புதன், 4 டிசம்பர், 2019

சுத்த சன்மார்க்க கொடி விளக்கம் !


சுத்த சன்மார்க்க கொடி விளக்கம் !

வள்ளலார் சுத்த சன்மார்க்க கொடி பற்றி என்ன சொல்லுகிறார்.

வள்ளலார் பேருபதேசத்தில் கீழே கண்டபடி விளக்கம் தருகிறார் !

இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. 
அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். 
இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.
உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். 
இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.
என்று சொல்லுகிறார்.

மேலும்
சிற்சத்தி துதி என்ற தலைப்பில் பாடல்கள்* !
  • சோதிக் கொடியே ஆனந்த சொருபக் கொடியே சோதிஉருப்
    பாதிக் கொடியே சோதிவலப் பாகக் கொடியே எனைஈன்ற
    ஆதிக் கொடியே உலகுகட்டி ஆளுங் கொடியே சன்மார்க்க
    நீதிக் கொடியே சிவகாம நிமலக் கொடியே அருளுகவே.
  • 2. பொருணற் கொடியே மாற்றுயர்ந்த பொன்னங் கொடியே போதாந்த
    வருணக் கொடியே எல்லாஞ்செய் வல்லார் இடஞ்சேர் மணிக்கொடியே
    தருணக் கொடியே என்தன்னைக் தாங்கி ஓங்குந் தனிக்கொடியே
    கருணைக் கொடியே ஞானசிவ காமக் கொடியே அருளுகவே.
  • 3. நீட்டுக் கொடியே சன்மார்க்க நீதிக் கொடியே சிவகீதப்
    பாட்டுக் கொடியே இறைவர்வலப் பாகக் கொடியே353 பரநாத
    நாட்டுக் கொடியே எனைஈன்ற ஞானக் கொடியே என்னுறவாம்
    கூட்டுக் கொடியே சிவகாமக் கொடியே அடியேற் கருளுகவே .
  • 4. மாலக் கொடியேன் குற்றமெலாம் மன்னித் தருளி மரணமெனும்
    சாலக் கொடியை ஒடித்தெனக்குட் சார்ந்து விளங்கும் தவக்கொடியே
    காலக் கருவைக் கடந்தொளிர்வான் கருவும் கடந்து வயங்குகின்ற
    கோலக் கொடியே சிவஞானக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 5. நாடாக் கொடிய மனம்அடக்கி நல்ல மனத்தைக் கனிவித்துப்
    பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும் பதம்ஈந் தாண்ட பதிக்கொடியே
    தேடாக் கரும சித்திஎலாம் திகழத் தயவால் தெரிவித்த
    கோடாக் கொடியே சிவதருமக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 6. மணங்கொள் கொடிப்பூ முதல்நான்கு வகைப்பூ வடிவுள் வயங்குகின்ற
    வணங்கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான்கொடியே
    கணங்கொள் யோக சித்திஎலாம் காட்டுங் கொடியே கலங்காத
    குணங்கொள் கொடியே சிவபோகக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 7. புலங்கொள் கொடிய மனம்போன போக்கில் போகா தெனைமீட்டு
    நலங்கொள் கருணைச் சன்மார்க்க நாட்டில் விடுத்த நற்கொடியே
    வலங்கொள் ஞான சித்திஎலாம் வயங்க விளங்கு மணிமன்றில்
    குலங்கொள் கொடியே மெய்ஞ்ஞானக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 8. வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
    மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
    செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
    குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 9. கடுத்த விடர்வன் பயம்கவலை எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே
    அடுத்த கொடியே அருளமுதம் அளித்தென் தனைமெய் அருட்கரத்தால்
    எடுத்த கொடியே சித்திஎலாம் இந்தா மகனே என்றெனக்கே
    கொடுத்த கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 10. ஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம் எய்த ஒளிதந் தியான்வனைந்த
    பாட்டைப் புனைந்து பரிசளித்த பரம ஞானப் பதிக்கொடியே
    தேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல் செலுத்தும்சுத்த சன்மார்க்கக்
    கோட்டைக் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.


மேலே கண்ட பாடலில் கொடி விளக்கத்தைப்பற்றி எளிய தமிழில் தெளிவாக சொல்லுகின்றார்

கொடி என்றால் என்ன ? 

ஒவ்வொரு ஆன்மாவும் இவ்வுலகில் வாழ்வதற்கு உயிர் உடம்பு இரண்டும் அவசியம். உயிர் தோன்றுவதற்கும் உடம்பு தோன்றுவதற்கும். ஒரு இணைப்பு தொடர்பு வேண்டும்.அதாவது அந்த இணைப்பு பாலமானது பூதவிந்து வாயிலாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.அதற்கு வினைத் தொடர்பு என்பார்கள்.

அந்த விணைத்தொடர்புதான் தொப்புள் கொடியாகும்.அந்தக் கொடிக்கு சிவகாமக்கொடி என்றும் சொல்லுவார்கள். அந்த கொடியில் சிக்காமல் வாழ்வதே மனிதனின் அருள் வாழ்க்கையாகும். அதாவது ஆண்.பெண் தொடர்பு இல்லாமல் வாழ்வதாகும்.

 அருள் பெறுவதற்கு தடையாக இருந்த அனைத்தையும் வென்றவர் வள்ளலார். அந்தக் கொடியை கட்டிக் கொண்டால் மட்டுமே மீண்டும் பிறப்பு இல்லை.

நாபிக்கும் புருவ மத்திக்கும் ஏறவும் இறங்கவும் இரண்டு கூறாக ஒருநாடி இருக்கும் நாடிதான் உயிரையும் உடம்பையும் இயக்கிக் கொண்டு இருக்கும் பூதவிந்து என்னும்  சக்தியாகும்.அவற்றை நிறுத்தி அருளால் ஆன்மாவை மட்டும் இயங்க வைக்கிறார்  வள்ளலார். அதுவே கொடி கட்டிக் கொண்டதாகும். எனவேதான் வெளிமுகத்தில் அடையாள வண்ணமாக  கொடி கட்டிகொண்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும் என்கிறார் வள்ளலார்.

ஆன்மாவைப் பற்றிக் கொண்டுள்ள மலங்கள் ஆணவம்.மாயை.மாமாயை.பெருமாயை.
கன்மம் போன்ற மலங்களை அகற்றியதால் பிறப்பு இறப்பு அற்ற அருள் வாழ்க்கை  வாழ்வதற்கு இறைவன் அருள்பாலிப்பார்.மீண்டும் பிறப்பு இல்லாமல் வாழ்வதே கொடி கட்டிக் கொண்டதாகும்.

மாயையையும் கன்மத்தையும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தால்.தவத்தால்.விசாரத்தால்.இடைவிடாத வேண்டுதலால் நீக்கிவிடலாம்.ஆணவமலத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே நீக்க முடியும்.ஆணவம் இயற்கையானது.இயற்கையான ஆணவம் ஆன்மாவில் பற்றிக்கொண்டு இருக்கும் வரை பிறப்பு உண்டு.அதுவே கடைசிதிரையாகும்.

ஆன்மாக்கள் எல்லாம் ஒரே தன்மை உடையது அதை உணர்ந்து அறிந்து ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கண்டு வாழ்ந்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என நினைத்தவர் வள்ளலார். எனவே கொடிக்கட்டிக் கொள்ளும் அறிய வாய்ப்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வழங்கப்பட்டது.

அகவல் வரிகள் !

  • கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
    அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 408. பேருறு நீலப் பெருந்திரை யதனால்
    ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 409. பச்சைத் திரையாற் பரவெளி யதனை
    அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 410. செம்மைத் திரையாற் சித்துறு வெளியை
    அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 411. பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
    அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 412. வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை
    அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 413. கலப்புத் திரையாற் கருதனு பவங்களை
    அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 414. விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
    அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 415. தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
    அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 416. திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே
    அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 417. தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி
    னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 418. சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை
    அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 419. எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே
    அனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி!

பிறப்பு என்னும் பெருங்குழியில் விழாமல் .கீழும் மேலும்  செல்லும் சிவகாமக்கொடியை. அதாவது தொப்புள் கொடியை மேல்நோக்கி புருவ மத்தியில் நிறுத்திக் கட்டிக் கொள்கிறார் வள்ளலார்.இதுவேதான் மீண்டும் பிறப்பு இல்லாமல் மரணத்தை வென்று பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதாகும்.

ஆணவம் என்னும் திரை நீங்கிய பின்பு அருள்தேகம் பொன்மை வெண்மை என்னும் வண்ணங்களில்.அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்.மேற்புறம் மஞ்சள் வர்ணம் என்று குறிப்பிடுகிறார் வள்ளலார்.அதற்கு அடையாளம் அவித்த கோழி முட்டை தன்மைபோல் உள்ளதாகும்.

மேலும் அகவலில்.

பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !
வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி ! என்றும்.

பொன்னுடம்பு எனக்கே பொருந்திடும் பொருட்டு என்னுளங் கலந்த என்தனி அன்பே !

என்கிறார்.

இறுதியாக எல்லா வண்ணத்தையும் தாண்டி.இயற்கை உண்மை.இயற்கை விளக்கம் .இயற்கை இன்ப வடிவமாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளலாரை ஆக்கி அணைத்துக் கொள்கிறார்..


  • 781. என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
    அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து
  • 782. உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
    அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்
  • 783. சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா
    துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து
  • 784. சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
    சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்
  • 785. அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்
    இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்
  • 786. ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்
    சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா
  • 787. அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
    அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி
  • 788. வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
    அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி!


கொடிகட்டிக் கொண்டோம் என்று சின்னம்பிடி 
கூத்தாடுகின்றாம் என்று சின்னபிடி
சிற்சபை கண்டோம் என்று சின்னம்பிடி 
சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம்பிடி.
தானே நானானேன் என்று சின்னம்பிடி
சத்தியம் சத்தியம் என்று சின்னம்பிடி.
ஊனே புகுந்தான் என்று சின்னம்பிடி.

என்ற பாடல் வழியாகத் தெரியப்படுத்துகின்றார் வள்ளலார்.

கொடி கட்டிக் கொண்டோம் என்பது மீண்டும் பிறப்பு இல்லாமல் உயிரையும் உடம்பையும் அழிக்காமல் பஞ்ச பூத அணுக்களை அருள் அணுக்களாக மாற்றி கொண்டதாகும்.இயற்கையான ஆணவத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே திரும்ப பெற்றுக் கொண்டதாலே ஆன்ம தேகம் பெற்று அருள் தேகமாக மாற்றிக் கொள்வதாகும்.

மீண்டும் ஆன்மாவானது உயிர் உடம்பு எடுக்காமல்  அருட்பெருஞ்ஜோதி யுடன் கலப்பதாகும்.

இதுவே என் அனுபவத்தில் கிடைத்த செய்தியாகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

1 கருத்துகள்:

29 மே, 2022 அன்று 1:23 PM க்கு, Anonymous சன்மார்க்கி கூறியது…

மிக்க நன்றி.. அருளாளரே

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு