திங்கள், 12 மே, 2014

சுத்த சன்மார்க்க கொள்கை !

சுத்த சன்மார்க்க கொள்கை !

சரவ சித்தி உடைய தனித்தலைமைப் பதியாகிய அருட்பெருஞ் ஜோதியை வேண்டி தபசு செய்து சிருட்டிக்குஞ் சித்தி என்னும் படைக்கும் தொழிலை பெற்றுக் கொண்டவன் பிரமம் என்னும் தத்துவமாகும்.அதற்கு பிரமன் என்னும் பெயர் வைத்துள்ளார்கள்.இந்த தத்துவம் தலை பாகத்தில் உள்ளது .

படைக்கும் தொழிலையும் ,காக்கும் தொழிலையும் செய்யும் சித்தியைப் பெற்றுக் கொண்டவன் விஷ்ணு என்னும் தத்துவமாகும்.அதற்கு விஷ்ணு என்னும் பெயர் வைத்துள்ளார்கள் .இவை தொப்புள் பாகத்தில் உள்ளது.

படைத்தல் ,காத்தல், சங்காரம் என்னும் அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் பெற்றுக் கொண்டவன் ருத்திரன் என்னும் சிவ தத்துவமாகும். இது அக்கினி என்பதாகும்.இது மூலாதாரத்தில் உள்ளது .

இந்த தத்துவங்களை கடவுள்களாக படைத்து உள்ளார்கள்
இவைகள் யாவும் சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன.சமய மதங்களில் சொல்லியதை அந்த அந்த மதத்தை சமயத்தை பின் பற்றுபவர்கள் தெய்வங்களாக வணங்கி வழிபட்டுக் கொண்டு வருகிறார்கள்

இந்த மும் மூர்த்திகளுடைய தத்துவ சித்திகள் சர்வ சித்தி உடைய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் ,சித்திகளின் லேசங்கள்....அதில் ஏக தேசம்கூட அல்ல என்பதை வள்ளல்பெருமான் தெளிவுப் படுத்துகின்றார்.

இவர்கள் அந்தச் சர்வ சித்தியுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள் கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள்.ஆகையால் சமய ,மத தெய்வங்களை வழிபாடு செய்து,அந்தச் சமயத் தெய்வங்களிடம் பெற்றுக் கொண்ட அவர்கள்,  அற்ப சித்திகளில் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து ,மேலே ஏற வேண்டிய படிகள் எல்லாம் ஏறிப் பூரண சித்தியை அடையாமல் தடைப்பட்டு,அந்தரத்தில் இருக்கின்றார்கள் அவர்கள் போல் நில்லாமல்,

சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் உண்டு என்றும் ,அவர் ஒளியாக உள்ளார் என்றும், அவர் எல்லா உயிர்களையும் இயக்கும் மாபெரும் சக்தி படைத்த அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும் பேர் ஒளியாகும்.இதை மனித தேகம் படைத்த அறிவுள்ள ஜீவர்கள் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது ,வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும் .

அவரை உண்மை அன்பால்,உண்மை தயவால் .உண்மை கருணையால் உண்மையான உயிர் இரக்கத்தால்,உயிர்களுக்கு உபகாரம் செய்து அருளைப் பெறவேண்டும் .

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு,உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு, என்பதை அறிந்து,உண்மை அன்போடு உயிர்களுக்கு கருணை புரிந்து, இறைவனிடம் பூரண அருள் சித்தியைப் பெற வேண்டும் என்றும்,அதுவே மரணத்தை வெல்லும் வழி என்றும் அறிந்து கொள்ள வேண்டுவது சுத்த சன்மார்க்க சங்கத்தவர் களுடைய கொள்கையாகும் இதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர வள்ளல்பெருமான் வாயிலாக உலக மக்களுக்கு தெரிவித்து உள்ளார் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு