வெள்ளி, 22 நவம்பர், 2019

சாதியும் மதமும் சமயமும் பொய் !


சாதியும் மதமும் சமயமும் பொய் !


மேலே கண்ட பாடலை நன்கு உணர்ந்து படிக்கனும்.இதுபோல் ஆயிரக்கணக்கான பாடல்கள் திருஅருட்பாவில் நிறைய உள்ளன.

இன்றைய உலகில் சாதிகள் சமயங்கள் மதங்கள் ஒழிந்தால் தான் உலக மக்கள் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக  வாழமுடியும் என்பது நம் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணையாகும்.

இந்த சமூக மூடத்தனமான கட்டமைப்பை வேறோடு பிடுங்கி எறிந்து விட்டு. புதிய சுத்த சன்மார்க்க கொள்கையை உலகம் முழுதும் விதைக்க்வேண்டும் என்பதால் இறைவனால் வருவிக்க உற்றவர்தான் வள்ளலார்.

இந்த உண்மையை தெரிந்து கொள்ளாமல் சன்மார்க்க கொள்கையை பின்பற்றி வரும் அன்பர்கள் சிலர் மூடமாகவே இருந்து தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிக் கொண்டு வருகிறார்கள்.

வள்ளலார் ஆரம்ப காலக் கட்டத்தில் பக்தி மார்க்கத்தில் ஏன் பின்பற்றினார் பின்பு அவைகள் யாவும் பொய்யானது என்று ஏன் சொன்னார் என்ற சூட்ச்சுமத்தை புரிந்து கொள்ளாமல் மூடத்தனமாக சில அன்பர்கள் பேசிக்கொண்டு வருவது வேதனையாக உள்ளது.

மக்கள் சரியை கிரியை யோகத்திலே மூழ்கி கிடக்கிறார்கள்.அவர்களை தன்வசமாக மாற்ற வேண்டுமானால் அவர்களுடன் இணைந்து அவர்கள் போல் தானும் வாழ்ந்து.மக்களை தன்வசமாக மாற்றவே வள்ளலார் செய்த சூழ்ச்சியாகும் அவர் நடித்த நாடகத்தின் ஒரு பகுதி தான் பக்தி சார்ந்த நாடகம்.

வள்ளலாருக்கு கருவிலே கலந்து துணையாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லாவற்றையும் தெரியப்படுத்துகின்றார்.

வள்ளலார் வேறு எந்த ஞான நூல்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஓதாமல் உணர்ந்தவர் வள்ளலார் என்பது இந்த உலக மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்களும் இந்த உண்மையை அறிந்து கொள்ளாமல் கண்டதை எல்லாம் வாயில் வந்தபடி உளரிக்கொண்டு உள்ளார்கள்.

வள்ளலாரே தெளிவாக சொல்கின்றார்.

குமாரப்பருவத்தில் என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை இன்றியே என்தரத்தில் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்விப் பயிற்சியை எனது உள்ளகத்தே இருந்து பயிற்றுவித்தருளினீர் என்று சத்திய பெருவிண்ணப்பத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் பலபாடல்கள் வாயிலாக தெரிவிக்கின்றார்.

கற்றதும் நின்னிடத்தே பின் கேட்டதும் நின்னிடத்தே !

பள்ளியில் பயிற்றாது என்தன்னைக் கல்வி பயிற்றி முழுதும் உணர்வித்து !

ஒதாதுணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன நீதான் !

ஒதுமறை முதற் கலைகள் ஓதாமல் உணர உணர்விலிருந்து உணர்த்தி !

ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்து .ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் !

ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி !

என அகச்சான்றுகள் பல பாடல்கள் வாயிலாக வள்ளலார் தெரிவித்து உள்ளார்.

ஆதலால் சமய மதங்களை பின்பற்றுவது போல் மக்களுக்காக.மக்களைத் திருத்துவதற்காக தன்னைத் தாழ்த்திக் கொண்டு நடிக்கின்றார்.

வள்ளலார் பாடலே சாட்சியாகும் !


மேலே கண்ட பாடல் மகாதேவமாலையில் தெரிவிக்கின்றார் வள்ளலார்..

மேலும் பேருபதேசத்தில் தெளிவான ஒரு விளக்கம் தருகின்றார்..



சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், 

அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். 

நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். 

அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், 

அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. 

ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. 
*நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ*, *அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை*. 

என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். 

மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.


* மாயையாற் கலங்கி வருந்திய போதும்வள்ளல்உன் தன்னையே மதித்துன்சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்தலைவவே றெண்ணிய துண்டோதூயபொற் பாதம் அறியநான் அறியேன்துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தேநன்றருள் புரிவதுன் கடனே.- திருஅருட்பா 3635
** கருணையும் சிவமே பொருள்எனக் காணும்காட்சியும் பெறுகமற் றெல்லாம்மருள்நெறி எனநீ எனக்கறி வித்தவண்ணமே பெற்றிருக் கின்றேன்இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்எய்திய தென்செய்வேன் எந்தாய்தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்சிறுநெறி பிடித்ததொன் றிலையே.- திருஅருட்பா 3503


அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். 

இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள். என்னிடத்தில் 
ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்; அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். 
நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று..." ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திர மல்ல. 

உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்: எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.
மேலே கண்ட விபரங்களை ஒளிவு மறைவு இல்லாத வள்ளலார் தெளிவாக விளக்கமாக சொல்லியும்.சாதி சமய மதக் கொள்கையோடு வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையை அனைத்து பேசுவதும். மற்ற ஞானிகளின் வரிசையில் வந்தவர் என்றும்...திருவாசகம்.திருமந்திரம்.திருக்குறள் படித்துதான் வள்ளலார் உயர்ந்த நிலைக்கு வந்தார் என்றும் சொல்லுவது அபத்தமான செய்திகளாகும்.
பக்தியில் சிறந்த்து திருவாசகம் என்றும்.சாத்திரங்களில் சிறந்த்து திருமந்திரம் என்றும்.சாதி சமய மதம அற்ற பொது நூல் திருக்குறள் என்றும் வள்ளலார் போற்றுகின்றார்.
வள்ளலாருக்கு உலகியல் நூல்கள் என்ன என்ன சொல்லி உள்ளது என்பது ஞான அறிவிலே தெரிந்து கொள்வார்.படித்துதான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் ஞானத்தைப் போதிப்பது .ஞானம் என்பது அருளைப்பெறுவது..அருள் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும்.மரணத்தை வென்றால் தான் இறைவனைக் காணமுடியும் இறைவனும் கலந்து பேரின்பசித்தி பெருவாழ்வு பெற்று பிறப்பு இறப்பு அற்ற உயர்நிலை பெற்று என்றும் அழியாத வாழ்வு பெற முடியும் என்பதே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

*சாகாதவனே சன்மார்க்கி என்பதுதான் வள்ளலாரின் வேத வாக்காகும்*.
சாகாதகல்வி கற்றுக் கொள்வதே சுத்த சன்மார்க்கம் காட்டும் ஞான கல்வியாகும்.
சன்மார்க்கத்தை பின்பற்றும் சகோதர சகோதரிகள் இனிமேலாவது உண்மை உணர்ந்து வள்ளலார் காட்டிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும்.சத்விசாரத்தையும் மட்டுமே  பின்பற்றி வாழ்ந்து மரணத்தை வென்று மற்றவர்களுக்கும் வழிகாட்டுவோம்.

வள்ளலார் பாடல் !

ஒவ்வொரு ஆன்மாவிலும் உள்ஒளியாக உள் இருந்து நடம் புரியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உண்மைக் கடவுள் என்பதை உணர்ந்து கொண்டாலே கிடைக்க வேண்டிய எல்லா ஆன்மலாபமும் தடை இல்லாமல் கிடைத்து கொண்டே இருக்கும்.

ஏன் என்றால் தனிப்பெருங்கருணை உள்ள ஒரே கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மைக் கடவுளாகும். 

உலகியல் சம்பந்தமான தியானம்.தவம்.யோகம்.போன்ற மாயா ஜால வேலைகள் எல்லாம் வேண்டியதில்லை.ஜீவர்களிடத்தில் உண்மையான தயவும்.ஆண்டவரிடத்தில் உண்மையான இடைவிடாத அன்பும் இருந்தாலே போதுமானது.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு