ஞாயிறு, 10 அக்டோபர், 2021

ஆன்ம மகிழ்ச்சியா ? மனம் மகிழ்ச்சியா ?

 *ஆன்ம மகிழ்ச்சியா ? மனம் மகிழ்ச்சி யா?*


*மனித தேகம் நான்கு பிரிவுகளாக இணைந்துள்ளன*


1.அகம்:- ஆன்மா

2.அகப்புறம்:- ஜீவன் (உயிர்)

3.புறம் :- கரணங்கள் எனும் மனம் புத்தி சித்தம் அகங்காரம்

4.புறப்புறம்:- இந்திரியங்கள் எனும் கண் மூக்கு காது வாய் உடம்பு (மெய்) 


1.ஆன்மா :- அக்கினி பிரகாசம் போன்றது

2.ஜீவன்:- சூரிய பிரகாசம் போன்றது.

3.கரணங்கள்:- சந்திரிபிரகாசம் போன்றது.

4. இந்திரியங்கள்:- நட்சத்திர பிரகாசம் போன்றதாகும்.


*மனித தேகம் இயங்குவதற்கு மேலே கண்ட  நான்குவகையான இணைப்புகளும் அவசியம் தேவைப்படுகிறது*.


*தேகத்தின் தலைவன் அகத்தில் உள்ள ஆன்மா என்னும் உள் ஒளி என்பதாகும்*. *உடம்பை இயக்குவதற்கு அகப்புறத்திலுள்ள உயிர் என்னும் ஜீவ ஒளி இயக்கம் தேவைப்படுகிறது.* 


*புறம் என்னும் மனம் முதலான கரணங்களும் புறப்புறம் என்னும்  இந்திரியங்களான கண் முதலான கருவிகளும் வெளிப்புறமாக செயல்படும் முக்கியமான உடம்பில் உள்ள தத்துவ கருவிகளாலும்* 


*மேலும் உடம்பிற்குள் உள்ள உறுப்புக்கள் அனைத்தும் உடம்பை இயக்கும் உட்கருவிகளாகும்* 


*உடம்பு இயங்க உயிர் தேவை. உயிர் இயங்க ஆன்மா தேவை. ஆன்மா இயங்க அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளிதேவை. அருள் இயங்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை தேவை* இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்வதற்காகவே உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் கொடுக்கப்பட்டது.


*மனித தேகத்தில் நாம் பெற வேண்டியது !*


*மனிதப்பிறப்பில் நாம் பெற வேண்டியது ஆன்ம லாபம் மட்டுமே* *ஆன்மா மகிழ்ச்சி அடைந்தால்தான் ஆன்ம நெகிழ்ச்சி உண்டாகி அன்பு பெருகும் அன்பு பெருகினால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியும்*


*அன்பெனும் பிடியுள் அகப்படும் ஆண்டவர் ஆன்மாவுடன் இணைந்து ஆன்மபோகத்தை அனுபவித்து அருள் வழங்குவார் அந்த அருள் உடம்பு முழுவதும் நிறைந்து கலந்து தனிப்பெருங்கருணையாக மாற்றம் அடைந்து பூத உடம்பு மாற்று குறையாத  பொன்உடம்பாக ஒளிவீசும்.*


இவற்றைத்தான் வள்ளலார்


*பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும்* *பொருட்டா*

*என்னுளங் கலந்த என்றனி யன்பே!* (அகவல்)


 *பொன்னடி கண்ட அருட் புத்தமு துணவே*

*என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே!*(அகவல்) என்கிறார்


*அருள் நிறைந்த உடம்பே மரணத்தை வென்று என்றும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ்வதே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.*


*அருள் பெற முடியாமைக்கு காரணம் என்னவென்று சிந்திப்போம்!*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு ஆன்ம லாபத்தை பெற வேண்டிய மனிதன் புறத்தில் உள்ள பொய்யான கற்பனை தத்துவ  உருவ சிலை கடவுள்களை வழிபாடு செய்து வணங்கி வருகிறார்கள்*.


கரணங்களில் உள்ள மனத்தின் மகிழ்ச்சிக்காக நெகிழ்ச்சிக்காக  உருக்கத்திற்காக சரியை கிரியை என்னும் பக்தியிலே மூழ்கி புறத்திலேயே கடவுளைத் தேடி தேடி அலைந்து அலைந்து அழிந்து கொண்டே உள்ளார்கள்.


*இந்திரிய கரணங்களில் மட்டுமே பக்தி பதிவாகும் (ஆன்மாவில் பதிவாகாது) 

*பக்தி என்பது மனநெகிழ்ச்சி மன உருக்கம் மன மகிழ்ச்சி உண்டாகும்*. *மனத்தினால் உண்டாகும் எந்த செயலும் ஆன்மாவையோ ஆண்டவரையோ தொடர்பு கொள்ள முடியாது*.


*ஆன்ம லாபம்!*


*அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம உருக்கம் ஆன்ம மகிழ்ச்சி ஆன்ம லாபத்தை உண்டாக்கும் ஆன்ம  லாபத்தினால் மட்டுமே ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியும்.* 


இங்குதான் வள்ளலார் மக்களுக்குத் தெளிவுப்படுத்துகிறார்! 


*ஜீவகாருண்யத்தால் ஜீவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஜீவர்கள் மகிழ்ச்சி அடைவதால் ஆண்டவர் மகிழ்ச்சி அடைவார். ஆண்டவர் மகிழ்ச்சி அடைவதால் ஆன்மாவிற்கு அன்பு உண்டாகும் அன்பு உண்டானால் அருள் உண்டாகும் அருள் உண்டானால் மரணத்தை வெல்லலாம்* 


*எனவே இந்திரிய கரணங்களால் பக்தி உண்டாக்கும் பக்தியால் மனநெகிழ்ச்சி மன உருக்கம் மன மகிழ்ச்சி உண்டாகும். அந்தகரண சுத்தியின் பிரயோஜனமே பக்தியாகும். *அதனால் புறவழிபாடு வேண்டாம் என்கிறார் வள்ளலார்* 


*வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமானது ஜீவகாருண்யத்தை போதிக்கிறது.* *அன்பை போதிக்கிறது கருணையைப் போதிக்கிறது*


*அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று அழுத்தமாக சொல்லுகிறார் வள்ளலார்.*


மேலும் *ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார்* 


மேலும் ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற சரியை கிரியை யோகம் ஞானம் எல்லாம் வெற்று மாயாஜாலங்களே என்கிறார்.


மேலும் *ஜீவகாருண்யம்  விளங்கும்போது  அறிவும் அன்பும் உடனாக விளங்கும்.அதனால் உபகார சக்தி விளங்கும் அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்* என்கிறார்.


*சீவகாருணியத்தின் வல்லபம்*

 

பிற உயிர்களிடத்துப் பசி கொலை முதலியவற்றுள் எதனாற் காருணியந் தோன்றியதோ அதனால் அவ்வுயிர்கள் வருந்தாதபடி அதை நீக்குதற்கு முயல்விப்பது அதன் வல்லபமென் றறியவேண்டும்.


*சீவகாருணித்தின் பிரயோசனம்* 


உயிர்களுக்கு இன்பம் உண்டுபண்ணுவது அதன் பிரயோசனம் என்றறியவேண்டும். 


*பக்தியை விட ஜீவ காருண்யத்தால் மட்டுமே ஆன்ம மகிழ்ச்சி ஆன்ம நெகிழ்ச்சி ஆன்மலாபம் பெறமுடியும்* 


*ஆன்ம லாபத்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று  மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு