வியாழன், 13 ஏப்ரல், 2023

அறிவும் அருளும் தமிழும்!

 *அறிவும் அருளும் தமிழும் !*


*அறிவும் அருளும் தமிழும் மனித தேகத்திற்கு மட்டுமே இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளன !*


*அறிவு விளக்கமும் அருள் விளக்கமும், தமிழ் விளக்கமும் இல்லை என்றால் மனித பிறப்பு எடுத்து எந்த பயனும் இல்லை என்றே சொல்லலாம்* 


*கடவுளால் படைக்கப்பட்ட  படைப்புகளிலே மிகவும் உயர்ந்த படைப்பு மனிதப்படைப்பாகும் அதனால்தான்உயர்ந்த அறிவு மனித ஆன்மாவில் வைக்கப்பட்டுள்ளன.*


*மனிதப் பிறப்பிற்கு மட்டுமே பேசும் ஆற்றல் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளதாகும். பேசுவதற்கு மொழி மிகவும் அவசியமானதாகும்.மொழியின் வழியாகத்தான் எல்லா உயிர்களிடத்தும் தயவும்,நம்மை படைத்த இயற்கை உண்மை கடவுளிடத்தும் அன்பும் வைத்து தொடர்பு கொள்ளவும் சிறந்த வாய்ப்புள்ளதாகும்.* 


*தாய்மொழி தந்தை மொழி !*


*உலகில் மனிதமொழி இறைமொழி என இரண்டு வகையாக உள்ளன.*


*சமயம் மதம் சார்ந்த தலைவர்களால் அதாவது மனிதர்களால் (மாயையால் சிக்குண்டவர்களால்) தோற்றுவிக்கப்பட்ட உலகியல் மொழியை,அவரவர்களால் பேசப்படும் மொழியைத் தாய் மொழி என்றும் சொல்லப் படுகின்றது*


*இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட கலவை இல்லாத இயற்கை உண்மை தொன்மையான ஒரே மொழி தமிழ்மொழி என்பதாகும், ஆதலால்தான் அதற்கு தந்தைமொழி என்று வள்ளலாரால் போற்றப்படுகிறது.* 


*சாகாக்கல்வி கற்க தமிழ்மொழி ஒன்றே சிறந்தது !*


*இயற்கை உண்மையான இறைவனைத் தொடர்பு கொள்ளவும், மனிதஅறிவு பூரணமாக விளங்கவும்,அருள் பூரணமாக பெறவும்,உயிரையும் உடம்பையும் அழியாமல் காப்பாற்றும் சாகாக்கல்வி கற்கவும் தமிழ்மொழியே சிறந்த மொழியாகும்*


*வள்ளல் பெருமான் சொல்வதை ஊன்றி கவனிப்போம்*


*இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலான பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவெட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி(தமிழ்மொழி) ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர். என்னும் உணமையை வெளிப்படுத்துகின்றார்.*


மேலும் தமிழ்மொழியை வள்ளலாருக்கு இறைவனே கற்றுத் தருகிறார்!


*எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித்தலைமைக் கடவுளே! குமாரப் பருவத்தில் என்னை கல்வியில் பயிற்றும் ஆசிரியரையின்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கருமையாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளகத்தே இருந்து பயிற்றுவித்தருளினீர் என்கின்றார்*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஞானதேகம் கொண்டவர்,ஆதலால் அவருக்கு மரணம் என்பதே இல்லை.அதேபோல் மனிதனும் ஞானதேகம் பெறவேண்டும்.ஞானதேகம் பெற்றால் மட்டுமே ஞான தேகத்தோடு இணைய முடியும் என்பதை ஒவ்வொரு மனிதனும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.ஞானதேகம் கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் சாகாத மொழியாகிய தமிழ் மொழி கற்கவேண்டும்.* 


*தமிழ்மொழிக்கு அருட்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!*


*மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே

யருட்குரு வாகிய மவருட்பெருஞ் ஜோதி! என தெளிவுப் படுத்துகின்றார்*


*பாடல்களின் வாயிலாகவும் தெரிவிக்கின்றார்.!*


*ஓதா துணர்ந்திட வொளியளித்து எனக்கே

ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி!*


ஓதாது உணர உணர்ந்திட உள்ளே நின்று உளவு சொன்ன நீதான் நினை மறந்தென் நினக்கேன் இந்த நீணிலத்தே !


கற்றதும் நின்னிடத்தே பின் கேட்டதும் நின்னிடத்தே கண்டதும் நின்னிடத்தே  உட் கொண்டதும் நின்னிடத்தே பெற்றதும் நின்னிடத்தே இன்புற்றதும் நின்னிடத்தே பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே !


ஓதுமறை முதற் கலைகள் ஓதாமல் உணர உணர்விலிருந்து உணர்ந்திட அருள் உண்மை நிலைகாட்டித் தீதுநெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத் திரு அருண் மெய் பொது நெறியில் செலுத்தியும்!


ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனக் கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்து  உணர்வாம் உருவுறச் செய்உறவே !


சிற்சபையில் நடிக்கின்றாய் செந்தமிழில் வளர்கின்றாய்! 


மேலும்..


நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப

நண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில்


ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே

இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ


பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே

பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன்


கோடுதவ றாதுனைநான் பாடுதற்கிங் கேற்ற

குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே.!


மேலே கண்ட வரிகள் தமிழ் மொழியின் அருமையும், பெருமையும், சிறப்பையும்,தனித் தன்மையும் பற்றிப் போற்றி புகழ்கின்றார் வள்ளலார். 


*தமிழ்மொழி !*


*தமிழ்மொழியில் மட்டுமே உயிரைப் பற்றியும்,உடம்பைப் பற்றியும்,ஆன்மாவைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் பேசப்படுகிறது.*


*உயிரைப்பற்றி பேசுவதால் உயிர் எழுத்து எனவும்,உடம்பைப்பற்றி பேசுவதால் மெய் எழுத்து எனவும்,ஆன்மாவைப்பற்றி பேசுவதால் உயிர்மெய் எழுத்து எனவும்,கடவுளைப்பற்றி பேசுவதால் ஆயுத எழுத்து எனவும் சொல்லப் படுகிறது.*


*இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்மொழிக்கு இயற்கை தொன்மையாம் சாகாத மொழி என்றே பெயர்.மேலும் உயர்ந்த நன்நிதியாகிய அமுதை வழங்குவதால் அமுத மொழி என்றும் சொல்லப்படுகிறது.*


*உலகம் உள்ளவரை தமிழ் நிலைத்து நிற்கும்.என்றும் இளமை குன்றாத ஒரே மொழி தமிழ்மொழியாகும்.* 


*வள்ளல்பெருமானை கருவியாகக் கொண்டு இறைவனால் எழுதப்பட்ட நூல்தான் திருஅருட்பா என்னும் அருள் நூலாகும்.* 


*திருஅருட்பாவில்தான் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது*


*திருஅருட்பாவில் மட்டுமே அருள் பெறுவதற்கான நான்கு ஒழுக்கங்களை கட்டாயம் கடைபிடிக்க வலியுறுத்தி உள்ளது.இந்திரிய,கரண,ஜீவ,ஆன்ம ஒழுக்கங்களை பூரணமாக கடைபிடிப்பவர்களுக்கே அருள் பெறும் வாய்ப்புள்ளது இந்த உண்மை தமிழ் மொழிக்கே சொந்தமானதாகும்.* 


*ஜீவகாருண்ய ஒழுக்கம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானாக விளங்கும்,அன்பும் அறிவும் விளங்கும் போது அருள் தானாக விளங்கும்.அருள் விளங்கும்போது மரணத்தை வெல்லலாம். மரணத்தை வென்றாலே கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம்.*


*தமிழ்மொழியில்,தமிழ்நாட்டில் தான் கர்மசித்தர்,யோகசித்தர்,ஞானசித்தர்கள் என்னும் அருளாளர்கள் தோன்றி உள்ளார்கள்.*


**வள்ளலார் பாடல்!*


 *அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்

கனுபவ மாகின்ற தென்னடி தாயே

செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்

திருவருள் உருவம் என் றறியாயோ மகளே.!*


அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்

கனுபவ மாகின்ற தென்னடி தாயே

தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்

திருநட இன்பம் என்றறியாயோ மகளே.!


அறிவில் அறிவை அறியும் பொதுவில்

ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்

செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி

செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி.! 


*தயவு,கருணை,அன்பு,அறிவு,அருள் பெற்று மரணத்தை வெல்வதற்கு தமிழ்மொழி ஒன்றே சிறந்த உயர்ந்த தனித்தன்மை வாய்ந்த அருள் பெறும் மொழியாகும்.*


*தமிழைக் கற்போம் திருஅருட்பாவை படிப்போம், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வோம்,அருளைப்பெறுவோம்,மரணத்தை வெல்வோம்,பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு