ஞாயிறு, 15 அக்டோபர், 2023

திருவருள் நெறி !

*திருவருள் நெறி !*

*உயர்ந்த அறிவு பெற்ற மனித பிறப்பில்  இவ்வுலக வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்து, இறுதியில் எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று ஆன்ம இன்ப லாபமான இம்மை இன்ப வாழ்வு,மறுமை இன்ப வாழ்க ,பேரின்ப வாழ்வு என்னும் முத்தேக சித்திப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம் மயமாக மாறுதலே மனித பிறப்பின் லட்சியமாகும்*

*இவ் வாழ்வு வாழும் வழியைக் காட்டுவதே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்னும் ஞான மார்க்கமாகும்.அவற்றிற்கு அருள் நெறி என்றும்,சுத்த சன்மார்க்க நன்னெறி என்றும்,சுத்த சன்மார்க்க தனிநெறி என்றும்,திருநெறி ஒன்றே என்றும்,அதுதான் சமரச சுத்த சன்மார்க்க சிவநெறி என்றும் வள்ளலார் சொல்லி உள்ளார்*

*வள்ளலார் பாடல்!* 

திருநெறி ஒன் றேஅதுதான் சமரச சன் மார்க்கச்
சிவநெறி என் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு. 

வருநெறியில் எனையாட்கொண்டு *அருளமுதம் அளித்து*
*வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்*

பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.! 

*மேற் கண்ட பாடலில் கண்ட கண்ட பொய் நெறியில் (கரு நெறியில்) சென்று அழிந்து போகாமல்,மெய் நெறியான சுத்த சன்மார்க்கத்தில் சேர்ந்து அருளைப் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம் வாருங்கள் வாருங்கள் என்று அழைக்கின்றார் வள்ளலார்*,

*சாதி சமயம்,மதம் கடந்த உலகப் பொது நெறியே சமரச சுத்த சன்மார்க்க சத்திய தன்நெறி என்கின்ற உண்மையை மனித குலத்திற்காக சொல்லுகின்றேன்  என்று அழுத்தமாக சொல்கின்றார் வள்ளல்பெருமான்*

*அருளைப் பெறும் வழியை எளிய முறையில் சொல்லுகின்றார்*

*கடவுளது திருவருளை எவ்வாறு பெறக்கூடும்?* 

*அருளென்பது கடவுள் தயவு. ஜீவகாருண்ய மென்பது ஜீவர்கள் தயவு. ஆதலால் சிறு வெளிச்சத்தைக்கொண்டு பெரு வெளிச்சத்தைப் பெறுவதுபோல், சிறிய தயவாகிய ஜீவ தயவைக் கொண்டு பெருந்தயவாகிய கடவுளருளைப் பெறவேண்டும்.*

*அக் கடவுள் தயவாகிய அருள் எத்தன்மை யுடையது? நமது ஆன்ம அறிவாகிய புத்தி தத்துவத்தினுக்கு நன்மை தீமையை விளக்கிக்காட்டுவதாயும், வேதாகம கலைகளைக் கொண்டு நன்மையாதிகளை விதிப்பதாயும், அறிபவர்களின் தரத்திற் கொத்ததாயும், அறிபவர்கள் எந்த வஸ்துவை அறிகின்றார்களோ அந்த வண்ணமாயும் உள்ளது.*

*அத் தன்மையான அருள் பிண்ட அண்டத்தில் எவ்வண்ணமாய் விளங்குகின்றது?*

*காண்பார் காணுமிடம் காணப்படுமிடம்,*

 *அறிவார் அறியுமிடம் அறியப்படுமிடம்*, 

*தூண்டுவார் தூண்டுமிடம் தூண்டப்படுமிடம்*, 

*சுவைப்பார் சுவைக்குமிடம் சுவைக்கப்படுமிடம்,*

*அனுபவிப்பார் அனுபவிக்குமிடம் அனுபவிக்கப்படுமிடம்,*

 *கருதுவார் கருதுமிடம் கருதப்படுமிடம்,* 

*முகருவார் முகருமிடம் முகரப்படுமிடம்,* 

*கேட்பார் கேட்குமிடம் கேட்கப்படுமிடம்*
 
*முதலியவாய் விளங்கும்.*

*இவ் வண்ணம் விளங்கும் அருளை நாம் பெறுவதற்கு உபாயம் என்ன?* 

*புத்தி தத்துவத்தால் நன்மை தீமையை விசாரித்து, நன்மையே உருவாய் விளங்கும் பெரியாரைத் துணைக்கொண்டு, அவரால் கட்டளையிடும் திருப்பணியைக் கைக்கொண்டு இடையறாது செய்யில், அவ்வருளைப் பெறலாம்.*

*நன்மை தீமை என்பவை யாவை?*

*நன்மை தீமை யென்பவை புண்ணிய பாவம்.* 

*புண்ணியமென்பது ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும்,* *பின் சுகமாயும் விளங்கும்* 

*பாவ மென்பது ஆரம்பத்தில் சுகமாயும் பின் துக்கமாயும் இருக்கும்.*

*துன்பத்தையும் துக்கத்தையும் தொலைப்பதற்கு ஜீவகாருண்யமும்,அருளைப்பெறுவதற்கு இடைவிடாது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளும் சத்விசாரமும் செய்து அருளைப் பெற்று இன்புறலாம்* 

*வள்ளலார் பாடல்!*

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்

அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்
அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்

பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே

வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.!

தொடரும்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் சுத்த சன்மார்க்க சுடர்*
*ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு