ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

வள்ளலார் 200 ஆம் ஆண்டு விழா !

 *வள்ளலார் 200 ஆம் ஆண்டு விழா !* 


*05-10-1823 ஆம்நாள் இவ்வுலகத்திற்கு இறைவனால் வருவிக்க உற்றவர் வள்ளல்பெருமான் ஆவார், மனித தேகத்தில் மக்களுக்காக 51 ஆண்டுகள் காட்சி கொடுத்துள்ளார்.* 


*சித்திபெற்றது !*


*இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பம் ஆகிய மூன்றும் ஒருங்கே பொருந்திய எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும்பதியாகிய அற்புதக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு,தனிப்பெருங்கருணை யுடன் பூரண அருளைப் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் சாகாவரமும், என்றும் அழியாத நித்திய தேகமாகிய அருள் ஒளி ஒலி  தேகத்தை பெற்று ஸ்ரீமுக ஆண்டு தைத்திங்கள் 19 ஆம்நாள் 30-01-1874 ஆம்தேதி வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு மேட்டுகுப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் உள்ள திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து அருட்பெருஞ்ஜோதியாக தன்னை மாற்றிக் கொண்டவர் வள்ளல்பெருமான் அவர்கள் .* 


*என்றும் ஐந்தொழில் செய்யும் வல்லபத்தை பெற்ற வள்ளல்பெருமான் அவர்களுக்கு 200 ஆம் ஆண்டு வருவிக்க உற்ற விழாவாகவும்! 156 ஆவது தருமச்சாலை துவக்க விழாவாகவும்,152 ஆவது ஜோதி தரிசனம் விழாவாகவும் என முப்பெரும் விழாவாகவும் வருகின்ற 05-10-2023 ஆம்நாள் அக்டோபர்  மாதம் தொடங்கி 05-10-2023 ஆண்டு வரை 52 வாரங்கள் தமிழக அரசு ஆணைபடி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக முப்பெரும் விழாவாக எடுக்க இருக்கிறார்கள்.  அதற்குண்டான செயல் திட்டங்களை வகுத்திட, அறிவு சார்ந்த அருள் சார்ந்த,நீண்டகால சுத்த சன்மார்க்க அனுபவம் பெற்றவர்களான 14 சான்றோர்களை உறுப்பினர்களாக நியமித்து இருக்கிறார்கள்* அவர்களை பாராட்டுகிறோம்.


*சத்திய தருமச்சாலை !*


*இயற்கை உண்மையான இறைவனை தொடர்பு கொள்ளவும் அருளைப்பெறவும் மரணத்தை வெல்லவும், உண்மையான இரண்டு நேர் வழிகளை வள்ளலார் காட்டி உள்ளார் அவை!.1,பரோபகாரம் 2,சத்விசாரம் என்பதாகும்.* 


*அவற்றில் ஒன்றுதான் வடலூரில் 23-05-1867 ஆம் தேதி வைகாசி 11 ஆம்நாள் சத்திய தருமச்சாலையை நிறுவினார், அன்றிலிருந்து இன்றுவரை அவர் ஏற்றிவைத்த அடுப்பு அணையாமல் எரிந்து கொண்டுள்ளது ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு வருகிறது.* 


*வள்ளல் பெருமானின் கொள்கையில் தலையாயது, பசிப்பிணியை போக்கும் ஜீவகாருண்யமே முதன்மையானதாகும்*


*எனவேதான் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார்,ஜீவகாருண்யத்தை வள்ளலார் பசி,பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயம் கொலை என ஏழுவகையாக பிரித்தார்.* *அதில் மிகவும் முக்கிய மானது. பசித்த ஏழைகளுக்கு உணவு வழங்கி பசிதவிர்த்தல்,(அற்றார் அழிபசி தீர்த்தல்) கொலையினால் துன்பப்படும் உயிர்களை காப்பாற்றும்,கொலை செய்யாமை புலால் உண்ணாமை, இவை இரண்டையும் உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்தை பெற்ற அனைவரும் கடைபிடிக்க வேண்டுவது அவசியமாகும் என்றார்.* 


*எனவேதான் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும்,! உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும்! மிகவும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்* 


*சத்விசாரம் !* 


*சத்விசாரம் என்பது கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்ற கடவுளின் உண்மையைத் தெரிந்து கொள்வது, அக் கடவுளிடம்  எவ்வாறு தொடர்பு கொண்டு அருளைப் பெறுவது மரணத்தை வெல்வது என்பதை தெளிவாக அறிந்து கொள்வதே "சத்விசாரம்" என்பதாகும்*


*சத்தியஞான சபை !*


*இயற்கை உண்மை,*

*இயற்கை விளக்கம்* *இயற்கை இன்பம் போன்ற மூன்றும் ஒன்றான கடவுளே அருட்பெருஞ்ஜோதியர் என்பதாகும். அந்த உண்மையை உலக மக்கள் யாவரும் அறிந்து,புரிந்து,தெரிந்து கொள்ளவே,25-01-1872 ஆம் ஆண்டு பிரசோற்பத்தி,தை 13, ஆம்நாள் வியாழக்கிழமை பூசநாளில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளல்பெருமான் அவர்கள் அமைத்துள்ளார்கள்*


*சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் வள்ளல்பெருமான் காட்டினாரா ? காட்டச் சொன்னாரா ? என்ற கேள்விக்கு இன்றுவரை எந்த விதமான ஆதாரமும் இல்லை*


*அதன் விளக்கம்,!*


*கடவுளானவர் அருட்பெருஞ்ஜோதி என்ற ஒளி வடிவில் உள்ளார், அவர் தனிப்பெருங்கருணை யாக உள்ளார்  என்ற உண்மையை கண்ட வள்ளல்பெருமான், எண்கோண வடிவில் எட்டு கதவுகளை அமைத்து 16 ஜன்னல்களை வைத்து "சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத்" தோற்றுவித்துள்ளார்.*


*ஞானசபையை இயற்கை விளக்கம் என்பார் வள்ளலார். உயர்ந்த அறிவுபெற்ற மனித தேகம் எடுத்துள்ள ஒவ்வொருவரும் அகத்தே  காணுதற்குரிய கடவுள் அனுபவத்தை, புறத்தே பாவணையாக காட்டுவதே சத்திய ஞானசபையாகும் என்பார்.*


*நம் சிரநடுவில் இயங்கிக் கொண்டு இருக்கும் ஆன்மாவே சத்திய ஞானசபையாகும்.அவற்றை அறியாமை அஞ்ஞானம் என்னும் வெவ்வேறு ஏழு வண்ணங்களாகிய திரைகளும் தத்துவ மாயா படலங்களே திரைகள் என்பார்.*


*நம்மிடமுள்ள அஞ்ஞானமாகிய திரைகள் நீக்கப் பெற்றால், ஆன்ம ஒளியாகிய அருட்பெருஞ்ஜோதி யைத் தரிசிக்கலாம் என்பதே வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்க கொள்கை களாகும்.*


 *அகத்தே தாம் பெற்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுபவத்தையே புறத்தில் சத்திய ஞானசபையாகக் கட்டி காட்டியுள்ளார்,,"திருந்தும் என் உள்ளத் திருக்கோயில் ஞான சித்திபுரம் எனச் சத்தியம் கண்டேன்",என்றும் "சத்திய ஞான சபை என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்" என்பது வள்ளல்பெருமான் திருவாக்காகும். இவ்வாறு அகத்தில் கண்ட உண்மையை புறத்தில் காட்டியதே சத்திய ஞானசபையாகும் வள்ளல்பெருமான் போல் நாமும் அகத்தில் காண்பதே சத்விசாரம் என்பதாகும்* 


*சன்மார்க்க கொடிக்கட்டி பேருபதேசம் செய்தது !*


*மேட்டுகுப்பம் சித்திவளாகத் திருமாளிகை முன்பு  22-10-1873 ஸ்ரீமுக ஆண்டு ஐப்பசித் திங்கள் 7 ஆம்நாள் செவ்வாய்க்கிழமை காலை 8 எட்டு மணிக்கு முதன் முதலாக சன்மார்க்கத்திற்கு என கொடிக்கட்டி நீண்ட உபதேசம்  ஒன்றையும் அருள் வாக்கின்படி செய்து அருளினார்கள்.அதற்கு மகாஉபதேசம் என்று சொல்லப்படுகின்றது.பேருபதேசத்தை ஒவ்வொருவரும் பலமுறை படித்தால்தான்வள்ளலார் சொல்லியுள்ள உண்மை என்னவென்று தெரியவரும்*


அக்கொடியின் அகம் அனுபவ  விளக்கத்தை வள்ளலார் தெரியப்படுத்துகிறார்.


*இப்போது தான் சன்மார்க்க கொடி கட்டிக்கொண்டது.அக்கொடி உண்மையில் யாதெனில், நமது நாபிமுதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியில் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம் மேற்புறம் மஞ்சள் வர்ணம், அச் சவ்வின் கீழ்   ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது;*  (ஆன்மாவின் அடிப்புறம் மேற்புறம் என்றால் என்ன? என்பதை  முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.)


*இக்கொடி நம் அனுபவத்தின் கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமாக கொடி கட்டி கட்டியது இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின் கண் தோன்றும் என்கிறார். எத்தனை சன்மார்க்க அன்பர்கள் தங்கள் அக அனுபவத்தை அறிவின் கண்கொண்டு கண்டு தெரிந்து உணர்ந்து இருக்கிறீர்கள் என்பதை. சுயபரிசோதனை செய்து விசாரம் செய்ய வேண்டும்.*


*ஆதலால் இத்தருணம் இக்காலமே சன்மார்க்க காலம்."சாகாதவனே சன்மார்க்கி" சாகிறவன் சன்மார்க்கி எனச் சொல்லத் தகுதியுடையவன் அல்ல, என்பதை சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்* 


*ஜீவகாருண்யஒழுக்கத்தையும், பரோபகாரத்தையும், கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! என்ற உண்மையும்,அவற்றை அறிந்து கொள்ளும் சத்விசாரத்தையும், சாகாக்கல்வியையும், அருள் பெறும் வழியையும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையையும் மிகத் தெளிவாக போதித்த வள்ளல்பெருமான் அவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும், அவர் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையை பின்பற்றவா முடியும். சாதி சமய மதவாதிகள் போல் வருடம் வருடம் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள்,சடங்குகள் சம்ரதாயங்கள் செய்து விழா மட்டும்தான் எடுக்க முடியும்.அதையாவது செய்து பெருமை கொள்வோம் நமக்குத் தெரிந்தது அவ்வளவுதான்*


வள்ளலார் 200 ஆம் ஆண்டு விழாவிற்கு தயாராக இருங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்.


*வள்ளலார் பாடல்!*


*பெற்றேன் என்றும் இறவாமை* பேதம் தவிர்ந்தே இறைவன் எனை


உற்றே கலந்தான் 

*நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்*


எற்றே அடியேன் செய்ததவம் *யாரே புரிந்தார்* இன்னமுதம்


துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு