வெள்ளி, 18 ஜூலை, 2014

வடலூர் சத்திய ஞான சபை விளக்கம் !...2,..

வடலூர் சத்திய ஞான சபை விளக்கம்...2,.

திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் அவர்கள் .உலகில் உள்ள மக்களின் பசிப்பிணியை போக்க வேண்டும் என்ற பெருங் கருணையால் வடலூரில்
23--5--1867,ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11,ஆம் நாள் தருமச்சாலையை தொடங்கி வைக்கிறார்கள் .

அதன் பின்பு ,உலக மக்கள் அனைவரும் உண்மையான இறைவனைக் காண வேண்டுமானால், உண்மையான இறை நிலையை மனிதன்  அடைய வேண்டுமானால் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் '' வாயிலாக அருட் பெரு நெறியின் உண்மை ஒழுக்கங்களை மக்கள் அனைவரும் கடைபிடித்து ஒழுக வேண்டும் என்னும் திரு குறிப்பை வள்ளல் பெருமானின் ஆன்மாவின் வழியாக, ஆண்டவர் அறிவிக்கிறார்.

அந்த ஆண்டவர் யார் ? என்பதையும் அந்த ஒழுக்க நெறிகள் என்ன ? என்பதையும் ''திருவருண் மெய்மொழி ''என்னும் தலைப்பில் மக்களுக்கு எழுத்து மூலமாக தெளிவு படுத்துகிறார்.

தருமச்சாலையை  ஆரம்பிக்கும் முன்பு ''சமரச வேத சன்மார்க்க சங்கம்'' என்னும் தலைப்பில் சங்கம் அமைக்கிறார் ,தருமச்சாலை ஆரம்பித்த பிறகு ஆண்டவர் அறிவித்த வண்ணம் ''ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சங்கம்'' என்று பெயர் மாற்றம் செய்கிறார் .அதன்பின் சத்திய ஞானசபைத் தோற்று வித்தப் பின்பு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் மாற்றம் செய்கின்றார் .

ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கப் பெரு நெறியின் உண்மை ஒழுக்கங்களைக் குறித்து ''திருவருண் மெய்மொழி ''  என்னும் உண்மையை, தனித் தலைப்பில் உலக மக்களுக்கு தெரியப் படுத்துகிறார் .இவை யாவும் சுத்த சன்மார்க்க கொளகைகளை கடைபிடிப்பவர்களும் ,உலக ஆன்மீக சிந்தனை யாளர்களும் ,மற்றும் பகுத்தறிவு உள்ளவர்களும்,அறிவியல் வல்லுனர்களும்,விஞ்ஞானிகளும் ,ஆராய்ச்சியாளர்களும் மற்றும் பொது மக்களும்,ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மற்றும் அரசியல் வாதிகளும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகளாகும்.

திருவருண் மெய்மொழி !

உலகத்தின் இடத்தே பெறுதற்கு முகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் யாதெனில் ?

இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இரண்டும் படாத பூரண இன்பமானவர் என்றும்,

எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும் ,எல்லா பதங்களையும்,எல்லா சத்திகளையும்,எல்லாச் சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,எல்லாப் பொருள்களையும்,எல்லாத் தத்துவங்களையும்,எல்லாத் தத்துவிகளையும் ,

எல்லா உயிர்களையும்,எல்லா செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும் ,எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபங்களையும்,மற்றை எல்லா வற்றையும் ,தமது திருவருட்  சத்தியால் ,

தோற்றுவித்தல்,...வாழ்வித்தல்,...குற்றம் நீங்குவித்தல்,....பக்குவம் வருவித்தல்,...விளக்கஞ் செய்வித்தல்,என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப் பெருந்தலைமை ''அருட்பெருஞ்ஜோதியர்'' என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே '' என்றும்

அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில் ,(அருள் வெளி }அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.என்ற உண்மையை வள்ளல் பெருமான் வெளிப்படுத்துகிறார்.

அந்த உண்மைக் கடவுளை அறிந்து கொள்வது எப்படி ?

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகின் இடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து, அன்பு செய்து, அருளை அடைந்து, அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று ( மரணம் அடையாத உடம்பாகிய மரணம் இல்லாப் பெருவாழ்வு  ) வாழாமல் பல்வேறு கற்பனைகளால்,பல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,  பல்வேறு மார்க்கங் களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு நெடுங்காலம் பிறந்து பிறந்து ,அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம் போகின்றோம்,

ஆதலால் ,இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து ,இறந்து இறந்து, வீண்போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று ,நற்செய்கை உடையவர்களாய் ,

எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும் ,உண்மைப் பொது நெறியாகி விளங்கும் ''சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப்'' பேரின்ப சித்திப் பெருவாழ்வில்,பெருஞ் சுகத்தையும்,,பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருஉள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ''ஞானசபையை'' சித்திவளாகம் என்னும் இச் சன்னிதானத்திற்கு அடுத்த ,

உத்தர ஞான சிதம்பரம், அல்லது, ஞான சித்திபுரம் என்று குறிக்கப்படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து

''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கபடாத நெடுங்காலம் அற்புத ''சித்திகள்''
எல்லாம் விளங்க யாமே அமர்ந்து அருள் திருவிளையாடல் செய்து அருள்கின்றாம்

என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினும் சிறந்த பெருந் தயவுடைய நமது கருணையாங் கடலாராகிய அருமைத் தந்தையார்
''அருட்பிரகாச வள்ளலார் ''முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்திப்பட வெளிப்படுத்தி ,

அருட்பெருஞ்ஜோதி சொரூபராய் ( அருள் ஒளி }  அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித்து அருளி ,அறிய அவரது திருமேனியில் தாம் கனியுறக் கலந்து அருளிய எல்லாம் வல்ல சித்தத் திருக்கோலங் கொண்டு ,''அருள் அரசாட்சித் திருமுடி ''பொறுத்து அருள் விளையாடல் செய்து அருளும் நிமித்தம் ,ஈரேழு பதினான்கு உலகங்களில் உள்ளவர்கள் யாவரும் ஒருங்கே ,

இஃது என்னே ! இஃது என்னே ! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதிசமீபித்த தருணமாய் இருத்தலினால் அங்கனம் வெளிப்படும் திருவரவு பற்றி எதிர் பார்த்தலாகிய விரதங் காத்தலில் நிற்கும் அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லாவரும் மேற் குறித்த அதிசிய அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்தில் தானே ,

சுத்த சன்மார்க்க அரும் புருஷார்த்தங்களின்{ஒழுக்கம் } பெரும் பயன்களாகிய எக்காலத்தும் நாசமடையாத சுத்த அல்லது சுவர்ணதேகம் ,பிரணவதேகம், ஞான தேகம்,என்னும் சாகாக்கலை அனுபவ சொரூப சித்தித் தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும் ,

கடவுள் ஒருவரே என்று அறிகின்ற உண்மை ஞானமும், கருமசித்தி, யோகசித்தி,ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைவதற்கான சுத்த சன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்கு உரிய உண்மை ஒழுக்கங்களில் நாம் எல்லவரும் தனித்தனி ஒழுக வேண்டுவது அவசியம் ஆதலில் அவ் வொழுக்கங்களை இவை என உணரவேண்டுவது அவசியமாகும். என்பதை வெளிப்படுத்துகிறார் .

''சத்திய ஞான சபை'' இறைவன் அறிவித்த வண்ணம் அமைத்தல் !

உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு வடலூர் பெருவெளியில்,இறைவன் வள்ளல் பெருமானுக்கு அறிவித்த வண்ணம் உருவாக்கியதே ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான'' சபையாகும்.

சத்திய ஞான சபையைக் கட்டுவதற்கு இறைவனே வள்ளலாரின் ஆன்மாவின் வழியாக வரைப்படம் (புளுபிரிண்ட்) போட்டுத் தருகிறார் .அந்த வரைப்படத்தில் கண்டபடி எண்கோண வடிவமான ஞான சபையை .பிரஜோற்பத்தி வருடம் ஆனிமாதம் அதாவது 1871 ,ஆம் ஆண்டு தொடங்கி சுமார் ஆறு மாத காலத்தில்  கட்டிட வேலையை முடிக்கத் திட்டமிட்டு முடித்து விடுகிறார் .நம்பெருமானார். இறைவன் அறிவித்த அருள் வார்த்தையை, இறைவன் அருள் செயலால் நிறைவேற்றி வைக்கிறார்.

கட்டிட வேலையை ஆரம்பித்த பின் நடந்த அற்புதங்கள் பலப்பல ,சாரங் கட்டி கட்டிட வேலை செய்த பலர் சாரம் அவிழ்ந்து கீழே விழுந்தனர் .அப்படி விழுந்தும் யாருக்கும் எந்த அடியும் படாமல் இறைவனும் வள்ளல் பெருமானாரும் அவர்களை காப்பாற்றினார்கள் என்றால் அது வியப்பு அன்றோ !

ஞான சபையைக் கட்டி முடிப்பதற்குள் உலகு கட்டி ஆளும் கொடியான சன்மார்க்கக் கொடி கட்டுவதற்கு... கொடிமரம் வாங்குவதற்கு காண்ட்ராக்டர் ஆறுமுகம் என்பவரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் வள்ளல்பெருமான்.
அவர் சென்னை சென்று சரியான மரம் கிடைக்கவில்லை என்பதை வள்ளல்பெருமானுக்கு தெரிவிக்கிறார் ,உடனே வள்ளல்பெருமான் நான் வருகிறேன் நீர் அங்கேயே இருங்கள் என்று சொல்லிவிடுகிறார் ,

அடுத்த கணத்தில் வள்ளலார் அங்கு ஒரு நீண்ட,திரண்ட  பருத்த மரத்தின் மீது நடந்து கொண்டு உள்ளார் .அதைப் பார்த்த ஆறுமுகம் அதிர்ந்து போய் விட்டார். ஆறுமுகத்தை அழைத்து இந்த மரத்தை வடலூருக்கு கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.வடலூருக்கு மரத்தைக் கொண்டு வந்த ஆறுமுகம் வள்ளல்பெருமான வந்து, இந்த மரத்தை தேர்வு செய்து அனுப்பி வைத்தார்கள் என்று வடலூரில் உள்ளவர்களிடம் சொல்ல, அவர்கள் வள்ளல் பெருமான் இங்கேதான் இருந்தார் அங்கே எப்படி வந்தார் ? என்று ஆச்சரியப்பட்டார்கள் .இதுபோல் பல அற்புதங்கள் வடலூரில் நடந்து உள்ளது .ஆனால் வள்ளல்பெருமான எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் ,இருந்துள்ளார்கள்.

அதே நேரத்தில் எந்த அற்புதத்தையும் மக்களிடம் வெளியில் சொல்ல வேண்டாம் என்று அன்பர்களுக்கு கட்டளை இட்டுள்ளார்கள்.சித்துக்களையும் அற்புதங்களையும் வெளியில் சொல்லாமலும் ,காட்டாமலும் இருந்த ஒரே அருளாளர் வள்ளல்பெருமான் ஒருவரே ! அறுபத்து நான்கு கோடி சித்துக்களையும் கைவரப் பெற்றவர் வள்ளல்பெருமான் ஒருவரே !

இறைவன் கொடுத்த அருள் அற்புதத்தை,பெருமைக்காக ,புகழுக்காக,சுய நலத்திற்க்காக, மற்றவர்கள்  தேவைக்காக  வெளியில் தேவை இல்லாமல் விரையம் செய்தால் மரணத்தை வெல்ல முடியாமல் போய்விடும் எனற உண்மையை உணர்ந்தவர் வள்ளல்பெருமான் அதனால் அவருக்கு கிடைத்த அருள் ஆற்றலை,பேராற்றலை, அருள் சித்துக்களை வெளியில் காட்டாமல்  தனக்குள்ளே அடக்கி வைத்துக் கொண்டவர் வள்ளல்பெருமான் .

மக்களுக்காக ஆண்டவர்  எந்த எந்த நேரத்தில் என்ன என்ன அறிவிக்க சொன்னாரோ அதைமட்டும் தான் அறிவிப்பார் வள்ளல்பெருமான்.அதே போல்தான் வடலூரில் சத்திய ஞான சபையைத் தோற்றுவித்தார் .

சபையைத் தோற்றுவித்து வள்ளல்பெருமான் சித்திப்பெரும் வரைக்கும் சபையை இப்படித்தான் கவனித்து வரவேண்டும் என்று சத்திய ஞானசபை விளக்கப் பத்திரிக்கையை வெளிட்டார்கள்.அவர் சொல்லியபடி அவருடைய் தொண்டர்கள் செயல்படவில்லை என்பதை அறிந்து கொண்டு சபையை சாத்தி பூட்டுப்போட்டு சாவியை எடுத்துக் கொண்டு மேட்டுக்குப்பம் சென்றுவிட்டார்.

அதன்பின் மக்கள் சுத்த சன்மார்க்க தனிநெறி என்ன என்பதை தெரிந்து புரிந்து கொள்ள சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம் என்னும் தலைப்பில் ஒழுக்கத்தைப் பற்றி போதிக்கின்றார் அதன் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது .

சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம்  !

உண்மை சன்மார்க்கப் பெருநெறியின் ஒழக்கம்  என்ன என்பதை மக்களுக்கு போதித்தார் ,அதற்கு மெய்மொழியும் ஒழுக்கமும் என்று பெயர் வைத்தார் .

இறைவன் சொன்ன மெய்மொழியும் ஒழுக்கமும் .!

ஒழுக்கம் நான்கு வகைப்படும் !

1,இந்திரிய ஒழுக்கம்
2,கரண ஒழுக்கம்
3,ஜீவ ஒழுக்கம்
4,ஆன்ம ஒழுக்கம் .

1,..இந்திரிய ஒழுக்கம்

நம்முடைய ஐம்புலன்களாகிய கண்,காது,மூக்கு,வாய் ,மெய் என்னும் உடம்பு,ஆகியவை இந்திரியங்கள் என்பனவாகும் இதிலே இரண்டு வகை உள்ளன .

ஒன்று உருவமுள்ள உறுப்புகள் இதற்கு கர்மேந்திரங்கள் என்று பெயர்,..இன்னொன்று உருவம் இல்லாதது அதற்கு ஞானேந்திரங்கள் என்று பெயர் .

புறத்திலே உள்ள கருவிகள் கண்,காது,மூக்கு ,வாய்,உடம்பு போன்ற கண்மேந்திரங்கள் என்பவையாகும்.அதை இயக்குவதற்கு கண்களுக்குத் தெரியாமல் உள்ளே இருந்து இயக்கும்  மின் காந்த சக்தி போன்ற கருவி ஞானேந்திரங்கள் என்னும் கருவிகளாகும் .அந்த உருவமற்ற கருவிகள் இயங்கினால்தான் புறத்தில் இருக்கும் கருவிகள் தடையில்லாமல் அதனதன் வேலைகள் முறையாக செயல்படும் .

இந்த புறப் புறக்கருவிகள்,அகத்தே செல்லாமல் புறத்தே  வெளியே செயல்படுவதாகும் .இவைகள் வெளியே செயல்படுவதால் துன்பங்களும் துயரங்களும் அச்சமும் பயமும்,இறுதியில் மரணமும் வந்து விடுகின்றன.இந்த ஐம் புலன்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை விபரமாக ஜீவ காருண்ய ஒழுக்கம் என்ற பகுதியில் தெளிவுப் படுத்தி எழுதி வைத்துள்ளார் .இதற்கு இந்திரிய ஒழுக்கம் என்று பெயர் வைத்துள்ளார் .

கரண ஒழுக்கம் !

கரண ஒழுக்கம் என்பது கண்களுக்குத் தெரியாமல் இயங்கும் ,மனம்,புத்தி ,சித்தம்,அகங்காரம்,என்னும் கருவிகளாகும்.இவைகள் புறம் என்னும் கருவிகளாகும்.இதுவும் புறத்தை நோக்கியே  செயல்படும் கருவிகளாகும்.அந்த உருவம் இல்லாத கருவிகள் தனக்கு சாதகமாக புறப்புறத்தில் உள்ள ஞான இந்திரியங்களையும் ,கர்ம இந்திரியங்களையும் பயன் படுத்தி வேலையை வாங்கிக் கொண்டே இருக்கும். உடம்பில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் வேலை வாங்கிக் கொண்டே இருக்கும் கருவிகளாகும்.

இந்த புறக்  கருவிகளில் முதனமையாக இருப்பது மனம் ..மனம் என்ன நினைக்கின்றதோ அதை புத்திக்கு அனுப்பி ,புத்தி வாங்கி சித்தம் என்னும் கருவிக்கு அனுப்பி ,சித்தம் அகங்காரம் என்னும் கருவிக்கு அனுப்பி ,அகங்காரம் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திரியங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி புற வேலைகளை செய்ய வைக்கும்.

கரணங்களில் உள்ள மனமானது உலகில் உள்ள போகப் பொருள்களையே விரும்பும்.அதுதான் மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை என்பதாகும்.இந்த மூன்று ஆசைகளில் எல்லாமே அடங்கி விடுகின்றது..ஆதலால் மனதை அடக்க வேண்டும் என்று எல்லா ஞானிகளுமே சொல்லி உள்ளார்கள்.ஆனால் மனதை அடக்க முடியுமா என்றால் எக்காலத்திலும் மனதை அடக்க முடியாது.

மனதை அடக்க வேண்டும் என்பதற்காக ஆலய வழிபாட்டு முறைகளும்,தியானம்,தவம்,யோகம் போன்ற பயிற்சிகளும் சொல்லி வைத்துள்ளார்கள் அதனாலும் மனம் அடங்குவதே இல்லை.

மனமானது பொய்யையே விரும்புகிறது அதற்கு உண்மையே தெரியாது.மனம்  மாற்றம் அடைவதற்கு உண்டான உண்மையான வழிமுறைகளை யாரும் சொல்லித் தரவில்லை அதனால் மனம் அடங்குவதில்லை.மாற்றம் அடைவதும் இல்லை.

பேய் குரங்குபோல் அலையும் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கரண ஒழுக்கம் என்ற ஒழுக்க முறையைக் காட்டி யுள்ளார்.மனமானது உண்மையைத் தொடர்பு கொண்டால் உண்மையை அறிந்து உண்மை பக்கம் திரும்பி விடும்.அந்த கலையைத்தான் வள்ளல்பெருமான் கரண ஒழுக்கத்தில் சொல்லி வைத்துள்ளார் .

கரணங்களாகிய மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் கருவிகளை புறத்தில் செல்ல விடாமல் ,அகத்தில் செல்ல வைப்பதே  கரண ஒழுக்கம் என்று பெயர் வைத்துள்ளார்.அதற்கு சத்விசாரம் செய்து உண்மையை உணர்ந்து புறத்தில் செல்லாது அகத்தில் செல்ல வைப்பதையே  கரண ஒழுக்கம் என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார் நமது வள்ளல்பெருமான்.

அதனால்தான் இடைவிடாது மனத்தை சிற்சபையின் கண் செலுத்த வேண்டும் என்கின்றார்.சிற்சபை என்பது உடம்பை இயக்கும் மெய்ப்பொருள் இருக்கும் இடமாகும் அதுதான் ஆன்மா என்னும் உள் ஒளி இருக்கும் இடம் அதை இடைவிடாது தொடர்பு கொண்டால் மனம் தானே அடங்கும்.அதற்கு கரண ஒழுக்கம் என்று பெயராகும்.

ஜீவ ஒழுக்கம் !

ஜீவ ஒழுக்கம் என்பது அகப்புறம் உள்ள உயிராகும்.உயிர் இயங்குவதற்கும் உயிர் உடம்பில் நிலைப்பதற்கும் ,உணவு என்னும் பொருள் தேவைப் படுகிறது.பொருளை பெறுவதற்கும்,பொருளை உண்பதற்கும் புறம்.புறப்புறம் என்னும் காரணங்களையும் இந்திரியங்களையும் உயிர் என்னும் ஜீவன் பயன்படுத்திக் கொள்கின்றது .இதுவும் ஒரு அகப்புறக் கருவியாகும்

புறத்தில் உள்ள உலக வாழ்க்கை வாழ்வதற்கு இந்திரியங்களையும், காரணங்களையும் பயன் படுத்திக் கொள்கின்றது .உலகில் உள்ள சாதி,சமயம்,மதம் போன்ற கொள்கைகளை பார்த்து பார்த்து,படித்து படித்து அவற்றை பின் பற்றி  வாழ்ந்து கொண்டு இருப்பது   ஜீவன் என்னும் உயிராகும்.

சாதி, சமயம்,மதம்,கோத்திரம்,சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம்,உயர்வு,தாழ்வு,முதலிய பேதம் இல்லாமல் தானாக நிற்க வேண்டும்.இந்த ஜீவன் என்னும் உயிரும் புறப் பொருள்களை வேண்டாமல்,விரும்பாமல் ,இருக்க வேண்டும். இந்திரியங்களும், கரணங்களும் புறத்தில் செல்லாமல் நிறுத்திக் கொண்டால் ஜீவன் என்னும் உயிரும் புறத்தில் செல்லாமல் அகத்தில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும்.அப்படி தொடர்பு கொண்டால் ஆன்மாவானது இந்திரியங்களையும், கரணங்களையும், ஜீவனையும் தன் வசமாக தக்க வைத்து கொள்ளும்.

அகத்தில் உள்ள ஆன்மா, அருளைப் பெற வேண்டுமானால் அந்த மூன்று கருவிகளையும் புறத்தில் அனுப்பாமல் தக்க வைத்துக் கொண்டால்தான்,ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.  

இறைவனிடம் இருந்து அருளைப் பெற வேண்டுமானால் அகம் என்று சொல்லப்படும் ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும் அகத்தையே  நோக்க வேண்டும்.அப்படி நோக்குவதற்கு, செய்லபடுவற்கு  ஜீவ ஒழுக்கம் என்பதாகும்.அதுவே உயிரைக் காப்பாற்றும் வல்லபம் என்பதாகும்

இந்திரியம்,கரணம்,ஜீவன் என்னும் மூன்று ஒழுக்கங்களையும் முறையாக,முழுமையாக அறிந்து செயல்பட்டால் தான் உயிர் காப்பாற்றப் படும்.அப்படி செயல் படுவதற்கு ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்.ஜீவன் என்றால் உயிர், உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றார் நமது வள்ளல்பெருமான்.அதன்பின்தான் ஆன்ம ஒழுக்கம் கைவரப்படும்..

ஆன்ம ஒழுக்கம் !

ஆன்ம ஒழுக்கம் என்பது ;;எண்பத்து நான்கு நூறு ஆயிரம் யோனி பேதங்கள் இடத்தும் உள்ள ஆன்மாக்களிடத்தும் இரங்கி ஆன்மாவே சபையாகவும் அதன் உள் ஒளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாகும்.

இங்கனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்க, என்னும் இவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை உணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுக வேண்டும்.ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அறிய ஒழுக்கங்கள் திருவருட் துணை பெற்ற பின்னர் அன்றி கைகூடாது.

ஆதலால் அவ் ஒழுக்கங்களைப் பெற்று ஒழுக வேண்டுவதற்கும் ஆன நன் முயற்சிகளில் பழக வேண்டும்.

அன்றியும் இவ்வண்ணமாக ஒழுக்கங்களில் இயன்ற மட்டில் ஒழுகப் பெற்று
இடம் தனித்து இருத்தல்,...இச்சை இன்றி  நுகர்தல்,...தெய்வம் பராவல் ,..பிற உயிர்க்கு இரங்கல்...பெருங் குணம் பற்றல்,...பாடிப்பணிதல்....பத்தி செய்து இருத்தல்,முதலிய நற் செய்கைகளில் பலகால் முயன்று முயன்று பழகிக் பழகி இருத்தல் வேண்டும்.

சைவம்,வைணவம்,சமணம்,பவுத்தம் ,முதலாகப் பல பெயர் கொண்டு பலப்பட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் ,தெய்வங்களும்,கத்திகளும்,தத்துவ சித்தி விகற்ப பேதங்கள் என்றும்,அவ் அவ் சமயங்களில் பலப்பட விரிந்த வேதங்கள் .ஆகமங்கள்,சாத்திரங்கள்,புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும், 

வேதாந்தம் ,சித்தாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும்,சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்றும் கேள்விப் பட்டு இருக்கின்றனம்,( அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
சொல்லியது )  .ஆகலில் அத்திரு வார்த்தைகளில் உண்மையான நம்பிக்கைக் கொண்டு,அவ் அவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப் பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி அவ் அவ் சமய மதங்களைச் சிறிதும் பற்று வைக்காமல் (அனுட்டியாது) நிற்றலும் ,அவற்றின் மேல் சத்திய உண்ர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும் .

அன்றியும் ;--

உலகியல்  கண்... பொன் விஷய இச்சை,..பெண் விஷய இச்சை,...மண் விஷய இச்சை முதலிய எவ்வித இச்சைகளிலும் நமது அறிவை ஓர் அணுத்துணையும் பற்றுவிக்காமல் ,பொதுப்பட நல்ல அறிவு,..கடவுள் பக்தி,....உயிர் இரக்கம்,...பொது நோக்கம்,...திரிகரண அடக்கம், ..முதலிய நற்குண .ஒழுக்கங்களில் நின்று,உண்மை உரைத்தல்,..இன் சொல்லாடல்...,
உயிர்க்கு உபகரித்தால்,முதலிய வாகக் குறித்த நற் செய்கைகளையும் உள்ளபடி பெற்று ,சித்திவளாகம் என்னும் இம் மகா சந்நிதானத்தில் தானே தரிசிக்கப் பெறவும்,உலக முகப்பட்ட பராக்கினால் விலகி ஏமாந்து விடாமலும்,நமது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்ட்வனார் அற்புதத் திருவரவு குறிக்கும் வெளிப்படுகைக்கு எதிர்பார்க்கும் நிலையினராய் ,
எல்லா அண்ட சராசரங்களையும் தமது திருவருட் செங்கோல் கொண்டு நடாத்துவித்து அருளும் பேரருட் பெருங்கருணை வாய்ந்த தனிப்பெரும் தலைவரது அரிய திருவருகைச் சம்பந்தமான வழிபடுகை அல்லது மங்கலம் புனைதல் முதலிய திருப்பணியிடம்

நமது கரணம் இந்திரியங்களை விடுத்துக் குதூ கலத்துடன் விந்து விளக்கம்,..நாத ஒலி என்பவற்றால் புறக்கடையில் விலகப்படாமலும்,
ஆண்டவனாரது அருள் அற்புத ஞான சித்தித் திருமேனியின் மங்கலத் திரு கோலத்தைக் கண்காட்சியாக உடல் குழைய உள்ளங் குளிர ஆனந்தக் கண்ணீர் கொண்டு பரவசத்துடன் தரிசிக்கப் பெரும் ,பெரும் புண்ணிய உடையவர்களாய் எதிர்பட வாய்க்கப் பெறவும் நின்றோமே யானால்;

நாம் எல்லாவரும் சுத்த சன்மார்க்கதினுக்கு உரிமை உடையவர்களாகி,அறிவு வந்த கால முதல் கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும் கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும் ,அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்,
அடைந்து அறியாத அற்புதக் குணங்களையும்,செய்து, அறியாத அற்பதக் செயலகளையும்,

அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும், வெளிப்படத் தரிசிக்கும் அதே கணத்தின் உள்ளே பெற்றுப் பெருங் களிப்புடன் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம்.

இது சத்தியம் ,இது சத்தியம்,இது சத்தியம்,

இங்கனம் நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் விரித்து விவரிக்கப்பட்ட மலை இலக்கான பொய்யாப் பெருமொழி என்னும் கருணா ரசத்தின் வெள்ளப் பெருக்கத்தில் ததும்பி வழிந்த திரு மந்திரத் திருவருள் மெய்மொழியின் சுருக்கமாகும்

என்று வள்ளல்பெருமான் மெய்மொழி என்னும் தலைப்பில்,உலகில் உள்ள மக்களுக்கு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியத்தையும் ,அதன் உண்மைகளையும் தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார் .

வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்ட தினம் வெளியிட்ட அற்புதப்பத்திரிகை 

மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையில்  சித்திப் பெறுவதற்கு முன் வெளியிட்ட அற்புதப் பத்திரிகையில் முக்கிய அறிவிப்பை வெளிப்படுத்துகின்றார்.

இனி இச் ஜீவர்கள் விரைந்து விரைந்து  ,இறந்து இறந்து வீண்போகாமல் ,உண்மை அறிவு ,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று ,நற்செய்கை உடையவராய் ,எல்லாச் சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங் களுக்கும் ,உண்மைப் பொது நெறியாக விளங்கும்  சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெரும்  சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திரு வுள்ளங் கொண்டு

''சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கம் செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது சம்மதத்தால் இயற்றுவித்து ''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் '' என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி வீற்றி இருக்கின்றார் .

ஆகலின் அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து ,தரிசிக்கப் பெறுவீர் களாயிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் இன்றி இறந்தவர் உயிர் பெற்று எழுதல் மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பும் அடைவீர்கள் என்று இறுதியாக வெளிப் படுத்துகின்றார் .

அதன் உண்மை !   

வள்ளல்பெருமான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை வடலூரில் தோற்றுவித்து, இன்று தொடங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெரும்  சித்தி வெளிப்படும் வரைக்கும் இப்படித்தான் சத்திய ஞான சபையை கவனித்து பாது காக்க வேண்டும் என்னும் ஞான சபை விள்க்கப் பத்திரிகையில் தெரியப் படுத்தி உள்ளார் .

கோடி ஏற்று விழாவில் திருவாய் மலர்ந்து அருளிய பேருபதேசம் என்ற தலைப்பில் வள்ளல்பெருமான் வெளியிட்டு உள்ளது !

 இது கடைசி வார்த்தை !

இது முதல் --கொஞ்ச காலம் ---சாலைக்குப் போகின்ற வரைக்கும் ஜாக்கிரதையாக மேற் சொன்ன பிரகாரம் விசாரம் செய்து கொண்டு இருங்கள் என்று சொல்லுகின்றார் .

சித்தி பெரும் வரை என்பதும்,...சாலைக்குப் போகின்ற வரைக்கும் என்பதும்,...சித்தி வெளிப்படும் வரைக்கும் என்பதும் நாம் அவசியம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

முதலில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சொல்லிய வண்ணம் ஞான சபையைத்  தோற்றுவித்து வள்ளலார் சொல்லிய வண்ணம் ,சன்மார்க்க அன்பர்கள் சபையை கவனித்து இருந்து இருந்தால் வள்ளல்பெருமான் சித்தி வளாகத் திருவரைக்குள் செல்லாமல் ஞானசபைக்குள் நுழைந்து இருப்பார் ..

வள்ளல்பெருமான எங்கு இருந்தாலும் அங்கு சென்று ,அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர வல்லபெருமானை  ஆட் கொண்டு தன்வசமாக மாற்றி மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் முத்தேக சித்தியை அளித்து இருப்பார் இதுதான் உண்மை  இதுதான் சத்தியம்.

வள்ளல்பெருமான் முன் சொல்லிய வண்ணம் ஞானசபைக்கு செல்லாமல் மேட்டுக் குப்பத்தில் இருந்ததால், அருட்பெருஞ்சோதி ஆண்டவர்,அவர் இருக்கும் இடமான  சித்தி வளாகத் திருவறைக்குள் சென்று ஆட்கொண்டார் .

வள்ளல்பெருமான் சித்தி பெற்ற பின் எங்கே சென்றார் ?

தான் இருக்கும் இடமான சித்தி வளாகத் திருமாளிகையில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து கொண்டு உள்ளார். அவர் என்னை அழைத்து செல்வதற்காக வந்து இருக்கின்றார் .இன்னும் பத்து பதினைந்து நாட்கள் இங்கு இருப்பேன் ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் கொஞ்ச  காலத்தில் நான் சென்று விடுவேன் இனிமேல் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் இருப்பேன் என்று வல்ள்ளபெருமான் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் சத்திய ஞான தீப விளக்கம் என்னும் தலைப்பில் மக்களுக்காக எழுதி வைத்து உள்ளார்கள் .

ஞான தீப விளக்கம் !  


ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில்  உள்ளிருந்த விளக்கைத்  திருமாளிகைப் புறத்தில் வைத்து ''தடைபாடாது ஆராதியுங்கள்'' 
இந்தக் கதவை சார்த்திவிடப் போகிறோம் .இனி கொஞ்சகாலம் எல்லோரும் ஆண்டவர தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் ,

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே 
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு 
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான 
நடத்தரசே என் உரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர் 
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் 
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே !

என்னும் இருபத்தெட்டு பாசுரங்கள் அடங்கிய பாடலில் கண்டபடி ,தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் ,நாம் இப்போது இந்த உடம்பில் இருக்கிறோம் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம் .;--

நாம் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறோம் .பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள் ,ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார் .என்னைக் காட்டிக் கொடார் .

சுத்த பிரணவ ஞான தேகத்தோடு வெளிப்படுவோம் .நாம் திருக்கதவை மூடி இருக்கும் காலத்தில் அதிகாரிகள் திறக்கும்படி சொல்லித் திறந்து பார்த்தால் ஆண்டவர் அருள் செய்வார் என்பதைத் தெளிவாக விளக்கி உள்ளார் ..

ஸ்ரீமுக வருடம் தை மாதம் வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் தருணம் வெளியிட்டவை ;--  

என்னும் விபரத்தை வள்ளல்பெருமான் தெளிவாக எழுதி வைத்துள்ளார்

வள்ளல்பெருமான் சித்திவளாக திருமாளிகையின் உள்ளே சென்று பத்து பதினைந்து தினங்கள் இருக்கப் போகிறோம் என்றும் ,பார்க்க நேர்ந்து பார்த்தால் ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என்பதை சற்று நாம் ஊன்றி கவனிக்க வேண்டும் .

நான் உள்ளேதான் இருக்கிறேன், ஒளி தேகமாக (சுத்த பிரணவ ஞான தேகம்) ஆண்டவர் என்னை மாற்றி விட்டதால் பார்ப்பவர் கண்களுக்கு நான் தெரிய மாட்டேன் என்றும் ஆண்டவர என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என்றும் வெறு வீடாகத்தான் இருக்கும் என்றும் தெளிவாக விளக்கி உள்ளார்

அருட்பெருஞ்ஜோதியின் ஒளி தன்மைக்கே தன்னையும்  மாற்றிக் கொண்டார் .இரு உருவமும் ஒரே உருவமாக மாற்றிக் கொண்டது.சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் ஒளிதேகம் மற்றவர் கண்களுக்கு எப்படித் தெரியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து பத்து பதினைந்து நாட்களுக்குப்பின் வள்ளல்பெருமான் எங்கே சென்றார் .

இந்த உடம்பில் இருக்கிறேன் இனிமேல் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொள்வேன் என்ற ஒரு வார்த்தையை பதிவு செய்கின்றார்

வள்ளல்பெருமான் உலகத்திற்கு காட்டிய அறிமுகப்படுத்திய உண்மைக் கடவுள் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர். .அவர் என்ன செய்து கொண்டுள்ளார்? .

எல்லா உயிர்களிலும் உள் ஒளியாக (ஆன்மாவாக ) இருந்து செயல்பட்டுக் கொண்டு உள்ளார் ,அதே போல் வள்ளல்பெருமானும் எல்லா உயிர்களின் உள்ளும் ஆன்மாவின் உள் ஒளியாக இருந்து செயல்பட்டுக் கொண்டு உள்ளார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல் அருட்பெருஞ் ஆண்டவர் இருக்கும் இடம்;--பல கோடி அண்டங்களையும் இயக்கி இயங்க வைத்துக் கொண்டு இருக்கும் இடம்  அருட்பெருவெளி என்பதாகும் .,

அதேபோல் வள்ளல்பெருமான் ஒளி தேகம் பெற்று ஐந்தொழில் பணிகளை செய்யும் இடம் ;--வடலூர் பெருவெளியில் உள்ள ''சத்திய ஞான சபையில்'' அமர்ந்து செயல் பட்டுக் கொண்டு உள்ளார் என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளல்பெருமான் சித்திவளாகத்தில் சித்திப் பெற்றார் ,வடலூர் பெருவெளியில் உள்ள சத்திய ஞானசபையில் அமர்ந்து மக்களுக்கு அருள் வழங்கிக் கொண்டு உள்ளார் என்பதை  அற்புதப் பத்திரிகையில் தெளிவாக தெரியபடுத்தி உள்ளார் .

விளக்கம் ;--

இனி ஜீவர்கள்  விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல் ,உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம்முதலிய சுபகுணங்களைப் பெற்று ,நற்செய்கை உடையவராய் ,எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங் களுக்கும் ,உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெருஞ்சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ,மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திரு உள்ளங் கொண்டு

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் ஞான சபையை'' இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து '' '' ''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங் காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம்"'  என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி அருட்பெருஞ் ஜோதியிராய் வீற்றுஇருக்கின்றார்

ஆகலின் அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து ,தரிசிக்கப் பெறுவீர்கள் ஆகின் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவது மன்றி இறந்தவர் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல்,முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பையும் அடைவீர்கள் ...என்னும் குறிப்பை வள்ளல்பெருமான் தெளிவாகத் தெரியப்படுத்தி உள்ளார் .

இறுதியில் உண்மை பத்திரிக்கை என்னும் தலைப்பில் வள்ளல்பெருமான் மக்களுக்கு வெளியிட்டவை ;--

உண்மைப் பத்திரிக்கை !

சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும்.இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை.தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலம் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும்.அதன் மென்மேலும் வழங்கும்.

பல வகைப்பட்ட சமய பேதங்களும் ,சாத்திர பேதங்களும் ,ஜாதி பேதங்களும்,ஆசார பேதங்களும் போய் ,சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும்.அது கடவுள் சம்மதம்.இது 29...வருடத்திற்கு மேல்
( கலி 5000 ..க்கு மேல்)

இப்போது வருகின்ற நமது கடவுள் இதற்கு முன் சமய,மத  சாத்திர புராணங்களில் வந்தததாகப் சொல்லப்படுகின்ற  ஏற்பாட்டுக் கர்த்தர்கள், ,மூர்த்திகள்,கடவுள்,தேவர்,அடியார்,யோகி,ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல !

அப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்,எல்லாத் தேவர்களும்,எல்லாக் கடவுளரும் ,எல்லாத் தலைவர்களும்,எல்லா யோகிகளும் ,எல்லா ஞானிகளும் தாங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர் பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும் பதியாகிய அருட்பெருஞ்ஜோதியாகும்  .

இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன் !பெறுகின்றேன் !! பெற்றேன் !!! என்னை அடுத்தவர்களும் பெறுதற்கு யாதொரு தடையும் இல்லை.பெறுவீர்கள் ! பெறுகின்றீர்கள் !! பெற்றீர்கள் !!! அஞ்ச வேண்டாம் .

ஆன்மநேய அன்புடைய மனித தேகம் எடுத்துள்ள அன்பர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுவது யாதெனில்.

மக்கள் இதுவரை கடவுள் உண்மை அறியாது துன்மார்க்க புலன்
நெறியில்,மூழ்கி அழிந்துப் போய் கொண்டு இருக்கின்றார்கள் அதுபோல் வீண் போகாமல் நம்முடைய அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுளை உள்ளபடி உணரவேண்டும் .மெய்ப்பொருள் விளக்கம் என்னும் சத்திய ஞான சபையில் அவரைத் தரிசித்து வழிபடவேண்டும்.

ஆகவே எல்லோருக்கும் பொதுவான அருட்பெருஞ்ஜோதிக கடவுள் கருணையோடு அருட்பிரகாச வள்ளலார் உடம்பில் கலந்து கொண்டு கோடி கோடி அருட்ஜோதிக் கதிர் பரப்பிக் கொண்டு வெளியாகி இருக்கின்றார் .

இனி அருட்பெருஞ்சோதி வேறு அருட்பிரகாச வள்ளலார் வேறு அல்ல, இருவரும் ஒருவரே என்பதை உணரவேண்டும்.

வடலூர் பெருவெளியில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் திருஅருட் பிரகாச வள்ளல்பெருமான் அருட்பெருஞ்ஜோதிஆண்டவர் உருவத்தில் அமர்ந்து தனிப்பெருங் கருணையோடு அருள் பாலித்துக் கொண்டு உள்ளார்.ஆதலால் அனைவரும்  வந்து வந்து தரிசித்து,வழிபட்டு  அருளைப் பெற்று, மரணத்தை வென்று, மரணம் இல்லாப் பெருவாழ்வாகிய பேரின்ப லாபத்தைப் பெற்று பெருங் களிப்பை அடைவோம் .  இது சத்தியம் ! இது சத்தியம்!! இது சத்தியம் !!!
 .
அன்புடன் ஆன்மநேயன்
ஈரோடு செ கதிர்வேல்
நந்தா இல்லம்
108,C,வள்ளலார் வீதி
வய்யாபுரி நகர்
46,புதூர் அஞ்சல்
ஈரோடு மாவட்டம்.638002
SELL.9865939896.
LAND LAINE ...0424 2401402,
 

           

 




























































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு