ஞாயிறு, 9 ஜனவரி, 2022

நடுக்கடையாக வைத்தவர் !

 *நடுக்கடையாக வைத்தவர் !*


*கடைவிரித்தேன் கொள்வார் இல்லை கட்டிக்கொண்டேன் என்று வள்ளலார் சொல்லியதுபோல் சில மேதாவிகள் மேடைகளில் பேசியும் கட்டுரைகளில் எழுதியும் மக்கள் மத்தியிலே பொய்யான தகவல்களை விதைத்து குழப்பி வருகிறார்கள்.  அதனால் சன்மார்க்கிகள் சோர்வடையத் தேவைஇல்லை* 


*இந்த பொய்யான கருத்துக்களைப் பரப்புவர்கள் அனைவரும் சமய மதவாதிகளாகும் இதுவே அவர்கள் செய்யும் சூழ்ச்சியாகும்.*


காரணம் ! *வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகள் யாவும் சாதி சமய மதங்களுக்கு எதிரானவையாகும். சுத்த சன்மார்க்க கொள்கைகளை மக்கள் பின்பற்ற துவங்கிவிட்டால் சாதி சமய மதங்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடும் என்பது சரியை கிரியை யோகம் என்னும் பக்தி மார்க்கத்தை சார்ந்த சமய மதவாதிகள் அனைவருக்கும்நன்கு தெரியும்*


 *வள்ளலார் எவ்வளவு உண்மைகள்  சொல்லியும் மக்கள் கேட்கவில்லை. ஆதலால் கடைவிரித்தேன் கொள்வார் இல்லை கட்டிக்கொண்டேன் என்று வள்ளலார் சொல்லி உள்ளார் என்னும் பொய்யான வதந்தியை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றார்கள்*


*இந்த வார்த்தையோ வாக்கியமோ பாடலோ திருஅருட்பாவில் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை என்பதே உண்மையாகும்* 


*வள்ளலாரின் பாடல்!*


ஆரண வீதிக் கடையும் - சுத்த

ஆகம வீதிகள் அந்தக் கடையும்


சேர *நடுக்கடை* பாரீர் - 

திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.!

ஜோதியுள் ஜோதியுள் ஜோதி  


*என்னும் பாடலிலே சுத்த சன்மார்க்க கடையை எல்லாக் கடைகளுக்கும்  நடுவில் ( மத்தியில்) வைத்துள்ளதாக மிகவும் அழுத்தமாக மேலே கண்ட பாடலில் பதிவு செய்துள்ளார்*


*உலகில் ஆன்மீகம் என்ற பெயரில் பொய்யான கற்பனை கதைகளில் பொய்யான தத்துவ தெய்வங்களை வெளிப்படுத்தி (உருவகப்படுத்தி) நம்பும்படியாக  பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ள சமய மதங்களினால் சொல்லப்பட்டுள்ள ஆரண வீதிக்கடைகளுக்கும். ஆகமவீதி கடைக்களுக்கும் மத்தியில் அதாவது நடுவில் சுத்த சன்மார்க்க கடையை வைத்துள்ளேன் என்பதை தெளிவாக தெரியப்படுத்துகின்றார்*.


*சுத்த சன்மார்க்க நடுக் கடையை சுற்றியுள்ள சமய மதங்களினால் ஜோடிக்கப்பட்ட கடைகள் யாவும் அதிவேகப் புயலால் கடல் சீற்றத்தால் நான்கு புறமும் உள்ள கடல்களின் உள்ளே இழுத்துக்கொள்ளும் மீண்டும் வெளியே வந்து தலைகாட்ட முடியாமல் அழிந்துவிடும் என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க செய்தியாகும்.*


*நடு்க்கடையாக வைத்துள்ள சுத்த சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகம் எங்கும் தழைத்து ஓங்கும் என்கிறார்.*


வள்ளலார் சொல்லுவதை பாருங்கள்!


*சன்மார்க்கப் பெரும்பதி வருகை !*


பிரஜோற்பத்தி வருடம் சித்திரை மாதம் 12 ம் தேதி – 12 .4 . 1871 ஆம் நாள் வெளியிட்டது.


*சுத்த சிவ சன்மார்க்கம் ஓன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை . தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும் . அதன்மேலும் வழங்கும்* 


*பலவகைப்பட்ட சமய பேதங் களும் ,சாத்திர பேதங்களும் , ஜாதி பேதங்களும் , ஆசார பேதங் களும் போய் சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும் . *அது கடவுள் சம்மதம் . இது 29 மாதத்திற்கு மேல்*


*இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கா்த்தா்கள் , மூா்த்திகள், கடவுளா் , தேவா் , அடியார் , யோகி , ஞானி முதலானவா்களில் ஓருவரல்ல* 


*இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் , எல்லாத் தேவா்களும் , எல்லாக் கடவுளரும் , எல்லாத் தலைவா்களும் , எல்லா யோகிகளும் , எல்லா ஞானிகளும் , தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிற்பார்க்கின்றபடி எழுந்தருளு கின்ற தனித்தலைமைப் பெரும்பதி  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே!.*


*இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன் . பெறுகின்றேன் . பெற்றேன் . என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை . பெறுவீர்கள் .பெறுகின்றீா்கள்.பெற்றீா்கள் அஞ்சவேண்டாம்* 


மேலே கண்டவாறு தெரிவித்துள்ள வள்ளலார் கடையை கட்டிக் கொள்வாரா ? *நடுக்கடையாக வைத்துள்ளார்* என்பதை சிந்திக்க வேண்டும். 


*வள்ளலார் பாடல்!*


சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்

துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே


*வெல்லுகின்ற வார்த்தைஅன்றி* *வெறும்வார்த்தை என்வாய்*

*விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்*


செல்லுகின்ற படியே நீ காண்பாய் இத்தினத்தே

தேமொழி அப் போதெனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய்


ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடி நான்

உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.! 


*வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும் வார்த்தை என்வாய் விளம்பாது என்கிறார் அதன் அர்த்தம்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என் உள் இருந்து இசைக்கின்றார்* *எனவே நான் உரைக்கும் வார்த்தை எல்லாம்- நாயகன்தன் வார்த்தை அதனால் பொய் என்பதற்கு இங்கு இடமே இல்லை என்கிறார்*


*புரிந்து கொள்வோம் தெரிந்து கொள்வோம் தெளிந்து கொள்வோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு