ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

கடவுளைக் கண்டேன் !

 *கடவுளைக் கண்டேன்!*


தொடர்ச்சி பாகம் 4. 


*செங்கம் பஸ் நிலையத்தில் இருந்து என் மனைவியும் குழந்தையும் ஈரோட்டிற்கு பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு,திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் சென்று அங்கு நின்று கொண்டு இருந்த சென்னை பேருந்தில் ஏறி மறுநாள் காலை 5-00 மணிக்கு சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் பஸ் நின்றது, அங்கே இரங்கிக் கொண்டேன்.* 


*அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லைகடவுள் என்ன வழி காட்டுவாரோ அப்படியே நடக்கட்டும் எனநினைந்து,கால்போன வழியிலே சென்று கொண்டு இருந்தேன்*


*கெட்டு பட்டணம் போ என்பார்கள,* *நான் கெடாமல் பட்டணம் சென்றுள்ளேன்.கையிலே பணம் 500 மட்டும் இருந்தது அப்போது ஐந்துநூறு என்பது இப்போது 5000 ரூபாய் மதிப்பிற்கு சமமானதாகும்.குறைந்த வாடகையில் ரூம் எடுத்து தங்கினால் வாடகைக்கும் உணவிற்கும் சேர்ந்து முன்று நாட்களுக்கு கூட பணம் போதாது என்பதால் வேலை கிடைக்கும் வரை உணவிற்கு மட்டும் பணத்தை சிக்கனமாக செலவு செய்து சமாளித்துக் கொள்ளலாம் என மனதிலே நினைத்துக்கொண்டு,பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தேன்.பூக்கடை போலீஸ் ஸ்டேசன் வழியாக சென்று சென்னை உச்சநீதிமன்றத்தின் உயர்ந்த கட்டிடத்தை பார்த்து ரசித்துக் கொண்டே நடந்து சென்று கொண்டு இருந்தேன்.*


*பாரீஸ் கார்னரின் முடிவில் சென்று ரிசர்வ்பேங்க் வழியாக  மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை வரை  பல சிந்தனைகளுடன் மெதுவாக நடந்தே சென்றேன்.*


*வள்ளலார் பாடல்!*


தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்றுளம் பயந்தே


நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த


காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்துற்ற இளைப்பை


ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தை நீ அறிந்தது தானே.! 


*சென்னையில் இருந்தால் உள்ளம் தடுமாற்றம் உண்டாகும் என்று நினைந்து, வள்ளல்பெருமான் அவர்கள் மனம் அமைதியைத் தேடி சென்னையை  விட்டு கிராமம் கிராமமாக நடந்து தேடி அலைந்து இறுதியாக, சிதம்பரம் சென்றார். கடலூர் மாவட்டம் கருங்குழி கிராமம் மணியக்காரர் திரு.வேங்கட ரெட்டியாரின் உண்மையான அன்பையும் அழைப்பையும் ஏற்றுக் கொண்டு  அவர் வீட்டிற்கு வந்து தனிமையில் ஓர் அறையில் தங்கி இருந்துள்ளார்*


*அங்குதான் திருஅருட்பா ஐந்து திருமுறைகளையும் எழுதியுள்ளார், தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயமும் அற்புதமும் அங்குதான் நடைபெற்றது உலகம் போற்றும் உத்தமனாக, அருளாளராக,அருள் வள்ளலாக திகழ்ந்தார்.*


*நானோ சிறிய கிராமத்தில் இருந்து சென்னைக்கு சென்றுள்ளேன் வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தாய் தந்தையர் இல்லாத காரணத்தினாலும்,அண்ணன் அண்ணியின்  அற்ப அதிகாரச் செயல்களின் காரணத்தால் செயற்கையின் செயலால், இயற்கையின்சூழ்ச்சியால் யாரிடமும் சொல்லாமல்,யாருக்கும் தெரியாமல், தலை மறைவாக சென்னை செல்ல நேரிட்டது,இதுவே வினையின் மாயையின் விளையாட்டாகும்.*


*திருவல்லிக்கேணி!*


*வாழ்க்கையில் என்ன சோதனைகள் துன்பங்கள் நிகழ்ந்தாலும் பசி என்னும் பெரும்பிணி என்னும்  கொடும்பாவி வந்து உடம்பு இயங்க உணவு கேட்கிறது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு சைவ ஓட்டலில் காலை டிபன் பொங்கல் இட்லி உட்கொண்டு 1 ஒருரூபாய் கொடுத்து விட்டு அருகில் உள்ள ஒரு முடித்திருத்தம் செய்யும் கடைக்குச் சென்று தலையை வாரிக்கொண்டு சிறிது நேரம்  அமர்ந்து, அங்கிருந்த தினத்தந்தி பேப்பரைப் படித்துக் கொண்டு இருந்தேன்,*


அதிலே பால்கோவா விற்க ஆட்கள்தேவை,என்ற விலாசத்துடன்  வண்ணாரப்பேட்டை என்று இருந்தது. 


*மனித தேகத்தில் தெய்வம்!*


*முடித்திருத்தம்  செய்யும் கடை முதலாளி பெயர் வேலுச்சாமி வயது 55 இருக்கும் அவரும் அவர் மகனும் மட்டுமே கடையில் பணி செய்பவர்கள். வேலுச்சாமி ஐயாவிடம் வண்ணாரப்பேட்டை எங்கே உள்ளது, எந்த பஸ்ஸில் ஏறி எப்படிப் போக வேண்டும் என்று கேட்டேன்.* *அதற்கு அவர் தெளிவாக பதில் சொல்லிவிட்டு,என்னைப் பற்றிய விபரங்களை கேட்டார். நான் ஒளிவு மறைவு இல்லாமல் என்னைப்பற்றிய சில  விபரங்கள் யாவும் கண்கலங்கச் சொன்னேன். எங்கு தங்கப் போகிறாய் என்று கேட்டார். அதுதான் ஐயா, எங்கு தங்குவது என்று ஒன்றுமே புரியவில்லை என்றேன்.* 


*(என்னைப்பற்றி என்ன நினைத்தாரோ,அவர் மனதில் என்ன தோன்றியதோ ஒன்றும் தெரியவில்லை,)*


*அவர் சற்றும் யோசிக்காமல் ஓலை மேய்ந்த சிறிய வீடு ஓடை ஓரத்தில் எங்கள் வீடு உள்ளது (கூவம்) வெளியே சிறிய திண்ணை உள்ளது, உமக்கு வேலை கிடைக்கும் வரை இரவில் மட்டும் வந்து தங்கி கொள்ளலாம்,பாத்ரூம் கக்கூஸ் வசதி கிடையாது, நான் மனைவி மகன் மூவர் மட்டுமே உள்ளோம் என்றார்.*


திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது அப்போதுதான் எமக்கு தெளிவாக புரிந்தது !


*அப்போது வேலுச்சாமி ஐயா என் கண்களுக்கு தெய்வமாகவே காட்சி தந்தார்.* *ரொம்ப மகிழ்ச்சி, சந்தோஷம், நன்றி ஐயா,முன்பின் தெரியாத எனக்கு நீங்கள் இந்த சென்னை மாநகரில் கடவுள்போல் உதவி செய்கிறீர்கள் என்று கண்களில் நீர்வழிய அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன்* *அதற்கு அவர் சொன்ன வார்த்தை கண் கலங்க வைத்தது. உன்னைப் பார்த்ததும் இறந்துபோன என் மகன் வந்தது போல் தெரிந்தது என்றார்.*


*மெரினா கடற்கரை!*


*இன்று ஓய்வு எடுத்துக் கொண்டு நாளையில் இருந்து பால்கோவா விற்க செல்கிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி நேராக கண்ணகி சிலை  அருகில் உள்ள மெரினா கடற்கரைக்கு சென்று அங்குள்ள ஒரு பழைய போட்டின் நிழலில் அமர்ந்துகொண்டேன். நல்ல வெயில் மக்கள் கூட்டம் அதிகம் இல்லை, பெரியஅலை, சிறியஅலை என இடைவிடாது பொங்கி எழுந்து வீசிக்கொண்டிருக்கும் கடல் அலையின் வேகத்தை, தண்ணீர் காட்சிகளைக் கண் சிமிட்டாமல் கண்டு கொண்டே இருந்தேன்.*


 *எதற்காக வாழனும் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம், கடலுக்குள் சென்று காணாமல் மாண்டு விடலாமா ? என்ற கோழைத்தனமான எண்ணம் மனதில் ஒருபுறம் ஊசலாடியது. அன்பான மனைவி அழகான குழந்தை கண்முன் தோன்றி, என்னை நம்பி வந்த மனைவி  மகன் இவர்களை விட்டுவிட்டு மரணம் அடைவது அறிவுள்ளவன் செயல்அல்ல, இவ்வுலகில் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து காட்டுவதே சிறந்த வாழ்க்கையாகும் என மனதை தேற்றிக்கொண்டேன்.* 


*மாலை நேரம் வந்ததும் பெரியவர் முதல் சிறியவர் வரை, எங்கு எங்கோ இருந்து குடும்பம் குடும்பமாக மகிழ்ச்சி கலந்த ஆனந்தமுடன் கடற்கரையில்  மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது. நானோ தனிமையில் அமர்ந்து தவித்துக் கொண்டிருந்தேன்*


*இரவு ஒன்பது மணியானது உணவு எடுத்துக்கொண்டு வேலுச்சாமி ஐயா கடைக்குச் சென்றேன். கடையை அடைத்துவிட்டு அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒரு சிறிய பாய் கொடுத்து திண்ணையில் படுத்து கொள்ளச் சொன்னார், அன்று இரவு பல நினைவு அலைகள்,பல சிந்தனைளுடன் பொழுது விடிந்தது.* 


*வள்ளலார் பாடல்!*


உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேலிலை

உண்ணவோ உணவுக்கும் வழியிலை


படுக்கவோ பழம் பாய்க்கும் கதியிலை

பாரில் நல்லவர் பால்சென்று பிச்சைதான்


எடுக்கவோ திடம் இல்லை என்பால் உனக்கு

இரக்கம் என்பதும் இல்லை உயிரைத்தான்


விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன்

வெண்பி றைச்சடை வித்தக வள்ளலே.! 


*இவ்வுலகில் ஏழை எளிய ஆதரவு அற்ற அறிவு சார்ந்த மக்களின் வறுமை நிலையை உணர்ந்து எல்லோருக்கும் பொதுவான சிந்தனையைத் தூண்டும் பாடலை பதிவுசெய்துள்ளார் வள்ளலார்.* 


நான் படிக்கும் போது எனது தமிழ் ஆசிரியர் சொன்ன வார்த்தை, எந்த சோதனைகள் வந்தாலும், *திருடாதே! பொய் சொல்லாதே! பிச்சை எடுக்காதே!* என்ற வரிகள் என் நினைவுக்கு வந்தது.


*ஒவ்வொரு மனிதனும் உலக வாழ்க்கையை உணர்ந்து தெரிந்து தெளிந்து கண்களிலே நீர் திரண்டுவரும் சூழலை,சோதனையை உருவாக்கினாலும், யார் கைவிட்டாலும் நம்மை படைத்த கடவுள் கை விடுவதில்லை, நம்மைவிட்டு என்றும் பிரியாமல் நம்மை தாயாகவும் தந்தையாகவும் நம் சிரநடுவில் அமர்ந்து கருணை வள்ளல்போல் இயக்கிக் கொண்டு இருக்கும் இறைவன் ஒருவர் உண்டு என்றும், அவர்மீது இடைவிடாது அன்பு செலுத்த வேண்டும்  என்பதை வள்ளலார் வலியுறுத்தி உள்ளதை நினைக்கும் போது, வள்ளலாரின் அருள் தன்மை பூரணமாக வெளிப்படுகிறது,சிந்திக்க வைக்கிறது தெளிவடைய வைக்கிறது.*


*பால்கோவா விற்றல்!* 


*காலை ஐந்து மணிக்கு எழுந்து கண்ணகி சிலை  அருகில் உள்ள நகராட்சி பைப்பில் குளித்துவிட்டு பஸ் பிடித்து வண்ணாரப்பேட்டை பால்கோவா கம்பெனிக்குள் சென்றேன், சுமார் ஐம்பது நபருக்குமேல்  சைக்கிலுடன் சென்று பால்கோவா வாங்கி சைக்கிலில் வைத்து கட்டிக் கொண்டு இருந்தார்கள்.*


*எனக்கு சைக்கிள் இல்லை, ஒரு தகர டப்பாவிற்கும் பால்கோவாவிற்கும் சேர்ந்து  பணம்கட்டி  வாங்கிக் கொண்டேன்.ஒருரூபாய்க்கு விற்றால் நான்குஅணா லாபம் கிடைக்கும்* 


*அங்கிருந்து தெருத் தெருவாக நடந்து மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் சென்று விற்றுவந்தேன்.வாங்குவோர் அதிகம் இல்லை,அங்கிருந்து நேராக மெரினா கடற்கரைக்கு சென்றேன் எப்படியோ வாங்கிய பால்கோவாவை விற்றுவிட்டேன்*


*இப்படியே ஒருவாரம்  தெருத்தெருவாக அலைந்தும் பள்ளிக்கூடம் உள்ள இடங்களிலும் பால்கோவா வியாபாரம் தொடர்ந்தது. *நடந்து நடந்து கால்கள் சோர்ந்தன, சுமந்து சுமந்து கைகள் வலித்தன,மனத்திற்கும் திருப்தி இல்லை,தொழிலை மாற்றினேன்.*


*சென்னை தி நகரில் உள்ள ஒரு பிரபலமான தையல் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன்,அங்குதான் என் வாழ்க்கையின் திசை மாற்றியது.*


தொடரும்...


*வள்ளலார் பாடல்!*


உடுத்ததுகில் அவிழ்த்து விரித்தொரு தரையில் தனித்தே

உன்னாதும் உன்னி உளத் துறு கலக்கத் தோடே


*படுத்தயர்ந்த சிறியேன்றன் அருகணைந்து மகனே*

பயமுனக்கென் என்றென்னைப் பரிந்து திருக் கரத்தால்


அடுத்தணைத்துக் கொண்டெடுத்துப் போய்ப் பிறிதோர் 

இடத்தே

அமர்த்தி நகைத் தருளிய *என் ஆண்டவனே அரசே*


தொடுத்தணி என் மொழிமாலை அணிந்து கொண்டென் உளத்தே

*சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.!*


மேலே கண்ட வள்ளலார் பாடல் வரிகள் என் நினைவிற்கு வருகிறது மனம் ஆறுதல் அடைகிறது.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு