சனி, 15 ஏப்ரல், 2017

ஆன்மாவின் குடும்பம் !

ஆன்மாவின் குடும்பம் !

ஆன்மாவின் முதல் மனைவி ஆணவம் !

முதல் மனைவியான ஆணவத்திற்குப் பிறந்த  குழந்தை ஜீவன் என்னும் உயிர் ..
ஆன்மாவின் இரண்டாவது மனைவி மாயை !

மாயைக்கு பிறந்த குழந்தைகள் மனம்.புத்தி,சித்தம்,அகங்காரம்  என்னும் நான்கு குழந்தைகள் .

ஆன்மாவிற்கு மூன்றாவது மனைவி கன்மம் என்னும் காமியம் !

காமியத்திற்கு பிறந்த குழந்தைகள் மூன்று குழந்தைகள் .அவை தாமசம்,ராட்சசம் .சாத்வீகம்  .அதாவது தாமச குணம்,ராஜச குணம்,தாமச குணம் .

வாடகை வீடு,;-- பஞ்ச பூதங்களான தேகம் !

இந்த குடும்பத்தில் ஆன்மா வாழ்வதற்கு 96, தத்துவங்கள் அடங்கிய ''வாடகை ''வீடு என்னும்  உடம்பை,மாயை,..மாமாயை ,..பெருமாயை யால் கட்டிக் கொடுக்கப்படுகின்றது..

இந்த வாடகை வீட்டின் தலைவர்  வாதம் ,பித்தம் ,சிலேத்துமம் என்னும் மூவர் என்பவராகும் .இவர்களுக்கு கொஞ்சம் கூட தயவே கிடையாது .இவர்கள் தினமும் வாடகை என்னும் குடிக் கூலி வாங்கிக் கொண்டே இருப்பார்கள்.அந்தக் குடிக் கூலி தான் பிண்டம் என்னும் உணவாகும்..

நாம் கொடுக்கும் குடிக்கூலியைப் பற்றி வள்ளலார் சொல்லுவது !

இம்மனைத் தலைவராய் எழுந்த மூவர்
தறு கட் கடையர் தயவே இல்லார்
பணி சிர முதலாய்ப் பாதம் வரையில்

வாது செய்திடும் வண் காலவாதி
பெருகுறு கள்ளினும் பெரிதுறு மயக்கம்
பேதைமை காட்டும் பெருந் தீப் பித்தன்
கொடுவிடம் ஏறிடும் கொள்கை போல் இரக்கம்
கொள்ளாது இடர் செய் குளிர்ந்த கொள்ளி.

இவர்கள் என்னோடு இகல்வர் இரங்கார்
எனக்கு நேரும் ஏழ்மையும் பாரார் /

கொடுக்கும் குடிக் கூலி ---பிண்டம் !

பிண்டம் என்னும் பெருங் குடிக்கூலி
அன்றைக் கன்றே நின்று வாங்குவர்
தெரியாது ஒரு நாள் செலுத்தா விட்டால்

உத்தரத்துள்ளே  உறுங்கனல் எழுப்பி
உள்ளும் புறத்தும் எண்நெரி ஊட்டி
அருநோய் பற்பல அடிக்கடி செய்வர்
இவர் கொடுஞ் செய்கை எண்ணும் தோறும்
பகீரென உள்ளம் பதித்துக் கொதித்து

வெம்பும் என்னில் விளம்புவது என்னே
சினமிகும் இவர்தம் செய்கைகள் கனவினும்
நினைந்து விழித்து வேர்வது என்னே !

இந்த உடம்பின் தலைவர் ஆன்மாவாக இருந்தாலும் ஆணவம் .மாயை,கன்மம்.என்னும் மனைவியுடனும் .அவர்களால் பெற்ற குழந்தைகளாலும்,உடம்பு என்னும்  வாடகை விட்டாலும் ஆன்மா ,குடும்பத் தொல்லை தாங்க முடியாமல் அலைந்து திரிந்து துன்பத்தில் அழுந்தி வாழ்ந்து கொண்டு உள்ளது.

இதில் இருந்து ஆன்மா  மீழ்வதற்கு  வழிக் காட்டுவதுதான் ,வள்ளலார் காட்டும் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்னும் அருள் பெரும் தனி புது நெறியாகும். ஆன்மாவை துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நெறியாகும்.

ஆன்மா தன்னுடைய குடும்பத்தில் இருந்து வெளியேற வேண்டும் .அதே நேரத்தில் குடும்பத்தையும் அழிக்கக் கூடாது....அதற்கு ஒரே வழி .வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றும் வழியைத்தான் வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்கம் சொல்லுகின்றது.. அதுதான் ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றுவது.....

வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்ற வேண்டுமானால் உண்மைக் கடவுளான,நம்முடைய அருள் தந்தை, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொண்டு அருளைப் பெற வேண்டும்,அருளைப் பெறுவதற்கு வள்ளலார் சொல்லிய உண்மை ஒழுக்க நெறியான ஜீவ காருண்ய ஒழுக்க நெறியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.சத் விசாரம் என்னும் அதி விசாரத்தால்  உண்மைக் கடவுளைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

 .வேறு எந்த தத்துவக் கடவுள்களையும் தொடர்பு கொள்ள வேண்டாம்,வழிபடவும் வேண்டாம்  என்கின்றார் வள்ளலார் .இந்த உண்மைத் தெரியாமல் வாழ்கின்ற வரையில் மரணம் வந்து கொண்டே இருக்கும் .மீண்டும் பிறப்பு எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.!

சாவதென்றும் பிறப்பது என்றும் சாற்றுகின்ற பெரும் பாவம் தன்னை எண்ணி
நோவது இன்று புதியது அன்றோ என்றும் உளதால் இந்த நோவை நீக்கி
ஈவது மன்றில் நடிப்பாய் நின்னாலே யாகும் மற்றை இறைவராலே
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இச்சிறி யேனால் ஆவது தென்னே !

சாவதும் பிறப்பதும் என்பது  பெரிய பாவச்செயல் என்கின்றார் வள்ளலார் .இது புதியது அல்ல என்றும் உள்ளது ..இந்த மரணப் பெரும் பிணியை நீக்குவது ...அருட்பெரு வெளியில் நடித்துக் கொண்டு இருக்கும் .அதாவது இயங்கிக் கொண்டு இருக்கும் ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தவிர வேறு கடவுள்கள் என்னும்,தத்துவ  இறைவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.அருளை வழங்கும் ஆற்றல் இல்லை என்கின்றார் ....

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் பெற்ற அருள் மருந்து !

உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்
அடர்ப்பறத் தவிர்த்த அருட் சிவ மருந்தே

மரணப் பெரும் பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே !

சாகாக்கல்வியின் தரம் எலாம் உணர்த்திச்
சாகா வரத்தையும் தந்து மேன்மேலும்

அன்பையும் விளைவித்து அருட் பேர் ஒளியால்
இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும்

ஓர் உருவாக்கி யான் உன்னிய படி எலாம்
சீர் உறச் செய்து உயிர்த் திறம் பெற அழியா

அருள் அமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை
அருள் அறிவு அளித்தனை அருட்பெருஞ்ஜோதி !

என்றும் அழியாத அருளைப் பெறுவதற்கு சாகாக் கல்வி என்னும் கல்வியை வள்ளலார் உலகிற்கு அறிமுகப் படுத்தி உள்ளார் .அந்தக் கல்வியைத்தான் நானும் கற்றேன் என்கின்றார் ..

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்று கருணை நெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்று எனப் பற்றி னேனே !

வள்ளலார் தான்  கற்ற கல்வியை ஒளிவு மறைவு இல்லாமல்  நமக்கும் அப்படியே சொல்லுகின்றார், பிற நிலையைப் பற்றேன் என்கின்றார்  நாமும் பிற நிலைகளைப் பற்றாமல் உண்மையை உணர்ந்து சாகாக் கல்வியைக் கற்று அருளைப் பெற்று வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றி மரணத்தை வென்று என்றும் அழியாத முத்தேக சித்தியைப் பெற்று பேரின்ப வாழ்க்கை வாழ்வோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு