வியாழன், 21 ஜனவரி, 2021

இயற்கையும் செயற்கையும்!

 *இயற்கையும் செயற்கையும்* !


*இயற்கை என்பது என்ன ? செயற்கை என்பது என்ன ? என்பதை தெரிந்து கொள்வதற்காகவே ஆன்மாவிற்கு  உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் கொடுக்கப்பட்டது.*


*இயற்கை என்பது இரண்டு மட்டுமே*

*ஒன்று அருட்பெருஞ்ஜோதி* *ஒன்று ஆன்மா என்னும் சிற்றணு பசு என்பதாகும் மற்றவையாவும் செயற்கையாகும்*


இவ்வுலகில் உள்ள ஆகாயம். காற்று. அக்கினி. நீர். மண் போன்ற பஞ்ச பூதங்களும் மற்றும் பிரகிருதி.மாயை சூரிய சந்திர நட்சத்திரங்களும்.  மற்றும் வாலணு.திரவவணு.குருவணு.லகுவணு.அணு.பரமாணு.விபுஅணு முதலிய ஏழுவிதமான அணுக்கள் யாவும் இறைவனால் படைக்கப்பட்ட செயற்கை பொருள்களேயாகும்.நாம் இயற்கை என்று நினைப்பது யாவும் இயற்கையினால் படைக்கப்பட்ட செயற்கையே ஆகும்.இறைவன் படைக்காமல் எதுவும் தோன்றுவதில்லை.

*படைக்கப்பட்டது யாவும் செயற்கையே* *படைத்தவன் மட்டுமே இயற்கை என்பதாகும்*


இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தோற்றுவித்தல்.

விளக்கம் செய்வித்தல்.

துரிசு நீக்குவித்தல்.

பக்குவம் வருவித்தல்.

பலன் தருவித்தல் போன்ற  ஐந்தொழில் செய்பவரும் அவரே. படைத்ததிலும் இரண்டுவகை உள்ளன.உயிர் உள்ளது. உயிர் இல்லாதது. அதாவது உயிர்ப்பொருள்.

ஜடப்பொருள் என இரண்டுவகையான படைப்புக்களாகும்


*தோற்றமுள்ளது யாவும் செயற்கையாகும் தோற்றம் இல்லாதது எதுவோ அதுவே இயற்கையாகும்.அதுதான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.*


*இறைவன் ஒருவரான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே இயற்கை உண்மை என்பவராகும்* *அவருக்கு இயற்கை உண்மை வடிவினர் என்றும் பெயர் சூட்டுகின்றார் வள்ளலார்*. *இயற்கை உண்மையில் இயற்கைவிளக்கம் என்றும் இயற்கை இன்பம் என்றும் அதனுள் அடங்கி இருக்கிறது*.


இயற்கை உண்மை வடிவினரை கண்டுபிடித்தவர் வள்ளலார்.அந்த இயற்கை உண்மையோடு ஒன்றி வாழ்ந்தவர் வள்ளலார்.இயற்கை விளக்கமான அருளைப்பெற்றவர் வள்ளலார்.இயற்கை இன்பத்தை அனுபவித்து இயற்கையோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர் வள்ளலார்.இயற்கை உண்மையைத் தொடர்புகொண்டு வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டியவர் வள்ளலார்.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தன்மையைப்பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.


இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்

ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்


செயற்கை இல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்

திரிபில்லார் களங்கம் இல்லார் தீமை ஒன்றும் இல்லார்


வியப்புற வேண் டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்

மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்


உயத்தரும் ஓர் சுத்த சிவானந்தசபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.! 


மேலும் சொல்லுகிறார்.


ஒன்றும் அலார் இரண்டும் அலார் ஒன்றிரண்டும் ஆனார்

உருவும் அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்


அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்

ஆதியிலார் அந்தமிலார் *அரும்பெருஞ்சோ தியினார்*


என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்

யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்


ஒன்றுறு தாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!


மேலே கண்ட பாடல்களில் இயற்கைக்கு தெளிவான விளக்கத்தை தந்துள்ளார்.


ஆன்மாவும் இயற்கைதான் ஆனாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொள்ளாமல் தனித்து இருக்கின்றது. ஆன்மாவானது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று அதன் மயமாவதற்காகவே இந்த பஞ்சபூத  உலகம் என்னும் செயற்கை பொருட்கள் யாவும் படைக்கப்பட்டது. செயற்கையான உலகில் செயற்கையான உயிர் உடம்பு எடுத்து வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று இயற்கை உண்மையான  கடவுள் நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே ஆன்மாவிற்கு தந்த பரிட்சையாகும்.(தேர்வு) பரிட்சையில் 100% தேர்வு பெற்ற ஆன்மாவை மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக்கொள்வார்.


*இதுதான் ஆன்மா கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்* 

 

இந்த உண்மையை மனித தேகம் எடுத்த ஆன்மாக்கள் அறிந்து.தெரிந்து.

புரிந்து கொண்டு வெற்றிபெறவே  *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வள்ளல்பெருமான் தோற்றுவித்துள்ளார்* 


இந்த சங்கத்தில் அங்கத்தினராகி உள்ளவர்கள் இயற்கை உண்மை வடிவினரான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு  அருள் பெறுவதற்காக என்ன என்ன முயற்சிகள் மேற்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என்பதை சற்று சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும். 


ஒருவர் கூட இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் இடைவிடாது தொடர்பு கொள்ளவில்லை.

*இயற்கை உண்மையைத்  தொடர்பு கொள்ள தடையாக இருப்பதையே தொடர்புகொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.*


*மரணம் என்பது இயற்கை அல்ல செயற்கை தான் மரணம் என்கிறார் வள்ளலார்* உலகில் உள்ளவை யாவும் அனைத்தும்  நிரந்தரம் இல்லாத செயற்கையான பொருட்கள்.அந்த செயற்கையான பொருட்களைத் தொடர்புகொண்டு அனுபவிப்பதால் பிணி மூப்பு அடைந்து  உடம்பும் உயிரும் இயங்கமுடியாமல் ஆன்மாவை விட்டு விலகிவிடுகிறது.  செயற்கை யான உடம்பும் உயிரும் செயற்கையுடன் சேர்ந்துவிடுகிறது.

இதுவே மரணம் என்று சொல்லப்படுகிறது. மீண்டும் ஆன்மா செயற்கையான உயிரும் உடம்பும் எடுத்து வாழ்கிறது இது தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டுவருகிறது.


*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொண்டு வாழ்ந்தால் மட்டுமே இயற்கையான அருள் பெற்று மரணத்தை வெல்லமுடியும்.*


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !*


இறந்தவரை எடுத்திடும் போ தரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


சிறந்திடு சன் மார்க்கம் ஒன்றே பிணிமூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே


பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.! 


இந்த மனித பிறப்பு கொடுத்தது இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு  அருளைப்பெற்று செயற்கை உடம்பை இயற்கை உடம்பாக மாற்றிக்கொண்டு நித்திய வாழ்வு வாழவேண்டும். இந்த உண்மையான வழிவகையைத்  தெரிந்து கொள்ளாமல் அறிந்து கொள்ளாமல் வீணான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இறுதியில் மரணம் வந்தவுடன் அய்யோ குய்யோ முறையோ என்று அடித்துக் கொண்டு அழுவதால் எந்த பயனும் இல்லை.

*செத்த பிணங்களைப் பார்த்து சாகும்  பிணங்கள் அழுகிறது* என்கிறார் வள்ளலார். 


வள்ளலார் பாடல்! 


இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்  *இந்த உடம்பே*

*இயற்கை உடம்பாக* அருள் இன்னமுதம் அளித்தென்


புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்

பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்


பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த

பேதையர் போல் எனைநினையேல் பெரிய திருக்கதவம்


திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 


உலகியலில் உள்ளவர்கள் போல் பொய்யான வாழ்க்கை வாழ்ந்து  இறந்து இறந்து பிறந்து பிறந்து வாழ்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை.அகமும் புறமும் இடைவிடாது உன்னையே நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து. வேண்டி விண்ணப்பம் செய்து போற்றி  வாடுகிறேன் வாழ்கின்றேன்  ஆன்ம சிற்சபை திருக்கதவும் திறந்து அருள் அமுதம் அளித்து என்னை அணைத்துக்  கொள்ளவேண்டும் என அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் முறையிட்டு வேண்டிக் கொள்கிறார் வள்ளலார்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அளித்த அருள் வல்லபம்* ! 


அஞ்சலை நீ ஒரு சிறிதும் என் மகனே

அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே


துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே

சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே


விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே

விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்


தஞ்சம் என் றவர்க்கருள் சத்திய முதலே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.! 


இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இரவு பகல் தெரியாமல். உலகியல் பற்றை சிறிதும் உளம் பிடியாமல்.செயற்கையைத் தொடர்பு கொள்ளாமல் இடைவிடாது அருட்பெருஞ்ஜோதி யைத்  தொடர்பு கொண்டு  சரணாகதி அடைந்து வாழ்ந்ததால் அருள் அமுதம் பெற்றார்.


*அஞ்ஞாதே ஒருசிறிதும் என் மகனே அருட்ஜோதியை அளித்தனம் உமக்கே என்று வாழ்த்தி ஊன   உடம்பை ஒளி உடம்பாக மாற்றம் செய்து. பிறப்பு இறப்பு இல்லாத அருள் உடம்பாக்கி தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* இதுவே ஆண்டவர்தந்த அருட்கொடையாகும்.


வள்ளலார் மனித உருவத்தில்  வாழ்ந்த காலத்தில் அவருடன் இருந்தவர்களும் சரி. இப்போது வள்ளலார் கொள்கையை பின்பற்றும் சன்மார்க்கிகள் யாராக இருந்தாலும் சரி.வள்ளலார் கொள்கையை முழுவதும் அறிந்து முழுமையாக பின்பற்றும் சன்மார்க்கிகள் ஒருவரும் இல்லை என்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.


முழுமையாக பின்பற்றி இருந்து இருந்தால் மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருந்து இருப்பார்கள்.

மரணத்தை வெல்வது என்பது சாதாரண விஷயம் அல்ல.மாபெரும் ஆற்றல் மிகுந்த உயர்ந்த நிலை விஷயமாகும்.

அவ்வளவு எளிதில் பெற்றுவிடமுடியாது.


*உண்மை உணரும் காலம் வரும் !*


*சுத்த சன்மார்க்க கொள்கையின் உண்மை அறிந்து உணர்ந்து அதி தீவிர முயற்சி செய்பவர்களுக்கு  மரணத்தை வெல்லும் வாய்ப்பை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எளிமையாக விளக்கி அருள் வழங்கி  தன்னுடன் இணைத்துக் கொள்வார்*.  


வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க சங்கம். தருமச்சாலை. சத்திய ஞானசபை. சித்திவளாகம் போன்ற அமைப்புகள் வள்ளலார் சொல்லியவாறு அறிவித்து வெளியிட்ட கட்டளைபடி இயங்கவில்லை.

அரசாங்கத்தின் பிடியிலும் சமயமதவாதிகளின் நிர்வாகத்திலும் இருப்பதால் உண்மை அறிந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் மக்கள் தெளிவுபெற முடியாமல் தவித்துக் கொண்டு உள்ளார்கள். 


மற்ற ஊர்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள சன்மார்க்க சங்கங்களும் வடலூரில் உள்ளவாறு சமய மத சடங்குகளில் சிக்கி உண்மைக்கு புறம்பாக செயல்பட்டுக் கொண்டு உள்ளார்கள் உண்மை உணரும் காலம் வரும் என்பதை எதிர்பார்ப்போம்.


*ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல்!* 


*ஜீவகாருண்யம் என்றால் என்ன ? தம் உயிரைக் காப்பாற்ற மற்ற உயிர்களுக்கு வரும் இடையூறுகளை நீக்க வேண்டும்.அதுவே ஜீவகாருண்யம் என்பதாகும்*.


வள்ளலார் சொல்லுவதை ஊன்றி கவனிக்க வேண்டும் பசி. பிணி. தாகம். இச்சை. எளிமை. பயம். கொலை போன்ற ஏழுவகையான துன்பங்கள் ஆன்மாவிற்கு நேரிடுகிறது. இதில் பசியை மட்டுமே சன்மார்க்கிகள் கடைபிடிக்கிறார்கள்.அதுவும் தாம் உழைத்த உழைப்பின் வருவாயைக் கொண்டு செய்வதில்லை.மற்றவர்களின் உதவியைக் கொண்டுதான் செய்கிறார்கள்.

இதனால் மரணத்தை வெல்ல முடியுமா என்றால் கண்டிப்பாக வெல்ல முடியாது.நம்மைவிட அதிகம் பேர் கண்களுக்குத் தெரியாமல் உலகில் உள்ளவர்களின் பசியைப் போக்கி கொண்டுதான் உள்ளார்கள்.


இங்கே வள்ளலார் சொல்லுவது ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்கிறார்.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார்.

ஆலயங்களில் உள்ள ஜட தத்துவ  சிலைகளை வணங்குவது வழிபாடு அல்ல.ஆன்மா உயிர் உடம்பு உள்ள ஜீவன்களுக்கு உபகாரம் செய்வதே கடவுள் வழிபாடு என்னும் உண்மையைச் சொல்லி.பொய்யான ஜட தத்துவ உருவ வழிப்பாட்டை மாற்றுகிறார். மேலும் கடவுளிடம் அருளைப்பெறுவதற்கு *சத்விசாரம் பரோபகாரம்* இரண்டு மட்டுமே போதும் என்கிறார். இதில் உள்ள உண்மையை எந்த அளவு தெரிந்து பின்பற்றி வருகிறோம் என்பதை அறிவாலே அறிந்துகொள்ள வேண்டும்.


*உணவு முறைகளால் அருள் பெற வாய்ப்பில்லை.!*


உணவு வகைகளில் இரண்டு வகை உண்டு.தாவர உணவு.மாமிச உணவு.உயிரைக்கொன்று உண்பது மாமிச உணவு. காய் கனி பழம் மற்றும் கீரைவகைகள் தானியங்கள் போன்றவைகளை பச்சையாகவோ அவித்தோ உண்பது  தாவர உணவாகும்.


*இவ்வுலகில் உள்ள உணவு வகைகள் யாவும் செயற்கை உணவுகள்தான்.* *இயற்கை உணவு என்பது அருள் மட்டுமே*


மாமிச உணவு உண்பவர்களுக்கு அவரவர்கள் செய்களுக்குத் தகுந்தவாறு அடுத்து கரடி சிங்கம் புலி பாம்பு போன்ற சண்டாளப்பிறவிகள் கிடைக்கும். தாவர உணவு உண்பவர்களுக்கு அவரவர்கள் செய்கைகளுக்குத் தகுந்தவாறு அடுத்து  ஆடு மாடு மனிதன் போன்ற தேகங்கள் கிடைக்கும்.

*பாவங்கள் கூட குறைய இருக்கும் அவ்வளவுதான் வித்தியாசம்*. மாமிச உணவு உண்பவன் ஆண்டவரை தொடர்பு கொள்ளவும் அருள் பெறவும் தகுதி அற்றவன் என்கிறார் வள்ளலார்.


*உயர்ந்த அறிவுள்ள மனிதன் உணவைவிட்டு உறக்கத்தை விட்டு படைத்தவனை இடைவிடாது தொடர்பு கொண்டு அருள் பெறுவதற்கு உண்டான தகுதியை வளர்த்து கொள்வதுதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கைகளாகும்.*

*இயற்கை உண்மை கடவுளைத் தொடரபுகொள்ள இயற்கை உணவு அவசியம்*


இயற்கை உண்மை கடவுளைத் தொடர்புகொள்ளவும் மரணத்தை வென்று மரணம் இல்லாப்பெருவாழ்வு வாழவும்  *இயற்கை உணவான அருள் உணவு பெறவேண்டும்* இயற்கை உணவான அருள்தான் இயற்கை உடம்பாக மாற்றம் அடையச் செய்யும். இயற்கையோடு இணைய வைக்கும். மற்ற உணவுகள் யாவும் செயற்கை உணவாகும்.

*செயற்கை உணவே மரணத்திற்கு இட்டுச்செல்லும்.*


*வள்ளலார் பதிவுசெய்துள்ள பாடல்!*


இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும் இந்த உடம்பே

*இயற்கைஉடம் பாக அருள் இன்னமுதம் அளித்தென்*


புறந்தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டெந் நாளும்

பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்


பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த

பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்


திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 


மேலே கண்ட பாடலில் செயற்கை உடம்பை இயற்கை உடம்பாக மாற்ற அருள்அமுதம் வழங்க வேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் முறையிடுகிறார் வள்ளலார் .


உலகியலில் பொய்யான வாழ்க்கை வாழ்ந்து இறந்து பிறந்து வாழ்பவர்கள் போல் என்னை நினையேல் .பெரியதிருக்கதவைத் திறந்து அருளை வழங்கி ஆட்கொள்ள வேண்டும்.எனது சிறநடு சிற்சபையில் வாழும் சித்த சிகாமணியே  என். திருநடநாயகனே என்று போற்றி புகழ்ந்து அருள் பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டுள்ளார் வள்ளலார்.


செயற்கை உணவை தவிர்த்து இயற்கை உணவாகிய அருள் உணவை உண்டு மரணத்தை வென்று சுத்த பிரணவ ஞானதேகமான அருள்ஒளி தேகத்தை பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு