வியாழன், 28 நவம்பர், 2019

நம்மை நஷ்டஞ் செய்பவை நான்கு !

*நம்மை நஷ்டஞ் செய்பவை நான்கு*

நம்மை நஷ்டஞ் செய்வன நான்கு. அவையாவன:

*ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் - ஆகிய இந்நான்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இந்த நான்கிலும் முக்கியமானவை *ஆகாரம், மைதுனம்*. ஆதலால் இவ்விரண்டிலும் அதனிலும் அதிக ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் முக்கியமானது மைதுனம். ஆதலால், இந்த விஷயத்தில் எல்லாவற்றைப் பார்க்கிலுமதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.

அவ்வாறு இராவிடில் தேகம் அதி சீக்கிரத்தில் போய்விடும். பின்பு முத்தியடைவது கூடாது. முத்தியடைவதற்கு இம்மானிட தேகமே தக்கதாயும் வேறு தேகத்தால் அடைவது அரிதாயும் இருப்பதாதலால், எவ்விதத்தாலாயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும்.

*ஜாக்கிரதை*

வள்ளலார் பாடல் !

சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப்
படுவாரைத் துணிந்து கொல்லக்

கூற்றாசைப் படும்எனநான் கூறுகின்ற
துண்மையினில் கொண்டு நீவீர்

நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்
போலும்அன்றி நினைத்த வாங்கே

பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா
பதிப்புகழைப் பேசு வீரே.!

என்னும் பாடலிலே தெரியப்படுத்துகின்றார்

ஆகாரம், நித்திரை, மைதுனம், பயம் - இந்த நான்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும், இவற்றில் முக்கியமானவை

ஆகாரம், மைதுனம். இவற்றிலும் முக்கியமானது மைதுனம். இதனளவில் ஒரு மனிதன் தன்னை ஸர்வ ஜாக்கிரதையுடன் காக்கவேண்டும். இல்லையாயின்

*அதி சீக்கிரத்தில்
மரணமடைவான் சந்தேகமில்லை*.

இல்வாழ்வானுக்கு மைதுனம் ஊற்றுக்கேணி நியாயத்தையுடையது.

*தேக நஷ்டத்தின் முதற் காரணங்கள்*

இந்த உலகத்தில் மனிதர்களுக்குத் தேகம் சீக்கிரத்தில் நஷ்டம் அடைவதற்குக் காரணம் இரண்டு. அவையாவன: ஆகாரம், மைதுனம். ஆகாரத்தா லொன்பது பங்கு நஷ்டமும், மைதுனத்தாலொரு பங்கு நஷ்டமும் உண்டாகிறது. எப்படியெனில்:

பிண்ட உற்பத்தியின் காலம் தொடங்கி இறந்து போகிற பரியந்தம் ஆகாரம் உண்டு. இது இயற்கை. சிசு, வாலிபம், விருத்தாப்பியம் - இந்தப் பருவங்களில் மைதுனம் கிடையாது. கவுமாரம், யௌவனம் - இந்த இரண்டு பருவங்களில் மாத்திரம் மைதுனம் உண்டு. இந்தப் பருவங்களிலும், நோயாலும் துக்கத்தாலும் தரித்திரத்தாலும் பசியாலும் பயத்தாலும் வேறு அநந்தவகையால் உண்டாகும் துன்பங்களாலும் மைதுனம் தடைப்படும். இந்தக் காலத்திலும் ஆகாரம் உண்டு.

 பொருந்தல் ஏகதேசம். நஷ்டமும் அப்படியேயிருக்கிறது. ஆகாரவிஷயத்தில் அதிக்கிரமம், அக்கிரமம், அஜாக்கிரதை, அசாதாரணம் இப்படிப்பட்ட உணவுகளை நீக்கி, *சுத்த சத்துவ* ஆகாரங்களைப் புசித்து ஆயுள் விருத்தி செய்து கொள்வது சுத்த சன்மார்க்க ஏற்பாடு.

*துர் மரணம்*

ஜீவர்களுக்கு வாந்திபேதி மாரடைப்பு முதலியவற்றால் நேரிடும் துர்மரணங்கள் ஆகாரக் குறைவாலும் மிகுதியாலும் அக்கிரம அதிக்கிரமத்தாலும் பொருந்தலாலும் - இவை போன்ற பலவகைக் கெடுதியாலும் உண்டாகின்றன.

*இல்வாழ்வானுக்கு நியாயம்*

மைதுனம் ஊற்றுக்கேணி நியாயத்தை ஒத்திருக்கின்றது. அதாவது, ஊற்றுக்கேணியை இடைவிடாமல் 10 தினம் இறைத்தால், அதன் வருவாய் குறைந்து, அதில் சலமில்லாமல் போய்ப் பிரயோசனப்படாது. அதுபோல் இறைக்காத ஊற்றுக்கேணியிலுள்ள நீரிலழுக்கேறி, அதன் வருவாய் அடைபட்டு, அதன் சுரப்பு நின்றுவிடும். பின்பு அந்தக் கேணியிலுள்ள சலம் சூரிய உஷ்ணத்தினால் கிரகிக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் போய்விடும்.

*இதுபோல் இடைவிடாது மைதுனஞ் செய்தால் இந்திரியத்தின் வருவாய் குறைந்து, அருமையாகக் கிடைத்திருக்கின்ற தேகம் அதி சீக்கிரத்தில் போய்விடும். *மைதுனம் எந்தக் காலத்தும் இல்லாதிருத்தலினாலும் மேற் குறித்த ஊற்றுக்கேணி நியாயத்தால் கேடுண்டு*.

அதாவது மைதுனம் எந்தக்காலத்திலுமில்லா திருத்தலினால் இந்திரியத்தின் தன்மை கெட்டு, அதனால் அவ்விந்திரியத்தின் வருவாயடைபட்டு, மிகுந்திருந்த அவ்விந்திரியமும் உஷ்ணத்தினால் வற்றிவிடும். பின்பு தேகம் உடனே போய்விடும்.

*சந்நியாசமும் காவி உடையும்*

மூன்றாசைகளில் விசேஷம் பற்றுள்ளவர்களாகித் தயவில்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்படி குற்றமற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை. சந்நியாசி காவி வேஷ்டி போடுவதற்கு நியாயம்;

தயவில்லாத கடின சித்தர்களாகையால் தத்துவாபாசமுள்ளது; தத்துவத்தைச் செயித்து தயவை நடத்துவதற்கு *யுத்தக்குறி* அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி. வெற்றியான பிறகு அடைவது தயவு. ஆதலால் *வெற்றிக்கொடி வெள்ளை*. தயவு வெள்ளையென்பதற்கு நியாயம்; தயவென்பது சத்துவம், சத்துவமென்பது சுத்தம், சுத்தமென்பது நிர்மலம், நிர்மலமென்பது வெள்ளைவருணம், *வெள்ளை என்பது ஞானம், ஞானமென்பது அருள், அருளென்பது தயவு, தயவென்பது காருண்யம்*.

சன்னியாசம்

மூவாசைகளில் விசேஷ பற்றுள்ளவர்களாகித் தயையில்லாத கடின சித்தர்கள் சன்னியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அக் குற்றத்தை நீக்கினவர்கள் சன்னியாசம் செய்து கொள்ள வேண்டுவதில்லை. *குடும்ப சன்னியாசிகளா யிருக்கலாம்*. தனேஷணம் தாரேஷணம் புத்திரேஷணம்...

*தயவு*

தயவு - சுத்தம், வெள்ளை வருணம், ஞானம், தயவு - அருள் காருண்ணியம்.

*காவிவேஷ்டி*

காவிவேஷ்டி தரிப்பது தயவுக்கு விரோதமானவைகளை ஜெயிப்பதற்கடையாளம்.

*மகளிர் சமத்துவ நிலை*

பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது. மேலும் பேதமற்று அபேதமாய்ப் படிப்பு முதலியவையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது. தத்துவம் முதலியவற்றின் சொரூப ரூபாதிகளைத் தெரிவித்துச் சரளமாக்கினால், பின் தடையின்றி நம்முடைய துரிய ஆசிரம காலத்தில் ஒத்திருப்பார்கள்.

 *தெய்வந் தொழாஅள்* என்னும் தேவர் குறளால் இதை அறிக.

*பொதுப் பார்வை*

எல்லா உயிரையும் பொதுவாய்ப் பார்ப்பதென்பது தனக்குள்ள ஆகாரத்தைக் கொடுத்துவிட்டுத் தான் பட்டினியிருப்பதல்ல. அப்படி இருந்தால் பாவம். வந்தவர்களின் பசி அறிந்து, தாங்காதவர்களாகில் தனது ஆகாரத்தைக் கொடுத்தும், சகிப்பார்களாகில் எவ்வகையிலாவது முயற்சித்தும் பசியைத் தணிக்கவும். அதற்கும் இடம் இல்லையாகில், பச்சாத்தாபத்துடன் கடவுளைப் பிரார்த்தித்து *இன் சொல்லினால் இனிக்கச் செய்து, தான்கெட்டிருப்பதே மேலான புண்ணியம்*.

மேலே கண்ட விபரங்களை ஒவ்வொரு சன்மார்க்கிகளும் அவசியம் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்பது வள்ளலாரின் அழுத்தமான  கொள்கையாகும்.

உடம்பை பொன்போல் பாதுகாக்க வேண்டும்.

வள்ளலார் பாடல் !

சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி

ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்

போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர்

சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.!

வயிறு நிறைய உணவு உண்பவர்கள் என்னதான் *தவம்.யோகம்.தியானம் பக்தி செய்தாலும் பயன் அளிக்காது* என்கிறார் வள்ளலார்.*அறுசுவை உணவு ஆபத்தை உருவாக்கும்* .
இறுதியில் வயது முதிர்ந்து நோய்வாய்பட்டு
மரணத்திற்கு கொண்டு சென்றுவிடும்.

*உணவே மரணத்திற்கு காரண காரியமாக இருக்கிறது*.

*பொருள் பசியை நிறுத்தி அருள்பசிக்கு எதிர்பார்த்து இருக்க வேண்டும்*.அதற்கு உலக போகத்தில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக விலகி தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொருள் உணவு உட்கொள்ளுகின்ற வரை அருள் உணவு கிடைக்காது.இதுவே அடிப்படை உண்மை.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு