திங்கள், 4 ஜனவரி, 2021

கடவுளும் மனிதனும் !

 *கடவுளும் மனிதனும்* !


உலகம் உயிர்கள் பொருள்கள் மற்றும் எல்லாவற்றையும் தமது அருட் சத்தியால் தோற்றுவித்தல்.வாழ்வித்தல்.குற்றம்நீக்குவித்தல்.பக்குவம் வருவித்தல். விளக்கம் செய்வித்தல் என்னும் ஜந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத்தொழில்களை நடத்துபவர் யார்? என்ற உண்மைத் தெரியாமல் மனிதகுலம் வாழ்ந்து வருவதற்கு காரண காரியமாக இருந்தவர்கள் யார் ?யார் ? என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு  மனித குலம் வாழவேண்டும்.


மனிதகுலம் கடவுளின் உண்மைத்தன்மை தெரியாமல் வாழ்வதற்கு காரணம். *சாதி சமய மதங்களின் பொய்யான கடவுள்கொள்கையை* தோற்றுவித்தவர்கள் என்பதை மனிதன் தன்னுடைய உயர்ந்த அறிவால் சிந்தித்து தன்னைத்தானே உணர்ந்து  அறிந்து கொள்ள வேண்டும்.


*மனிதன் தன்னையும் தன்னை சார்ந்துள்ள அனைத்தையும் படைத்த கடவுளை தெரிந்து கொள்ளவே மனிதனுக்கு உயர்ந்த அறிவையும் உயர்ந்த சிந்தனையும்.எண்ணம்.சொல்.செயல் மூலமாக தன்னைத்தானே அறிந்து  சிந்தித்து உணர்ந்து தெரிந்து கொள்ளவே உயர்ந்த அறிவு கடவுளால் கொடுக்கப்பட்டு உள்ளது.* அந்த அறிவை மறைத்துக் கொண்டுள்ளது.சாதி சமயம் மதம் என்னும் பொய்யான கொள்கையின் அஞ்ஞானம் அறியாமை என்னும் திரைகளாகும். அந்த உண்மையை கீழ் கண்ட பாடலில் பதிவு செய்துள்ளார்.


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்* !


*சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச் சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே*


ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே


நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த

நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே


வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய

மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.! 


மேலே கண்ட பாடலின் வாயிலாக சாதி.சமயம்.

மதங்களின் கொள்கைகளாலும் சாத்திரக் குப்பைகளாலும் ஆதியில் இருந்தே (பல ஆயிரம் ஆண்டுகளாக) மனிதன் வீணே அலைந்து வாழ்ந்து போது போக்கி கழித்துக்கொண்டு இருந்ததை வள்ளலார் வெளிச்சம் போட்டு காட்டுகின்றார்.


*மேலும் ஒரு பாடலில் பதிவு செய்கிறார்*


*எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்*

எடுத்துரைத்தே *எமதுதெய்வம் எமதுதெய்வம்* என்று


கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர்

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்


ஐவகைய பூதவுடம்பு அழிந்திடில் என் புரிவீர்

அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்


உய்வகை என் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.! 


சமய மதங்கள் சொல்லிய பொய்யான சாத்திரங்கள் சடங்குகள் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் மேலும் சம்ரதாயங்களின் வழிகாட்டுதலின்படி உண்மைக்கு புறம்பான கற்பனை ஜட தத்துவ  கடவுள்களை  படைத்து மக்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள்*


*ஆதலால் நேரிடையாக தொடர்பு கொள்ள வேண்டிய இயற்கை உண்மைக்கடவுளை அறிந்து கொள்ள முடியாமல்* அருளைப் பெற முடியாமல் இறந்து இறந்து பிறந்து கொண்டே உள்ளார்கள்.


இயற்கை உண்மை கடவுளின் தன்மை எவ்வாறு உள்ளது.எங்கே இருந்து செயல்பட்டு கொண்டுள்ளது என்பதை கீழே கண்ட பாடல் வாயிலாக வள்ளலார் பதிவு செய்கிறார்.


இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்

ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்


செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்

திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்


வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்

மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்


உயத்தரும்ஓர் சுத்த சிவானந்த சபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.! 


மேலே தான் கண்ட  

இயற்கை உண்மைக்கடவுளை நேரிடையாக தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று *மனிதனும் கடவுள் நிலைக்கு தன்னை மாற்றிகொள்ளலாம்* என்ற உண்மைத் தன்மையை வள்ளல்பெருமான் மக்களுக்குத் தெரிவிக்கின்றார்.


*இயற்கை உண்மைக் கடவுள் யார்* ?  


இயற்கை உண்மை கடவுள்தான் *அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை* என்னும் *அருட்பேரொளி  ஆண்டவர்* என்பவராகும்.


இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நேரிலே  கண்டுபிடித்தவர் வள்ளல்பெருமான் ஒருவரே என்ற உண்மையை எடுத்துச் சொன்னால் சில சாதி சமயம் மதம் சார்ந்த சன்மார்க்க அன்பர்களுக்கு வருத்தம் உண்டாகிறது.


*வள்ளலார் சொல்லுகிறார்*


அருளரசை அருட்குருவை *அருட்பெருஞ் சோதியை* என்

அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதைத்


தெருளுறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம்

செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை


மருவுபெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த

வாழ்முதலை மருந்தினை மா மணியை என்கண் மணியைக்


கருணை நடம் புரிகின்ற கனகசபா பதியைக்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.! 


மேலே கண்ட பாடலில் அருள்அரசை அருள்குருவை அருட்பெருஞ்ஜோதியை என்அம்மையை என்அப்பனை என் ஆண்டவனை அமுதை வாரி  கருணைநடம் புரிகின்ற கனகசபாபதியைக் கடவுளை கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்து கொண்டேன் கலந்து கொண்டேன் களித்தேன் என்கிறார் வள்ளலார்.


*அருட்பெருஞ்ஜோதிஆண்டவர் குணம் அனைத்தும் மனிதனுக்கு உண்டு.மனிதன் அக்கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற வேண்டும்*. *இதுவே வள்ளலார் வகுத்துதந்த சாதி சமயம் மதம் சாராத சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கையாகும்*


*நான்கு ஒழுக்கங்கள்*


வள்ளலார் வகுத்த தந்த சுத்த சன்மார்க்க முக்கிய ஒழுக்க நெறிகளான *இந்திரிய ஒழுக்கம்*.

*கரண ஒழுக்கம்* *ஜீவ ஒழுக்கம்* *ஆன்ம ஒழுக்கங்களை* முழுமையாக கடைபிடிப்பவர்கள் மட்டுமே இறைவன் அருளைப்பெற்று *மரணத்தை வென்று  கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற வேண்டும்*. இதுவே மனிதனும் கடவுள் ஆகலாம் என்பதாகும்.


வள்ளலார் தான் பெற்ற அனுபவத்தை பதிவு செய்கிறார்.


*அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு*

*அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு*

*மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு*  

*மரணம் 

தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு * ! 


*மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.*! 


ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன்

என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி


காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்

கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி


ஊரமு துண்டு நீ ஒழியாதே அந்தோ

ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்


ஆரமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து

அருட்பெருஞ் சோதி கண்டு ஆடேடி பந்து ஆடேடி ! 


என்னும் பாடல் வாயிலாக ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கத்தையும்.

இறைவன் மேல் இடைவிடாத அன்பும்.  மனிதன் கடைபிடிக்க வேண்டிய உணவு ஒழுக்க நெறிகளையும் தெளிவாக வெளிப்படையாக  வெளிச்சம் போட்டுகாட்டுகிறார்.


*சொல்லியவாறு வாழ்ந்தும் காட்டியுள்ளார்*


நாமும் வள்ளலார் வாழ்ந்து காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை கடைபிடித்து பூரண அருளைப்பெற்று. பஞ்சபூத தேகமான  அசுத்த பூதகாரிய தேகத்தை சுத்த பூதகாரிய தேகமாக மாற்ற வேண்டும். சுத்த பூதகாரிய தேகத்தின் தொடர்ச்சியாக சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் அடைந்து. *கடவுளின் இயற்கை உண்மை தேகமான ஞானதேகத்தில்* கலப்பதுவே   மரணத்தை வெல்லுவதாகும். ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக்கொண்டு கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றம் அடைந்து வாழ்வாங்கு வாழ்வோம்..


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு