குழப்பமும் அதிகமானது.*
*அக் குழப்பங்களை நீக்கி நேர்வழியைக் காட்ட வந்தவர்தான் நமது அருள் தந்தை திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் என்பவராகும்*
*வள்ளலார் பாடல் !*
ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன்
*என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி*
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ
ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
ஆரமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண்டு ஆடேடி பந்து. ஆடேடி!
என்கின்ற பாடல் வாயிலாக தெளிவாகத் தெரியப் படுத்துகின்றார்
*இந்த பாடலிலே ஊரமுது என்றும் ஆரமுது என்றும் இரண்டு வகையாக பிரிக்கின்றார்.*
*நாம் தினமும் உட்கொள்ளும் பஞ்ச பூதகாரிய உணவினால் உண்டாகும் கீழ்நிலை சுக்கிலமான விந்துதான் ஊரமுது என்பதாகும்,ஊரமுது உற்பத்தியாகும் வரை மரணம் வந்தே தீரும்,அதனால் ஒழிந்து அழிந்து விடுவோம், மீண்டும் பிறப்பு இறப்பு என்னும் அற்ப இன்பம் துன்பம் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கின்றார்*
*மேல்நிலை சுக்கிலம்!*
*மேல்நிலை சுக்கிலம் என்பது அருள் என்பதாகும் அவை ஆன்மாவில் பாதுகாப்பாக நிறைந்து வைக்கப் பட்டுள்ளது. அவை ஏழு திரைகளால் மறைக்கப் பட்டுள்ளன, ஏழுதிரைகளை விளக்கும்( நீக்கும்) ரகசியத்தை வள்ளலார் மிகத் தெளிவாகத் தெரியப் படுத்துகின்றார்.*
*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !*
*இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே! என்ற உண்மையை முதலில் அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு அக் கடவுளை தொடர்பு கொள்ள வேண்டும், அந்த உண்மைக் கடவுளால் மட்டுமே,அருளை ( ஆன்மாவை ) மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை நீக்கி அருளை வழங்க முடியும்.*
*வள்ளலார் பாடல்!*
திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே
அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி!
(அகவல் வரிகள்)
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!
*என்பன போன்ற பல பாடல்களின் வாயிலாகவும் உரைநடைப் பகுதிகளிலும் தெளிவாகத் தெரியப் படுத்தியதோடு அல்லாமல் அதேபோல் வள்ளலார் வாழ்ந்தும் காட்டி உள்ளார்.*
*கீழ்நிலை சுக்கிலமான விந்துவை உற்பத்தியாகாமல் தடுத்தால் மட்டுமே மேல்நிலை சுக்கிலமான அமுதக் கலசத்தை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை விளக்கி, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவார் என்பதே சத்தியமான உண்மை*
*புழுக்காத உணவுகள்!*
*கீழ்நிலைச் சுக்கிலமான விந்துவை உற்பத்தியாமல் தடுக்க ஒரே வழி, பஞ்ச பூத புழுக்கின்ற உணவுகளை நிறுத்தி புழுக்காத உணவுகளான தேன், சர்க்கரை ,கற்கண்டு,வெல்லம், அயச் செந்தூரம்,தாமரைபஸ்பம், வெந்நீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும், இந்த உணவால் மலஜலம் சுக்கிலம் உற்பத்தி ஆகாது.*
*மேலும் எல்லாம் வல்ல தனித் தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது இடைவிடாது அன்பும், தொடர்பும் கொள்ள வேண்டும் அதாவது தீராத காதல் கொள்ள வேண்டும்,*
*மேலும் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும், சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையும்,ஜீவகாருண்யம் என்கின்ற உயிர் இரக்கமும் கடைபிடிக்க வேண்டும்.*
*மேலும் எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள்,மதங்கள்,மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் பற்றாத வண்ணம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்,*
*உயர்ந்த அறிவுள்ள மனிததேகம் பெற்ற ஆன்மாக்கள் மேலே சொல்லியவாறு கடைபிடித்தால் மட்டுமே கீழ்நிலை சுக்கிலம் தோன்றாது, அவை தோன்றாதபோது, என்றும் அழியாத மேல்நிலை சுக்கிலமான அருள் பெற்று மரணத்தை வென்று, முத்தேக சித்தி என்னும் பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்*
*அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகள் கீழே!*
1,அருளலா தணுவு மசைந்திடா ததனால்
அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே!
2,அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
அருளுற முயல்கவென் றருளிய சிவமே !
3,அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே!
4,அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
தெருளிது வெனவே செப்பிய சிவமே!
5,அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே!
6,அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே!
7,அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே!
8,அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே !
9,அருளறி யார்தமை யறியார் எம்மையும்
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே!
10,அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே!
11,அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே!
*வள்ளலார் பாடல்!*
சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நல் தவம் எலாஞ் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம் என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர்
சாற்றிலே கலந்த
சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.!
மேலும்
சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப்
படுவாரைத் துணிந்து கொல்லக்
கூற்றாசைப் படும்எனநான் கூறுகின்ற
துண்மையினில் கொண்டு நீவீர்
நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்
போலும்அன்றி நினைத்த வாங்கே
பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா
பதிப்புகழைப் பேசு வீரே.!
*மேலே உள்ள பாடலை படித்து அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு வாழ்வோம்*
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் சுத்த சன்மார்க்க சுடர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு